அக்ஷ்ய திருதியை

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

புதுவை ஞானம்அன்புள்ள ஆசிரியருக்கு !

வணக்கம்.

அக்ஷ்ய திருதியை பற்றிய அற்புதமானதொரு ஆய்வுக் கட்டுரை எழுதிய நண்பர் திரு.ராமச்சந்திரன் பாராட்டுக்குரியவர்
தனது திறமைமிகு ஆய்வுக்காக, அதே சமயம் போற்றுதலுக்குரியவர் தனது கலாச்சார அர்ப்பணிப்பு உணர்வுக்காக. அவர்
பணி மேன்மேலும் தொடர வேண்டும்.

ஒரு காலத்தில் பலர் கல்விப் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், சிலர் தமது ஆர்வ மேலீட்டாலும் ஆழ்ந்த அக்கறையாலும்
எதோவொரு அல்லது சில விஷயங்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி உண்மையிலேயே ஆராய்ச்சியில் இறங்கி நீண்ட
காலம் தமக்குள்ளும் தமது நண்பர்களுடனும் கண்டு பிடிக்கப்பட்ட தரவுகள் குறித்து விவாதங்கள் நடத்தி ஐயம் திரிபற
சில முடிவுகளுக்கு வந்து ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டனர்.இப்போது காலம் மாறிவிட்டது எனவே கருத வேண்டி
இருக்கிறது.M.Phil. Phd. பட்டங்கள் ஊதிய உயர்வுக்கும்,பதவி உயர்வுக்கும் கட்டாயம் என்ற நிலை உருவாகி பல ஆய்வுகள்
நிர்பந்தத்தின் பேரில் நடத்தப்பட்டு Guide V/S Student தகராரெல்லாம் காதில் விழுந்து சில கட்டை பஞ்சாயத்து
விவகாரங்களும் காதில் விழுந்து சோர்ந்து போய்க் கிடந்த என் போன்றோருக்கு, இப்படிப்பட்ட சில ஆய்வாளர்கள்,
வாராது வந்த மாமணிதான்.

ஆனாலும் மக்களைப் பற்றிய ஆய்வு என்று ஆகிவிட்டதால் இலக்கிய ரீதியான செவ்வியல் தரவுகளையும் தாண்டி நடை
முறையில் மக்கள் அக்ஷ்ய திருதியை பற்றி என்ன நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ள
விரும்புகிறேன். ஆசிரியர் அனுமதியுடன்.

நான் கடந்த ஆண்டு தான் இத்தகைய ஒரு நம்பிக்கை மக்களிடம் உலவுவதைக் கேள்விப்பட்டேன்

.நம்மில் ஐம்பதுகளைத் தாண்டிக் கொண்டிருப்போருக்கு ‘தெய்வப் பிறவி ‘ திரைப்படமும் அமரர்
டணால் தங்கவேலு அவர்களின் ‘குசேலர் ‘ கதாகாலட்சேபமும் பசுமையாகவே நினைவிருக்கும்.27 குழந்தைகளுடன்
வறுமைக் கோட்டிற்குக் கீழே அவதிப் பட்டுக் கொண்டிருந்த குசேலரை அவரது மனைவி தூண்டி விட்டு துவாரகாபுரி மன்னன்
கண்ணனை சந்தித்து உதவி கேட்டு வரச் சொல்கிறாள்.அதன் படியே ,நீண்ட காலம் கழித்து தான் பார்க்கப் போகும் பால்ய
நண்பனை வெறும் கையோடு சந்திக்கலாதே என்று வீட்டில் உள்ள அடுக்குப் பானையிலிருந்து கொஞ்சம் அவல் எடுத்து
முடிச்சிப் போட்டுக் கொண்டு போய் கண்ணனிடம் தருகிறார் .கண்ணன் ஒரு பிடி அவலை எடுத்து வாயில் போட்டு
அதக்கிச் சுவைத்து விட்டு மறுபடி ஒரு பிடி எடுக்க மகாலட்சுமி தடுத்தாள். ” ஏன் ? ஏழை கொடுத்த அவலைச் சாப்பிட்டால்
வியாதி வந்து விடுமென்றா ? ” இல்லை. அன்போடு ஒருவர் எது கொடுத்தாலும் அது அமுதமாகும் என்பது அவளுக்கும்
தெரியும். ஆனால் ஒருவர் நமக்கு ஒன்று செய்தால் நாம் திருப்பிச் செய்ய வேண்டும் என்ற கவலையில் தடுத்தாள்.
பகவான் சிரித்தார். மகாலட்சுமி சிரித்தாள்.இருவரும் சிரித்ததால் குடிசைகள் எல்லாம் கோபுரம் ஆகிவிட்டன.குசேலரோ
நண்பனைப் பார்த்த மகிழ்ச்சியில் மனைவி சொன்னதை மறந்து உதவி கேட்காமல் திரும்பி விட்டார்.ஆனாலும் பகவான்
தம்பதியினர் சிரித்த சிரிப்பில் குடிசைகள் கோபுரம் ஆகி விட்டதே குசேலரும் கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.அப்படி குசேலர்
பகவானை சந்தித்த நாள் தான் அட்சய திருதியையாம் ! அன்று பொன் வாங்கினால் மேலும் மேலும் பொன் நகை குவியுமாம்.

இந்தக் கதையை எனக்கு கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று ஒரு வட்டிக் கடையில் வைத்துச் சொன்னவர் ஒரு
விவசாயி.அவர் வட்டிக் கடைக்கு ஏன் வந்தார் தெரியுமா ? ஒரு பழைய நகையை அடகு வைத்துப் பணம் புரட்டி
அந்தப் புனித நாளில் ஒரு புது நகை- பொன் நகை வாங்கத்தான் !

வாழ்க…வளர்க …அவரது நம்பிக்கை ! நம்பிக்கையில்லாமல் எப்படி வாழ முடியும் ?

அன்புடன் : புதுவை ஞானம்.
———————————–
puthuvai_gnanam@rediffmail.com

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்