ஆபிதீனின் கதை, “அங்கண ஒண்ணு, இங்கண ஒண்ணு”

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

நேசகுமார்


ஆபிதீனின் கதை, “அங்கண ஒண்ணு, இங்கண ஒண்ணு” மிகவும் அற்புதமாக இருந்தது. நடு நடுவே நிறையவே சிரித்தேன்.

விமர்சிக்க வேண்டும் என்று முனைந்து பார்த்தால், அதில் தெரியும் மதம் பற்றிய அப்ஸஷனை சுட்டிக் காட்டலாம். ஆபிதீனிடம் மதக்காழ்ப்பு எதுவும் தெரியவில்லை என்றாலும் மதத்தை முழுமையாக மறுத்து இவர்களால் வெளியே வரவும் முடியவில்லை என்பதும் புரிகிறது. இவர்களின் வாழ்வு முழுவதுமே இஸ்லாம் என்ற மதத்தை சுற்றிச் சுற்றியே வருகிறது. முஸ்லீம் கெட்டோ(ghetto) எதுவும் தமிழ்நாட்டில் இல்லை என்று பல வருடங்களுக்கு முன்பு நான் சந்திக்க நேர்ந்த பாகிஸ்தானியிடம் பெருமையாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆபிதீனின் எழுத்துக்களில் தெரிவது தொடர்ந்து இந்த கெட்டோ மனப்பான்மைதான்.

அவரது படைப்புகளை படிக்கும்போது நாகூர் என்ற கெட்டோ முழுமையாக, சுவையாக கண் முன் வருகிறது. நாகூர் மட்டும் கெட்டோவாக இல்லை. இவர்கள் பெயர்ந்து வாழ்வின் பல முக்கியமான பகுதிகளை செலவிடும் அரபுநாடுகளிலும் கெட்டோக்களில் தான் வாழ்கிறார்கள். ஆபிதீனின் எழுத்தை பார்க்கும்போது சிற்சில சமயம் நகைச்சுவையையும் மீறி சோகவுணர்வே மனதை நிறைக்கிறது. இவற்றை பொது சமூகத்துக்கு முன்பு பார்வைக்கு வைக்கும் ஆபிதீனின் எழுத்துக்கள், அதிலும் சுவை மிகுந்த இது போன்ற படைப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமானவை என்பதில் ஐயமில்லை.

அருமையாக எழுதியிருக்கும் ஆபிதீனுக்கும், அதை பிரசுரித்த திண்ணைக்கும், சென்ற திண்ணையிதழில் இந்தக் கதையை சுட்டிக் காட்டிய ஜெயமோகனுக்கும் நன்றி.

ஆபிதீனுடைய படைப்புகள் பிரசுரமாயிருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி எதாவது தொகுப்பு வந்திருந்தால், மீள் பிரசுரத்தின் போது, அல்லது எதிர்காலத்தில் வருவதாயிருந்தால், அவர் அத்துடன் நாகூர் நகரத்து மேப், அதில் உள்ள (அவர் படைப்புகளில் வரும் ) தெருக்கள், அதில் சொல்லப்பட்டிருக்கும் மனிதர்களது வீடுகள், வீடுகள் தெருக்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் போன்றவை சேர்த்து பதிப்பிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

அன்புடன்,

நேசகுமார்.

Series Navigation

author

நேச குமார்

நேச குமார்

Similar Posts