மாளிகை வாசம் -2

This entry is part [part not set] of 7 in the series 20000507_Issue

எம் வி வெங்கட் ராம்


அவள் சொல்லிக்கொண்டிருந்தாள்: ‘பாவி, என் மானத்தை வாங்குகிறாயே! நல்ல வேளையாக அவள் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. இதென்ன கூத்து! வேண்டாமடா! அந்தச் சேலையை இப்படிக் கொடு! அதைக் கீழே போடு.. சீக்கிரம்.. முகத்திலே பூசியிருக்கிற மஞ்சளைக் கழுவு. போ சீக்கிரம்! ‘

சேலையாவது மஞ்சளாவது. ? எனக்கு ஒரே பிரமிப்பாயிருந்தது. சுவருக்குப் பக்கத்தில் நின்று கவனித்துக் கேட்டேன்.

‘இல்லை அம்மா. நான் இன்றைக்கு சேலைதான் கட்டிக் கொள்ளப் போகிறேன். நீலாவுக்கு ரொம்பப் பிடிக்கும். ‘

‘அட பாவி, அவளுக்கு வேறு தெரியும் படி செய்து விட்டாயா ? ‘

‘அவர் ‘.. கோபமாகப் பேசினார்: ‘நீ இப்போது அந்த வளையல்களைக் கொடுக்கப் போகிறாயா இல்லையா ? எனக்கு ரொம்பக் கோபம் வந்து விடும் தெரியுமா ? ‘

எனக்கு ஒன்றும் புரிய வில்லை. இது என்ன நாடகம் ? அறைய விட்டு மெதுவாக வெளியே வந்தேன். அவர்கள் இருந்த அறை உள் பக்கம் தாளிட்டிருந்தது. சாவித் துவாரம் வழியாகப் பார்த்தேன்.

அவளுடைய ஒரு கையில் பொன் கண்ணாடி வளையல் களும், இன்னொரு கையில் சேலையும் இருந்தன. ‘அவர் ‘ முகத்தில் சுமங்கலி போல் மஞ்சள் பூசிக் கொண்டு, அந்த சேலையும் வளையல்களும் கொடுக்கும்படி வம்பு செய்து கொண்டிருந்தார்.. கடைசியில் அவரைப் பிடித்துத் தள்ளி, எல்லாவற்றையும் தூக்கி அலமாரியில் வைத்துப் பூட்டி விட்டு , வேறு வாயில் வழியாக அவரை வெளியில் இழுத்துச் சென்றார் மாமியார்.

எல்லாம் விளக்க முடியாத புதிர் போன்று இருந்தது. எனக்கு, ஏதேதோ பண்ணிப் புலம்பும் மனதுடன் மறுபடியும் படுக்கை மேல் போய் விழுந்தேன். முந்தின நாள் நடந்த நிகழ்ச்சிக்கும், இன்று நடப்பதற்கும் உள்ள சம்பந்தம் ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. கண்களை மூடிக் கொண்டு பேசாது கிடந்தேன்.

கொஞ்ச நேரத்துக்கப்பால், அறையில் காலடிச் சத்தம் கேட்டது. பாதிக் கண்களைத் திறந்து பார்த்தேன். பூனைப் போல் கால்மேல் கால் எடுத்து வைத்து வந்தார்; என்னுடைய துணிகள் உள்ள இடத்துக்குச் சென்று என் ‘பாடி ‘ ஒன்று, ரவிக்கை ஒன்று, ஒரு சேலை, மூன்றையும் சுருட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டார். அந்தச் சமயத்தில் வந்து சேர்ந்தாள் மாமியார்.

‘அட மறுபடியுமா! சொன்னால் கேட்க மாட்டாயா ? அதையெல்லாம் கீழே போடு! என்று கத்தினாள் அவள்.

‘மாட்டேன் மாட்டவே மாட்டேன். ‘ என்று அவனை விட உரத்துக் கத்தினார் ‘அவர் ‘.

தாங்கமுடியாமல் , அப்போது தான் கண் விழிப்பவள் போல் எழுந்து உட்கார்ந்தேன். நான் எழுந்ததைப் பார்த்ததும் அவர் , ‘ இதோ பார் நீலா, நான் சேலை கட்டிக் கொள்கிறேன் என்றால் அம்மா விட மாட்டேன் என்கிறாள். எனக்கு வெட்கமாகயிருக்கிறது ? ‘ என்றார்.

வயதான மாமியார் கூக்குரலிட்டாள். அவர் மேல் பாய்ந்து கையிலிருந்த துணிகளை எடுத்து எறிந்து விட்டு ‘பர பர ‘வென்று இழுத்துச் சென்று பக்கத்து அறையில் அடைத்து விட்டாள். உள்ளிருந்து அவர் கொஞ்ச நேரம் கத்திக் கொண்டிருந்தார். பிறகு அடங்கி விட்டார்..

மாமியார் என் முகத்தில் விழிக்கவே வெட்கப் பட்டாள் போலும். ஏதேதோ வேலையில் ஈடுபட்டிருப்பவள் போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள்.

அனால் என் நெஞ்சு தத்தளித்துக் கொண்டிருந்தது. உண்மையை அறிய வேண்டும் என்ற ஆவலுடன் வலுக்கட்டாயமாக நானே அவளிடம் சென்றேன்.

‘இது என்ன மாமி ? ‘ என்று மெதுவாகக் கேட்டேன்.

அவள் தயங்கினாள். ஏதோ கூறி மழுப்ப முயன்றாள்; ஆனால் நான் விடவில்லை. கடைசியில் கூறினாள்: ‘அவனுக்கு எப்போதாவது இப்படி வேஷம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று தகராறு செய்வான். ‘

அந்தப் படம் ? பெண் வேஷத்துடன்.. ‘

‘ஆமாம், பெண் வேஷத்துடன் ஒரு முறை எடுத்தது…. ‘

பித்றகு அவள் நழுவி விட்டாள். என்னுடைய நாடிகள் அனத்துமே இடம் பெயர்ந்து நழுவுவது போன்ற உணர்ச்சி எனக்குள். ‘ஒரு வேளை ‘அவர் ‘ பைத்தியமே தானோ ? என்ற சந்தேகம் மனதைப் பிளந்தது. ‘அது எப்படி முடியும் ? கலியாண சமயத்தில் மிகவும் அமரிக்கையாக நடந்து கொண்டாரே ? ‘ என்ற சிந்தனை மறுபுறம். ஒன்றுமே தோன்றாமல் திகைப்பு உண்டானது தான் மிச்சம்.

ஆனால் என்னுடைய சந்தேகம் இரண்டு மூன்று நாட்களில் தீர்ந்து விட்டது. அன்று மாமியார் தற்செயலாக வெளியே போயிருக்கும் சமயம் அவரை அண்டினேன்.

அப்போது தான் எனக்கு உண்மை புலப்பட்டது. ஐயோ! ‘அவர் ‘ அல்ல. அவனே அல்ல. பெண்ணும் அல்ல. ‘அவர் ‘ என்று நான் நினைத்தது, தொழுதது எல்லாம் ஒரு வெறும் ‘அது ‘ தான். அலி! பேடி!.

எனக்கு இடி விழுந்தாற்போல் ஆகி விட்டது. சிரிப்புடன் பிறந்த என் வாழ்க்கை அழுகையாகியது. அந்த மாமியார் மீது சொல்ல முடியாத அருவெறுப்பு உண்டாயிற்று. பேடியைப் பெற்றெடுத்த அந்தப் பெண்பிள்ளையின் சூது தான் இவ்வளவும். அதனால் தான் அதை என் தகப்பனார் முன்னிலையில் அதிகமாகப் பேச விடவில்லை. அதனால் தான் கலியாண சமயத்திலும் மணமகனுக்கு ‘அதிக தடபுடல் வேண்டாம் ‘ என்று அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டிருந்தாள்.

நான் தனிமையில் அழுதேன். அவள் வந்ததும் பாய்ந்து அருகில் சென்றேன், அழுகையுடனேயே.

‘ராக்ஷஸி சூதுக்காரி. என்னுடைய வாழ்க்கையையே நாசம் செய்து விட்டாய் ‘ என்று கத்தினேன்.

திடுக்கிட்டவள் போல் கூறினாள்.

‘ஏன் என்ன விஷயம் ? மெதுவாகச் சொல்லு, அம்மா ‘

அவளுடைய சாந்தமான பேச்சு என் நெருப்பை இன்னும் அதிகப்படுத்தியது.

‘ சண்டாளி, அலிக்கு கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்று உனக்குத் தோன்றியதா ? பேடியைப் பெற்றதும் அல்லாமல், கல்யாணம் செய்து ‘சொகுசு ‘ வேறு பார்க்க நினைத்தாயா ? ‘

அவள் பிரமிப்புடன் விழித்துக் கொண்டே மெதுவாகக் கூறினாள்.. ‘நிஜமாகவா ? எப்போதாவது சேலை கட்டிக் கொண்டால் – அலியாகி விடுவானா ?… இல்லை. ‘

‘ போதும் போதும். ‘ அவன் ‘ என்று சொல்லாதே. அது, அது ? ‘

தாங்க முடியாத அழுகையுடன் கீழே விழுந்தேன். அவள் போய் விட்டாள். அந்தப் பெரிய வீடு, பெரிய சுடுகாடு போல் தோன்றியது. கடினமான நினைவுகள் வந்து வந்து மோதின. என்னுடைய இந்த நிலைமைக்குப் பொறுப்பாளி யார் ? என்னுடைய அந்தக் கற்பனைக் கல் கோட்டை, அகம்பாவ அஸ்திவாரம் தகர்ந்து போனதற்குக் காரணம் என்ன ? அழகான புருஷனை வேண்டினால் அதற்கு இந்த மாதிரியான தண்டனையா தெய்வம் கொடுக்கும் ?

குப்புறக் கிடந்து வெகு நேரம் அழுது கொண்டிருந்தேன். யாரோ என் முதுகை மெதுவாகத் தடவினார்கள். நிமிர்ந்து பார்த்தேன் – அவள்.

மெதுவாகச் சொன்னாள். ‘ நீலா ‘

இப்போது நான் ஆத்திரப் படும் நிலையில் இல்லை. மனதில் வேதனைமிகுந்த பாரம் தேங்கியிருந்தது.

‘ நான் இப்படி நினைக்கவே இல்லை… நிஜமாகவே ஒரு பைத்தியக்கார குணம் என்று தான் எண்ணியிருந்தேன். சின்ன வயதிலேயே அவனுடைய தகப்பனார் செத்து விட்டார். நான் அவனை ரொம்ப செல்லமாக வளர்த்தேன். அந்தக் காலத்தில் அவனுக்கு சடை பின்னி பெண்போல் அலங்காரம் செய்து அழகு பார்ப்பதில் எனக்கு ஒரு திருப்தி. அதனால் தான் அவன் படிக்கவும் இல்லை. வீட்டை விட்டு வெளியே போவதில்லை. வயது வந்த பிறகு கூட திடார் திடார் என்று சேலைகட்டிக் கொள்ள வேண்டும் என்று சொல்லி கட்டியும் கொள்வான். நானும் அவன் கேட்பதற்குத் தடை சொல்வதில்லை. அவன் வளையல்கள் தொங்கல் மாட்டல் எல்லாம் கேட்ட போது உடனே வாங்கிக் கூடத் தந்தேன். இவையெல்லாம், ஒரு காலத்தில் என் மருமகளுக்கு உபயோகப் படப் போகிறது என்பதற்காகத் தான் இப்படிச் செய்தேன். நீலா! மகனுக்குக் கல்யாணம் செய்து சந்தோஷப் படுவதைப் பார்க்க வேணும் என்று தான் நான் ஆசைப் பட்டேன். ஆனால் இது இப்படி முடியும் என்று நான் நினைக்கவே இல்லை… ‘

ஒரே மூச்சில் அவள் சொல்லுகிறாள். அவள் தெரியாமல் செய்த பிழை என்கிறாள். மகனுக்குக் கல்யாணம் செய்து களிக்க ஆசைப் பட்ட தாய் அவள். அவள் மீது யாதொரு தவறும் இல்லை. ஆனால் என் வாழ்க்கை என்ன ஆவது இனி ?

‘அவனை உன் தகப்பனார் முதலானவர்களிடம் அதிகம் பேச விடாமல் தடுத்ததற்குக் காரணம் கூட அது தான். அவனுடைய பேச்சு நடையினால் கல்யாணத்துக்கு மறுத்து விடுவாரோ என்று நான் பயப் பட்டேன். ஆனால் நான் இப்படி நினைக்கவே இல்லையடா! உன்னுடைய வாழ்க்கையைக் கெடுப்பதால் எனக்கு என்ன லாபம் வந்து விடப் போகிறது ?.. ‘

கிழவி பேசினாள், அழுதாள், அவள் மீது வந்த என்னுடைய சினம் தணிந்து விட்டது. பரிதாபம் மேலிட்டது. நான் அழுதேன்.

அன்று இரவே அவ:ளுக்குக் கடுமையான சுரம் கண்டது. இரண்டு நாட்கள் வாய்க்கு வந்தபடி பிதற்றிக் கொண்டிருந்தாள். தெரியாமல் செய்த பிழைக்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டாள். பணப் பெட்டியின் சாவியை என்னிடம் கொடுத்தாள். கால்களில் விழுந்து கெஞ்சினாள். அப்பால் இரண்டு மூன்று நாளில் அவள் கதை முடிந்து விட்டது.

அவளுக்குப் பக்கத்தில் பணிவிடை செய்துகொண்டிருந்த எனக்கு வேறு ஒரு சிந்தனை செய்யவும் நேரமில்ல. அவள் இறந்த செய்தியை தகப்பனாருக்குத் தெரிவிக்கவே இல்லை. சடங்குகளை எல்லாம் இரவோடு இரவாகவே முடித்து விட்டேன். ‘அது ‘வும் நானும் புருஷனும் மனைவியுமாக நின்று கருமாதிகளை முடித்தோம். ஆமாம், புருஷனும் மனைவியுமாகத்தான்.

இப்போது வீட்டில் நாங்கள் இருவர் தான் அந்தப் பெரிய மாளிகை எங்கள் கைவசம். பெட்டி சாவியும் என்னிடம் தான். நான் நினைத்தால் பணத்தில் புரளலாம். ஆனால் பணம் புருஷனாகுமா ?

ஆகும். ஆனால் உலகம் ஏற்குமா ? என் பெற்றோர்கள் தான் சம்மதிப்பார்களா ? எனக்கு ‘புருஷன் ‘ இல்லை. எனக்கு நடந்த கல்யாணம் ஒரு பொம்மைக் கல்யானம் தான். எனக்கு இன்னும் கன்னி கழியவே இல்லை என்று எப்படிச் சொல்வது ? அவர்கள் நகைக்க மாட்டார்களா ? கழுத்தில் இருக்கும் இந்தத் தாலி இது வாஸ்தவமில்லை என்று எப்படி விளக்குவது ?

அப்பாவிடம் போகலாம். ஆனல் பயன் ? அவர் என்ன செய்வார் ? நான் தருமப் படியும் சட்டப் படியும் கல்யாணம் ஆகாதவள் என்று அவரிடம் நிரூபிப்பது தான் எப்படி ?

அந்தப் பெரிய வீட்டை நோக்கினேன், பெரிய பீரோவில் உள்ள நகை, பணத்தையும் பார்த்தேன். அவைகளை நான் ஏன் அனுபவிக்கக் கூடாது ? அவைகளை நான் ஏன் விட்டுச் செல்ல வேண்டும் ?

ஒரே திகைப்பில் இருந்த நான் இறுதியான ஒரு முடிவுக்கு வந்தேன். இந்த வெட்கக் கேட்டை வெளியுலகில் சொல்லிக் கொண்டு அவமானப் படுவதை விட வாழ்க்கையே ஒரு ‘நடிப்பாக ‘ க் கழித்து விடுவது என்று தீர்மானித்தேன். ‘அதை ‘ அதனுடைய இஷ்டப்படி விட்டு விட்டு நான் ஊரில் உள்ள பெண்களுடன் சேர்ந்து திரிய ஆரம்பித்தேன்.

புதுமைப் பெண் சமூகம் என்னை மிகவும் பிரியத்துடன் ஏற்றுக் கொண்டது. ‘டாக் ‘காக உடுத்திக்கொண்டு சகல அலங்காரத்துடன் ஊரின் முன்னேற்றத்திற்குப் பாடுபட ஆரம்பித்தேன். ஆனால் வெளியில் எவ்வளவு தான் நிம்மதியாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் திகிலாகவே இருந்தது. என்னுடைய தாம்பத்திய ஜீவியத்தின் உண்மை நிலையை அந்த சமூகம் அறிந்தால் என்னுடைய மதிப்பிற்குப் பங்கம் ஏற்பட்டுவிடுமே என்ற பயம். புருஷனும் மனைவியுமாகச் சேர்ந்து சந்தோஷமாகச் செல்வதைப் பார்த்தால் சகிக்க முடியாத வியாகூலம்; குழந்தைகளைக் கண்டால் விவரிக்க முடியாத ஏக்கம்; கட்டுப் படுத்தப் பட்ட யெளவனத்தின் சவுக்குகள் வேறு. என்னுடைய கர்வத்திற்குக் காரணமான அழகு சரிந்து போகும் பரிதாபம். ஆனால், வெளியிலோ முகத்திலே ஒரு ‘பாவனை ‘ மகிழ்ச்சி. இந்தப் போலி இரட்டை வாழ்க்கை எத்தனை நாள் தான் நிலைக்கமுடியும் ? எத்தனைநாள் தான் ‘சரியாக ‘ நடிக்க முடியும் ? என்றாவது ஒரு நாள் என் நடிப்பில் தவறு ஏற்படாதா ? அந்தத் தவறை உலகம் காணமுடியாவிட்டாலும் எனக்குக் கூடவா தோன்றாமல் போய் விடும் ? அந்த நாள் என் கதி என்ன ஆகும் ?

அந்த நாளே வந்தது ! என்னுடைய வாழ்க்கையின் போக்கை நிர்ணயிக்கும் அந்தத் தினமே வந்து விட்டது.

-தொடரும்

 

 

  Thinnai 2000 May 07

திண்ணை

Series Navigationசித்ராதேவி >>

எம் வி வெங்கட் ராம்

எம் வி வெங்கட் ராம்