அட்லாண்டிக்குக்கு அப்பால்

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

வெங்கட் சாமிநாதன்


சில நல்ல விஷயங்களும் தமிழில் நடந்து விடுகின்றன. தமிழ் நாட்டுத் தமிழரால் அல்ல. தமிழ்ச் சூழல் அப்படியெல்லாம் ஒன்றும் அவர்களை உருப்பட விட்டுவிடாது. தமிழ் நாட்டுச் சூழலின் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு வெளிநாட்டில் வாழும் தமிழர்களால். அல்லது புலன் பெயர்ந்த ஈழத் தமிழர்களால். மலேசியாவிலிருந்தோ, கனடாவிலிருந்தோ அல்லது அமெரிக்காவிலிருந்தோ. இணையம் மூலம் தமிழ் கூறும் நல்லுலகை ஒரு குடைக்கீழ் ஒன்றுபடுத்தியிருப்பது சமீபத்தில் நடந்துள்ள நல்ல விஷயங்களில் ஒன்று. இணையம் என்ற ஒன்று இல்லையெனில், அதிலேயே தன் குரலைப் பதிவு செய்து வரும் பி.கே சிவகுமார் என்ன செய்திருப்பார்? அவர் குரலை தமிழ் நாட்டு ஊடகங்கள் மூலம் கேட்டிருக்க முடியுமா? இங்கிருக்கும் குழுக்கள் ஒன்றில் அவர் தன்னை இணைத்துக் கொண்டிருப்பாரா, எந்த குழுவும் அவரை ஏற்றிருக்குமா? சந்தேகம் தான். அனேகமாக அவர் தம் அலுவலகத்திற்கும் வீட்டிற்குமாக பந்தாடப்பட்டிருப்பார். தன் வீட்டு அலமாரிப்புத்தகங்களுடனேயே அவர் உலகம் வேலியிடப்பட்டிருக்கும்.

இணையத்தில் பதிவான அவரது கட்டுரைகள் அட்லாண்டிக்குக்கு அப்பால் என்று தொகுக்கப்பட்டுள்ளது. புத்தகமாக வந்த பிறகு தான் பி.கே. சிவகுமாருடன் எனக்கு பரிச்சமாகிறது. இணையத்தில் படித்ததில்லை. என்னுடைய சிரமங்களும் படிந்துவிட்ட பழக்கங்களும் எனக்கு. பழங்காலத்து மன அமைப்பு. இப்போது இத்தொகுப்பு பரிச்சயப்படுத்தும் சிவகுமார் என்னையும் அவரையும் பிரிக்கும் ஒரு தலைமுறைக்கும் மேலான இடைவெளியையும் மீறி ஒரு இதமான சினேகபூர்வமான மனிதராக அருகில் உணர வைக்கிறது. தமிழ்ச் சூழல் அவரைக் கெடுத்து விட வில்லை. அமெரிக்கா அவரை ஆளுமையை தமிழரல்லாது வேறெதாவதாகவும் ஆக்கிவிடவில்லை.

தொகுப்பில் உள்ள 45 சிறிதும் பெரிதுமான 45 கட்டுரைகள், இலக்கியம், அரசியல், அமெரிக்க வாழ்க்கை, கவிதை, விவாதங்கள், தமக்குப் பிடித்த கவிஞர்கள், என்று பல விஷயங்கள் பற்றி பேசுகின்றன. இப்படி எது பற்றிப் பேசினாலும், சிவகுமாரை மிக அருகில் அடக்கம் என்ற பாவனையில்லா அடக்கத்தோடும் தோழமையோடும் சம்பாஷிக்கும் ஒருவராகக் உணரலாம்.

அவரது தாத்தா நீதிக்கட்சிக்காரர். திராவிட இயக்க அபிமானி. ஆனந்த போதினி பஞ்சாங்கம் வருடா வருடம் மறக்காமல் வாங்குபவர். அவரிடம் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை எழுதிய கம்பராமாயனம் முழுதும் அவர் வாசித்த குறிப்புகளுடன் இருந்தது. தந்தையார் தீவிர காங்கிரஸ்காரர். அமெரிக்காவிலிருக்கும் பேரன் கேட்க இரண்டே பாகங்கள் தான் அப்பாவால் அனுப்பப்படுகிறது. “எல்லாவற்றையும் அனுப்பிவிட்டல் தாத்தா ஞாபகத்தில் இங்கு என்ன இருக்கும்?” என்று சொல்கிறார் அப்பா. பேரன் அமெரிக்காவில் இருந்து கொண்டு சிவ வாக்கியர் பாடல்களிலும் கம்பனிலும் ஆழ்கிறார். சிவ வாக்கியரின் நாஸ்திகத்திற்கும் பகுத்தறிவுப் பகலவர்களின் நாஸ்திகத்திற்கும் இடையே உள்ள குணவேற்றுமை சிவகுமாருக்குத் தெரிகிறது. திராவிடக் கட்சிகளின் பொய்மைகளை அமெரிக்காவிலிருக்கும் பேரன் உணரமுடிகிறது. தனித் தமிழின் போலித்தனமும், சங்கராச்சாரியாரின் கைது பற்றி கருணாநிதியின் சாமர்த்தியமான வார்த்தை ஜாலங்களின் சந்தர்ப்பவாத அரசியலும் தெரிகிறது. தமிழக இடது சாரிகள் வெளிப்படுத்தும் அரசியலின் இரட்டை நாடகங்கள், ஜெயலலிதாவை எதிர்க்கும் தேர்தல் பிரசாரத்தில் வீரப்பனின் கருணாநிதி ஆதரவுப் பேச்சைப் பயன்படுத்திய சன் டிவி, இப்படி இங்கு நடக்கும் எல்லா மாய்மாலங்களையும் மாய்மாலங்களாகவே அவரால் பார்க்க முடிகிறது.

உமா மகேஸ்வரியின் கவிதை அவரை ஈர்த்துள்ளது. தன் ரசனையை அவர் மிக விரிவாகவே எழுதியிருக்கிறார். படிமமும், உருவகமும், அனுபவத்திலிருந்து பிறப்பது எங்கு, யோசித்து அடுக்கி ஒட்டவைத்திருப்பது எங்கு என சிவகுமாருக்குத் தெரிகிறது. தமிழ் நாட்டுக் குழுச் சார்புகள், அரசியல் சார்புகள் அவரது வாசிப்பைப் பாதிக்கவில்லை. அவரது ரசனை அவரதே. இது பெரிய விஷயம்.

ஜெயகாந்தனிடம் சிவகுமார் கொண்டுள்ள உணர்வை பக்தி என்று தான் சொல்ல வேண்டும். அரவிந்தன் எழுதிய விமர்சனம் சிவகுமாரை நிறைய கோபப்படுத்தியிருக்கிறது. அரவிந்தன் ஜெயகாந்தனைத் தேர்ந்தெடுத்ததும், எழுதியதும், தன்னிச்சையாக அல்லவே, தூண்டப்பட்டதல்லவா, என்ற சந்தேகம் சிவகுமாருக்கு. ஜெயகாந்தனிடமும் இரைச்சலும் உண்டு, நிசப்தங்களும் உண்டு என்பதும், பல கால கட்டங்களில், பல முறை ஜெயகாந்தன் அசாத்திய துணிவையும், தன் கருத்து சுதந்திரத்தையும் உரத்த குரலில் வெளிக்காட்டியிருக்கிறார், என்பதும் உண்மை. அதே சமயம் கருத்துக்களையே அனுபவங்களாகவும், பாத்திரங்களாகவும், அவர் எழுத்தில் கான்பதும் உண்மை. சிவகுமாருக்கு, ஜெயகாந்தன் ஒரு நிர்மல, நிர்குண பிரும்மம். மிகுந்த சினேக பாவத்தோடு நம் அருகே குரல் எழுப்பாது உரையாடிக்கொண்டிருக்கும் சிவகுமார் மூக்கு சிவந்து உதடு துடிப்பது, ஜெயகாந்தன், நேசகுமார் இருவர் பற்றித்தான்.

நேசகுமார் விஷயத்தில், நேசகுமாரின் கிண்டலுக்கும் கோபத்துக்கும் தூண்டுதலாக இருந்த காரணிகளை சிவகுமார் மறந்து விடுகிறார். அந்தக் காரணிகளில் சில நேற்று முளைத்தவை எனவும் உண்டு. நூற்றாண்டுகள் பல நீளும் வரலாறும் உண்டு. “உண்மை 7-ம் நூற்றாண்டு இறைவாக்கிலேயே சொல்லப்பட்டு விட்டது. அதன் பிறகு முற்றுப் புள்ளிதான்” என்று ஒரு குரல் மொராக்கோவிலிருந்து ·பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதி வரை கேட்கப்பட்டால், என்ன செய்வது?. இதை ஒப்புக்கொள்ளாதவர் எல்லாம் கா·பிர், அதற்கு அடுத்த நடவடிக்கை ஜெஹாத் தான் என்றால் என்ன செய்வது? இந்த கா·பிர்களை ஒழித்துக் கட்டினால், ஜன்னத்தில் மதுக்குடத்துடன் தேவகன்னிகைகள் சூழ்ந்துவிடுவார்கள் என்று நம்பினால் என்ன செய்வது? ஸ¥ன்னிகளுக்கு ஷியாக்களும் கா·பிர், அஹ்மதியாக்களும் கா·பிர், முஜாஹித்துகளும் கா·பிர், என்றால் என்ன செய்வது? இவர்கள் எல்லோருக்கும் ஸ¥·பிகள் கா·பிர் என்றால் என்ன செய்வது? அப்படி இருக்க செக்யூலரிசம் போதிக்கப்படும் ஒரு ஹிந்துவாகத் தற்செயலாகப் பிறந்துவிட்டவன் என்ன செய்வான்? ஒரு முஸ்லீம் நண்பரைக் கண்டால், ‘ஸாகேப்’, ‘”ஜனாபேவாலி, ஸலாம் ஆலே கும்” என்று வாழ்த்த நான் தயார் தான். விடிகாலையில்; ஒரு நாள் எம்.எஸ் சுப்புலக்ஷ்மியின் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டால், மறு நாள் காலை அபீதா பர்வீனின் ஸ¥·பி பாட்டுக்கள் கேட்க நான் தயார். கேட்கிறேன். விரும்பி, ரசித்துக் கேட்கிறேன். “தமா தம் மஸ்த் கலந்தர்” அவர் பாடும்போது பரவசத்தில் மயிர் சிலிர்த்துப் போகிறது. ஆனால் “அது பத்தாது, உன் பெயரை அப்துல் ஸமத் என்று மாற்றிக் கொள். கல்மா சொல்லு “லா இல்லாஹ் இல்லில்லாஹ், முகம்மது ரஸ¤ல் அல்லாஹ்”, சுன்னத் பண்ணிக்கோ” என்று மிரட்டினால் என்ன செய்வது? பாரதி “அல்லா அல்லா” என்று அரற்றினான். பாடினான். அதெல்லாம் சரி, ஆனால், “எங்கள் குழந்தைகள் பள்ளியில் வந்தேமாதரம் பாடாது. அது எங்கள் மதத்திற்கு விரோதம்” என்று சொல்லும் மதத்தலைவரை, அரசியல் தலைவரை, என்னென்பது? “முதலில் நீ ஒரு முஸல்மான். மற்ற அடையாளங்கள் எல்லாம் அதற்குப் பின்னர் தான்” என்று ·பட்வா முல்லாக்களிடமிருந்து பிறந்தால் என் நண்பன், முஸ்லீமானவன் என்ன செய்வான்? ஸெக்யூலரிஸம் ஒரு புறம் அடைக்கப்பட்ட பாதையாகாதே (cul-de-sac).

ஆனால் சிவகுமார் கோபம் கொள்ளும் இந்த இடங்களில் எல்லாம், வகுப்பு வாத்தியாரிடம் “அவன் மட்டும் என்னைச் சீண்டலாமா சார்? ” என்று மூக்கு விடைக்க புகார் செய்யும் இரண்டாம் வகுப்புப் பையனாகத்தான் தோன்றுகிறார். மறுபடியும் ஒரு ஆனால்: “தமிழில் விமர்சனத்துறை வளரவே இல்லை என்று சொல்லலாம் ” என்று ஒரு கட்டுரையை ஆரம்பிக்கிறார் சிவகுமார். அப்படி ஒரு பார்வை மிக உயர்ந்த தளத்தில் இருந்து பார்த்தல் சாத்தியமே. அந்த உயர்ந்த தளம் நமக்கு எல்லாம் ஒரு லட்சியமாக இருக்கவேண்டும் என்றும் நாம் விரும்புவேன். ஆனால், அந்த சிகரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால், கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி.ரகுநாதன் போன்றவர்கள் எல்லாம் தூரதிருஷ்டிக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும், ஊறும் எறும்புகளாகவாவது தென்படுவார்களோ? அப்படியிருக்க, சிவகுமார் சொல்வது போல “அவர்கள் விமர்சனத்தைக் கலையாக வளர்க்க முயன்றவர்களாகத்” தோன்றுவார்களோ?. ரகுநாதன் கட்சி சேவகம் செய்து கெட்டவர் என்றால், கைலாசபதி கலை, இலக்கிய உணர்வு கிஞ்சித்தும் இல்லாத, தானும் புரிந்து கொள்ளாத கொள்கை வாய்ப்பாடுகள் மட்டுமே படித்த பணக்கார வீட்டில் பிறந்த வெற்றுப் பண்டிதர். சிவத்தம்பியோ, கைலாசபதி இருந்த வரை அவர் அடி ஒற்றி ஒத்து ஊதிய, இப்போது அதை நியாயப்படுத்தும் பண்டிதர். கலை, இலக்கியத்துக்கும் இவர்களுக்கும் என்ன உறவு? கம்யூனிஸ்டுகளின் இரட்டை நிலை பற்றியும், திராவிட இயக்கங்களின் அடுக்குத் தொடர் வார்த்தை ஜாலங்கள் பற்றியும் நியூஜெர்ஸியிலிருந்து உணரக்கூடிய சிவகுமாருக்கு இவர்களின் போலித்தனம் உணரமுடியவில்லையா?

இம்மாதிரிதான் வல்லிக்கண்ணனின் ‘உற்சாகப்படுத்தும்’ விமரிசனம் பற்றியும். சர்வ ஜீவ தயை பாவிப்பவர் வல்லிக்கண்ணன். ஆண்டவன் படைப்பில், ஈ, கொசு, கரப்பான், பல்லி, கள்ள,¢ கத்தாழை எல்லாமே ஜீவன்கள் தான் அவை ரக்ஷ¢க்கப்படவேண்டும் என்று நினைப்பவர் அவர். அவரது பாராட்டுக் கார்டு இல்லாமலேயே அவை உயிர் வாழும் தான். ஆனால் வைக்கோலுக்கும் சேமியாவுக்கும் வித்தியாசம் தெரியாத ரக்ஷகரை என்ன என்று சொல்வது? எனது நண்பர் சொன்னார்: “என் கவிதைத் தொகுப்பை வல்லிக்கண்ணனுக்கும் கொடுக்கலை, தி.க.சி.க்கும் கொடுக்கலை. எதுக்குங்க? ரெண்டு கார்டு உடனே வந்துடும் பாராட்டி”. சிவகுமார் ஆனந்த போதினி பஞ்சாங்கம் பற்றிக் குறிப்பிட்டார். ஆனந்த போதினி, பாம்புப்படம் போட்ட பஞ்சாங்கங்கள் எல்லாம் complimentary copies அனுப்புவதில்லை. இல்லையெனில் அவற்றிற்கும் வல்லிக்கண்ணன் தன் உற்காகப்படுத்தும் கார்டுகளை வருடா வருடம் அனுப்பியிருப்பார்.

சிவகுமார் தன் அமெரிக்க வாழ்க்கைக் காட்சிகளும் சில தந்துள்ளார். தான் எப்படி கால்பந்து கோச் ஆனார், தன் அலுவலகக் காண்டீன் செ·ப், ஜமாய்க்காவில் வந்தவர் எல்லோருடனும் காட்டும் அக்கறையும் அன்னியோன்னியமும், தன் குழந்தையின் பிடிவாதத்தில் அவர் புரிந்து கொண்டது எல்லாவற்றையும் படிக்கும் போது, தமிழ் சமூகத்தையும், அரசியலையும், இலக்கியத்தையும் பற்றிப் பேசும் அதே சிவகுமார் என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லாம் சொன்னபிறகு, நான் முதலில் சொன்னேனே, ஒரு உண்மையும், சினேக பாவமும் கொண்ட நண்பருடன் உரையாடுவது போன்ற மன நிறைவு சிவகுமாரின் புத்தகத்தில் கிடைக்கிறது என்று. அதில் மாற்றமில்லை. இடையிடையே நாம் சொல்ல மாட்டோமா, “இல்லீங்க நீங்க தெரியாம பேசறீங்க. வெளியூரிலேர்ந்துகிட்டு உள்ளூர் நிலவரம் தெரியாம இருக்கீங்க” என்று? அப்படித்தான் அவர் எழுத்து சில இடங்களில் இருக்கிறது.

தன்னை தலைக்குப் பின்னால் ஒரு சுழலும் ஓளிவட்டம் கொண்டவரான ஒரு நினைப்பு சிவகுமாருக்கு இல்லை. தன்னையே கேலி செய்து கொள்ளும் இயல்பினர். தயக்கமில்லாமல், திட்டமிடாமல், பலாபலன் கருதாது மனதில் நினைப்பதைச் சொல்லிவிடுகிறார். இந்த குணம் எதுவும் அவரைத் தமிழ் புண்ணிய பூமியில் வாழும் தமிழ் எழுத்தாளராக அடையாளம் காட்ட மறுக்கிறது.

நான் நினைத்துப் பார்க்கிறேன். இணையம் என்று ஒன்று இல்லாவிட்டால், சிவகுமாரை நம் ஊடகங்கள் அறிய விட்டிருக்குமா?

வெங்கட் சாமிநாதன்/

——————————————————————————————————————————————————-

அட்லாண்டிக்குக்கு அப்பால்: (பி.கே.சிவகுமார்) கட்டுரைத் தொகுப்பு: எனி இண்டியன் பதிப்பகம், 102, 57, P.M.G. காம்ப்ளெக்ஸ், தெற்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17 விலை ரூ 120.

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்