தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் கலைவிழா

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

கருணா ஆனந்தன்


தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் கலைவிழாவின் இரண்டாம் நாள் யூலை மாதம் 3ம் திகதி சனிக்கிழமை Chinese Cultural Centre ல் இதுவரை இருந்த இருக்கும் பழைய மாணவர் சங்கத் தலைவர்களின் மங்கல விளக்கேற்றலுடன் வழமை போல் நேரத்துக்கு ஆரம்பமானது. தேசியகீதம்மும் கல்லூரிக்கீதமும் நெகிழ்ச்சியாக வேறு வகையில் ஒலித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கம்சத்வதனி சிங்கராஜாவின் மாணவர்கள் வாத்தியப் பிருந்தத்தை மிக அழகாக வழங்கினர். ஆனால் இது ஒரு நூற்றாண்டு விழா, கம்சத்வதனி ஏனைய மகாஜனன்களுடன் சேர்ந்து ஒரு வாத்தியப் பிருந்தத்தை கொடுத்திருந்திருக்கக் கூடாதா அதில் மகாஜனன்களின் பாடல்கள் ஒலித்திருக்கலாமே என ஆதங்கம் எழுந்தது.

மகாஜனா கடந்து வந்த காலம் பற்றிய விவரணச் சித்திரம் திவ்வியராஜனின் இனிய குரலில் நெஞ்சைத் தொட்டது. அவர் மகாஜனன் ஆக இல்லாவிட்டாலும் தான் ஒரு பண்பட்ட நடிகர் என்பதை குரலில் கொண்டு வந்த உணர்ச்சிமூலம் அழகாகக் காட்டினார்

தரானா என்பதன் பொருள் விளங்கவில்லை அது தான் அடுத்து நிகழ்ந்த நாட்டியத்தின் பெயர். நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் குரல் நன்றாக இருந்தது. ஆனால் வெறுமன பெயர் வாசிப்பது மட்டும் செய்யாமல் நிகழ்ச்சி பற்றிய குறிப்புக் கொடுத்து நிகழ்ச்சிக்கு உயிர் ஊட்டியிருந்தால் ரசிக்கக் கூடியதாக இருந்திருக்கும்.

தொடர்ந்து தலைவர் தன் தலைமையுரையில் விழாவினை ஆரம்பித்து வைத்த கலைவிழா இணைப்பாளர் சொன்ன அத்தனையும் மீட்டியது மட்டுமன்றி விவரணச்சித்திரத்தில் கல்லூரி பற்றிய சொன்ன அத்தனையையும் மீள ஒப்பித்தார். பின்னர் நூற்றாண்டுச் சிறப்புரையை மகாஜனா முன்னாள் அதிபர்களில் ஒருவரான திரு. கனகசபாபதி அவர்கள் நிகழ்த்தினார். அதை நூற்றாண்டுச் சிறப்புரை என்று சொல்வதை விட கனடாப் பழையமாணவர் சங்கம் பற்றிய பாராட்டுரை என்று சொல்லலாம்.

தோற்ற மாயை என்ற நாடகம் இளையபாரதியின் இனிய குரலுடனும் நல்ல தமிழுடனும் ரசிகர்களை தம் பக்கம் இழுத்து ஆரம்பித்த மாதிரி திவ்விய ராஜனின் இனிய குரலில் வந்த பாடலுடன் நன்கு முடிவடைந்தது. ஆனால் இடையில் எழுதியவர் தனது எழுத்தை மீள வாசித்துப் பார்த்தாரா எனக் கேள்வி எழுப்பும் வண்ணம் உரையாடல்கள் அமைந்திருந்தன. உதாரணத்துக்கு நல்ல பணக்காரர், காசின் மேல் வாழ்பவர்கள் என நாடகம் ஆரம்பிக்கிறது. பின் பிள்ளையின் சாமத்தியச் சடங்குப் பற்றிக் கதைக்கும் போது அதற்கு செலவழிக்கும் 25 ஆயிரத்தை உழைக்க அவர்கள் பல மாதங்கள் செலவிட வேண்டுமே என்றும் OSAP எடுக்காமல் அந்தக் காசுக்கு மேற்படிப்பு படிக்கலாம் என்றும் பிள்ளை புத்திமதி சொல்வதாக வருவது எவ்விதப் பொருத்தமுமின்றி ஒலித்தது. அதே போல் அடுத்ததாக வந்த மனசுக்கு மனசு நாடகமும் முன்னுக்கு பின் முரணான பல உரையாடல்களால் ( பிள்ளை உடுப்பு கூட அம்மாவின் தெரிவு என மனசு நோகிறது பின் அம்மா பிள்ளையை இது என்ன உடுப்பு என ஏசுகிறா) சொல்ல வந்த செய்தியை சொல்லத் தவறிவிட்டது. இறுதியாக வந்த யாருக்காக என்ற நாடகம் என்ன நடக்கப் போகுது என எதிர்வு கூறக்கூடிய வகையில் அமைந்திருந்தது மட்டுமன்றி தொலைக்காட்சியின் முன் இருந்து நாடகம் பார்த்து வீணாக நேரம் விரயம் செய்யும் அம்மா பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்கத் தீர்வு அதை நிறுத்துவதல்ல அவ பார்க்கும் வேலையை நிறுத்துவது தான் என்ற ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத தீர்வை முன் வைத்தது. ஆனால் சிறுவர்களின் நடிப்பு நன்றாக இருந்தது.

தேவகி குலோத்துங்க பாரதியின் முகிலின் குமுறல் நாட்டியம் ஒரு புது முயற்சி. பின்னால் திரையில் மழை கொட்ட முன்னுக்கு நடனம் பார்க்க இதமாக இருந்தது.

ஆனால் அன்றைய நாளில் துரையப்பா பிள்ளை, மகாகவி, சேரன் போன்ற பல பெருங்கவிஞர்களின் கவிதைகள், வர்ணராமேஸ்வரன், செந்தில்செல்வி போன்றவர்களின் பாடல், ஆடல்கள், கல்லூரிக்கு புகழ் சேர்த்த மகாஜனங்கள் பற்றிய நினைவுகள் பதியப்படும், பகிரப்படும் நூற்றாண்டு வரை கல்லூரியை வளர்த்த ஆசிரியர்களுக்கு கெளரவம் கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தவிடு பொடியானது.

நிர்வாக சபை இரண்டு நாள் என்று கலைவிழா என கால அளவைக் கூட்டி கலைவிழாவின் தரத்தை கோட்டை போக விட்டுவிட்டது என மனதுக்கு மிக விசனமாக இருந்த்து. ஒரு நீண்ட வார விடுமுறையின் போது கலைவிழாவை வைத்து மண்டபத்தின் பெரும் பகுதியை காலியாக வைத்துக் கொண்டு அவர்கள் நடத்திய நிகழ்ச்சிகளும் சோடை போகவில்லை. நன்றியுரையில் அலுப்புத் தரும் வகையில் தமக்குத் தாமே நீண்ட நன்றியுரையும் சொல்லிக் கொண்டார்கள். அத்துடன் அவர்கள் நடத்திய போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் கெளரவத்தையும் தாமே எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் செலவழித்த நேரத்துக்கும் பணத்துக்கும் பயன் உண்டா என்பது தான் இப்போதைய மகாஜனா மேல் காதல் கொண்ட அத்தனை பேரினதும் கேள்வியாக உள்ளது,

இரண்டு நாளும் வைக்க நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் ஏற்பட்டாதால் போலும் ஒரிரு நிகழ்ச்சிகளைத் தவிர யாவும் இரண்டு நாட்களும் அதே நிகழ்ச்சிகள் தான். ஒரு பிள்ளைக்கு ஒரு நாளும் மற்றப் பிள்ளைக்கு மறுநாளும் பரிசளிப்பு இருந்ததால் இரண்டு நாளும் வந்த மகாஜனன் அல்லாத ஒருவர் நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு நேற்றுக் கொடுத்த award ஐ திருப்பி வாங்கிவைத்து விட்டு இன்றும் கொடுக்கிறார்களா எனக் கேட்டார்.

எப்போதும் மண்டபம் நிறைந்த ரசிகர்களுடன் மகாஜனா அன்னையைப் பெருமிதம் அடையச் செய்யும் வகையில் மகாஜனன்களின் சிருஷ்டிப்பில் மகாஜனாக் கலைவிழா உயர்ந்து நிற்பது தான் வழமை. அந்த எதிர்பார்ப்பில் இவ்வருடக் கலைவிழா, மகாஜனாவின் நூற்றாண்டு என்பதன் பூரிப்பு, நெகிழ்வு எல்லாம் நிறைந்த ஒரு மகுடம் வைக்கும் விழாவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் போன என் போன்ற மகாஜனன்களுக்கு அது மனம் நோகும் விழாவாக இருந்தது கவலைக்குரிய விடயமே. October ல் தான் நூற்றாண்டு நிறைவு வருகின்றது. அதையாவது உண்மையான நூற்றாண்டு விழாவாக நிகழ்த்த இனி வரப்போகும் நிர்வாக சபை முயற்சிக்க வேண்டும் என்ற எமது உண்மையான ஆதங்கம் போய்ச் சேரவேண்டிய எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் என்பது தான் இந்தக் கட்டுரையின் முக்கியமான நோக்கமாகும். அதை விளங்கி செயற்பாட்டாளர்கள் செயற்படுவார்கள் என எதிர்பார்ப்போம்.

கருணா ஆனந்தன்

Series Navigation

author

கருணா ஆனந்தன்

கருணா ஆனந்தன்

Similar Posts