மெய்மையின் மயக்கம்-28

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து…)

பன்மைப்பாடு

மனிதர்களின் பன்மைத் தன்மை அல்லது பன்மைப்பாடு என்னும் கருத்தமைவு ஒன்றும் தமிழகத்துச் சிந்தனை மரபுகளுக்குப் புதியது அல்ல. எனினும், உலகத்தின் மூலை-முடுக்குகளில் எல்லாம் தேடித் திரிந்து கண்டு பிடித்துப் புத்தம் புதிய சிந்தனைகளாகத் தமிழ்ச் சூழலில் இதனைப் பறை சாற்றிக் கொண்டு வருகின்ற புத்தம் புதிய வித்தகர்களுக்கோ நம் நாட்டில் இன்று பஞ்சம் இல்லை.

சொல்லாடல், கதையாடல், மொழியின் அதிகாரம், சட்டகம், பிரதி, என்பன வற்றை எல்லாம் ஆழமான கருத்தமைவுகளாகக் கருதிக் கொண்டு மிகவும் பெருமையாக இவற்றை மீட்படுத்தி (ரிப்பீட்)க் கொண்டு வருகின்ற சிந்தனையாளர்களின் கருத்துகளைப் படித்துப் பார்த்தால் நமக்கு வேடிக்கையாகத் தோன்றுகிறது. சிறு பிள்ளைத் தனமான இந்த வேடிக்கைகளைச் சுவனித்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியும் இல்லை.

எப்படியும், நுனிப் புல் மேய்ச்சலில் ஒரு சுகம் இல்லாமல் இருந்திட முடியுமா ? அதிலும், மாற்றான் தோட்டத்துப் புல் வெளி என்றால் தனிச் சுகம்தானே! ஆழம் வரை மூழ்கிப் பார்த்து எதனையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இவர்களுக்குத் தோன்றுவதே இல்லை போலும்!

சமயச் சிந்தனைகள்

ஒன்றானவன், இரண்டானவன், என்று எல்லாம் கடவுளைச் சித்தரித்துக் காட்டுவது தமிழகத்தில் வழக்கம். ஒருவன்தான் இறைவன் என்ற போதிலும் பல் வேறு வடிவங்களில் காட்சி அளித்துக் கொண்டு அவன் வருகிறான் என்பதுதான் இதற்குப் பொருளும் ஆகும்.

‘உருவும் அருவும் உருவருவும் ஆகிப்

பருவ வடிவம் பலவாய் ‘

ஒரே இறைவன் இருப்பதாகக் குமரகுருபரர் கூறுகின்ற பொழுது ஒரே இறைவனின் பன்மைப் பாட்டினைப் பற்றிதான் அவர் பேசுகிறார்; பருமை வடிவம் என்பதைத்தான் பருவ வடிவம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் ‘

என்று பாடுகின்ற மாணிக்க வாசகர், ஒன்றான ஒன்றின் பலவான வெளிப்பாட்டினைப் பற்றிதான் எடுத்து உரைக்கிறார்; கடவுளின் பன்மைப்பாடுகளை எல்லாம் தமதாக்கியும் கொள்கிறார்.

‘நிலம், தீ, நீர், வளி, விசும்பு . . . ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ‘

என்று வையகத்தின் பன்மைப் பாட்டினைத் தொல் காப்பியர் உரைத்துச் சென்றிட வில்லையா ?

எனினும், பன்மைப்பாடு பற்றிய கருத்தமைவுகளாக இவற்றை எல்லாம் நமது புதிய வித்தகர்கள் புரிந்து கொள்வதற்கு முயல்வது இல்லை. ஏனென்றால், மேலை நாட்டுச் சரக்குகள்தாம் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இவர்களுள், மறுப்பு வாதிகளாக இருப்பவர்களோ சமயச் சிந்தனைகளை எல்லாம் கடவுளைப் பற்றிய சிந்தனைகளாகக் கருதிக் கொண்டு துச்சம் என்று அவற்றை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள்.

அப்படி என்றால், கடவுளிடம் இருந்துதான் கடவுளைப் பற்றிய கருத்துகள் உருவாகிக் கொண்டு வந்து இருக்கின்றன என்று இவர்கள் நம்புகிறார்கள் என்று பொருள்; எனவே, கடவுளை மறுக்கின்ற அதே நேரத்தில், கடவுளின் இருப்பினை நம்பிக் கொண்டும் இவர்கள் வருகிறார்கள் என்றும் பொருள்!

இதனால்தான், இருப்பு வாதத்தின் இறுதிக் கட்டம்தான் மறுப்பு வாதம் என்றும் கடவுளுக்கு வழங்கப் படுகின்ற எதிர் மறையான ஓர் ஒப்பளிப்புதான் அது என்றும் கார்ல் மார்க்ஸ் கூறிட நேர்ந்து இருந்தது போலும்!

இல்லை என்று கடவுளை நம்புகின்ற இருப்பு வாதிகள் இவர்கள்!

பெரியார் திடல்

1980-81 வாக்கில், பெரியார் திடல் நூலகத்தில் தொடர்ச்சியாக அவ் வப்போது விவாதக் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு வந்து இருந்தன. கலி. பூங்குன்றன், இராசேந்திரன், முதலிய கடவுள் மறுப்பாளர்கள் சிலர் தவறாமல் இக் கூட்டங்களில் கலந்து கொள்வதும் உண்டு.

பொதுமை வாதத்திற்கு எதிரான விவாதங்கள் இக் கூட்டங்களில் வலியுறுத்தப் படுவதைக் கண்ட ஒருவர், பொதுவுடைமை பற்றி எடுத்து உரைப்பதற்கு முன் வந்து இருந்தாராம்! அவருடைய பெயர் எனக்கு மறந்து போய் விட்டது.

அவர் பேசுகின்ற கூட்டத்தில் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். பொதுமை வாதத்திற்கு எதிரான கருத்துகள் வலியுறுத்தப் படுகின்ற பொழுது, அவருக்கு ஆதரவாக நான் வாதிட வேண்டும் என்று என்னை அவர் கேட்டும் கொண்டார்.

நல்ல தந்திரம்தான்! ஒரு வித்தகன் ஆகி விட்ட நினைப்பு எனக்கு! அவர் பேசிய கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.

அவர் பேசி முடித்ததும் கேள்விக் கணைகளால் அவரைத் துளைத்து எடுத்துக் கொண்டு இருந்தனர் மறுப்பு வாதிகள்! கடவுள் மறுப்பு வாதத்தினைப் பொதுமை வாதிகள் வலியுறுத்துவது இல்லையே ஏன் ? என்னும் கேள்வியும் அவற்றுள் ஒன்று!

என்னை அழைத்துச் சென்று இருந்தவரோ திணறிக் கொண்டு இருந்தார்; அவரைப் பார்ப்பதற்கு எனக்குப் பரிதாபமாக இருந்தது. அவர்களது கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக நான் எழுந்தேன்; மிகவும் நாகரிகமாக தடுக்கவும் பட்டேன்!

பேச்சாளரின் கருத்துகளுக்குப் பேச்சாளர்தாம் பொறுப்பு; அவரது கருத்துகளை வலியுறுத்தி அவர்தாம் விளக்கம் அளித்திட வேண்டும்; உங்கள் கருத்துகளை இன்னொரு கூட்டத்தில் நீங்கள் முன் வைக்கலாம்; அப் பொழுது கேட்கப் படுகின்ற கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்தும் கொள்ளலாம்; என்று கலி. பூங்குன்றன் கூறினார்.

இறுதியில், மார்க்சியம் பற்றி நான் பேசுவது என்று முடிவு ஆயிற்று!

அடுத்த கூட்டத்தில் மார்க்சியம் பற்றி நான் பேசினேன். அதன் சுருக்கம் பின் வருமாறு:

‘மதம் பற்றிய மார்க்சியக் கருத்துகளை மட்டும்தாம் இங்கே நான் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.

இங்கே வந்து இருப்பவர்கள் யாருக்கும் கடவுள் நம்பிக்கை இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை; எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை!

அப்படி என்றால், நம் அனைவரது கொள்கைகளும் ஒன்றுதான் என்று நாம் பொருட் படுத்திக் கொள்ள முடியுமா ? என்றால், அதுதான் முடியாது! ஏனென்றால், நீங்கள் மறுப்பு வாதிகள்; நானோ மறுப்பு வாதத்தைக் கடந்து வந்து விட்ட ஒரு மார்க்சிய வாதி!

மூட நம்பிக்கைகளை மக்கள் களைந்திட வேண்டும் என்றால், முதலில், மூட நம்பிக்கைகளை அவசியப் படுத்துகின்ற சமுதாய நிலவரங்கள் ஒழிக்கப் பட வேண்டும் என்பதுதான் மார்க்சின் கருத்து.

இதனால்தான், மண்ணைப் பற்றிய விள்ளனமாக விண்ணைப் பற்றிய விள்ளனம் மாறி ஆக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

விண்ணில் கடவுளைத் தேடிக் கொண்டு இருப்பவர்கள் இருப்பு வாதிகள்; அதனை மறுப்பதுடன் தங்கள் வாதத்தை முடித்துக் கொள்பவர்கள் மறுப்பு வாதிகள்! ஆனால், விண்ணின் கடவுளுக்கு மண்ணின் நிலவரங்களில் இருந்து விளக்கம் அளிப்பவர்கள்தாம் மார்க்சிய வாதிகள்!

கடவுள் சிலைகளை உடைப்பதன் மூலம் கடவுளை ஒழித்து விட முடியாது; ஏனென்றால், கடவுள் குடியிருப்பது சிலைகளில் அல்ல; மாறாக, பணத்தில்!

உற்பத்தி, பகிர்வு, நுகர்ச்சி, ஆகியவை பற்றிய ஆய்வு அல்ல, பொருளாதாரம் என்பது! இவற்றில் எல்லாம் மனிதர்கள் கொள்ளுகின்ற உறவுகளைப் பற்றிய ஆய்வு அது!

எனவே, மார்க்சிய வாதிகளைப் பொறுத்த வரை, மனித உறவுகளின் மாற்றங்கள்தாம் புரட்சி என்பது ஆகும்—-ஆட்சிகளைக் கவிழ்ப்பதும் அரியணையில் அமர்ந்து கொள்வதும் அல்ல!

மனித உறவுகளுக்கு எல்லாம் அடிப்படையாகத் திகழ்ந்து கொண்டு வருவது பொருளாதார உறவுதான்! இந்த உறவில் மட்டும் அல்ல, மற்ற உறவுகளில் கூட, பருப் பொருள்களுக்கு அடிமை ஆகி விட்டது ஓர் அவல நிலையில்தாம் இன்று நாம் வாழ்ந்து கொண்டு வருகிறோம்.

பணத்தின் மூலமாக உறவு—-சரக்குகளின் மூலமாக உறவு—-உணவு-உடை-உறைவிடம் மூலமாக உறவு—-என்று ஒரு கேவலமான வாழ்க்கையினைத்தான் வாழ்ந்து கொண்டும் நாம் வருகிறோம். ஆனால், இந்தக் கேவல நிலையினை மறந்து விட்டு—-அவல நிலையினை மறந்து விட்டு—-நாம் அடித்துக் கொண்டு வருகின்ற கொட்டங்களுக்கும் பாராட்டிக் கொண்டு வருகின்ற தற் பெருமைகளுக்கும் கணக்கே இல்லை.

சரியாகச் சொல்வது என்றால், மார்க்சிய வாதிகள் மட்டும்தாம் ஆன்மிக வாதிகள் ஆவர். ஆனால் நீங்களோ, ஆன்மாவை மறுத்து விடுவீர்கள்! இதன் மூலம், ஆன்மா என்றால் என்ன ? என்று விளக்கிட வேண்டிய வேலையை மிகவும் எளிதாக நீங்கள் தட்டிக் கழித்தும் விடுவீர்கள்! இதுதான் பகுத்தறிவு என்பதா ?

பகுத்தறிவாளர்கள் என்று உங்களை நீங்கள் அழைத்துக் கொள்வது கூட முற்றிலும் தவறு ஆனதுதான் ஆகும். ஏனென்றால், கரணிய வாதிகள் என்றுதான் உங்களை அழைத்துக் கொள்வதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள்! ஆனால், பகுத்தறிவு வாதம் என்று அதனைத் தவறாக நீங்கள் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்!

முதலாண்மைச் சமுதாயத்தைப் பற்றிய ஆய்வுதான் மார்க்சியம்! இந்த முதலாண்மைச் சமுதாயத்திற்கு உள்ளேயே பொதுமைச் சமுதாயம் கருத் தரித்துக் கொண்டு வருகின்ற விந்தையினை மார்க்சியம் சுட்டிக் காட்டுகிறது.

உடைமை எண்ணங்கள் தேவைப் படாத ஒரு சமுதாயம்தான் பொதுமைச் சமுதாயம்! விடுதலையான தனி மனிதர்களின் விடுதலையான உறவுகளாக அந்தச் சமுதாயம் திகழும்!

அதன் பின்னர்தான், மனிதர்களுக்கு மதமும் தேவைப் படாது; கலை-இலக்கியங்களும் தேவைப் படாது! ‘

என்று நான் பேசி முடித்தேன். சிறிது நேர மவுனத்திற்குப் பின்னர் கேள்விக் கணைகள் தொடுக்கப் பட்டன.

அவற்றுள், முக்கியமான இரண்டு கேள்விகளில் ஒன்று: மூட நம்பிக்கைகள் ஒழியாமல் புரட்சி எதுவும் நடந்திட முடியாது என்பதைப் பற்றியது; இரண்டு: அப் பொழுது பிரபலம் ஆகி இருந்த யூரோ-கம்யூனிசம் பற்றியது! இவற்றிற்கு நான் அளித்து இருந்த பதில்கள் பின் வருமாறு:

‘தலை முறை-தலை முறையாக வளர்ந்து கொண்டு வந்து இருக்கின்ற ஒரு சமுதாயத்தில்தான் நாம் பிறந்து கொண்டு வருகிறோம். இந்தச் சமுதாய நிலவரங்கள்தாம் நமது சிந்தனைகளை வடிவு அமைத்துக் கொண்டும் வந்து இருக்கின்றன. இதே சமுதாயத்தினது முரண்பாடுகளின் மோதல்களில் இருந்துதான் முரணமான—-புரட்சிகரமான—-சிந்தனைகளையும் நாம் வளர்த்துக் கொண்டு வருகிறோம்.

எனவே, தங்கள் பழைய நம்பிக்கைகளைக் களைந்து புதிய நம்பிக்கைகளை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்குப் புதிய நிலவரங்கள் தேவை! இந்தப் புதிய நிலவரங்களையும் மக்கள்தாம் படைத்துக் கொண்டு ஆக வேண்டும்.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று நீங்கள் கற்பித்துக் கொள்ளலாம். ஆனால், யாரோ ஒரு முட்டாளோ அல்லது புத்தி சாலியோ தனது சிந்தனைத் திறமையினால் உருவாக்கி மக்களுக்கு அளித்து, அதனால், மக்களின் மனங்களைப் பற்றிக் கொண்டு வந்து இருப்பது அல்ல கடவுள் நம்பிக்கை!

ஏனென்றால், சமுதாய நிலவரங்களின் கையறு நிலைகளில் இருந்து எழுந்து, தன்னியல்பாக மக்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு வந்து இருப்பதுதான் கடவுள் நம்பிக்கை! கடவுளைப் பற்றிய முதலாண்மைச் சமுதாயத்து நம்பிக்கைகளுக்கும் முந்தைய சமுதாயங்களின் நம்பிக்கைகளுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு.

முதலாண்மைச் சமுதாயத்தின் கடவுளைப் பொறுத்த வரை, பணத்தின் அனைத்துச் சாயைகளையும்—-முதலின் அனைத்துக் கூறுகளையும்—-தன்னுள் கொண்டு இருப்பவர்தாம் கடவுள்! நுண்மை என்றும் திண்மை என்றும் முதலாண்மைச் சமுதாயத்து மனிதர்கள் பிளவுண்டு கிடப்பதைப் போல, நுண்மையாகவும் திண்மையாகவும் இங்கே கடவுளும் வரையறுக்கப் பட்டு ஆக வேண்டும். அப்படி வரையறுத்திடப் பட முடியாத எந்த ஒரு கடவுள் நம்பிக்கையும் முதலாண்மையின் வளர்ச்சியில் அழிந்து போவது உறுதி.

இதனால்தான், வளர்ந்து கொண்டு வருகின்ற மதங்கள் எல்லாம் தங்கள் இறையியல் கருத்தமைவுகளை மாற்றி அமைத்துக் கொண்டும் வந்து இருக்கின்றன.

மனித இயல்பு என்பது அயன்மைப் பட்டுக் கிடக்கின்ற வரை, கடவுளை மக்கள் கை விட்டு விட முடியாது.

ஆசிய கம்யூனிசம், ஈரோப்பிய கம்யூனிசம், என்று எல்லாம் மார்க்சியத்தைப் பாகுபடுத்திப் பார்ப்பது ஸ்தாலினிச வாதிகளின் வேலை; மார்க்சிய வாதிகளின் வேலை அல்ல!

ஆசிய முதலாண்மைக்கும் ஈரோப்பிய முதலாண்மைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளில் இருந்துதான் இத் தகு விந்தையான சிந்தனைகள் உதயம் ஆகிட முடியும் என்ற போதிலும், பொதுமை வாதம் என்பது ஒன்றுதான்! ஏனென்றால், முதலாண்மை என்பதும் ஒன்றுதான்!

பழைய நிலவரங்களை முற்றிலுமாக அழித்து ஒழித்துக் கொண்டு வளர்ந்திட முடியாத முதலாண்மையின் தள்ளாட்டங்களில் இருந்து எழுந்து கொண்டு வந்து இருக்கின்ற அரசு-முதலாண்மையின் வாதங்கள்தாம் இவை! ஆசிய-ஆஃப்ரிக்க நாடுகளில் முதலாண்மையின் வளர்ச்சி குன்றிப் போய்க் கிடக்கிறது என்றுதான் இதற்குப் பொருள்! ‘

இப்படி எல்லாம் நான் பேசி முடித்தேன். ஆனால், முக்கியமான விசயம் இது வல்ல. மக்களுக்கு எப்படி மதம் என்று ஒன்று தேவைப் படுகிறது என்பதுதான் இங்கே முக்கியம்; கூடவே, புனைவுச் சுவனம் தருகின்ற போதைப் பயனும் முக்கியம்!

மெய்மையும் மதமும்

கட்டிய கணவன் சரி இல்லை என்று குறை பட்டுக் கொள்கிறாள் மனைவி. ஏனென்றால், பல் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவன் இருக்கிறானாம்; கண்டும் காணாமல் இருந்து விடலாம் என்றால் அவனோ அனைத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியும் விடுகிறானாம்!

‘உனக்குக் குறுகிய மனம்; எனக்கோ பரந்த மனம்! எத்தனை பேரை வேண்டும் என்றாலும் நான் காதலிப்பேன்; உனக்கு என்ன ? ‘

‘கை நிறைய நான் சம்பாதிக்கிறேன்; உனக்கு வேண்டியதையும் செய்து விடுகிறேன்; வேறு எவளுடன் நான் போனால் உனக்கு என்ன ? ‘

என்று எல்லாம் அவன் கேட்கிறானாம்!

இவனே கதி என்று அவன் கட்டிய தாலிக்காக அவனுடன் வாழ்ந்து கொண்டு வருகின்ற மனைவியால் எப்படி இதனைப் பொறுத்துக் கொள்ள முடியும் ?

‘கை நிறைய சம்பாதிக்கின்ற திமிர் அவனுக்கு; ஓகோ என்று தொழிலும் வளர்ந்து கொண்டு வருகிறதாம்; இதனால்தான் இந்த ஆணவம்! எத்தனை நாளைக்கு இந்த ஆணவம் ? அரத்தம் சுண்டி முடங்கிப் போனால் எவள் வருவாள், பாடு பார்க்க ? ‘

என்று பக்கத்து வீட்டு மாமியிடம் அவள் புலம்புகிறாள்.

மாமிக்கு இவை எல்லாம் தெரியாதா, என்ன ?

‘வா, கோயிலுக்குப் போய் விட்டு வரலாம் ‘ என்று கூறி ஒரு கோயிலுக்கு அவளை மாமி அழைத்துக் கொண்டு செல்கிறார்.

முண்டகக் கண்ணி, கருமாரி, காமாட்சி, வேளாங் கண்ணி, என்று ஒவ்வொரு வாரமும் ஒவ்வோர் அம்மன் கோயிலுக்கு அவர்கள் கிளம்பி விடுகிறார்கள்.

கூடவே, அம்மன் வந்து அருள் பாலிக்கின்ற திரைப் படங்களையும் தவறாமல் சென்று அவர்கள் பார்த்து விடுகிறார்கள்.

ஒரு நாள் ஒரு சமயச் சொற் பொழிவுக்கு அவளை மாமி அழைத்துக் கொண்டு செல்கிறார்.

‘கன்ம மலம், ஆணவ மலம், மாய மலம், ஆகிய மும் மலங்களினாலும் நமது ஆன்மா கட்டப் பட்டு இருக்கிறது.

இந்த மும் மலங்களின் கட்டுகளையும் நாம் அறுத்து விடுகின்ற பொழுது, நமது ஆன்மா விடுதலை அடைந்து இறைவனுடன் ஒன்றி விடுகிறது. பதிக்கும் பசுவுக்கும் இடையே உள்ள உறவு இதுதான் ‘

என்று சொற் பொழிவாளர் பேசிக் கொண்டு இருக்கிறார்.

‘சாதி மலம் ‘ என்று ஒன்று இருப்பதை அவர் மறந்து விட்டார் என்பது வேறு விசயம்!

ஆனால், இந்த மும் மலங்களில் ஆணவ மலம் மட்டும் மிகவும் நன்றாக அவளுக்குப் புரிந்து விடுகிறது. ஏனென்றால், தனது கணவனிடம் அதனை அவள் பார்த்து இருக்கிறாள். கன்ம மலமும் மாய மலமும் அவளுக்குப் புரியாமல் இருந்ததனால் தனது கணவனிடமும் அவை இருந்ததைக் கவனிப்பதற்கு அவள் தவறி விடுகிறாள்.

மனத்தின் விடுதலை

வெறும் குப்பைகள் என்று இவற்றை எல்லாம் ஒரு மறுப்பு வாதி ஒதுக்கித் தள்ளி விடுவான் என்பது நமக்குத் தெரியும். ஆனால், மனத்தின் விடுதலையில் பின் வருமாறு இது பொருட் படுத்தப் பட்டு இருக்கிறது:

‘ ‘கன்மம் ‘, ‘மாயம் ‘, ‘ஆணவம் ‘, ஆகிய மலங்களினுள் ஒடுங்கிப் போய் விட்ட காரணத்தினால்தான், ‘ஆன்மா ‘ என்பது இறைவனிடம் இருந்து அயன்மைப் பட்டுக் கிடக்கிறது என்று சிவ நெறியாளர்கள் கருதுகிறார்கள்.

இந்த மலங்கள் அற்றுப் போகின்ற பொழுது, ஆன்மா என்பது விடுதலை பெற்று இறைவனுடன் ஒன்றி விடும் என்பது அவர்களது சிவ நெறி முடிவு.

இது போல,

ஆதாய நோக்கம் மற்றும் கூலி நோக்கம் ஆகிய ‘கன்ம ‘ மலங்களின் உள்ளும்—-

முதலாளி வருக்கம் மற்றும் உழைப்பாளி வருக்கம் என்னும் ‘ஆணவ ‘ மலங்களின்

உள்ளும் —-

இத் தகையது ஓர் அயன்மையான வாழ்க்கையினையும் இயல்பாக ஏற்றுக் கொண்டு இருக்கின்ற ‘மாய ‘ மலத்தின் உள்ளும்—-

மனித மனம் ஒடுங்கிக் கிடக்கின்ற காரணத்தினால்தான்—-

ஓர் ஆன்மிக நிலையினை இன்று அது எய்தி இருக்கிறது என்றும்

இந்த மும் மலங்களும் அற்றுப் போகின்ற பொழுது—-

அயன்மைப் பாட்டினால் பிளவு பட்டு நுண்மையாகிப் போன இந்த மனம்—-

ஆன்மிக நுண்மைப் பாட்டில் இருந்து விடுதலை பெற்று—-

மனித இயல்பான விடுதலை மனமாக மாற்றம் அடையும் என்றும்

நாம் கொள்ளலாம். ‘

கலை-இலக்கியம் என்ன செய்யும் ?

தாலியின் வேலியினைத் தாண்டிச் சென்று விட்டுத் தற் பெருமை பேசிக் கொண்டு இருக்கின்ற நம் நாட்டுப் ‘பரந்த மனக் கார ‘னையும் தாலியின் வேலியினைத் தாண்டிச் சென்றிட முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்ற அவனது மனைவியையும் நாம் எடுத்துக் கொள்வோம்.

ஓர் ஆணவக் காரனாகத் தனது கணவனை இந்த மனைவி காண்கிறாள். கை நிறைய அவன் சாம்பாதிப்பதுதான் அவனது ஆணவத்திற்குக் காரணம் என்பதையும் அவள் கண்டு பிடித்து விடுகிறாள்.

ஆனாலும், இந்த அனுபவ அறிவுடன் அவளால் நிறைவு அடைந்திட முடிய வில்லை. எனவே, பக்தியிலும் சுவனிப்பிலும் ஆழ்ந்து, மாயமாகவும் ஒரு மயக்கமாகவும் தனது கணவனைப் புரிந்து கொண்டு ஆறுதல் அடைவதற்கு அவள் முற் படுகிறாள். மெய்மையின் இந்த மயக்கம்தான் புனைவின் போதைப் பயன் ஆகும்.

அனுபவ அறிவு நிலையில் அவள் புரிந்து கொண்டு இருக்கின்ற அவளது வாழ்க்கைக்கு ‘மும் மலங்கள் ‘ என்னும் சமயக் கருத்தமைவின் மூலம் விளக்கம் அளிப்பதற்கு முற்படுகிறார் இறை இயலாளர்!

இந்த உள் முகச் சிந்தனையினை வரலாற்றின் நிகழ்ப்பாட்டில் வைத்து நாம் பார்க்கின்ற பொழுது, வருக்கங்கள்—-வருக்க வாழ்க்கையின் கட்டுகளை அறுத்துத் தனி மனிதர்கள் எய்திடக் கூடிய சமுதாய விடுதலை—-என நமது சிந்தனை விரிகிறது.

ஆனால், கதை-கவிதைகளின் வாசிப்பினால் இதில் நாம் பெற்றுக் கொள்ளக் கூடிய ‘அறிவுப் பயன் ‘ ஏதாவது உண்டா ? என்றால், எதுவும் இல்லை! ஏனென்றால், அறிவு புகட்டுவது அல்ல, மாறாக, அறிவை மயங்க வைப்பதுதான்—-விளக்கம் அளிப்பது அல்ல, மாறாக, விளக்கங்களைப் புறக் கணித்து வேதனைகளைத் தட்டி எழுப்பிப் பின்னர் அடங்கிட வைப்பதுதான்—-புனைவு இலக்கியங்களின் பணி!

கற்பனை

ஜெய மோகனைப் பொறுத்த வரை, ‘பரந்த மனக் காரர் ‘களையும் ‘பரந்த மனக் காரி ‘களையும் தமக்குக் கிடைக்கின்ற ‘தகவல் ‘களாக அவர் காண்கிறார். இது போல, வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கைச் சூழல்களில் இருந்தும் வெவ்வேறு வகையான தகவல்களையும் அவர் சேகரித்துக் கொள்கிறார். கூடவே, ‘கற்பனையில், அதாவது, தமது சிந்தனையில் ‘, அவற்றை அவர் ‘தொகுத்து ‘ம் கொள்கிறார்.

ஆனால், இந்தத் தகவல்கள் கற்பனை ஆனவை அல்ல; ஆங்காங்கே இருந்து அவர் எடுத்துக் கொண்டு இருக்கின்ற ‘நகல்கள் ‘!

தேடுகிறேன், தேடுகிறேன் என்று கதைஞர்கள் தற் பெருமை அடித்துக் கொண்டு வருகிறார்களே, இவர்கள் தேடுவது இந்தத் தகவல்களைத்தாம்; அடித்துக் கொள்வதோ அவற்றின் ஈயடித்தான் நகல்களை மட்டும்தான்!

நகல்களின் இந்தத் தொகுப்பினைத்தான் ‘படைப்பு ‘, ‘படைப்பு ‘ என்று இவர்கள் சித்தரித்துக் கொண்டு வருகிறார்கள்—-வீண் பெருமையுடன்!

ஆனால், கற்பனை என்பதற்கு அணுவளவும் இதில் இடம் இல்லை என்பதுதான் இதில் வேடிக்கை!

தகவல்களின் தொகுப்புச் செயல் என்பது—-எப்படி ஒரு கற்பனைச் செயல் ஆகிட முடியும் ? ஒரு படைப்புச் செயலும் ஆகி விட முடியும் ?

நகல் அடிப்பதை விட்டு விட்டுத் தங்கள் சொந்தக் கற்பனைகளைக் கொஞ்சம் இவர்கள் அவிழ்த்து விடுகின்ற பொழுதோ, வாசகர்கள் அவற்றைப் புறக் கணித்து விடுகிறார்கள்—-பொருந்தாக் கற்பனைகள் என்று; பொருத்தம் இல்லாத பொய்கள் என்று!

ஆக, கதை-கவிதைகளின் வாசிப்பினால் மனிதர்களுக்கு அறிவுப் பயன் எதுவும் ஏற்படுவது இல்லை என்பது உறுதி; மெய்மையின் மயக்கத்தில் நம்மைத் திளைத்திடச் செய்கின்ற ஒரு போதைப் பயன்தான் அது என்பதும் உறுதி!

தமது அனுபவ அறிவின் நிலையில் ஜெய மோகன் கூறிக் கொண்டு வருவது போல, நமது ஆழ் மனத்துடன் நாம் நடத்திப் பார்த்துக் கொள்கின்ற ஓர் உரையாடல்தான் அது! ஏனென்றால், ஒரு வகையான நினைத்துப் பார்த்தல் என்பதுதான் அது; ஒரு ‘சிந்திப்பு நிலை ‘தான் அது!

எனவே, நமது ஆழ் மனங்களுக்குள் நாம் நுழைந்து பார்ப்பதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை.

அதற்கு முன்னர், ‘மனத்தின் விடுதலை ‘யில் இருந்தும் ‘வாழ்க்கையின் கேள்விகளி ‘ல் இருந்தும் ஒரு சில பகுதிகளைச் சற்றே நாம் படித்துப் பார்த்துக் கொள்வோம்.

மதங்களையும் கலைகளையும் கடந்து நமது ஆழ் மனங்களுக்குள் நாம் நுழைந்து கொள்வதற்கு உதவியாக இவை இருந்திடலாம்.

3-11-2004

(தொடரும்)

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்