அரசியல்ல இதெல்லாம் சாதா……ரணமப்பா !!!

This entry is part of 39 in the series 20090402_Issue

இரா.பிரவீன்குமார்


மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவிலும், இவர் அந்தகட்சி கூட, அவர் இந்த கட்சிகூட, இந்த கட்சி எந்த கட்சி கூட ? என்ற குழப்பமான கூட்டணி சூழல், அரசியல் கட்சிகளிடம் மட்டுமல்லாமல், மக்களிடமும் நிலவிவருகிறது. கொண்ட கொள்கைகளை கலைந்து சுயநல அரசியல் லாபத்திற்காக கூட்டணி அமைக்கும் நமது மக்கள் பணியாளர்களின் நிலை அந்தோ பரிதாபம் தான்.

தேசிய கட்சிகளில் தொடங்கி, மாநில கட்சிகள் வரை இந்த கூட்டணி கலாச்சாரமே மேலொங்கி நிற்கிறது. தேர்தலுக்கு தேர்தல், இந்த கூட்டணிகள் மாற்றமடைந்துகொண்டே இருக்கிறதே தவிற மக்களின் வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் வரவில்லை. மக்களின் வளர்ச்சி திட்டங்களை மையப்படுத்தி நடக்கவேண்டிய அரசியல் கலாச்சாரம், இலவசங்களையும் போலி வாக்குறுதிகளையும், விமர்சன அரசியலையும் மையப்படுத்தியே நடக்கிறது. தேர்தல்தொறும் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் இலவசங்களுக்கே முக்கியத்தும் கொடுக்கபடுகிறது. இதற்கெல்லாம் முன்னோடியாக செயல்படுவதில் நம் தமிழகத்திற்குதான் எத்தனை பெறுமை.

வறுமை கோட்டிற்கு கீழிருக்கும் அனைவருக்கும் கைபேசியை (செல்போன்) தருவதாக சொல்லி இருக்கிறது பா.ஜ.க. அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதியை செய்துகொடுப்பதாக வாக்குறுதியை அளித்திருக்கிறது காங்கிரஸ். தகவல் தொடர்பு அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அடிப்படை தன்னிறைவே அடையாத கிராமங்கள் இருக்க மற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் தருவதேனோ. எனது தேர்தல் அறிக்கையை தான் கலைஞர் பின்பற்றுகிறார், அதனால் நான் தேர்தல் அறிக்கையே வெளியிடபோவதில்லை என்கிறார் விஜயகாந்த்.(அப்பாடா இன்னொரு இலவச அறிக்கையில் இருந்து தப்பித்தது தமிழகம்) சென்னையில் நடந்த இளையரணி மாநாட்டில் பேசிய அவர், மின்சார தட்டுபாட்டிலிருந்து விடுபட என்னிடம் திட்டம் உள்ளது ஆனால் அதை இப்போது சொல்ல மாட்டேன் சொன்னால் அதை ஆளுகட்சியினர் காப்பி அடிப்பார்கள் என்றார். மறந்தும் கூட மக்களுக்கு நல்லது செய்வதில்லை என்பதில் மிகதெளிவாக உள்ளனர்.

கூடுவிட்டு கூடுதாண்டுவதில் வித்தகர்கள் பா.ம.க.வினர். வெற்றி பெறும் கூட்டணியிலே இருப்பது என உறுதி பூண்டவர்கள்.ஆனால் தேர்தல் முடிந்தபின் தங்களால் தான் கூட்டணிக்கே வெற்றி என்று மார்தட்டிகொள்வார்கள். தற்போதுள்ள அரசியல் களத்தில் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கம்யூனிஸ்டு கட்சியும் கூட மேற்கு வங்கத்தில் ஒரு கொள்கை, கேரளாவில் ஒரு கொள்கை, தமிழகத்தில் ஒரு கொள்கை, மத்தியில் மற்றொரு கொள்கை எனக் கொண்டு, கூட்டணியில் திலைக்கின்றனர். தி.மு.க மற்றும் அ.தி.மு.க. கட்சிகளை குறித்து தனியாக சொல்வதர்கில்லை. தேவைப்பட்டால் மதவாதகட்சிகளுடன் கூட்டணி இல்லையெல் மதசார்பின்மை எனும் போர்வையில் உள்ள கட்சிகளுடன் கூட்டணி என்று பச்சோந்தியாக உள்ளது இந்த திராவிட கட்சிகள்.

ஈழப்பிரச்சனையில் காங்கிரசை எதிர்த்து வீருகொண்டெழுந்த தொல்.திருமா தேர்தல் என்றதும் அவர்களிடம் மண்டியிட்டு நிர்கிறார். மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று கட்சி தொடங்கியவர் 11 சீட் வேண்டும் 10 சீட் வேண்டும் என்று பாரபட்சமின்றி தி.மு.க மற்றும் அ.தி.மு.க. என இருவரிடமும் கூட்டணி பேச்சுவார்த்தையில் உள்ளார். நான் கைகாட்டுபவர்களுக்கு ஓட்டு போடுங்கள், அதில் பொருள் உள்ளது என்கிறார். (என்ன கொடும சார் இது )

ஒரு தேர்தலில் இந்த கூட்டணியில் இருந்து எதிர்கட்சியினரை பிரச்சாரத்தின் போது மக்கள் மத்தியில் வசைமாறி சாடி, அடுத்த தேர்தலில் எதிர் கட்சியின் கூட்டணியில் சேர்ந்து அதே மக்களின் முன்னிலையில், முன்பு தான் இருந்த கூட்டணியினரை எந்த ஒரு தயக்கமும் இன்றி சாடுகின்றனர். இதுதான் கூட்டணி தர்ம…மாமா!!!

மக்களின் வளர்ச்சி திட்டங்களை மையப்படுத்தி, மக்களை அதிகாரப்படுத்தும் அரசியல் கலாச்சாரம் விரைவில் வரும், அங்கு விமர்சன அரசியலுக்கு வேலை இல்லை. நமது மக்களும் அந்த மாற்றத்திற்காக தான் காத்துகொண்டுருக்கிறார்கள் மக்கள் சக்தி ஒருமித்து இருக்கும் அந்த காலகட்டத்தில் கூட இங்குள்ள தி.மு.க மற்றும் அ.தி.மு.க இடையே கூட்டணி அமைந்தாலும் ஆச்சிரிப்படுவற்கில்லை.அவர்கள் நிச்சயம் அதையும் செய்வார்கள். இந்த நிலையில் நமது நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்களின் வசனம் தான் ஞாபகம் வருகிறது. அரசியல்ல இதெல்லாம் சாதா……ரணமப்பா !!!

praver5@gmail.com


இதமுடன்
இரா.பிரவீன்குமார்

Series Navigation