சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி. மூன்று முதல் பரிசுகள்- சிங்கப்பூருக்கு ஒரு வாரம் சுற்ற

0 minutes, 8 seconds Read
This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

குழலி


உலக அளவில் தமிழ் மொழியை போன்ற பழமையான செம்மொழிகள் மொழித் திரிபாலும், கிளைத்ததாலும் இன்று பயன்படுத்த ஆளின்றி வழக்கொழிந்து போய்விட்டன, ஆனால் தமிழ் மொழி மட்டும் பல்லாயிரம் ஆண்டுகளை கடந்தும் இளமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது, தமிழ் ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிவியல் மற்றும் இலக்கிய வளர்ச்சியை ஏற்றுக்கொண்டு காலத்திற்கேற்று மாற்றிக்கொண்டும் வளர்கிறது. ஓலைச்சுவடி காலத்திலிருந்து தாள் அச்சு காலத்திற்கு மாறும் போது அச்சு கோர்ப்பிற்கு ஏற்றவாறு பெரியார் அறிவுறுத்திய எழுத்து சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டு வளர்ந்தது தமிழ், இந்திய மொழிகளிலே மிகுதியான அளவில் நாளிதழ்கள்,வார இதழ்கள், மாத இதழ்கள் வெளியிடப்படுகிறது என்ற பெருமையுடன் கோலோச்சுகிறது தமிழ்.

இன்றைய உலகோ இணைய உலகு, “உள்ளங்கையில் உலகம்” என உலகமே இணையத்தால் சுருங்கிவிட்டது, இணையம்(Internet) என்றாலே மின் அஞ்சல்(E-mail) அனுப்புவது, பலரோடும் உரையாடுவது(chat) மற்றும் காலத்தை போக்குவது என்பதற்காக மட்டுமே என்ற கருத்துகள் முன்பிருந்தது, தற்போது இணையம் இவைகளையெல்லாம் தாண்டி பல வியப்புகளை நிகழ்த்திக் கொண்டுள்ளது, பல்வேறு தகவல்களைத் தேடுவது, உலகளாவிய அளவில் வெளிவரும் கட்டுரைகளை படித்து தங்களுடைய துறை சார்ந்த அறிவை பெருக்கிக்கொள்வது என வியக்க வைக்கிறது இணைய உலகம்.

ஆங்கிலத்தில் வெப் ப்ளாக்(Weblog சுருக்கமாக blog) எனப்படும் வலைப் பக்கங்கள் தமிழிலும் எழுத்தப்பட்டு பரவலாக அறியப்பட்டு வருகிறது. இந்திய மொழிகளில் தமிழில் எழுதப்படும் வலைப் பக்கங்களின் எண்ணிக்கை முதலிடத்தில் இருக்கிறது. இந்த வலைப் பக்கங்களில் கதை, கவிதை, கட்டுரை, அரசியல், சமூகம், திரைப்படம், சமையல், ஆன்மீகம், விளையாட்டு, துறை சார்ந்தவைகள், நகைச்சுவை, அனுபவம், மருத்துவம் என எதை வேண்டுமானாலும் எழுதலாம், தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் இந்த வலைப்பக்கங்களில் எழுத கணிணி அறிவு மிகுதியாக இருக்க வேண்டுமென்ற தேவை இல்லை, அது போன்றே கணினி பயன்படுத்தும் எவருமும் தமிழில் தட்டச்சுவதும்(typing) மிக எளிது, யார் வேண்டுமானாலும் இந்த வலைப்பக்கங்களில் மிக எளிதாக தமிழில் எழுதலாம், வெளி இடலாம், படிக்கலாம், இதன் மூல எழுத்து திறமை மேம்படுவதுடன் பல்லாயிரக் கணக்கான வாசிப்பாளர்களைப் பெற இயலும்.

இயல்பாகவே தமிழர்கள் கலை, இலக்கியம் என்று வாழ்ந்து வருபவர்கள், அதனால் தான் அதன் இன்றைய நீட்சியான திரைப்படங்களிலும் நவீன இலக்கியங்களிலும் ஆர்வம் மிக்கவர்களாக உள்ளனர். தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சிக்கு நாளிதழ்கள், சிற்றிதழ்கள், வார, மாத இதழ்கள் பங்காற்றி வருவது போலவே, தற்போதைய இணைய உலகில் வலைப்பக்கங்கள் அந்தப் பணியைச் செய்து வருகின்றன. எழுத்தார்வமும், தமிழில் தட்டச்சுவதற்கு பொறுமையும் உடையவர்கள் தங்களுடைய கருத்துக்களமாக வலைப்பக்கங்களைப் பயன்படுத்திவருகிறார்கள். இவர்களின் எழுத்துக்கள் தங்கள் அறிந்தவற்றிலிருந்து ஆராய்ந்து சொந்தக் கருத்துக்களையும் சேர்த்த எந்த ஒரு தடைகளும் இல்லாமல் வலைப்பதிவுகளில் எழுதுவதால் மாறுபட்ட இலக்கிய ஊடகமாக நன்று வளர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி எழுதப்படும் பல்வேறு கருத்து ஆக்கங்களுக்கு பிறப் பதிவர்களுடன் விவாதங்கள், எதிர்கருத்துகள், புதிய தகவல்கள் ஆகியவையும் சேருவதால் வலைப்பதிவுகள் குழுச் சார்பற்ற மாற்று இலக்கிய ஊடகமாகவும் பெருவாரியான வலைப்பக்கங்கள் வலைப்பதிவாளர்கள் அல்லாத வாசகர்கள் பலரால் விரும்பி வாசிக்கப்படுகிறது,

தமிழில் இருக்கும் இம்மாதிரியான ஆயிரக்கணக்கான வலைப்பக்கங்களை ஒவ்வொருவரும் நினைவில் வைத்தோ குறித்து வைத்தோ நாள்தோறும் சென்று பார்ப்பது கடினமான ஒன்று, இவ்வகையான ஆயிரக்கணக்கான தமிழ் வலைப்பக்கங்களை இணைத்து ஒவ்வொரு முறை தனிப்பட்டவர்கள் தங்கள் வலைப்பக்கத்தில் ஏதேனும் எழுதி புதுப்பிக்கும் போது அவைகளை திரட்டிக்கொண்டு வந்து முகப்பில் காண்பிக்கும் தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஒரு இணைய தளம் தமிழ்வெளி.காம் (www.tamilveli.com), தமிழ்வெளி.காம்(www.tamilveli.com) வலைப்பதிவர்களின் எழுத்துகளை பரவலாக வாசகர்களிடம் சென்றடைய வைக்கும் அதே நேரத்தில் பல்லாயிரம் வலைப்பதிவுகளை ஒரே இடத்தில் படிக்க இயலும் ஒரு வலைவாசலாகவும் செயல்படுகின்றது. தமிழ்வெளி.காம் தொடர்ச்சியாக வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை உருவாக்கி செயல்பட்டு வருகின்றது.

வலைப் பக்கத்தில் பதிவர்களின் எழுத்துக்களைத் தவிர்த்து, அதன் மூலம் பழகிய பதிவர்களுடன் இணைந்து நட்புகளை வளர்ப்பதுடன், சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய தனிமனித கடமைகளை ஒன்றிணைந்து ஆற்றுகிறார்கள். சாதி/சமய/மத வேறுபாடுகளை தள்ளிவைத்துவிட்டு பதிவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்தந்த பகுதிகளில் தங்களால் ஆன பல்வேறு சமுதாயப் பணிகளையும் இலக்கிய மேன்மைக்கு முடிந்த அளவில் தங்கள் பங்களிப்பையும் செய்துவருகிறார்கள்.

சிங்கப்பூரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்பதிவர்கள் இணைந்து இந்தியவை மையப்படுத்திய பல்வேறு பிரச்சனைகளின் தளங்களை கட்டுரைகளின் மூலம் பெற்று, அவற்றை சமூகத்தின் முன் வைத்து அதற்கான தீர்வுகளை பெறமுடியும் என்று நம்புவதால், சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம்(www.tamilveli.com) சார்பில் ‘மணற்கேணி – 2009’ என்கிற என்ற ஒரு கருத்தாய்வுப் போட்டி “அரசியல் சமூகம்”, “தமிழ் இலக்கியம்”, “தமிழ் அறிவியல்” என்ற மூன்று பெரும் பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் பல தலைப்புகளில் நடை பெறுகின்றன. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தவும், அவர்களின் கட்டுரைகளை பல தளங்களில் எடுத்து செல்லவும் மேலும் சிறந்த மூன்று கட்டுரைகளைப் பாராட்டும் விதமாகவும் சிறந்த கட்டுரை எழுதியவர்களை சிங்கப்பூருக்கு ஒருவாரச் சுற்றுலாவிற்கு விமானப் பயணச் சீட்டுடன் தங்குமிடம் மற்றும் இதர பொதுச் செலவுகள் பரிசாக அளிக்கப்படுகிறது. மேலும் சிங்கப்பூரில் தமிழ் சார்ந்த செயல்பாடுகளை தெரிந்து கொள்ளவும், தமிழ் அறிஞர்களுடனான அறிமுகப்படுத்தலும் கலந்துரையாடலும் நடைபெறும்.

சிங்கப்பூர் பதிவர்கள் தமிழ்வெளி.காம்(www.tamilveli.com) கருத்தாய்வு போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், ஒருவரே மூன்று பிரிவுகளிலும் உள்ள அனைத்து தலைப்புகளிலும் கலந்து கொள்ளலாம், போட்டிக்கு தங்கள் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய நிறைவு நாள் 30-08-2009 (ஆகஸ்ட் 30, 2009) போட்டி தொடர்பான விதிமுறைகள், போட்டி தலைப்புகள் போன்றவைகளை www.sgtamilbloggers.com மற்றும் www.tamilveli.com இணைய தளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Series Navigation

author

குழலி

குழலி

Similar Posts