தமிழில் பறக்கும் குறுஞ்செய்திகள்

This entry is part of 50 in the series 20041202_Issue

அசுரன்


செல்பேசிகளில் உள்ள எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்திகள் அனுப்பும் முறை பலருக்கும் பெரும் பயனாக உள்ளது. அவை, உரிய நேரத்தில், உரியவர்களைச் சென்றடைந்ததா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இயலாது எனினும், சில செல்பேசி நிறுவனங்கள் இவ்வசதியை இலவசமாக வழங்குவதாலும், ஒரே செய்தியை குறைந்த கட்டணத்தில் பலருக்கும் அனுப்ப முடியும் என்பதாலும் இம்முறை பலரிடமும் பிரபலமடைந்துள்ளது. எனினும் இவ்வசதியை ஆங்கிலம் அறிந்தவர்களும், அதிலும் குறுகிய வடிவில் செய்தியைத் தட்டச்சு செய்யத் தெரிந்தவர்களும், புரிந்துகொள்ளத் தெரிந்தவர்களுமே இம்முறையைப் பயன்படுத்த இயலும்.

இப்போது, உலகிலேயே முதன்முறையாக தமிழிலும் குறுஞ்செய்திகள் அனுப்பும் முறை இலங்கையில் அறிமுகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மைக்ரோஇமேஜ் என்ற நிறுவனம் செல்பேசியில் குறுஞ்செய்திகளை தமிழ் மற்றும் சிங்கள மொழியில் அனுப்பும் வசதியை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கிராமப்பகுதிகளில் செல்பேசிகளைப் பயன்படுத்தும் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தமக்குரிய செய்திகளை சிங்களம் மற்றும் தமிழில் பரிமாறிக் கொள்ளமுடியும் என்று இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஹர்சா பூரசிங்கே தெரிவித்துள்ளார்.

இது செய்திகளைப் பரிமாறிக்கொள்வதற்கான வசதிகளை மேம்படுத்தும் என்றும் குறைந்த கட்டணத்தில், தாய்மொழியிலேயே செய்திகளைப் பரிமாறிக்கொள்ளமுடிவதால் செல்பேசிகளின் விற்பனை அதிகரிக்கும் என்றும் இந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, இலங்கையில் சிங்கள குறுஞ்செய்திச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பயன்படுத்துவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களால் அது தோல்வியடைந்தது. தமிழும் சிங்களமும் இணைந்த இம்முறை தற்போது வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இத்தொழில்நுட்பத்திற்கான சர்வதேசக் காப்புரிமையைப் பெறும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

மொழியியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறைகளில் கடந்த 9 ஆண்டுகாலமாகத் தமக்குள்ள அனுபவத்தின் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகாலத் தீவிர உழைப்பின் பயனாக இந்த சாதனை எட்டப்பட்டுள்ளதாக இந்நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். ஜாவா வசதியுள்ள எந்தவொரு நிறுவனத்தின் செல்பேசிக் கருவியிலும் இவ்வசதியைப் பெறமுடியும் என்றும் மல்டிமீடியா (எம்.எம்.எஸ்.) வசதியுடைய செல்பேசிகளில் ஜாவா தேவையில்லை என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

(asuran98@rediffmail.com)

Series Navigation