மும்பை அரோரா ஞாயிறுகள் – நான் கடவுள்

This entry is part [part not set] of 33 in the series 20090212_Issue

கே. ஆர். மணி


1.
அரோரா திரையரங்கம் அப்படியேதானிருந்தது. இருபது வருடத்திற்கு முன்பு பார்த்தது. சீட்டுக்கு பெயிண்ட் அடித்திருக்கலாம்.
கொஞ்சம் கழிப்பறை வடிவம் மாறியிருக்கிறதாய் மெல்லிய நினைப்பு. மற்றபடி அதீத மாற்றங்கள் எதுவுமில்லை. சின்னதான
வாசல் சின்ன கூட்டத்தையும் அலைகடலெனக்காட்டும்.

திரைக்கு முன்னதான மலர்ந்த முகங்கள். தமிழ் வாடை. லுங்கி, வேட்டிகள் பெருமளவு குறைந்திருந்தது. ஓவ்வொரு முகத்தையும்
மற்ற முகங்கள் கண்களால் அலம்பிக்கொண்டிருந்தன. கொஞ்சம் பயமும், பாசமும் கலந்த புதுமணத்தம்பதிகள். அவள் வேலைக்கு
போகாதவளாகவும், இப்போதுதான் தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவளாகவும் இருக்கவேண்டும். மும்பையை பற்றி பேத்திக்
கொடுத்துக்கொண்டிருந்தார் புதுமாப்பிள்ளை. இடையில் கிடைத்த மெளனமான நிமிடங்களில் அவளின் மார்பை துளவும் கண்ணும், கையை இறுக்கும் கையும். கல்யாணமாகி வருடங்களானாலும் புதுமணத்தம்பதிகளை பார்க்கும்போது எனக்குள் சில்லென சிறகு விரிகிறது. ஏதோ ஒன்று. ‘நல்லாயிருங்க’ என்று அருகில் போய் ஆசிர்வாதம் செய்யத்தோன்றும். ‘ஏன் மானுடன் இந்தக்காதலோடு காலமெல்லாம் இருக்கமுடியவில்லை’ கேள்விகள் மனதை போர்த்தும்.

குடுமியோடு வைதீக மாமா ஸ்கூட்டரில் இறங்கினார். கூடவே மற்றொருவர் செம்பூர் கோவிலில் பார்த்ததாய் ஞாபகம். மூத்த மாமாவின் வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தது. ‘இமேம்மே வருணா.. சுருதி..கவம். மிருத்யாஜ மிடயா..’ இது மழைக்காலமில்லை. வருணன் வரப்போவதுமில்லை. ஆயினும் படித்தது மறக்காமலிருக்க மனப்பாடமாயிருக்கலாம். சொல்லிக்கொண்டே பான்பராக் போட்டது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ‘காயநவசா..’ சொல்லிக்கொள்ளலாம்.

தாடி, குறுந்தாடி வைத்த ஜீன்ஸ் இளைஞர்கள். ஏதோ ஒரு ஐடி கம்பெனியில் குப்பையாயிருக்கவேண்டும். நானும் அப்படித்தானிருந்தேன்.
அது ஒரு கனாக்காலம். தொழில்நுட்பம் தன் இழைகளை விரிக்கிற பருவம். ரிசசன், புராஜக்ட் என்று அதிக பயங்களில்லாத காலம். எந்தத்தொழிலிலும் ஆரம்ப நுழைவு கட்ட நேரங்களில் ஒரு அலாதி இன்பமிருக்கிறது. ஏறப்போகிற மலையில் உயரம் தெரியாது. கவலையுமில்லை. அந்த புதுமண தம்பதிகள் போல. சிறகுகளின்று பறப்பதான நினைப்பு.

2.
இருபது வருடம் முன்பு, எனக்கு புதிதான மும்பை. தமிழ் நாடு வேர் அறுந்த புதிது. மரம் உதிர்ந்த இலையில் மெல்லிய உதறல், ஓவ்வாமை இருந்தது. தெரிந்ததை தேடித்தேடி ஓட்டிக்கொள்ளும் அவா. பேரவா. குமுதம், ஆனந்தவிகடன் படிப்பும் வெடித்து விடுகிற படி திங்கும் கன்சன்ஸ் சாப்பாடும் தூங்கிவிழுகிற தமிழ் சங்கத்தின் மொக்கை லைப்ரரியை துளவுவதும், பயமுறுத்துகிற இந்தியும், மெல்லபழகுகிற ரயிலும் விரட்டியபோது – அரோராதான், அரோரா திரையரங்கம் தான் என் சுமைகளிறக்கி நிர்வாணமாக்கியது.

‘என்ன மாப்பிளை, அப்படி பாக்குற..’ என்று சொல்லுக்கொண்டே ஒரு திருநங்கைதான் எனக்கு கொஞ்சநாளாய் அரோராவில் டிக்கெட்
எடுத்து கொடுத்து உதவிக்கொண்டிருந்தாள். ‘தேங்க்ஸ்க்கா..’ ரொம்ப கூச்சப்பட்டு சொல்லியபடி தள்ளிப்போய் பாலகுமாரன் புத்தகத்தில் புதைந்து கொள்வேன். இல்லையெனில் அப்போதுதான் சந்தையில் இறங்கியிருந்த விண்டோஸினின் முதல் மென்பொருள் விண்டோஸ்3.1ல் முழ்கிவிடுவேன். விண்டோஸ் எல்லாம் தாண்டி விஸ்டா வந்து இணைய எக்ஸ்ப்ளோரர் வந்தது போல, பாலகுமாரன் தாண்டி , அதுபோல சுரா, ஜெமோ, காசு வந்தது போல, அரோரா தாண்டியும் ரொம்பநாளாயிற்று. இப்போதெல்லாம் முலண்டு, தானேவிலே மல்டி ப்ளக்ஸ் என்று வந்தாயிற்று.

அரோரா நினைக்கப்படும்போது சச்சு, குமார், ரமணி பேச்சிலர் ரூம் பழைய நண்பர்களின் ஞாபகக்கிளறல். எவனுமே மும்பையில் இல்லை. இருந்தாலும் இருக்கலாம், தெரியாது வாழ்க்கை சோளிகளை உருட்டி விளையாடிக்கொண்டேயிருக்கிறது. அரோரா அந்த பேச்சிலர் வாழ்க்கையில் ஒரு முக்கியமான ஆசுவாசக் கட்டம். பாம்புமற்று, ஏணியமற்ற அமைதியான கட்டம். அரோரா வெறும் கட்டிடமட்டுமல்ல அது புலம்பெயர் தமிழ் மக்களின் ஆரம்பகால பயம் நீக்கியாய், ஆசுவாச மரமாய், சொந்த ஊர் திண்ணையாய் இருந்திருக்கிறது.

பிஜீ மாமா என்று ஒரு கிழவரின் பரிச்சயம் ஆனது அப்படியான ஒரு அரோரா ஞாயிற்றுக்கிழமையில் தான். ஒரு சின்ன டோப்போடு இலக்கியத்தையும், திருமூலர் மந்திரத்தையும் சொல்லிக்கொண்டே விடாது பேசும் அந்த மனிதர் அப்போது பயமுறுத்தினார். பாலகுமாரன் புத்தகத்தை படித்துக்கொண்டிருந்த என்னிடமிருந்து அதை கிழித்து எறிந்து ஏதோ ஏதோ இலக்கிய பெயர்களை பேசினார், வேதம்போல புரியாத மந்திரங்கள் சொன்னார் (அதர்வண வேதமாயிருக்கலாம்). கணிப்பொறி புத்தகம் படிக்கும்போது தட்டிக்கொடுத்து சிரித்தபடி போவார். மெல்லிய கஞ்சா நாற்றமும், அதிகமாய் பேசினால் விஸ்கி வாசமும் கலந்து வரும்.

கிங் சர்க்களில் புத்தகக் கடை பக்கம் நாடி ஜோசியக் கடை வைத்திருந்தார். அதைக்கடைக்கூடு என்று சொல்வது பொருத்தம். பழைய புத்தகக்கடைக்காரரிடம் ஒரு முறை ஹேமிங்வோ அல்லது ஏதோ ஆங்கில இலக்கிய புத்தகத்தை என் நண்பன் கேட்க அவர் பிஜீ மாமா கடைக்கூடு வரைக்கும் போய் அவரிடம் கேட்டு
அங்கிருந்து வாங்கி கொடுத்தார். வானத்திற்கு கீழே உள்ள எல்லாம் அவரின் வாயிலிருந்து பிறந்து இறந்தது. அவருடன் பேசவே நான் பயப்பட்டேன். அவரைப்போலவே ஆகிவிடுவேன் என்ற பயம் என்னுள்ளுக்குள் உறைந்திருந்தது. அவர் துஸ்டரல்ல. ஆனாலும் தூர விலகினேன். நான் வாழ ஆசைப்பட்ட வாழ்க்கையின்
எதிர்துருவத்தில் நின்றுகொண்டிருந்தார் அவர்.

கொஞ்ச வருடங்கள் கழித்து அவர் செத்துவிட்டதாய் கேள்விப்பட்டோம்.

*
3.
எனக்கு முந்தைய தலைமுறை 1950-60 களில் புலம்பெயர்ந்த போதும் அரோராவும், சிட்டிலைட்டும் இரண்டு தமிழ் சினிமா ஸ்தலங்களாயிருந்திருக்கின்றன. தனது பேரன், பேத்திகளின் கல்யாண விடயங்களில் சந்தித்து கொள்ளும் ஜெமினி, சிவாஜி காலத்து பெரிசுகள் தாம்பூலத்தோடு பழையவற்றையும் அசைபோடுவதை கேட்டிருக்கிறேன். அந்த பேச்சுகளில் நான் சிக்கி சின்னபின்னமானதும் உண்டு. ஒரு சில சத்திய சோதனைகளுக்கு பிறகு, ‘அப்பல்லாம் கேட்டியோடா. ஒரு ஜெமினி படமாக்கும்.. காசு ஒரு காலணாவாக்கும்..’ என்று ரீல் திறந்தால் ‘மாமா. ஒரு நிமிசம் டாய்லெட் போயிட்டு வந்துடறேன்.” என்று விடு ஜீட்.

ஆனாலும் அவர்களின் நண்பர்களோடு அவர்களின் அரோரா பரவசத்தை வார்த்தைகளின்றி கண்களால் தரிசிப்பேன். அசைபோடுதல் தான் எவ்வளவு சுகம். ஒரு மாமா சொன்னது கேட்டது..’ தாயோ??..சீதாராமா.. இந்த தமிழ் கெட்டவார்த்தை திட்டித்தான் எத்தன நாளாச்சுடா.. நம்ம தியேட்டருக்கு போறதே அதுக்குத்தான் ஞாபமிருக்கா.. சண்முகத்தோடு டான்ஸ் ஞாபகமிருக்கடா.. ஆடத்தெரியாத தே..தியேட்டர்..” பொங்கி பொங்கி வழிய அவர்களின் கெட்டவார்த்தையோடு கூடிய அந்த சம்பாசனையை கண்ணீல் நீர் மல்க
கேட்டுக்கொண்டிருந்தேன்..ச்சை.. கொடுத்து வைத்தவர்கள்.. கண்டிப்பாய் இளைய வயதில் வெள்ளித்திரை கிழித்திருப்பார்கள். நம்புங்கள்.. இவர்களெல்லாம் மேல்தட்டு நடுத்தரம். விதைவிட்டு, வேர் விட்டு.. பழுத்த மரங்கள்.. விதையை நினைத்து சந்தோசமாய் சிரிக்கின்றன..
“நீ சிம்ப கூ..சாம்பாரலா பண்ணின..முட்டாக்.. ” இன்னொரு மாமா தனது அறைத்தோழனின் சமையல் குறிப்பிற்காக ஒரு அறுபது வருடம் கழித்து திட்டிக்கொண்டிருந்தார்.

ஆனால் பாவம் உங்களின் தலைமுறைக்கு நீங்கள் மனது நிறைந்து சொல்லும் கெட்ட வார்த்தையில் பாதி கூட தெரியாமல் போயிருக்கும். இந்த கிழங்கள் எல்லோரும் அரோராவில் கூடி கும்மியடித்திருப்பார்கள். அவர்களுக்கு அரோரா வெறும் இடிக்கப்படப்போகும் கட்டிடமில்ல. அது நம்மூர் பழைய திண்ணை..கெட்டவார்த்தை சொல்லி துண்டு தூக்கியெறிந்து விளையாடிய பேச்சிலர் கேளிக்கை ரூம்.

என்ன சொல்ல, நூறாண்டு வாழுங்கள் கிழடுகளே ! உங்கள் கெட்ட வார்த்தைகளோடு.

*

என் வீட்டுக்கு பக்கத்து வீட்டு மாமி. கல்யாணமான பொழுதில் மாமா கூட்டிக்கொண்ட போன அரோரா சினிமாவைப்பற்றி
இன்னும் சொல்லிக்கொண்டேயிருப்பாள். கல்யாணத்திற்கு முன் எங்குமே போகாத தலைமுறையிலிருந்து வந்த அவளுக்கு
மாமாவின் அரோரா விஜயம் ஆடச்செய்திருக்கிறது. படம் மறந்து, பாட்டு மறந்து.’ அப்பல்லாம் கேட்டியா.. அப்படி கோயிலிருந்து
சாமி சேவிச்சிட்டு.. ஆத்துக்குத்தான் போறார்னு பாத்தா.. அப்படி சினிமாக்கு கூட்டிண்டு போறார். என்னமோ படம்போ..
கொஞ்சம் பைசாவுக்கு நிறைய முறுக்கு. அப்பத்தான் முதல்ல பேல்பூரி சாப்பிட்டேன் கேட்டியா..” அறுவையாய் நீங்கள்
உணர்ந்தாலும் அந்த பரவசம், உண்மை, திருதிருவென திருநெல்வேலி விழியோடு விழித்து நிற்கும் அந்த மிக இளம்பெண்ணுக்கு அரோரா மிக அநுசரணையாயிருந்திருக்க வேண்டும். ‘என்ன கேட்டியளா.. மாமி.. ” “எலே.. ஏன் இழவெடுக்க..” என்கிற குரல்கள் ஊர் இடைவெளியை தின்றிருக்க வேண்டும். அரோரா. ஊர் திண்ணையாய் நினைக்கவைத்திருக்கவேண்டும்.

இத்தனை வருடங்கள் கழித்தும், மாமா போய்விட்டாலும் மாட்டுங்கா அரோராவும் அந்த முதல் படமும் ஓடிக்கொண்டேயிருக்கும்
மாமிக்குள்.

*
4.

“டிக்கெட் எவ்வளவு சார்”
” பால்கனி எம்பது ரூபாய் சார். சுட்டாவா கொடுங்க”

எம்பது ரூபாயா..தப்பில்லை. மல்டிபிளக்ஸீகள் நூற்றைம்பது வாங்கும்போது சிட்டிக்கு நடுவில் தப்பில்லைதான்.

இருபது வருட முந்தைய பேச்சிலர் டைம் ஞாபக குப்பையின் படி இருபது ரூபாய் என நினைப்பு. கம்பெனியில் பொய் சொல்லி எழுதும் பயண வுவச்சர் கண்டிப்பாய் ஒரு நாநூறு ரூபாய் வெட்டிவிடுவது. ஆகவே அரோரா மற்றும் நான்கு ஞாயிறு செலவுகள் சம்பளத்தில் கைவைக்க கூடாது என்ற திட்டம். ஒவ்வொரு ஞாயிறும் மாட்டுங்கா தரிசனம். மாட்டுங்கா சாப்பாடு, கூப்பன் இருபது ரூபாய் என ஞாபகம். ஏதோ ஒரு படம் அரோராவில். படங்கள் படு மொக்கையாகயிருந்தால் வெறுமனே வாசப்படியில் உட்கார்ந்துவிட்டு கதையளந்துவிட்டு, கிங் சர்க்களில் புத்தகம் மேய்ந்துவிட்டு, சயான் நூலகம் போய்விட்டு நடந்து வந்து மாடுங்கா ஸ்டேசனிலிலே கோவிலிலோ கடவுள் மற்றும் பெண்கள் பார்த்துவிட்டு டோம்பிவிலி கூடுபுகும் குருவிகளாய் நாங்கள்.

மதியச்சாப்பாடு, கையேந்தி பவனில் இரவு டிபன். மதிய சாப்பாடு இலைச்சாப்பாடு. பரிசேசணம் செய்து சாப்பிட்ட சேது அந்த அளவு சாப்பிட்டு மூன்று ஞாயிறு அங்கயே தூங்கிப்போனான். ‘அன் லிமிடெட்டிற்கும்’ ஒரு லிமிட் இருக்கிறதல்லவா.. ஒரு முறை இருபத்தி இரண்டு மோர் கிளாஸ் குடித்து சின்னதாய், அமைதியாய் கின்னஸ் சாதனை புரிந்தேன். தன்னடக்கம் நிமித்தம் ஊடக பிரஸ்தாபமில்லை.

எல்லாம் முடிந்து டோம்பிவிலி கூடு புகல். மறுபடி மராத்திக்காரனாய் மாறிப்போதல். அந்த ஞாயிறின் தமிழ் வாசனையை முடிந்த அளவு இழுத்துக்கொள்ளும் ஆசையில், கடைசி பப்பை உறிஞ்சுபவனைப்போல, ஊருக்கு போகவிரும்பும் மனைவிக்கு கொடுக்கும் கடைசித்தடவல் போல – ஓவ்வொரு ஞாயிறும் கழியும். மெல்லிய துக்கத்தோடும் அடுத்த ஆறு நாளுக்கான ஓட்டத்திற்கான சக்தியோடும் இளையராஜாவின் பாடலோடும் அந்த வாரம் இனிதே நிறைவுறும். .

படம் பார்க்க மட்டுமே அரோரா என்று நினைத்திருந்த நிஸ்ட காம்ய பிரம்மச்சாரிகளான “பகவான் நீலகண்டன்” நிறைய லீலைகள் காட்டினார். எங்களுக்கு உடம்பு, குறி எல்லாம் அவரது லீலை கேட்டு வியர்த்து, விரைத்ததை அரோரா வேப்பமரம் குறித்துகொண்டது.

*
5.

“என்னடா மாப்பிளை.. ஆளேயே காணும்..”
“ஏலே.. இன்னிக்கு பூசைல்ல.. ஊழியத்துக்கு..”
இருவரும் சிரித்துக்கொண்டார்கள்.

“ஹ. ஐ அம் நாட் சீயுங் யூடா.. ஆன் சைட்டா..”
“வேற புராஜக்ட் போட்டாங்கடா.. அடுத்த மாசம் ஜப்பான்ற மச்சி..”
” வேர் இஸ்.. கல்யாண்யார்..”
” அவனை வீட்டுக்கு அனுப்பிச்சு.. ஒரு மாசமாச்சு.. இப்ப எங்கயோ பெங்களூர் ஸ்டார்ட் அப்புல”
சிரிப்படங்கி மேலே பேசும் வார்த்தையற்று, மெளனம் கவிழ்ந்து, அசட்டுத்தனம் காற்றில் பரவி, பை சொல்லி பிரிந்து போனார்கள்.

” ஹாய். நம்ம டிமில எல்லோரும் வந்துட்டாங்களாடா.. ”
” இருபத்து ஏழு கஸ்மாலமும் வந்திருச்சு. ” கார்ப்பரேட் குருப் புக்கிங் போல.
சைட்டில் படித்ததை வைத்து கதை சொல்ல ஆரம்பித்திருந்தான்.

“கரெக்டா.. மெடிகேசன் எடுத்துண்டிருக்கேள்யோ” ஒரு வயதானவர் மிக வயதானவரிடம்.

பெல் அடித்தது. கூட்டம் உள்ளே நுழைந்தது. மெல்ல கழிப்பறை நோக்கி நான் நடந்தேன். இந்தக் கழிப்பறை பார்க்கும்போதெல்லாம்
எனக்கு நீலகண்டன் ஞாபகம் வரும். நீலகண்டனுக்கு கூட்டம் பிடிக்காது.

” நீலகண்டயா, மிருத்யுஞ்ஞாயாய.. ருத்ராய..”

*
6.

அரோராவில் சனி, ஞாயிறு தவிர்த்து மற்ற கிழமைகளில் மதிய ஆட்டங்களில் கூட்டம் குறைவு. அது நீலகண்டனுக்கு தெரியும்.
நீலகண்டம் எங்கள் அறைத்தோழன். ஏதோ விளம்பர விற்பனை துறையிலிருந்தான். நாக்கினால் பிழைத்துக்கொண்டிருந்த
ஜாதி. ரிசப்சன், அக்கவுண்டண்ட் என்று வர்க்க, வர்ண வேறுபாடுகளின்றி குறைந்த செலவில் அரோராவின் பால்கனியில்
நாலாவது வரிசையில் மூலையில் இரு சீட்டுக்களுக்கான தடை அகற்றப்பட்ட வசதியான சூழலில் இந்திரன் போன்ற தேவர்களின்
துணையோடு தோழியருக்கு பாடம் கொடுத்து கன்னிமை போக்குவான். முதலில் திரையரங்களியே உபயநயனம் மற்றும் ஞானஸ்தானம் நிகழ்வித்து, இடைவெளிக்குபின்பு கழிப்பறை முகப்பில் மற்ற பக்கங்களை வாசிப்பான்.

அங்குள்ளவர்கள் அவனுக்கு நல்ல பழக்கம். அவனது பெண் முதலாளியைக்கூட ஒரு நாள் கூட்டிக்கொண்டு
போய் பூசை செய்தபோதுதான் சீமா பார்த்துவிட்டான். கலாச்சார காவலின் அடிப்படையில் நீலக்கண்டனை வேறு அறைக்கு
போகச் சொல்லிவிட்டோம். அடுத்தவாரம் சினிமாவிற்குபோனபோது அந்த பால்கனி சீட்டின் நாலாவது வரிசை மூலை சீட்டை
ஏதோ மடத்து ஆதினத்தை தரிசிப்பதுபோன்று தரிசத்தது இன்னும் ஞாபகச் சுருளில். வயிறெல்லாம் அமிலம் பொங்க குமார்
சொன்னான்..”சரியான..சீட்டை புடிச்சிருக்காண்டே.. சுத்..”

குறைந்த செலவு, பிரச்சனையற்ற ஸ்தலம் அரோரா பால்கனி இருக்கை நாலாவது வரிசை மூலை. ஹீம்..

இப்போது போயிருந்தபோதும் அந்த சீட்டை கண்தேடியது.. மனம் கஸ்டப்பட்டு அடக்கிக்கொண்டது. நீலகண்டா.. ஆசையை,
காமத்தை திங்கவும், துப்பவும் முடியாமல் திரிசங்குவாய் உடம்பெங்கும் எத்தனை வயசிலும் அலைந்து கொண்டேயிருக்கிறதே..காமம் மனுஸ ரூபணேவா.. ? அதிலிருந்து நீலகண்டன் எங்களுக்கு “பகவான் நீலகண்டராய்” மாறி அரூபமாய் எங்கள் வயிற்றெரிச்சலுக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.

என் நினைப்பை கைதட்டல் கலைத்தது. நான் கடவுள் ஆரம்பமாகியிருந்தது.

*
7.

கைதட்டல் – ரசனையின் அரங்கின், பிரபலத்தின் அறிகுறி. பாலாவிற்கு பெரிய கைதட்டல். இளையராஜாவிற்கு
இன்னும் இளைய தலைமுறை கைதட்டல் ஆச்சரியப்படுத்துகிறது. நல்ல வேளை தல, மூளை யாரும் நடிக்காததால்
கதாநாயக கைதட்டலில்லை. வசனத்திற்காக ஒரு ஜீவன் மட்டும் மெல்லியதாய் கைதட்டியது, திரும்பி பார்த்தேன். யாருமில்லை. நானே தான் என்னையறியாமல் கைதட்டியிருக்கிறேன்.

அப்புறம் அரங்கில் கைதட்டல் காணமல் போனது. சில அழுத்தமான சீன்களுக்கு பிறகு வந்த காமெடிக்கு மக்கள் விழுந்து விழுந்து
சிரிக்கிறார்கள். அவர்களால் வாழ்க்கையின் குரூரங்களை தாங்க முடியவில்லை. அப்பட்டங்களை சகிக்கமுடியவில்லை.
எப்போடா நகைச்சுவை வருமென காத்திருக்கிறார்கள் போல..படம் சடக்கென தொடங்கி, படக்கென முடிந்தது.
இவ்வளவு வேகமான படம் மூன்று, நான்கு வருடங்களை விழுங்கியிருக்கிறது. 50 மணி நேரம் எடுக்கப்பட்ட சுருள்
இரண்டரை மணி நேரமாக சுருக்கப்பட்டிருக்கிறது. நிறைய ஜம்ப் கட்டிங். சென்சரில் அடிவாங்கியிருப்பது தெரிகிறது.

புத்தக, அறிவு ஜீவி அற்ப விமர்சனங்களை விட ஒரு சாதரண பார்வையாளன் படம் முடிந்து சொல்லிவிட்டு போகும் நாலு
வார்த்தைகளுக்கு கனம் அதிகம். நான் அதைத்தேடி கூட்டத்தோடு கலந்து கவனிக்க ஆரம்பித்தேன்.

*
8.

‘ரொம்ப நாளா அம்மா காசி போனம் போனம்னு படுத்திண்டு இருக்கள், இந்த சம்மர்ல் போயிட்டி வந்திர்லாம் கேட்டியா’
ஒரு பாலாக்காட்டு முதிர் இளைஞ மாமா, அந்த பச்சை நரம்பு மாமியிடம் சொல்லிக்கொண்டே ஸ்கூட்டர் உதைத்தார்.
அந்த மாமி இன்னும் இரண்டு நாள் கழித்துதான் சரியாக சாப்பிடுவாள் என்று தோன்றிற்று.

‘மாப்பிளை ஆர்யா, பாலா, பூஜாவிற்கு தேசிய விருது மாப்பிளை ‘ கறுப்பாய் திராவிடக்கலரோடு சிவப்பு சட்டைபோட்ட
இளைஞன். விஜய், சிலம்பு, தனுஸ் படங்களின் எதிர்ப்பார்ப்போடு வந்து எப்படியாவது அதை இதோடு ஒட்டவைத்துவிட
பிரம்மபிரயத்தனம் செய்து கொண்டிருந்தான். அவனுக்கான சில ஜோக்குகள், போலிஸ் ட்ராக் என்று கொஞ்சம் இருக்கத்தான்
செய்தது. எனக்கும் அப்படித்தான் தோன்றிற்று. குமுதம், ஆனந்தவிகடனும் சில பிரபலங்களும் இதைத்தான் இன்னும்
கொஞ்சநாளுக்கு சொல்லப்போகிறார்கள்.

‘ரிலையன்ஸ்..செல் விக்காறங்கள்ள அவிங்கடா. சூப்பர் டையலாக்டா மாமு..” சொன்னவன் ஏதோ கனமான
அமைதியை குலைக்க முயன்றான். சில சுமைகள் கனமானவை. அவைகள் வார்த்தைகள் மூலம்தான் வடிகால்
தேடிக்கொள்கின்றன. கேட்டவன் இன்னும் கொல்லப்பட்ட பூஜாவிடமிருந்து மீளமுடியாதவானகயிருந்தான்.
அதெப்படி அவனுக்கு அந்த உரிமை, வெங்காய அகோரி, அதுவும் அவளின் காமதேனு, உலகத்தோடான் ஓரே உறவு கொண்ட குரலை வளைத்து, அறுத்து, சிவனின் மூன்றான் கண்ணைபோல ருத்ரனாய் வெளிவந்தது எது,
குருதி மட்டுமா ? கேட்டவன் பாலாவோடு சர்ச்சித்து கொண்டிருக்கலாம்.

“ஓம்.. சிவ ஓம்.. ருத்ரயா.. கால தண்டயா. பரிக்கிரகயா..” சொல்லிக்கொண்டே போகிற வைதிக குடுமி இளைஞனின்
முகத்தில் ஏதோ ஒரு பிரம்ம தேஜஸ் வந்ததாய் தெரிந்தது. எனக்கான பிரமையாயிருக்கலாம். அகோரியாய் மாறிவிடமாட்டார்
என நம்புவோம்.

“‘மாப்பிள இந்தப்படத்த தானடா ..க்காலி இத்தன வருசமா எடுத்திருக்காங்கா.. ” என்று பாப்கார்ன் சாப்பிட்டு சொல்லிவிட்டுபோகிற அந்த சரவணக்குமாரயையோ, ராசவையோ பாலா கணக்கிலெடுத்து கொள்ளப்போவதில்லை என்று நினைக்கிறேன். அவனுக்கு பாவம், சன் டிவியில் விஜய் படத்தையோ தல படத்தையோ பார்த்துதான் தரையில் கால் வைக்கமுடியும்.

“என்னடே சொல்லுதான். சாமி இல்லேங்காணோ..” அடுத்த நாள் இட்லிக்கடையில் கல்லாவில் உட்கார்பவனுக்கும்,
ஏதோ ஒரு ஆபிஸில் பேங்கில் செக் போடுபவனுக்கும் இந்த உளைச்சல் அதிகம்தான். ஒரு மாலா(மாடி) கட்டி ஊரிலிருந்து
அக்கா மவளை கல்யாண கட்டிடனம்டே என்கிறதான வாழ்க்கை சபதங்கள் கொண்ட அவனுக்கு அஹமாவது பிரம்மாஸ்மியாவது.
‘சுத்தி விநாயக் மயித்துக்காடேயிருக்காரு. அவரு பாத்துக்கிடுவாருல்ல..’

அப்பாவும் தனது கடைசி காலங்களில் சீரிருத்ரம் சொல்லிக்கொண்டிருந்தார். “மகா ருத்ராயா, கால ருத்ராய,
அகோர, கோர.. ருத்ராய..” சுலோகம் சொல்லிக்கொண்டே அழுத்தி அழுத்தி ருத்ர மூர்த்தியை அவர் ஏன் தேய்த்துக்கொண்டிருக்க
வேண்டும். கண்டிப்பாய் அது வெறும் உலோகச்சிலையை கழுவுவதற்காக இருக்காது. இரவுகளில் தோற்றுப்போகிற் குடும்பிக்கு அகோர ருத்ரன் மிகப்பெரிய உளைச்சலை கொடுக்கிறான். அவன் போகவேண்டிய இடத்தை, கடக்க வேண்டிய தூரத்தை,
அறுக்க வேண்டிய தளைகளை சொல்லாமல் சொல்லி குற்ற உணர்வை தூண்டிக்கொண்டேயிருக்கிறான். லெளகீக வாழ்க்கையின் சுமைகள், சிலுவைகள், காம அழுத்தங்களை களைய வெறுமையான ருத்ரன் தேவைப்படுகிறான். லெளகீக சட்டையை எப்படி கழட்டி போடுவது. மரண பயமும், காம காந்த இழுப்பும் தாண்டி தன்னை தயார்படுத்தி கொள்ள அவருக்கு ருத்ரன் தேவைப்பட்டிருக்கலாம். எனக்கும் ருத்ரன் தேவைப்படுவான் போல – அந்த ஆற்றை கடக்க.

*
8.

பாலா – ஒரு அகோரி இயக்குநர்.

பாலா மசாலா – அதீத மனநிலை வன்முறை கதாநாயகன், கொஞ்சமாய் மட்டுமே வசனம் பேசுகிறவன், கவலையான தோற்றுப்போகும் அம்மா, ட்ரெயினில் பாட்டு, போலிஸ் நகைச்சுவை, சிறைச்சாலை, கோர்ட்டு, பழைய நடிகர்கள் மிமிக்ரி, வட்டார வழக்குகொண்ட நகைச்சுவை, விளிம்பு நிலை மனிதர்கள், முக்கிய கதாபாத்திரங்கள் இறத்தல், சோகமான எதிர்பார்க்கப்படாத முடிவு – ஹீம் எல்லாம் உண்டு. நந்தா, சேது போன்று ஒரு இழப்பின் கதை, மற்ற எல்லா பாலா படங்களிலும் உள்ளதுதான். அதிகமான ஒன்று அது ஏழாம் உலகம். நான் படித்து, படித்து மாய்ந்து நிறைய பேருக்கு படிக்கச்சொன்ன என் சஹிருதய நாவலாசிரியரின் நாவல். மன உடல் ஊனமுற்றவர்கள் நிரம்பிய பிரபஞ்சமாய்.. இதுவரை திரையில் தென்படாதகதாபாத்திரங்களை கொண்ட, விளிம்பு நிலை மனிதர்களின் இருண்ட உலகம் – தமிழுக்கு புதிது.

ஒரு வீடு திரும்பும் அகோரி , பிச்சைக்காரர்களை வைத்து தொழில் நடத்தும் வில்லனை வீழ்த்துகிறார். வாழ முடியாத
விரும்பாத நாயகிக்கும் கொலை செய்து மோட்சம் கொடுக்கிறான். ஏழாம் உலகத்தின் பிச்சைக்காரர்களின் கதைப்புலம் தவிர
அகோரி, வில்லன், போலிஸ் எல்லாம் திரைவடிவிற்காக, தமிழ் சினிமாவின் பார்முலாவிற்குள் வருவதற்காக உருமாற்றம்
செய்யப்பட்டவை. பாலாவின் பழைய படங்களில் Cut and Paste கொஞ்சம் இருப்பதுபோல் தோன்றினாலும், மற்ற
படங்களை விட அதிகமான அழுத்தத்தை கொடுக்கிறது. இது ஒரு இந்திய Cross over படம் என்றே சொல்லவேண்டும்.
உண்மையிலே வட இந்திய, தென்னிந்திய இணைப்பான வசனங்கள். ஹிந்தி, சமஸ்கிருத ஸ்லோகங்கள், பாடல்களோடு இளையராசாவின்
இசையோடு சேர்ந்து வருவது ஒரு புதிய அநுபவம்.

இது பிரமாண்டமல்ல. சங்கரால் ஐநூறு பிச்சைக்காரர்களை கொண்டு படம்பிடிக்க முடியும். ஆனால் பாலாவினோடது
ஆழமான ஒன்று. It has depth in it. பாலா ஒரு அகோரி. இயக்குநர்களில் சைவம், அசைவம், வைஸ்ணவம் எல்லாமுண்டு.
இவர் ஒரு அகோரி கல்ட். குருதத், ரே, பாலசந்தர், பாரதிராஜா எப்படி ஒரு கல்ட்டோ(cult) பாலாவும். நீங்கள் ஏன்
கிராமத்தை வைத்துமட்டும் படம் எடுக்கீறீர்கள் என்று பாரதிராஜாவை கேட்க முடியாதோ, கேட்க கூடாதோ (?)
பாலாவையும் ஏன் இப்படி, குரூரமாய், மன உடல் நிலை பிறழ்ந்தவர்களை, இருண்ட பகுதியை மட்டும் காட்டுகிறார் என்று கேட்கக் கூடாது.

கவித்துவமான இடங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஏழாம் உலகத்தை இப்படியாரும் விஸிவலில் கொண்டுவரமுடியாது.
அம்மாவிடம் துமி ரத்தம் பற்றி கவிதை சொல்லுமிடம், அவனது தனிமையை, ரெளத்தரத்தை காட்டும் இசையும், விழியும், உடல் மொழியும்
பகலில் மனிதத்தன்மையற்று வாழ்ந்து, இரவில் குடித்துவிட்டு பாவமன்னிப்பு கேட்கும் பழனியின் கதாபாத்திரம், தாலியோடு
இருக்கும் முடமான பிச்சைப்பெண்ணின் பாத்திரம், ஈஸ்வரன், மீனாட்சி, முருகன் என்று தங்களது குடும்ப சகிதமாய் வேடம்
போட்டு பிச்சை எடுக்கும் புராண பாத்திரங்கள், மன, உடல் நலம் குறைந்த தங்களது நிலையை மூலதனமாக்கி அதனால்
எழுகிற பச்சாதபத்தை காசாக்கும் மனிதர்கள் எப்படி கொட்டிக்கிடக்கும் பிச்சை மனிதர்கள் இந்தப்படத்தின் கதாநாயகர்கள்,
ஆர்யா அல்ல. இவர்கள் தங்களது பிச்சை வாழ்வில் கூட சின்ன சின்ன சந்தோசங்களால் அலங்கரித்து கொள்ளும் கதாபாத்திரங்கள்.

“பிச்சை எடுக்கிறது கேவலாமாயிருக்கா”
“இல்ல நம்பள நம்பி நமக்கு காசு போட்ட புண்ணியம் கிடைக்கும்னு நம்பறாங்க பாரு. ” என்பது மாதிரியான அற்புத வசனம்.
இதுதான், இந்த நம்பிக்கைதான் படத்தின் ஆணிவேரென தெரிகிறது. அகோரி அவன் வாழ்க்கையையே சரியென நம்புகிறான்.
அப்பா ஜாதகத்தை நம்புகிறார். வில்லன் கூட்டம் கோவிலுக்கு வரும் பக்தர் கூட்டத்தின் வற்றாத புண்ணிய சேர்த்தல் நம்பிக்கையை
நம்புகிறது.

பாட்டென்று ஒன்று தனியாக இருந்ததே தெரியவில்லை. வசன கர்த்தாவும், இசையும் எங்கும் துருத்தாமலிருந்தது
குறிப்பிடப்பட்டேயாகவேண்டும். பாலா அதிகமாக துருத்திக்கொண்டிருந்தார் என்பதனாலிருக்கலாம்.

சினிமா எல்லையை அடுத்த எல்லைக்கு தள்ளினார், இதுவல்லாம் சினிமாவா, இது குரூர அழகியல் என்று விமர்சன உலகம் வரிந்து
கட்டிக்கொண்டு ஏதாவது எழுதிக்கொண்டேயிருக்கும். இன்னும் கொஞ்ச நாளைக்கு பாலாவின் மசாலா விற்கும்தான் போலிருக்கிறது.
எவ்வளவு நாளைக்கு ? போனபடத்தை விட அதிகமாக குரூரமும், வக்கிரம் கொண்ட மனிதர்களை இன்னும் அதீ ஆக்ரோசமாய்
அவர் செல்லுலாய்டில் அவர் சுட்டும்தள்ளிக்கொண்டிருக்கும்வரை.

படம் மொத்தத்தில் சினிமாக்காரர்கள் பாசையில் சொல்லப்போனால், ‘மிரட்டிட்டாங்கள்ல்ல..”

மூன்று முறை படம், நிறைய முறை பாடல், நிறைய தேடல் இணையத்தில் செய்தும் ‘ஓன்னும் ஆஹா. ஓஹோன்னு இல்லைன்னு’
சொல்லமுயற்சிக்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் வெளியே அப்படித்தான் சொல்லிக்கொண்டிருப்போன் போலயிருக்கிறது.

*
9.

நான்கடவுள் படமும் இந்தியாவை பற்றிய இருண்ட உலகத்தின் படம்தான். ஸ்லம் டாக்கும் கிட்டத்தட்ட இதைப்பற்றித்தான். சொன்ன
திரைமொழியில் தான் கொஞ்சம் வித்தியாசம். இது ஒரு இந்திய இயக்குநர் எடுத்ததால் சரியென்றும், மற்றதை மேற்கத்திய இயக்குநர் எடுத்ததால் தவறென்றும் சொல்கிறது எனக்கு சரியென்று படவில்லை. கலைஞர்களுக்கு புவியின் கற்பனை கோடுகள், எல்லை கோடுகள் – இல்லாத கோடுக . எல்லையில்லாதது. அவர்களின் தேசம். ஆப்பரிக்காவின் நடக்கிற மனித கொடுரங்களை தனது அடுத்த படத்தில் இன்னும் வன்முறையாக எடுக்க பாலைவை யாரும் தடுக்க முடியாது. தடுக்கவும் கூடாது. அங்கு அவருக்கு பிடித்தமான வன்முறைக்கான தளமும், களமும் பெரிது. மேலும் அது உலகச்சந்தையில் விற்கும் வாய்ப்பும் அதிகம். உலகத்தையே மிரட்டலாம்.

*
10.

மக்கள் கூட்டம் கரைந்து, கலைந்து அரோரா திரையரங்கமே அலம்பிவிட்டது போலயிருந்தது.
தனியனாய் மெல்ல கிளம்பி வந்து கொண்டிருந்தேன். யாரோ அரூபமாய் கடந்ததாய் பட்டது. பிஜீ மாமாவா.?
பீஜீ மாமாவிடமிருந்துதான் முதன் முதலில் அஹம் பிரம்மாஸ்மி என்ற வார்த்தை தெரியவந்தது. அவர் அதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார் என்று எண்ணுகிறேன். அப்பா அதற்கு முயன்று முயன்று தோற்று ஓவ்வொரு தெய்வமாய் மாறிக்கொண்டேயிருந்தார்.
அதன் கனம் அதிகமென்பதால் நான் வெளிப்புற நாத்திகனானேன்.

அரோரா எல்லாவற்றிற்கும், சாட்சியாய் மெளனமாய் நின்று கொண்டிருந்தது.


netwealthcreator@gmail.com
mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி