sunday ‘ன்னா இரண்டு

This entry is part [part not set] of 23 in the series 20050805_Issue

அரியநாச்சி


நகரின் முக்கிய வீதிகளில் பெரிய பெரிய பேனர்களில் கட்டிலைவிட்டு எழாத கனவன் குளித்து ஈரத்தலையில் துண்டைச் சுற்றியிருக்கும் யுவதியின் கையைப் பிடித்து சொல்லும் வாசகமாக வைக்கப்பட்டிருப்பது….

இது என்ன உத்திக்காக இருந்தாலும்,

அது எதற்காக வைக்கப்படடிருக்கிறது என்று பார்ப்போர் அனைவரையும் சிந்திக்க வைக்கின்ற படி பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதால்,

என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பதுதான் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பொது மக்களின் எண்ணங்களில் சதா கிளர்ச்சியூட்டும் விதத்தில் அந்த பேனர்கள் வினைபுரிகிறது. trafic ‘ல் நிற்போர் சற்றே பக்கத்தில் இருப்போரை ஒருவிதமான பார்வைப் பார்த்து சிரிப்பதும். அதையே பணியாற்றும் இடங்களில் சென்று பகிர்ந்துகொள்வதும். அதைப்பற்றியான சம்பாசனையை தொடர்வதும்….

இந்த பேனரினால் எவ்வளவு பேரின் சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது ? இது என்ன விளம்பரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது ?

கலாச்சாரம் சமூக consciousness இது எதுவுமில்லாமல் இப்படிப்பட்ட விளம்பரப்பலகைகள் பாதிப்பை உண்டு செய்து சின்னஞ்சிறுசுகளை என்னவாக மாற்ற முயற்சிக்கிறது. பெரியவர்களை தங்கள் பொறுப்பிழக்கச் செய்யும் இதுபோன்ற பேனர்களால் நமது கலாச்சாரம் எந்தளவிற்குச் சீர்குலைவிற்கு இட்டுச் செல்லப்படுகிறது ? இது சற்றே யோசிக்க வேண்டிய விசயமாக இருக்கிறது.

இது போன்ற ஆபாச எண்ணங்களை விதைக்கும் விளம்பரங்களால் சமூகத்தின் கட்டுப்பாடு கட்டவிழ்க்கப்பட்டு தாறுமாறாக தரிகெட்டு ஓடத்தொடங்கினால் இந்த இழிவான விளம்பரங்களை அனுமதிக்கின்ற பெரியவர்கள் குற்றவாளிகளாகிறார்கள் என்பது உண்மை. விசத்தை விதைக்க உரிமை கொடுக்கிறார்கள் என்பது சத்தியம். உலகளவில் நமது நாடு கட்டுக்கோப்பான பாரம்பரியம் மிக்க நாடு, கலாச்சாரம் மிகுந்த ஒழுக்க நெறியுடையோர் வாழ்கின்ற நாடு என்ற பெயர் இன்னமும் உண்டு. சீர்கேடுகள் பல இருந்தாலும். அந்தச் சீர்கேடுகள் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிப்பவை. ஆனால் இந்த விளம்பர உத்தியானது நேரடியாக புதைக்குள் சொருகும் ஆபத்தைக் கொண்டது. இது உடனே எல்லோரையும் கேவல எண்ணங்கள் என்று எதை நாம் அறுவறுக்கத்தக்கது என ஒதுக்கினோமோ, அதை பலர் முன்னிலையில் படடவர்த்தனமாக விரித்து வைத்து வியாபாரம் செய்யலாம் என்ற சுதந்திரத்தைத் தந்துவிடக்கூடியது. இது ஒரு தொடக்கமாகக்கொண்டு சற்றே நம் பாரதப்பிரதமர் அரைகூவல் விடும் “நாட்டின் நல்ல எதிர்காலத்திற்காக கனவு காணுங்கள்” என்று கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையினை அவமதிப்பிற்கு ஆட்படுவதாகவும் இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே இதைப்பற்றியான சம்பாசனை அதிகரிக்கின்ற நிலையில் நிச்சயம் இது வேறுஎங்கோ மீட்கமுடியாத ஒரு இருளுக்கு இட்டுச் சென்றுவிடும். இது தொடருமானால் அடுத்து வருபவர்கள் இதைவிட இன்னும் கொச்சையான விசயங்களை முன்வைக்க தயங்கமாட்டார்கள். அவர்களைக் கட்டுப்படுத்தவும் முடியாது. எல்லோரும் இதையே முன்னுதாரணமாக காட்டுவார்கள்.

வேதனையாக உள்ளது.

பள்ளி ஆசிரியனான எனக்கு, இந்த விளம்பரத்தின் விளைவு எப்படி இருக்குமோ என்று யோசிக்கையில் அச்சமாக உள்ளது.

கேட்கலாம். இதையேன் கேவலமானதாக எடுத்துக்கொள்கிறீர்கள் ? இதையேன் நல்ல விதமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இதில் எந்த வித அசிங்கங்களும் இல்லையே. அவள் குளித்துவிட்டு வருகிறாள். இவன் அவளது கையைப் பிடித்து இழுத்து sunday ‘ன்னா இரண்டு- எனச் சொல்கிறான். எதற்குச் சொல்கிறான் என்று அவனுக்குத் தான் தெரியும். அல்லது அவன் என்ன நினைத்து சொன்னான் என்பது பின்வரும் விளம்பரங்களில் நீங்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். நல்லது என நினைத்தால் நல்லது தெரியும். தவறான பார்வையோடு பார்த்தால் தவறானதாகத் தெரியும்….,

என எப்படி வேண்டுமானாலும் சமாதானம் சொல்லலாம். ஆனால் உண்மை என்ற ஒன்று உண்டு. அந்த விளம்பரப்பலகைக்குக் காரணமானவர்களுக்குத் தெரியும். அப்படித் தெரியாவிட்டால் அது அபத்தம். இன்ன விளைவை ஏற்படுத்தி இதை நோக்கி அனைவரது பார்வையையும் எண்ணத்தை வசப்படுத்தி பின் வரும் விளம்பரத்தில் என்ன பொருளுக்காக விளம்பரப்படுத்தப்பட்டது என்று விளக்கப்படலாம். ஆனால் இப்போதைக்கு என்னப் பொருளுக்காக இது என்ற அறிவிப்பு இல்லாத நிலையில் இதன் அர்த்தம் ? இதன் விளைவு ?

எந்தவிதப்பொருளாக இருந்தாலும் இதுபோன்ற உத்திகள் தவறான பாதைக்கு சமூகத்தை இட்டுச் செல்ல வல்லது என்பதுதான் சத்தியம்.

தவறு செய்பவர்கள் அனைவரும் தவறை நோக்கி ஓடிச்சென்று விழுந்து அடிப்பட்டு அழிபவர்கள். அதனால் தானோ என்னவோ யாருக்கு தவறு செய்யும் ஆர்வம் அதிகமிருக்கிறதோ தவறு செய்கிறார்கள். உதாரணத்திற்கு, தன்னையே அழித்துக்கொள்ளும் அழிவுகளான போதைப்பொருட்களுக்கு அடிமை ஆவது, விலைமாதர்களிடம் சென்று சீரழிவது போன்ற அனைத்தையும் சொல்லலாம். அவையெல்லாம் ஒரு ஓரத்தில் ஒழுக்கத்திற்கு பயந்து ஒளிந்து நடத்துகின்றன வியாபாரத்தை. இதுவே வழியில் போவோர் வருவோருக்கு இலவசமாக போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுமானால் சீரழியும் நம் சமூகத்தினரின் எண்ணிக்கையை யோசித்துப்பார்க்க வேண்டும். ஒரு அசிங்கமான படத்தையோ அல்லது அடிதடி படத்தையோ பார்க்க விருப்பமுள்ளவர்கள் அந்தந்த தியேட்டருக்குச்சென்று பார்ப்பார்கள். அவர்கள் தேடும் அனைத்தும் தெருவில் எப்போதும் கிடைத்தால் ? இதில் தான் நம் கலாச்சாரத்தின் சூட்சமம் இருக்கிறது. பலதரப்பட்ட வயதுடையவர்கள் பொது வழியில் வலம் வருகிறார்கள். ஆனால் அவரவர்க்குரிய வரம்புகளுடன் தம் தேவைகளை வரையறுத்துக்கொண்டு இயங்குகிறார்கள். அந்த வரம்புகளில் பெரும்பாலானவை ரகசியமாக காக்கப்படுகிறது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல்வேறு நிலைப்பாடுகள் ஒவ்வொரு வயது வித்தியாசங்களிலும் இருக்கிறது. குழந்தை, சிறுவன் அல்லது சிறுமி, இளைஞன், இளம்பெண், மணமானவன், மணமானவள், நடுத்தர வயதினர், வயோதிகர் என பல பகுதிகள். இதில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வாழ்க்கை நெறி இருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான ரகசியங்கள் காக்கப்படுகிறது. இவர் அவருக்கும் அவர் இவருக்கும் என. எல்லாம் பட்டவர்த்தனமாக நடுத்தெருவில் விரிக்கப்படுமானால் அந்த சிதைவின் கோர நிலையில் எந்தவொரு அமைதியோ நிதானமோ யாருக்கும் கிடைக்காது. இது காலங்காலமாக தொடர்ந்து அனுபவித்து அனுபவித்து பக்குவப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறி. அதை குலைக்க வேண்டாம். இதுபோன்ற ஒரு நாளைக்கு இரண்டு முறை என்னும் வாசகங்களாலும், அதனை தெளிவாக வெளிப்படுத்தும் படங்களாலும்.

விளம்பரம் எல்லோரது பார்வையிலும் படுவது. வலியப்படுவது. யாரும் பார்க்காமல் அதைக்கடந்து செல்ல முடியாது. எல்லோரும் பார்க்க வேண்டுமென்ற நோக்கத்திற்காகத்தான் வைக்கப்படுகிறது. அதனால் அதந்த விளம்பரப்பலகைகள் என்னவிதமான கருத்தோடு மக்களின் பார்வைக்குப்பட வேண்டும் என்பதை பார்க்கும் பெரியவர்கள் தாம் தீர்மானிக்க வேண்டும்.

நாம் வாழும் சமூகம் நல்ல ஒழுக்கத்தோடும், ஆரோக்கியத்தோடும், நாட்டின் மீது கலங்கம் ஏற்படா வண்ணம் கலாச்சாரத்தை பேணியும் காத்தும் இருக்க ஒவ்வொரு குடிமகனும் உழைக்கவேண்டும். என்ன விதமான தொழிலாக இருந்தாலும். அதில் நாட்டுப்பற்று மிக அவசியம். நாட்டின் எதிர்காலத்தின் மீதான அக்கரை வேண்டும். நாடு நான் வாழும் விதத்திலும் அதே சமயம் சமூகத்தோடான என் தொடர்பில் நேர்மையிலும் இருக்கிறது.

யாராவது ஒருவர் எங்காவது ஒரு தவறு செய்தால் அவரைத் திருத்தி நல்ல வழிக்குக் கொண்டு அவரோடு சேர்ந்து உழைத்து மேலும் உள்ள சிக்கல்களை சரிசெய்ய முனைவதே நாம் நம் நாட்டிற்கு ஆற்றும் புனிதமான கடமையாகக் கருதுகிறேன். நாடு என்பது வளர்ந்து பின் மனித குலம் அனைத்திற்கும் என்று வளரலாம். ஆகையில் இதுபோன்ற ஆபாச விசயங்களை வேரோடு களைந்துவிட்டு நல்லவிசயங்களை நல்ல முறையில் மக்களுக்குக் கொண்டு செல்ல முயற்சிப்போம்.

இந்த ஆதங்கம் எதற்கென்றால் என் வீட்டிற்கு வரும் ஒரு சிறுமி இந்த விளம்பரப்பலகைப் பர்த்துவிட்டு என் மனைவியிடம் “sunday ‘ன்னா இரண்டு”ங்கிறாங்களே அதற்கு அர்த்தம் என்ன என்று கேட்டிருக்கிறாள். நன்றாக படிக்கும் பெண். ஒழுக்கமான பெண். இந்தக் கேள்வியையே இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கேட்டுவருகிறாள். அவளுக்கு அர்த்தம் வேண்டும். அவள் எல்லாவற்றையும் கற்கும் பருவத்தில் இருக்கிறாள். பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் என் மனைவியோ தன் இயலாமை என்னிடம் சொல்கிறாள், இன்னதிற்குத்தான் அவர்கள் அப்படி எழுதியிருக்கிறார்கள் என்று அவளுக்கு தெரிந்திருந்தாலும், என்னிடம் அப்படி நேரடியாகச் சொல்லக்கூச்சப்படும் என் மனைவி. அவளுக்கு நம் கலாச்சாரம் தடுக்கிறது. வெளிநாட்டுப்பாடங்களில் காணப்படும் குடும்பத்தோடு குடிப்பதையும், அசிங்கமாக உடையணிந்து பொதுமக்கள் கூடும் இடங்களில் உலவுவதும் நடுத்தெருவில் காதலன் காதலி முத்தமிட்டுக்கொள்வதும் போன்ற எல்லாம் நமக்கு நம் வாழ்க்கை முறைக்கு முரணானவை. ஆனால் இதையே தொடர்ந்து நமது மக்களுக்குக் கொடுப்போமானால்…. இதை நியாயப்படுத்தி விளம்படுத்தி அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவோமானால்…. யோசித்துப்பாருங்கள், நம் நாட்டின் சிதைவுறப்போகும் உருவத்தை. நம் கலாச்சாரத்தின் மதிப்பை. இப்போதெல்லாம் வெளிநாட்டவர்கள் தம் தவறான வாழ்க்கைமுறையை உணர்ந்து நமது கலாச்சாரத்தோடு இணைந்து வாழ இங்கே வருகிறார்கள். இங்கேயோ, அவர்களது கேவலங்களை நமது மக்களுக்கு ஊட்ட முயற்சிக்கிறோம்.

பள்ளிச் சென்றால் என் மாணவன் இதைப் பற்றி கேட்டுவிடுவானோ என்ற பயத்தில் இருக்கிறேன்.

அரியநாச்சி, பாண்டிச்சேரி – பள்ளி ஆசிரியர், 02-8-05.

ariyanachi67@yahoo.com

Series Navigation

அரியநாச்சி

அரியநாச்சி