அபுக்கா

This entry is part [part not set] of 4 in the series 20000228_Issue

ப்ரணவன்


அவசர அவசரமாய் இட்டலி துண்டங்களை வாயில் திணித்து விட்டு காப்பியைக் குடித்தேன். காரைக்கிளப்பி அலுவலகம் செல்லும் போது வானொலியை உசுப்பி விட்டேன். அதில் சமீபத்தில் வந்த திரைப்பட்டம் ஒன்றின் விளம்பரம் நிறைய, இசை முழக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டது. அதில் இடையிடையே வரும் வசனம் பாடல் இவற்றைக் கேட்டவண்ணம் சாலையில் கவனம் செலுத்தினேன்.

மனம் என் பள்ளிப் பருவ நாட்களை நோக்கித் திரும்பி ஓடியது.

பள்ளிக்கூடம் வீட்டிலிருந்து ஐந்நூறு அடி தொலைவுதான். ஒண்ணாம் பெல் அடிக்கும் சத்தம் கேட்ட பின்பு வீட்டிலிருந்து கிளம்பினால் போதும். ரெண்டாம் பெல் அடிக்கும் முன்பு பள்ளி சென்று விடலாம். வாரம் தோறும் திங்களன்று அசம்பிளி, பிரார்த்தனை, பழைய, கையால் சுற்றும் கிராமஃபோன் பிளேயரில் தேசியகீதம் என்று எல்லாம் முறையாக நடக்கும்.

அபுக்கா எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில், கடைசி கோடியில் உட்கார்ந்திருப்பான். அவனது சரியான பெயர் அபுபக்கர். எங்கள் வகுப்பு சிறார்களுடன் ஒப்பிட்டு நோக்கினால், அபுக்கா அதிகபட்ச வளர்ச்சி உடையவனாக இருந்தான். முகத்தில் அவனுக்கு மீசை இருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் வரும். அவனைச் சுற்றியுள்ள சின்ன கூட்டம் எனக்கு எப்போதும் வியப்பைத் தரும். குறைந்தது நான்கு பேராவது அவனுடன் சுற்றிலும் இருப்பார்கள். மும்முரமாக கையை ஆட்டிக் கொண்டு அவன் ஏதோ சொல்ல, மற்றவர்கள் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருப்பார்கள். மதிய உணவு இடைவேளையில் நாங்கள் கபடி விளையாடும் போதும், இக்கூட்டம் மரத்தடியில் அமர்ந்து வழக்கம் போல பேசிக்கொண்டிருக்கும்.

அபுக்காவின் மேல் ஏனோ எனக்கு ஒரு ஈர்ப்பு வந்து விட்டது. அவனது குழுவில் சேர வேண்டும் என்ற எண்ணம் கூட. அப்படி என்னதான் இவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றறிய ஆவல். அவனது உருவத்தைக் கணக்கிலெடுத்து அவனை அணுகுவதை தள்ளிப்போட்டிருந்தேன்.

அன்று அறிவியல் வகுப்பில் அந்தோணி வாத்தியார் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். எனக்கு திடாரென அபுக்கா என்ன செய்கிறான் என்று பார்க்கத் தோன்ற, பின்பக்கம் திரும்பி அவனைப் பார்த்தேன். சும்மாதான் பார்த்தேன்! அந்தோணி வாத்தியாருக்கு கோபம் வந்துவிட, என்னை எழுப்பி விட்டு, அருகில் வந்து கையைக் கட்டிக்கொண்டு ‘அங்கே என்ன பார்வை, பாடம் நடத்தையிலே ? ‘ என்று முறைத்தார். நான் பதில் சொல்ல எத்தனிக்கும் தருவாயில், சற்றும் எதிர்பாராதவிதமாக ‘பளார் ‘ என்று என் கன்னத்தில் அறைந்தார். இது அந்தோணி வாத்தியாரின் ஸ்டைல்! கன்னத்தில் அடிப்பார் என்று எல்லாருக்கும் தெரிந்திருந்தாலும், எதிர்பாராத தருணத்தில் அடிப்பது அவரது பாணி.

வேறொறு நாள் கணித வகுப்பில் மீ.சி.ம. பற்றி சொல்லிக்கொடுத்தார் செல்லத்தாய் டாச்சர். அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உற்சாகமாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். மதிய இடைவேளையின்போது நான் சற்றும் எதிர்பாராதது நடந்தது. அபுக்கா என்னிடம் வந்து, ‘இதை எப்படிக் கண்டு பிடிப்பது ? ‘ என்று மீ.சி.ம. பற்றி கேட்டான். எனக்கு மலை மடுவிடம் வந்தது போல இருந்தது. அவனிடம் நட்பு கொள்ள ஒரு சந்தர்ப்பம் என்று கருதி விளக்கமாகச் சொல்லிக் கொடுத்தேன். புரிந்த விதமாகத் தலையை ஆட்டிக்கொண்டு போய்விட்டான்.

அதன்பின் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவனது குழுவில் சென்று அவர்களது சம்பாஷணைகளைக் கேட்பேன். முந்தின வாரம் மீனாட்சி தியேட்டரில் பார்த்து வந்த சினிமா பற்றி விலாவாரியாக, எழுத்து போட ஆரம்பித்ததில் இருந்து ‘வணக்கம் ‘ வரையில் மியூசிகல் எஃபக்டோடு அனுபவித்துச் சொல்வான். அவனுடைய ‘எங்க வீட்டு பிள்ளை ‘ முழுநீள விளக்கம் கேட்டு அடுத்த வாரமே சித்தப்பாவைக் கூட்டிக்கொண்டு போய்ப் பார்த்தபோது, படத்தை இரண்டாம் முறை பார்ப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. அவனுடன் பழகிய பல சந்தர்ப்பங்களில் அவனது உருவத் தோற்றத்திற்கும் பழகும் தன்மைக்கு நிறைய வித்தியாசமிருப்பதை உணர முடிந்தது. அவனை எனக்குப் பிடித்திருந்தது.

இருவருமாகச் சேர்ந்து சினிமா, நாடகம் என்று நடத்தியவற்றில் பின்வருவன முக்கியமானவை. கோடை விடுமுறையில் சூரிய ஒளியை சன்னல் வழியாகத் திருப்பி அதில் சினிமா காண்பித்து இருக்கிறோம். ஒருமுறை தமிழ்ப் புத்தகத்தின் கடைசியில் இருந்த கர்ணன் நாடகத்தை மொட்டை மாடியில் நண்பர்களுடன் நடத்திக்கொண்டிருந்தபோது துணி காயப் போட பாட்டி வந்து விட்டாள். பூணூலுடன் அந்தணன் வேடத்தில் நான் இருப்பதைப் பார்த்து, தலையில் நறுக்கென்று கொட்டி பூணூலைன் பிய்த்துப் போட்டாள். ஒருமுறை பள்ளியில் அபுக்கா கட்டபொம்மனாகவும், நான் ஜாக்ஸன் துரையாகவும் மாறுவேடப் போட்டியில் நடித்ததில் ஆளுக்கொரு பிளாஸ்டிக் டம்ள்ர் மூன்றாம் பரிசாகக் கிடைத்தது.

பின்னாளில் நான் பொறியியல் படித்து, இதோ அமெரிக்காவில் குடியேறி ஆண்டுகள் பல ஆகிவிட்டன.

சென்ற கிருஸ்துமஸ் விடுமுறையின் போது திருநெல்வேலி சென்ற போது மாலை நேரத்தில் நடந்து செல்கையில் எதிரில் சைக்கிளில் அபுக்காவைப் பார்த்தேன். லுங்கியுடன் மெதுவாக ஓட்டி வந்தான். நான் நிறுத்தியதும் அடையாளம் கண்டு இறங்கினான். ‘என்ன மக்கா, எப்டி இருக்கே ?, எங்க இருக்கே ? கல்யாணமாயிடுச்சா ? என்ன வேலை ? ‘ என்று வரிசையாகக் கேள்விகளை அடுக்கினான். அருகில் இருந்த டா கடைக்கு அழைத்துச் சென்று அவனது கேள்விகளுக்கு பதில் சொன்னேன்.

என் முறை வந்த போது ‘உனக்கு கல்யாணமாயிடுச்சா ? ‘, என்றேன்.

‘ஆமா மக்கா, ரெண்டு குழந்தைகள் ‘, என்றான்.

‘எங்கே வேலை பார்க்கிறாய் ? ‘

‘நம்ம தியேட்டரில்தான் புரொஜக்டர் ஓட்டறேன், கிருஷ்ணா ‘, என்றான் அபுக்கா

எப்போதும் போல மகிழ்ச்சியான முகத்துடன்.

Thinnai 2000 February 28

திண்ணை

Series Navigation

ப்ரணவன்

ப்ரணவன்