ஓட்டைப் பானைகளில் ஊற்றப்பட்ட தண்ணீர்

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

ஹெச்.ஜி.ரசூல்


திண்ணைவாசகர்கள் மற்றும் வகாபியகொள்கையில் நுழைந்தவர்களுக்கு வகாபிசத்தை தோற்றுவித்த முகமது இப்னு அப்துல் வகாப் பற்றியும் இப்னுசவுது அரசோடு சேர்ந்து அவர் இஸ்லாத்தின் பெயரால் நடத்திய அட்டூழியங்கள் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. இந்த போதாமையை நீக்குவதுதான் எனது அல்லாவும் வகாபுமென்ற கட்டுரையின் நோக்கமாக இருந்தது.
வகாப் பெயர் குறித்த குழப்பம்
1)திருகுரான் பிரதி கூறும் வகாப் என்ற சொல் அல்லாவைக் குறிப்பதாகும்.திண்ணையில் கடந்த சில மாதங்களாக விவாதிக்கப்பட்டு வரும் வகாப் என்ற பெயர் வகாபிச தோற்றமூலவரான முகமது இப்னு அப்துல் வகாபை குறிப்பதாகும். இரண்டும் வேறு வேறானதாகும்.எனவேதான் அல்லாவின் 99 திருநாமங்களில் ஒன்றுதான் வகாப் என்று விவாதச் சூழலுக்கு மாற்றமாக திருத்தல்வாதம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டிருந்தேன்.. இதை இப்னுபசீர் புரிந்துகொள்ள வேண்டும்.

2)மத்திய அரேபியாவின் நஜ்து பகுதியில் 1703ல் பிறந்தவர்தான் முகமது இப்னு அப்துல் வகாப்.(அப்துல் வகாபின் மகன் முகமது.)சம்பந்தமே இல்லாத முகமதுவின் வாப்பா அப்துல் வகாபின் பெயரிலேயே வகாபிசமா என்ற சந்தேகத் தொனி எழுத்தாளர் வகாபியின் கடிதத்தில் இருந்தது. இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லும் போதுதந்தையின் பெயரான அப்துல் வகாப் என்பது மகனின் பெயராகவே வரலாற்றில் நிலைத்துவிட்டது என்று குறிப்பிடுகின்றனர். எனவே இதில் மூச்சுத் திணற வேண்டாம்.
அப்துல்வகாப் என்ற பெயரை எப்படி வெறும் வகாப் என்று கூறலாம் என்று கேட்கிறார். சுத்த அரபு இலக்கணமுறைப்படியான எழுத்துவழக்கு மற்றும் நடைமுறை பேச்சுவழக்கு என இரண்டு முறைகள் உண்டு.நடைமுறை வழக்கின் காரணமாகவே அப்துல் வகாப் வெறும் வகாபாக உருமாறி வந்துள்ளது. (ஹபீப்முகமது என்ற பெயரை முகமது என்று சுருக்கமாக அழைப்பது போல.)
பரிதாப நிலை
எனது அல்லாவும் வகாபும் கட்டுரையின் கமாபிழை,மற்றும் வார்த்தை விடுபடலை வைத்து தன்னை அதி மேதாவியாக காட்டிக் கொள்ள நினைத்த வகாபியின் நிலைமை மிகவும் பரிதாபம்.

அ) அல்லாவின் வேதம் அல்குரான். இமாம் வகாபின் வேதத்தின் பெயர் கிதாப் அல் தவ்கீத்.இதன் வழி நடப்பதே வகாபிசம். இது கஷ்புஷ் ஷீபுஹாத்,முக்தஸ்ருல் இஸ்லாம்,நஸீகத்துல் முஸ்லிமீன்,உள்ளிட்ட நூல்களின் சாரத்தையும் கொண்டதாகும்.(இவ் வரிகளில் நஸீகத்துல் முஸ்லிமீன் என்ற வார்த்தைக்கு இடையே கம விழுந்துவிட்டதை வைத்து ரசூலுக்கு ஒன்றும் தெரியாது என்ற தோரணையில் வகாபி தனது மண்டையையும் சட்டையையும் கிழித்துக் கொள்கிறார்.)
ஆ)இமாம் வகாப் அறுநூறு பேர்கொண்ட படையோடு நேரடியாகப் பங்கேற்று உமர் பின் அல்கதாபின் சகோதரர் சைத் பின் அல்கதாப் மற்றும் டெரர்பின் அஸ்வரின் சமாதி மக்பராவை இடித்துத் தள்ளி நிர்மூலமாக்கினார்.(இவ் வரிகளில் உமர்பின் அல் கதாபின் சகோதரர் என்ற வார்த்தைக்குப் பின் வரும் சைத் பின் அல்கதாப் மற்றும் டெரர்பின் ஆகிய வார்த்தைகள் விடுபட்டுள்லன.) இதை வைத்துக் கொண்டு சவால் விடுவது அவரது விவாத பலவீனத்தையே காட்டுகிறது.ஏனெனில் இந்த விடுபடல் வெறும் பெயர்களின் பகுதிகள் சம்பந்தப்பட்டதாகும்.ஆனால் இந்த விவாதத்தின் சாராம்சம் என்பதே நபிமுகமதுவின் பேரர் இமாம் உசேனின் மக்பரா, நபிகளாரின் மகள் பாத்துமாவின் மக்பரா மற்றும் நபித்தோழர்களின் சமாதி மக்பராக்களை எல்லாம் இடித்து தரைமட்டமாக்கிய வகாபிகளின் பாசிச நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டதாகும்.இது நபிகளாரின் குடும்பத்தையும் நபி முகமது முன் வைத்த அறவியல் கொள்கைகளையும் இடித்து தரைமட்டமாக்கியதற்கு சமமாகும்.

நபிமுகமதுவின் கலாச்சார மரபுகளை அழித்தொழிக்கும் நவீன யசீதுகளான வகாபிகளின் முன்னோடிகளாகவே அபுசுபியான் முஆவியா,யசீது போன்றோர் வரலாற்றில் நிலைபெற்றுள்ளார்கள். புனித ஹஜ்ஜின் பெயரால் வெறும் இறைவணக்க தலமான மக்காவின் கபாவை முன்னிறுத்தி மதிநாவில் அடங்கப்பட்ட நபிமுகமதுவின் மக்பராவை, அங்கு சென்று சுதந்திரமாக செய்ய விரும்பும் ஜியாரத்தை மத போலீஸ்களால் தடை செய்யும் இன்றைய சவுதி வகாபிய ஆட்சியாளர்களின் செயல்களை இன்னும் கூர்மையாக கட்டுடைத்துப் பார்த்தால் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் கூட வெளிப்படக்கூடும்.

அதுசரி கட்டுரையாளர் இதுநாள்வரை படைப்புலகில் அறியப்பட்ட எனது பெயரை ஹெச்.ஜி.ரசூல் என்றே எழுதி வந்தார்.ஆனால் இவ்வாரம் நான் குறிப்பிடப்படாத நிலையில் குலாம்ரசூல் என்று பெயரை மாற்றியுள்ளார்.நேரடியாக முகம் காட்டப்பயந்து வகாபி என்ற பெயரில் ஒளிந்து கொண்டு இந்தக் குழப்பத்தை இவர் ஏன் அரங்கேற்ற வேண்டும்?
————————
mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்