ஒரு பெரியாரிஸ்டின் தீபாவளி

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

புதியமாதவி, மும்பை.


நட்சத்திரங்களை விரட்டிவிட்ட மின்விளக்குகளின் ஆகாயத்தில் தீபாவளியும் சேர்ந்து நிலவுக்கு இருட்டடிப்பு செய்துகொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் வண்ண விளக்குகள். தீபாவளிக்கு என்றே அக்பரலிஷ் கடையிலிருந்து நடைபாதை மணிஷ் பஜார் வரை வண்ணக் காகிதங்களில் சுற்றப்பட்டிருக்கும் தீபாவளி பரிசுகள். குடியிருப்புகளில் நம்ம ஊரு சிவகாசியின் சத்தம்.. சின்னக்குழந்தைகள் பொதிந்து வைத்திருந்த கந்தக வெடிகளை இங்கே பெரிய மனிதர்களின் வீட்டு சின்னக்குழந்தைகள் வெடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அது படியளக்கும் வாழ்க்கை. இவர்களுக்கு இது வாழ்க்கையின் கொண்டாட்டம்.

போனஸ் எதிர்பார்த்து காத்திருக்கும் வீடுகள், எப்படியும் லஷ்மி பூஜைக்கு புதிதாக இரண்டு வளையல்கள் செய்திவிட வேண்டும் என்ற நினைப்பில் இருக்கும் பெண்கள், கடை கடையாக ஏறி இறங்கி VTV, MTV டாப் தேடி வாங்கிக் கொண்டிருக்கும் இளசுகள்..வீடுகளின்அடுக்கு மாடிகளில் தொங்கும் தோரணவிளக்குகள் குடிசைகளிலும் போட்டிப்போட்டுக் கொண்டு சரம் சரமாய் தொங்கிக்கொண்டிருக்கும் விளக்குகள்.. எங்கு பார்த்தாலும் தீபாவளி தீபாவளி.. எனக்கு எரிச்சலாக வந்தது.

அந்த நேரம் பார்த்து விஜயின் போன்.

‘மேடம்.. தீபாவளி மேட்டர் ரெடியா ? ‘

‘வாட் ? ‘

‘என்ன மேடம் ? தீபாவளி சிறப்பிதழில் அட்டைப்படத்திலேயே உங்கள் ஹைகூ போடலாம்னு சொன்னேனே.. பர்ஸ்ட் க்ளாஸா ஒரு தீபாவளி ஹைகூ எழ்திடுங்க. அப்புறமா உங்க பாணியிலே ஒரு கவிதையோ கதையோ எப்படியும் எனக்கு இன்னிக்கு சாயந்திரம் வேணும் மேடம். பையனை எத்தனை மணிக்கு அனுப்பனும் ? ‘

‘என்னதான் இவன் மனசிலே நினைச்சுக்கிட்டான் ? இவன் அட்டைப்படத்தில் போடாறான்ன உடனே நான் இவனுக்கு ஹைகூ எழுதிடனும்னு நினைப்பா ? ஹைகூ என்ன இவன் தாத்தா வீட்டு குக்கூவா ? வந்தக் கோபத்தை அடக்கிக்கொண்டு ‘லுக் விஜய், யு ந்நோ மி வெரிவெல். நான் தீபாவளி கொண்டாடறதில்லே. தீபாவளி சிறப்பிதழில் என் சம்மந்தப்பட்ட எதுவுமே வராமலிருப்பதுதான் எனக்கு நீங்க செய்யும் பெரிய்ய உதவியா இருக்கும் ‘

அதில்லே மேடம், ஒரு பத்திரிகைங்கிறப்போ நாமா சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துதானே ஆகணும். ஊரோடு ஒத்து ஒழுகல் ‘ என்று சொல்லுவாங்களே உங்களுக்குத் தெரியாததா ?

‘ இந்தப் பாருங்க விஜய்.. உங்க பத்திரிகை,. நீங்க ஊரோடு ஒத்து ஒழுகறதும் விழுறதும் அழுறதும் உங்க விருப்பம். டோண்ட் ஃப்போர்ஸ் மீ நான் என் கொள்கைகளுடன் வாழறதைத்தான் விரும்பறேன்.. OK ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் தீபாவளி இஸ்யு ‘

விஜய்க்கு என் பதில் எவ்வளவு ஏமாற்றத்தைத் தந்திருக்கும்னு நினைச்சவுடன் பாவமா இருந்தது. பாவம் விஜய்.. ஆனா அதற்காக நான் என்ன செய்யறது ? இப்படி ஒவ்வொருத்தருக்கும் பாவப்பட ஆரம்பிச்சா அப்புறம் நாம யாருனு நமக்கே சந்தேகம் வந்திடும். சரி இதை எல்லாம் சேர்த்து வைத்து பொங்கல் சிறப்பிதழை ஜாமாய்ச்சிடனும்..

‘ம்மா.. தீபாவளிக்கு என்ன ஷ்பெஷல் பண்ணப்போறே ? ‘

நமக்கு என்னடா தீபாவளி ?

என்னம்மா இது ? எது கேட்டாலும் இது நமக்கு கிடையாதும்பே. சித்திரை விசு நமக்கு கிடையாதும்பே, கார்த்திகை கிடையாது.. கண்பதி கிடையாது தீபாவளி கிடையாது.. என்ன தான் நமக்கு உண்டோ ? எப்ப பாரு தைப் பொங்கல் உழவர் திருநாள், வள்ளுவர் பெருநாள்னு எதையாவது சொல்லி வைப்பே. அந்தப் பொங்கலுக்கு நீ பண்ர அரிசிப் பாயசத்தை என் பிரன்ஸ் யாரும் சாப்பிட மாட்டாங்க. பிரசாதமானு ஒரு ஸ்பூன் சாப்பிடுவாங்க. அதெலாம் எனக்குத் தெரியாது.. இந்தத் தடவை எனக்கு கடைசி வருஷம் என் பிரண்ஸ் எல்லோருக்கும் நம்ம வீட்லேதான் லஞ்ச். நீ என்ன பண்ணிவியோ .. நீ தீபாவளி கொண்டாடு இல்ல கொண்டாடாம இரு. லெட் அஸ் யென் ஜாய் தி லைஃப்..

‘சரிம்மா ..இப்போ என்ன உன் பிரண்ட்ஸ்க்கு லஞ்ச் பார்ட்டி வேணும் அவ்வளவுதானே டண் ‘

பையன் பால்கனியிலிருந்து சத்தம் போட்டான். அம்மா அந்த ஹால் சுவிட்சைப் போடு.. ஒருதடவை செக்கப் செய்துக்கறேன்.

சுவிட்சைப் போட்டுவிட்டு பால்கனியில் எட்டிப் பார்த்தேன். என் தொட்டிச்செடிகளின் கிளைகளில் எல்லாம் வண்ண வண்ண மின்மினி விளக்குகள். பால்கனி என்னவொ கல்யாண மண்டபம் மாதிரி ஜொலித்தது. என் மல்லிகைச் செடிகள் நாணத்தில் சிவந்து தலைகுனிந்து.. அடடா.. எப்படி என் மல்லிகைக்கும் இந்த புதுப்பெண்ணின் நாணம் வந்தது ?

ஒன்றுமே சொல்லாமல் வெளியில் வந்தேன்.

எலெக்ரிக்ஸ் எலெக்ரானிக்ஸ் பொருட்களை வைத்துக் கொண்டு ஏதாவது நோண்டிக்கொண்டே இருப்பான் என் பிள்ளை. சில சமயங்களில் சாப்பிடமால் குளிக்காமல் அவன் இப்படி ஏதாவது செய்து கொண்டிருக்கும்போது எனக்கும் அவனுக்கும் வாக்குவாதம் வரத்தான் செய்யும். அப்பொதெல்லாம் என் பெண்தான் நடுவராக வருவாள். பெரும்பாலும் என்னைத்தான் சத்தம் போடுவாள்.

அவன் இப்போ என்ன செய்திட்டானு இப்படி கத்தறேம்மா. மற்றப் பசங்க மாதிரி ஊர்ச்சுத்தி ஃபாருக்கு போயிட்டு லேட் நைட் சினிமா பார்த்துட்டு வர்றானா சொல்லு ? ?.

‘டேய் ஏண்டா சாப்பிடமாகிடந்து இதைப் பண்ணிட்டிருக்கே. உடம்பப் பாரு.. குச்சி மாதிரி.. ‘

இரண்டு பேரும் அமைதியாகிவிடுவோம்.

‘டேய்.. தீபாவளிக்கு டிரெஸ் வாங்கறதுக்கு யார் யாருக்கு எவ்வளவு வேணும் ? அப்பா.. எனக்கு இரண்டு டிரெஸ் வாங்கனும். அப்பா நான் சேல்ஸ் போட்டிருக்கான் அதிலே ரண்டு டி ஷர்ட் வாங்கிக்கறேன்.

‘.. ஆமா உனக்கு என்ன வேணும் ? ‘ என் கணவர் என்னைப் பார்த்தார். நான் அவரை ஒரு முறைப்பு விட்டுவிட்டு சோபாவிலிருந்து எழுந்திருச்சேன்.

‘என்ன முறைக்கறே.. ம்ம் .. பெரிய்ய பெரிய தலைவர்கள் உங்க கொள்கை வீரர்கள் எல்லாம் தமிழ் மக்களுக்கு எங்கள் தீபாவளி வாழ்த்துகள்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. நீ என்னடானா என்னைப் பாத்து முறைக்கே! ‘

‘நல்ல சொல்லுங்க டாடி.. அப்போதான் அம்மாவுக்குப் புரியும்! ‘

அவளுக்கு எல்லாம் புரியும்ட்டா. ஆனா புரிஞ்சதுனு ஒத்துக்கிடத்தான் மாட்டா. அதுதான் அவளோட ஸ்பெஷாலிட்டி.

‘ஏன் என்னை வம்புக்கு இழுக்காம உங்களுக்கு சாப்பிட்டது ஜீரணிக்காதா ? அப்பா, பொண்ணு பிள்ளை .. சேர்ந்து தீபாவளி கொண்டாடுங்களேன்.. யாரு வேண்டாம்னா.. ? ‘

‘இந்தப் பாரு.. தீபாவளியின் ஒரிஜினல் என்னவாகவும் இருந்திட்டுப் போகட்டும். இப்போ தீபாவளியின் அர்த்தங்கள் மாறிப் போச்சு. இன்னும் சொல்லப்போனா இது இந்துக்களின் பண்டிகைங்கிறதுகூட கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வருது. இதுதான் இந்தியாவின் ஒரே பண்டிகை. எல்லா மாநிலங்களிலும் கொண்டாடப் படற நாள் ‘

‘ஆமா..உங்க லாஜிக் எல்லாம் எதிலே கொண்டு போய் விடும் தெரியுமா ? இந்துக்களே இந்தியானு சொல்றதிலேதான் கடைசியில் கொண்டுபோய் விடும் ‘

‘ok ந்நோ ஆர்க்யுமெண்ட்ஸ்.. ‘ அவர் வழக்கம்போல பிசினஸ் இண்டியாவை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தார்.

தீபாவளிக்கு எல்லார் வீட்டு வாசலிலும் ரங்கோலி. என் பொண்ணு கலர்ப் பொடிகளை வாங்கிக் கொண்டுவந்து வாசலில் ஏதோ ஜியாமெண்ரி டிசைனை வரைந்து கொண்டிருந்தாள். எனக்கு சிரிப்பு வந்தது. நான் கண்டு கொள்ளாமல் கீழே இறங்கினேன்.மறுநாள் லஞ்ச்க்கு வேண்டிய காய்கறிகள் வாங்க.

எங்கள் குடியிருப்பில் மூன்றே அடுக்குமாடிக் காட்டிடங்கள். ஒவ்வொரு கட்டிடத்தின் வாசலிலும் பெரிய்ய ரங்கோலிகள். இரண்டு அடுக்கு மாடிக் கட்டிடங்களின்வாசலிலும் ரங்கோலி போட்டு ரங்கோலியைச் சுற்றி விளக்குகள் ஏற்றியும் வைக்க ஆரம்பித்து விட்டார்கள். எங்கள் பில்டிங் வாசலில் மட்டும் இளசுகள் கையைப் பிசைந்துகொண்டு நிற்பது தெரிந்தது. கடைசி நேரத்தில் எப்போதும் ரங்கோலி போடும் அம்புஜம் மாமி மூட்டுவலி வந்து எழுந்திருக்க முடியாமல் இருப்பதால் ஏற்பட்ட தடங்கல். என்னைப் பார்த்தவுடன் எல்லாரும் என்னைச் சுற்றி..

தீதி..ப்ளீஸ்.. ஆண்ட்டி.. நாங்க ஹெல்ப் பண்றோம்..என் கையிலிருந்த மார்க்கெட்டிங் பேக்கை அவர்கள் வாங்கிக்கொண்டார்கள். அவர்களிடம் என்னால் ந்நோ சொல்ல முடியவில்லை.

இடத்தின் அளவை பார்த்தேன். இதில் எந்தக் கோலம் போட்டால் சரியாக இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்தேன். இவ்வளவு பெரிய கோலம்.. கம்பிக்கோலம் போட்டால் கொஞ்சம் கம்பி வளைந்தாலும் கோலம் கோணலைக் காட்டிக் கொடுத்துவிடும். ம்ம்ம் என்ன செய்யலாம்.

புடவையை இழுத்துச் சொருகிக்கொண்டேன். என் கைகள் புள்ளிகளை வைத்துக் கொண்டே போனது. புள்ளிகளை வைத்து முடிந்தவுடன் எழுந்துநின்று நிமிர்ந்து பார்த்தேன். என்னைச் சுற்றி வாட்ச்மேனிலிருந்து இளசுகள், பொடிசுகள்.எல்லோரும். என்னவோ மர்மத்தொடர் பார்ப்பதுபோல அமைதியாக..

சரி .. புள்ளிகள் சரியாக வந்துவிட்டது. இனி.. புள்ளிகளை இணைத்தேன். ஒவ்வொரு இணைப்பும் முடியும்போது.. கூட்டத்திலிருந்து ‘வாவ்..வொண்டர்புல் ‘ என்ற குரல்கள்:

நடுவில் பெரிய தேர். எங்கள் அம்மன் கோவில் தேர்மாதிரி.. தேரைச் சுற்றி தோரணங்கள்.. முன்னால் தாமரை.. சங்கு.. சக்கரம்.. என் இடுப்பு வலிக்க ஆரம்பித்தது. அவர்களிடமிருந்த வண்ணப்பொடிகளை வாங்கி ஒவ்வொரு வண்ணங்களுக்கும் சரியான கலவையுடன் பொடிகளைச் சேர்த்துக் கொடுத்தேன். டா அரிப்பு, சூப் அரிப்பு தகடுகளுடன் ஒவ்வொருவரும் மாக்கோலத்தை ரங்கோலியாக்கிக் கொண்டிருந்தார்கள். கோலத்தைச் சுற்றி நான் வரைந்திருந்த பாடர் டிசைனில் சின்ன சின்ன விளக்குகள் திரியுடன் எண்ணெயில் எரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் என் மனசில் சந்தோஷங்கள் மத்தாப்பாய்..

குழந்தைகள் புது ட்ரெஸ் போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் நடக்கும்போது அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. லஞ்ச்சுக்கு வந்த பெண்ணின் நண்பர்கள் கூட்டம் ஒன்றும் மிச்சம் வைக்காமல் சாப்பிடும்போது ,.. ‘ஆண்ட்டி திஸ் இஸ் சவுத் இண்டியன் ஸ்பெஷல் க்கடி அண்ட் அவியல்.. இது உங்க ஊரு அப்பளம்தானே.. ‘ எல்லாம் எங்க ஊரு ஸ்பெஷல்னு சொல்லும்போது பெருமையாகத்தான் இருந்தது.

மறுநாள் லஷ்மி பூஜை. எப்படியோ இவர்களின் தீபாவளி அட்டகாசமெல்லாம் ஒருவழியாக முடிந்ததுனு நிம்மதியாக இருந்தேன்.

ரொம்ப நாள் ஆகுது அக்கா ஊரிலிருந்து வந்து. வர்றியா போய் பாத்துட்டு வந்திடலாம்னு என் கணவர் கேட்டவுடன் சரி கொஞ்சம் வெளியில் போயிட்டு வந்தா நல்லா இருக்கும்னு கிளம்பினேன்.

அன்று மாலை வீட்டுக்கு வந்தவுடன் கமலாபாய் நேரமாகிவிட்டதுனு வாசலில் விளக்கேற்றி வைத்திருப்பது தெரிந்தது. எங்காவது வெளியில் போயிட்டு நேரமாகிவந்தால் அவளே நாம் சொல்லாமல் எல்லாம் செய்வாள்.

கமலாபாய் தாதர் மார்க்கெட்டிலிருந்து பூ வாங்கிக் கொண்டுவந்து காலையிலும் மாலையிலும் விற்பாள். நான் கேட்காமலே பண்டிகை நாட்களில் என் வீட்டு கதவுகளில் சாமந்தி, கேந்திப் பூக்களின் மாலைகளைத் தொங்கவிடுவாள். மெதுவாக எல்லாவற்றுக்கும் சேர்த்து பணம் வாங்கிக்கொள்வாள்.

‘ஆஜ் தோ லஷ்மி பூஜாக்கா தீன் ஹை. கர்மே பூஜா கர்க்கே பார் ஜானேக்காதானா ‘ லஷ்மி பூஜையும் அதுவுமா பூஜை பண்ணாமல் எங்கேடி வெளியில் சுத்திட்டு வர்றேனு என்னை அவள் மாமியார் மாதிரி அதிகாரம் பண்ணுவதை என் கணவரும் பிள்ளைகளும் ரசித்தார்கள்.

அவர்களின் பார்வையிலிருந்து என்னைக் காப்பாற்றியது டெலிபோன். மறுமுனையில் விஜய்.. என்ன மேடம் எங்கிட்டே நானும் என் கொள்கையும்னு பேசிட்டு இன்னிக்கு டெய்லி பேப்பரில் அரைப் பக்கத்திற்கு ‘என் அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள் ‘னு விளம்பரம் கொடுத்திருக்கீங்க.. ‘

நான் வாயடைத்துப் போனேன்.

எதிர்த்த பில்டிங்கில் புதிதாக குடியேறி இருக்கும் ராஜன்சார் நேற்று தீபாவளி வாழ்த்து சொல்ல வீட்டுக்கு வந்தார். அவர், ‘ என்ன மேடம் இப்போதெல்லாம் எங்கள் டெய்லியில் நீங்க எழுதுவதே இல்லை ‘ என்று வருத்தப்பட்டுக் கொண்டார். உங்கள் பால்கனியில் லைட் அலங்காரம் எங்கள் பால்கனியிலிருந்து பார்க்கும்போது ரொம்ப அழகா இருக்குனு ஒரு பாராட்டு சொல்லிட்டு நான் கொடுத்த காஜு பர்ஃபியை இரண்டு சாப்பிட்டுவிட்டு போனார்.

இது அவருடைய வேலையாகத்தான் இருக்கும் .. ச்சே இந்த மனிதர்களின் அன்புத்தொல்லையும் சில சமயங்களில் அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும் உரிமையும் பெரிய்ய தொல்லையாகத்தான் இருக்கிறது.

என் கணவர் ஹாலில் உட்கார்ந்து கொண்டு என்னைப் பார்த்தும் பிள்ளைகளைப் பார்த்தும் சிரிப்பது எனக்கு கோபமூட்டியது.

‘ஆப்க்கா குருஜிக்கா பூஜா பி க்கியா.. ‘ என்றாள் என்னருகில் வந்து கமலாபாய்.

என் குருஜியா.. யாரது ? எனக்கே தெரியாத என் குருஜி..னு நான் அவளைப் பார்த்தேன். அவள் ஹாலில் தொங்கும் புகைப்படத்தைக் காட்டினாள். தந்தை பெரியாரின் புகைப்படம் பூமாலைகளுடன். முன்னால் கற்பூரத்தட்டு, புகைவத்திகள் எரிந்து கொண்டிருந்தன.

நான் அவளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றேன். என் பால்கனியின் மல்லிகைச் செடியில் பூத்த மின்சாரப் பூக்கள் என்னைப் பார்த்து சிரித்தன….!!!!

***

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை