கனடாவில் கவிஞர் புகாரியின் ‘அன்புடன் இதயம் ‘ கவிதை நூல் வெளியீடு – டிசம்பர் 13, 2003- வாழ்த்துரை

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

வே.ச. அனந்தநாராயணன்


பொன்னிலும் பொருளிலும் நிறைவு காணாமல் தவிக்கும் மனித உள்ளத்தை, ஊனில் புகுந்து உணர்வைத் தொட்டு

எழுப்பும் கவிதை முழுமையாக்கிப் புன்னகை பூக்க வைக்கிறது. ஆதலால், அத்தகைய கவிதையைப் படைக்கும்

திறமை பெற்றவர்களை உலகம் மன்னர்களுக்கும் மேலாக மதித்துப் போற்றுவதில் வியப்பில்லை. தொன்றுதொட்டு

இன்றுவரை தொடர்ந்து ஆயிரமாயிரம் கவியரசர்களாகச் சேர்ந்து, நம் தமிழினத்தைக் கவிதையின் சுவையை

நுகரும் நுண்ணுணர்வு கொண்ட இனமாக உருவாக்கியுள்ளார்கள். இதை, தமிழின் இத்தகைய தனிச்சிறப்பை,

உலகுக்குப் பறைசாற்றும் வகையாக அமைவதே கவிஞர்களின் நூல் வெளியீட்டு விழாக்கள்.

இன்று நாம் கொண்டாடும் கவிஞர் புகாரி அவர்களின் இரண்டாவது கவிதை நூல் வெளியீட்டு விழாவில்

பங்கெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதற்கு முதற்காரணம் ‘இணையம் என்னும் ஒற்றை மகா மின்மரம் ‘ என்று நம்

கவிஞரால் வருணிக்கப்படும் ‘உலகஅரங்க ‘மே. என்றோ தொடர்புவிட்டுப் போன தமிழோடு என்னை மீண்டும்

உறவாட வைத்த தமிழ் இணையத் தளங்களின் வாயிலாகவே கவிஞர் புகாரியின் கவிதைகள் சில ஆண்டுகளுக்கு

முன்பு எனக்கு அறிமுகமாயின. அந்த உறவின் பிணைப்பு நாளாக ஆக இறுகிக்கொண்டு வந்து இன்று கவிஞரின்

‘அன்புடன் இதயம் ‘ நூல் வெளியீட்டு விழாவில் எனக்கும் ஒரு பங்கைத்தரும் ஆற்றல் படைத்ததாக அமைந்த

விந்தையை எண்ணி என்னால் வியக்காமல் இருக்க இயலவில்லை.

மணிமணியாக முப்பது கவிதைகளைக் கொண்டு தொகுத்த மாலையான ‘அன்புடன் இதயத்தை ‘ப் படிக்கையில் நம்

நெஞ்சில் பல்வேறு துடிப்புகள் மாறிமாறிப் பயில்வதைப் பார்க்கிறோம். முதல் பாடலிலேயே, நம்

தாய்மொழியின் ஏற்றத்தைக் கவிதையின் நடையழகிலும் பொருள் அழகிலும் நாம் உணரச் செய்கிறார்.

அதைப்படித்தவுடன்:

கவிதை பிறந்திடும் இதயம்- பிறர்

இதயம் திறந்திடும் கவிதை

அறிவினில் உதிக்கின்ற சொற்கள் – அந்தச்

சொற்களில் புதைந்துள்ள அறிவு

கணினிக்குள் விளையாடும் புதுமை – அந்தப்

புதுமையால் களைகட்டும் கணினி

கட்டை உடைத்தோடும் பாய்ச்சல்- அந்தப்

பாய்ச்சலைப் பதமாக்கும் கட்டு…..

என்று அவர் வடித்த வகையிலேயே நம்மையும் அவர் கவிதையைப் புகழ்ந்து பாடுமாறு நம் இதயத்தில் ஒரு உந்துதல்

பிறக்கின்றது! இதை அடுத்து வரும் காதலும் கனிவும் கொண்ட பாடல்கள் நம் இதயத்தில் ‘சொட்டுச் சொட்டாய்

அமுத அழகை ‘ வார்க்கின்றன. மேலே தொடர்ந்து, வேதனையும் விரக்தியும் விரவி மனத்தின் அடித்தளத்தைத்

தொடும் பாடல்களும், அந்நிலையிலிருந்து நம்மைப் பிரபஞ்ச வெளிக்குக் கொண்டுசென்று சிறகடிக்க வைக்கும்

‘பஞ்சபூத ‘ப் பாடல்களும், ஒரு விந்தைக் கவிஞனின் விரலைப் பிடித்துக்கொண்டு அவனுடன் நம்மைப் பயணம் செய்ய

வைக்கின்றன. அதன் விளைவால் எழுந்த உணர்வைச் சொற்களில் வடிக்க முயல்கிறேன்:

தேரளித்தான் முல்லைக்(கு)அன்று பாரி – தமிழ்த்

…. தேருக்குப்பூப் புனைவர்இப்பு காரி!

பாரில்இவர் பாடல்பல கோரி – வரும்

…. பசிமறந்து பத்தர்களின் சாரி!

ஊர்மகிழக் கவிஉணவை வாரி – அன்பாய்

…. ஊட்டுவதில் நேர்இவர்க்கு மாரி!

காரெழிலாள் கன்னித்தமிழ் நாரி- முகம்

…. காணுமிடம் இவர்கவிதை ஏரி!

நல்லகவிதை இன்ன வகையில் தான் அமையவேண்டும் என்று யாராலும் வரையறுக்க இயலாது. இந்த உண்மையைப்

புகாரி தம் கவிதைகளால் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். சீர், தளைகள் போன்ற கட்டுப்பாடுகளும் ஓசை நயமும்

கொண்ட கவிதைகளின் சாரத்தை, தம் தனிப்பட்ட கவிதை நடையில் தருவது இவருக்கே கைவந்த ஒரு பெரும்

கலை. இதை ‘அன்புடன் இதய ‘த்திலும் இதற்கு முன் வெளியிடப்பட்ட ‘வெளிச்ச அழைப்புகளி ‘லும் தெளிவாகக்

காணலாம். இந்த ‘மரபு சார்ந்த புதுமை ‘க்குக் காரணம் கவிதையின் ஓசையில்/இசையில் கவிஞர் புகாரிக்கு

உள்ள நாட்டமே என்று கூறலாம். அந்த நாட்டமே இவரது கவிதைகளைப் பல்வேறு தளங்களில் உள்ள மாந்தரும்

விரும்பிப் படிப்பதற்கும் காரணமாகத் திகழ்கிறது.

புகாரி கவிதைப் பொழிலின்உள்ளே

…. புதுமையும் மரபும் பொலிந்திடும்;பூம்

புகாரின் பழமையும் புதுநிலவாய்ப்

…. பொங்கிடும் அழகும் பூக்கும்;அங்கே

புகாரிங் குளரோ ? புகுந்தவரின்

…. ‘போனது உள்ளம் கொள்ளை ‘என்னும்

புகாரைக் கேட்போர் புரிந்துகொண்டு

…. ‘போகட்டும் ‘ என்பார் புன்னகைத்து!

என் அருமை நண்பரும் பெரும் கவிஞருமான புகாரியின் கவிதை மலர்கள் ஆண்டாண்டுக் காலமாக உலகெங்கும் பூத்துக்

குலுங்க வேண்டுமென்று நான் மனமார வாழ்த்துகிறேன்!

————————-

Series Navigation

வே.ச. அனந்தநாராயணன்

வே.ச. அனந்தநாராயணன்