சுழலும் மின் விசிறி

This entry is part 15 of 49 in the series 19991203_Issue

சுரேஷ்குமார இந்திரஜித்


அஞ்சலையின் மனம் நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவள் வேலை செய்யும் வீட்டையடைய நடந்து கொண்டிருந்தாள். வெயில் இன்னும் சரியாக வரவில்லை என்ற போதிலும் அவளுக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. யாரும் இல்லாத வேளையில் இப்போது தான் முதன் முறையாக வீட்டில் இருக்கப் போகிறாள். இன்று ஊருக்குப் போய்விட்டு இரவு வந்து விடுவதாகவும், எதிர் வீட்டில் கொடுத்திருக்கும் சாவியை வாங்கி வீட்டைத்திறந்து வழக்கமான வேலைகளைச் செய்து முடித்து சாவியைக் கொடுத்து விட்டுப் போய்விட வேண்டுமென்றும், வாழ்க்கைக்கு நம்பிக்கை தானே அவசியம் என்றும் மற்ற வீட்டுக் காரர்களைப் போல் தாங்கள் இல்லையென்றும் அவளின் எஜமானி நேற்று சொல்லியிருந்தாள்.

வீட்டுக்காரர்கள் இல்லாத வீட்டைப் பற்றிய நினைப்பு, அவளுக்கு ஆனந்தத்தை அடையப் போகும் போது ஏற்படும் மனப் படபடப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. வீடு காதலனாய் மாறி நின்று அழைத்தது. வீட்டை நெருங்க நெருங்க மனப் பட படப்பு கூடுவது போலிருந்தது. திடாரென அவளுக்கு வேறொன்று தோன்றியது. வீட்டிலுள்ளோர் ஏதாவதொரு பொருளைத் தொலைத்துவிட்டு , காணாமல் போனதற்கு தானே காரணம் என்று கூறும் சந்தர்ப்பத்தினை ஆளில்லாத வீடு உருவாக்கி விடுமோ என்று சந்தேகம் தோன்றியது. இந்தச் சந்தேகம் ஒருபுறம் ஆனந்தத்தைக் குலைக்க ஆரம்பித்தது. ஆனந்தம் வாயைத்திறக்க சந்தேகம் அதன் வயிற்றுக்குள் சென்று அமர்ந்து கொண்டது. ஆனந்தம் அவளைத் தொற்றிக்கொள்ள அவள் நடந்து கொண்டிருந்தாள்.

பார்வைக்குத் தெரிந்த வீடு அவளை வா வா என்று கட்டியணைக்கத் துடிப்பது போல் நின்று கொண்டிருந்தது. வீட்டின் தோற்றம் புதிய பொலிவுடன் இருந்தது. வீடு அளவுக்கு அவள் வளர்ந்து வீட்டின் தோள் மீது கை போட்டு நின்றாள். வீடு வெட்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தது.

எதிர் வீட்டின் முன் போய் நின்றாள். வீட்டிலிருந்து வந்த வாலிபன் ஒருவன் கேள்விக்குறியோடு அவளைப் பார்க்க , அவள் தான் எதிர் வீட்டு வேலைக்காரி என்றும் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்றும் கூறினாள். அவன் உள்ளே சென்றான். ஒரு பெண்மணி வந்தார். ‘ரவி அம்மா சொல்லிட்டுப் போயிருக்காங்க. இந்தா சாவி, வேலையை முடிச்சுட்டுப் போறப்ப கொடுத்துட்டுப் போ என்ன தெரியுதா ? ‘ என்று சொல்லிக்கொண்டே சாவியைக் கொடுத்தார்.

சாவி கையில் ஜில்லென்று இருந்தது. ஆனந்தம் படபக்க வீட்டை நோக்கி எஜமானி போல் சென்று கொண்டிருந்தாள். கேட்டைத் திறக்கும் போது அவளிடம் அதிகாரம் எழுந்தது. வீட்டுக் கதவருகே திகைத்து நின்றாள். சற்றுத் தயங்கி பூட்டைத்திறந்து கதவைத் திறந்தாள். ஆள்களற்ற வீட்டின் மதர்ப்பின் மீது அவள் புது மணப் பெண் போலக் காலடி எடுத்து வைத்தாள். வீடு அதற்கு முன் அவள் அடைந்திராத அன்யோன்யத்தைத் தந்தது. சோபாவில் அமர்ந்தாள். கால் மேல் கால் போட்டு அமர்ந்து வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். வீடு தன் ஆளுகைகு வந்து விட்டது என்ற உணர்வு விகசித்தது. எழுந்து சென்று கதவைச் சார்த்தி உட்புறம் தாழிட்டாள். வீடு அவள் கட்டுப் பாட்டிற்குள் ஒடுங்கியது.

ஃப்ரிஜ்ஜைத் திறந்தாள். இவ்வளவு காலமும் அவள் கைப்பட ஃபிரிஜ்ஜைத் திறந்ததில்லை. எஜமானி ஃபிரிஜ்ஜைத் திறக்கும் போது பார்த்தது தான். ஃபிரிஜ்ஜினுள் முட்டை காய்கறிகள், பழங்கள், பழரச பாட்டில்கள் இருந்தன. சில மாத்திரைகளும் இருந்தன. முட்டையைத் தொட்டுப் பார்த்தாள். ஜில்லென்றிருந்தது. பழரச பாட்டிலைக் கையில் எடுத்தாள். ஃபிரிஜ்ஜைச் சாத்தினாள். பாட்டிலின் மூடியைத் திறந்து முகர்ந்து பார்த்தாள். ஒரு டம்ளரை எடுத்து அதில் சற்று ஊற்றி, பின் பிரிட்ஜைத் திறந்து பாட்டிலை எடுத்த இடத்தில் இருந்த நிலையில் வைத்தாள். டம்ளரில் ஊற்றிய பழரசத்தில் விரல் விட்டு, நாக்கில் வைத்து ருசி பார்த்தாள். பிறகு நினைவு வந்தவளாய் மீண்டும் ஃபிரிஜ்ஜைத் திறந்து குளிர்ந்த நீர் உள்ள பாட்டிலை எடுத்து நீர் ஊற்றி, மீண்டும் அதை ஃபிரிஜ்ஜில் வைத்து விட்டு , டம்ளரை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து சாவகாசமாக ருசித்துக் குடிக்களானாள். குடித்து விட்டு ‘ரவி அம்மா இங்கே வா, இதைக் கழுவி வை.. ‘ என்றாள். பிறகு எழுந்து அவளே வாஷ் பேஸினில் கழுவி டம்ளரை சேலை முந்தானையால் துடைத்து, இருந்த இடத்தில் வைத்தாள்.

பூஜை அறை பூட்டப் பட்டிருந்தது. அதற்குள் உள்ள பீரோவில்தான் முக்கியப் பொருட்கள் இருக்கும் போலிருந்தது. அந்த அறையைப் பெருக்க அவளை அனுமதித்ததில்லை. அருகிலிருந்த படுக்கை அறைக்குள் அஞ்சலை நுழைந்தாள். கட்டில் மெத்தையில் விழுந்து புரண்டாள். எஜமானியின் சேலை, ரவிக்கை , உள்ளாடைகள் , நைட்டி தொங்கிகொண்டிருந்தன. அய்யாவின் ஆடைகளும் தொங்கிக் கொண்டிருந்தன. சற்று நேரம் படுத்திருந்தவள் எழுந்து பீரோவிலிருந்த கண்னாடியில் உருவத்தைப் பார்த்தாள்.

அய்யா டாஸெண்டானவர். ஆரவாரமில்லாதவர். அஞ்சலையை மரியாதையுடன் தான் அழைப்பார். எஜமானி இதற்கு நேர் மாறானவள். அஞ்சலைக்கு வாய்த்த புருஷனோ அவளை அடிப்பதன் மூலமே புருஷன் என்று உணர்ந்து கொண்டிருப்பவன். அய்யாவைப் போல் புருஷன் அமைந்திருந்தால் .. என்று கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்குத் தோன்றியது.

எஜமானியின் நைட்டியைப் பார்த்தாள். ஆடைகளைக் களைந்து மனம் படபடக்க நைட்டியை அணிந்து கண்ணாடியில் பார்த்தாள். வாழ்வின் வெறுமை இந்நேரத்தில் அவளைக் கவ்வியது. அவசரமாக நைட்டியைக் களைந்து தன் ஆடைகளுக்கு மாறினாள். நைட்டியை இருந்த இடத்தில் வைத்தாள். நேரமாகி விட்டதென உணர்ந்து பரபரத்தாள். எஜமானியாக இருந்தவள், வேலைக்காரியாக மாறுவதில் மனம் ஒத்துழைக்க மறுக்க , வேறு வழியின்றி விளக்குமாரை எடுத்தாள். பெருக்கினாள். பாத்திரங்களைக் கழுவினாள். ஈடுபாடின்றி ஏதோ வேலை செய்தாள். நேரமாகிவிட்டதாகத் தோன்றியது.

வேலைகளை முடித்து சோபாவில் சாய்ந்து படுத்தாள். மின் விசிறி மேலே சுழன்று கொண்டிருந்தது. கண்களை மூடிக் கொண்டிருந்தாள். எஜமானி அஞ்சலையாக மாறி வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். கதவைத் திறந்து சூட் கேசுடன் அய்யா நுழைந்து கொண்டிருந்தார். கண்களைத் திறந்தாள். ‘இதே போல் அடுத்து எப்போது வருவாய் ? ‘ என்று வீடு கேட்டது. பூட்டு சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை ஒரு தடவை நன்றாகப் பார்த்தாள். கதவைத் திறந்து வெளியே வந்து கதவைச் சாத்திப் பூட்டினாள். எதிர் வீட்டை நோக்கி நடந்தாள். மனம் வீரியமிழந்ததைப் போல் கிடந்தது. எதிர் வீட்டுப் பெண்மணியிடம் சாவியைக் கொடுத்து விட்டு நடந்தாள். முக்கிய சாலைகளிருந்து விலகி, குப்பைகளைத் தாண்டி , கத்திப் பேசும் மனிதர்களின் இரைச்சலினூடே தன் குடிசையை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். குடிசையை நோக்கிச் செல்லச் செல்ல அவள் உருவம் சிறுத்துக் குள்ளமாகிக் கொண்டே வந்தாள். குடிசை வாசலில் அவள் புருஷன் குத்துக் காலிட்டு பீடி புகைத்துக் கொண்டிருந்தான். திடாரென அவள் மனதில் பீதி ஏற்பட்டது. ஓடிக் கொண்டிருந்த மின் விசிறியை நிறுத்தாமல் வந்து விட்டோமோ என்ற சந்தேகம் அவள் மனதில் ஏற்பட்டிருந்தது. பீதி பரவ ஆரம்பித்தது.

***

Thinnai, 1999 November 28

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< மனிதர்-1பல்லி ஜென்மம் >>

சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித்