இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 1

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

நேசகுமார்


இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும்

கடந்த வார திண்ணையில் எனக்கு பதிலளித்து எழுதியிருந்த அப்துல் கையூம்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905129&format=html), நாகூர் ரூமி(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905126&format=html), ஹமீது ஜாஃபர், வஹ்ஹாபி ஆகியோரின் கடிதங்களைப் பார்த்தேன். எந்த வித்தியாசமும் இல்லை, அதே பதில்கள் – சற்றும் யோசிக்காமல் சொல்லும் பதில்கள்,வாதங்கள், கோபங்கள்…. உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்கள் இப்படியே சிந்திக்க, பேச, எழுத முயல்கிறார்கள். இது சமயத்தில் வியப்பாகக் கூட இருக்கிறது. ஒட்டு மொத்த சமூகமே எவ்வித சுயவிமர்சனமும் இல்லாமல், அல்லது அப்படி விமர்சனங்கள் எழும்போது கூட இப்படி அதை மிகக்குறுகிய வரையறைக்குள்ளே வைத்துவிட்டு இருக்க முடியுமா என்று. ஆனால், துரதிர்ஷ்டவசமாக உண்மையும் அதுதான். இன்றுவரை இஸ்லாமிய சமூகத்தினுள் ஒரு பெரியார், ஒரு பாரதி, ஒரு விவேகானந்தர் எழ முடியவில்லை. சுய சிந்தனையுள்ளவர்கள் எல்லாம் முர்தாதாக, இனத் துரோகியாக, apostate ஆக பார்க்கப் படுகின்றனர். இப்படி விமர்சனங்கள் எல்லாம் முடக்கப்பட்டு விட்ட நிலையில், விமர்சகர்கள் மிரட்டப்பட்டு அமைதிப்படுத்தப் பட்டுவிடும் நிலையில் ஒரு சமூகம் என்னவாகும்? விடை – வன்முறையும், மூடநம்பிக்கையும், காட்டுமிராண்டித்தனமும் பெருகிப் போகும். அதைத்தான் இன்று பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஈராக்கிலும் காண்கிறோம். இஸ்லாத்தின் வருகைக்கு முன்பு கல்வியும், பண்பும், கலாச்சாரமும் உயர்ந்திருந்த பிரதேசங்கள் இவை.

***

இஸ்லாமிய சமூகம் என்றில்லை, ஒரு அளவில் எல்லா மதங்களுமே இப்படித்தான் இருக்கின்றன. இஸ்லாத்தைப் பற்றி துவங்கிய எமது ஆய்வு அதன் அடியொற்றி முன்னேறிச் சென்று பிற ஆபிரகாமிய மதங்களிலும் இந்த traits இருப்பதை கண்டு அதிர்ந்தது. ஆம், யூத மதத்தில் எதோ ஒரு காலகட்டத்தில் பன்மைத்தன்மை அழிக்கப்பட்டு ஏகத்துவ இருள் பரவியது. அது அடிநாதமாய் கிறிஸ்துவத்திலும் தொடர்ந்தது. இஸ்லாத்தில் உச்சத்தை எட்டியது.

இந்த ஆய்வு இத்துடன் நின்றுவிடவில்லை. இதைத் தொடர்ந்து இந்து மதத்திலும் இதன் வேர்கள் ஆங்காங்கே இருந்ததைக் கண்டோம். இங்கே பன்மையில் நான் குறிப்பிடுவதற்கு ஒரு காரணமுண்டு. ஆரம்பம் முதலே நான் ஒரு குழுவுடனேயே இந்த ஆய்வை, இந்த உள்நோக்கிய பயணத்தை மேற்கொண்டேன். இதில் ஒவ்வொரு கட்டத்திலும் எனது பார்வைகள் கூட இருந்த நண்பர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி, பின்பு மெல்ல அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு கொண்டுவந்தது.

முழுவதுமாக நான் எனது மதம் கற்றுவித்தவற்றிலிருந்து வெளிவந்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. முயல்கிறேன், துவல்கிறேன், சந்தேகம் கொள்கிறேன், முன்னகர முயல்கிறேன், சோர்ந்திருக்கும் சமயங்களில் பயிற்றுவிக்கப்பட்டவைகளை பிடித்துக்கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள, எனது பயணங்களுக்கு காரணம் கற்பிக்க முயல்கிறேன். முழுவதுமாக இலைகள் உதிராவிட்டாலும், அவற்றின் தன்மையை கவனிக்கும் பார்வை கூர்மை பெறுவதையும் உணர்கிறேன். இப்பார்வைகளினூடாக நான் முன்னகர்ந்திருப்பதையும் காண்கிறேன்.

மனித குலமே இப்படித்தான் செல்லும் என்று தோன்றுகிறது. முதலில் எந்த நம்பிக்கையாயினும் அதில் சந்தேகம் முளைக்கிறது. அடுத்த கட்டமாய் அது உடைபடும்போது அதிர்ச்சியை அளிக்கிறது. பின்பு சார்ந்திருக்கும் சமூகத்தைப் பொறுத்து சால்ஜாப்புகளையும், கோபத்தையும், வன்முறையையும் உருவாக்குகிறது. தனது நம்பிக்கைகளை தக்கவைத்துக்கொள்ள உள்ளும் புறமுமாக பெரும் சமர் செய்கிறது. கடைசியில் அது வேறு வழியின்றி மாற்றத்தை, அடுத்த நிலைக்கான முன்னேறுதலை ஏற்கிறது.

***

நான் இஸ்லாத்தின் பரவல் குறித்து எழுதியுள்ளதைக் கண்டு நாகூர் ரூமிக்கும் அவரையொத்தவர்களுக்கும் கோபம் வருகிறது – ஆனால், உண்மை என்னவோ நாகூர் ரூமி அவர்களின் கற்பனைகளுக்கு, நம்பிக்கைகளுக்கு மாறாகத்தான் இருக்கின்றது.

இஸ்லாத்தில் இல்லாத சூஃபியிஸம், பாரசீகத்தில் – இஸ்லாம் தன்னைவிட மேலான ஒரு கலாச்சாரத்தை எதிர்கொண்டபோது, அங்கு apostacy யாக, இஸ்லாத்துக்கு எதிரான புரட்சியாக, இந்தியத் தாக்கத்தால் தோன்றியது. அதனால் தான் இன்றும் அனேகமாக அனைத்து சூஃபி தரீக்காக்கள் அலியை தமது ஆதிகுருவாக கொள்கின்றன. அலியே சூஃபியின் இறை பயணத்தின் கதவை திறப்பவராக இருக்கின்றார். இதே அலி, இஸ்லாத்தின் ஆரம்ப நூறு ஆண்டுகள் வரை மசூதிகளில் வசைபாடப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது (பின்பு இரண்டாம் உமரின் காலத்தில் தான் இது நின்றது). அலி பற்றி கீழேயும் எழுதியுள்ளேன்.

அரபிகளின் இஸ்லாத்தை வேறு வழியின்றி ஏற்ற, அவர்களை விட அறிவிலும், ஞானத்திலும், ஆன்மீகத்திலும் மேம்பட்ட ஆனால் அரபிகளின் மூர்க்க – நயவஞ்சக தாக்குதலால் அரசியல் ரீதியாக தோல்வியுற்ற பாரசீகர்கள் இதை தமது உள்ளிருந்தே எதிர்க்கும் வழியாகக் கண்டனர். இஸ்லாத்தையும் மீறி ஆன்மீகமும், மேலான மனித உணர்வுகளும் சூஃபியிஸம் மூலம் தழைத்தன.

தன்னை சூஃபியிஸ ஆதரவாளராக காட்டிக்கொள்ளும் நாகூர் நண்பர்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் கண்ணில் படாமலே போவது ஆச்சர்யத்தையளிக்கவில்லை, ஏனெனில் ஒரு அளவில் இந்த கண்மூடிப்பார்வையை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.

***

இஸ்லாத்துக்கு வெளியிலிருந்து பார்க்கும் இன்னொரு உண்மை ரூமியவர்களுக்கு புலப்படாமல் போனதில் ஆச்சர்யமில்லை – அது ஒரே இஸ்லாம் உலகெங்கும் இல்லை என்பது. பிணங்களை புதைத்து வைத்து அவற்றை வணங்குவது இந்தியாவில், பாகிஸ்தானில், பங்களாதேஷில் பிரபலமான ஒன்று. பிரிவினை காலகட்டங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றிய கதைகள் எழுதிய சாதத் ஹஸன் மாண்டோவின் சிறுகதையொன்றில் ‘பல்லி பாபா’வின் தர்காஹ் பற்றி வரும். சிறுவயதில் ஒரு பல்லியை புதைத்து விளையாடும் சிறார் பின்னாளில் வந்து பார்க்கும்போது அது பல்லி பாபாவாக, பிரபல தர்காஹ்வாக எழும்பியிருப்பது கண்டு அதிர்ச்சியடையும் கதையது.

இந்த இஸ்லாமிய வழக்கம் இன்று சவுதியில், பிற அரபு நாடுகளில் இல்லை. அவர்கள் இதை இஸ்லாமாக பார்க்கவில்லை, குஃபார் – இறைமறுப்பாகத்தான் பார்க்கிறார்கள். அதனாலேயே தூய்மையான இஸ்லாத்தை பின்பற்ற முனைபவர்கள் பாகிஸ்தானிலும், ஈராக்கிலும்,இந்தியாவிலும் தர்காஹ்க்களில் குண்டு வைக்கின்றார்கள். ஏன், தமிழில் தேடிப்பார்த்தால், நாகூர் தர்காஹ்வை தகர்த்துவிட்டு அங்கே பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்று நாகூர் வஹ்ஹாபிகளே எழுதியிருப்பதைக் காணமுடியும். அஜ்மீரில்ரிந்து, பாகிஸ்தானின் ரஹ்மான் பாபா மசூதி வரை வஹ்ஹாபிகள் ஏற்கெனவே குண்டு வைத்து தகர்க்க முனைந்திருக்கிறார்கள்/தகர்த்திருக்கிறார்கள்.

***

இன்றைய இஸ்லாமிய சமூகம் மூன்று பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. மூன்றிற்குள்ளும் பல பிரிவுகள், பல குழுக்கள், சச்சரவுகள் இருக்கின்றன என்றாலும், மூன்றுவகை இஸ்லாம் இருப்பது உண்மை என்பது இன்று இஸ்லாமிய சமூகமே பொதுவாக ஏற்கும் ஒன்று. அவையாவன

(1) சுன்னி இஸ்லாம் – இதுவே பெரும்பாலோனோர் பின்பற்றும் இஸ்லாம். இதனுள் இருக்கும் முக்கிய குழு சூஃபியிஸத்தை ஏற்பது, ஆனால் அது தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையையும், நிலப்பரப்பையும் இழந்து வருகின்றது.

(2) தூய்மையான இஸ்லாத்தை பரப்ப முயல்வோர் – இதில் பெரிய குழு இன்று சலாஃபி/வஹ்ஹாபி என்று அறியப்படுகிறது

(3) ஷியா இஸ்லாம்.

இதில் கொஞ்சம் கொஞ்சமாக கடைசி இரண்டு இஸ்லாம்களும் முதல் இஸ்லாத்தை மென்று தின்று முன்னேறி வருகின்றன. இஸ்லாமிய உலகம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையையும், அதிகமதிகம் கிளறிவிட்டு அதன் மூலம் தம் பக்கம் ஆள் சேர்க்கவும், தமது ஆதிக்கத்தை விரிவுபடுத்தவும் முயல்கின்றன.

உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இன்று அதிகமாக பரவி வருவது இஸ்லாம் இல்லை – ஷியா இஸ்லாம் மற்றும் வஹ்ஹாபி இஸ்லாம். பாலஸ்தீனப்பிரச்சினை, ஈராக் பிரச்சினை, ஆப்கானிஸ்தான் என்று எல்லாவற்றையும் கையில் எடுத்திருப்பது இந்த இரண்டு குழுக்களில் ஒன்று அல்லது இரண்டுமே. பாலஸ்தீனப்பிரச்சினையை கையிலெடுத்து அதன் மூலம் ஈரான் தனது ஆதிக்கத்தை பாரிய அளவில் கடந்த சில ஆண்டுகளில் விரிவுபடுத்தியுள்ளது. வஹ்ஹாபி இஸ்லாத்தின் கோட்டைகளில் கூட தற்போது ஷியாக்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகின்றனர். ஷியாக்களின் அபரிதமான அரசியல் செல்வாக்கும், வளர்ச்சியும் பாரம்பரிய சுன்னி உலேமாக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.

தமிழ்நாட்டில் கூட வஹ்ஹாபிகள் மற்ற முஸ்லீம்களை காபிர்கள் என்று அழைப்பதையும், மண உறவுக்கு மறுப்பதையும் பற்றிய சர்ச்சைகள் உண்டு என்பது அனைவரும் அறிந்தவொன்றுதான். காபிர்களுடனான மண உறவே இஸ்லாத்தால் விலக்கப்பட்ட ஒன்று.

***

இந்து மதத்திலும் இன்று ஏற்பட்டிருக்கக் கூடிய பல மாற்றங்கள்/ சீர்திருத்தங்களுக்கு அவநம்பிக்கையாளர்களின், மதத்துக்குள்ளிருந்தாலும் மாற்றிச் சிந்தித்தவர்களின் முனைப்பே காரணம். தேவதாசி முறை, சதி, பெண்களுக்கு சம உரிமை மறுப்பு மற்றும் பல சீர்திருத்தங்கள் நம்பிக்கையாளர்களிடமிருந்து எழவில்லை, அக்கூட்டத்திற்கு வெளியே இருந்துதான் புறப்பட்டது.

இஸ்லாத்தில் இப்படிப்பட்ட அவநம்பிக்கையாளர்கள் முர்தாத்தாக பார்க்கப் படுவதால், அவர்கள் மீது ஏகப்பட்ட வன்முறை ஏவப்படுவதால் இன்று இஸ்லாமிய விமர்சனங்கள் அதிகமதிகமாக இஸ்லாத்துக்கு வெளியே இருந்தே புறப்படுகின்றன. தனிப்பட்ட அளவில் பல இஸ்லாமியர்கள் இதை அவ்வப்போது ஏற்றுக்கொண்டாலும், மதத்தையும் மீறி சமூகம் என்ற சுருக்குக் கையிறு கழுத்தைச் சுற்றி இருப்பதால் தாவிக்குதிக்க தயங்குகின்றனர்.

எனது எழுத்துக்களை ‘அவதூறு’ என்று குற்றம் சாட்டும் நாகூர் ரூமி, இதே குற்றச்சாட்டை ‘இஸ்லாத்தில் ஏனில்லை ஒரு பெண் நபி’ என்று கவிதை மூலம் கேட்ட ஹெச்.ஜி.ரசூல் அவர்களைப் பற்றியும் சுமத்தினார். நான் இஸ்லாத்தின் வட்டத்திற்கு வெளியே இருப்பதால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், ஹெச்.ஜி.ரசூல் தமது சமுதாய அறிஞர்களால்(!), இஸ்லாமிய மதகுருமார்களால் ‘காஃபிர்’ என்று சமுதாய விலக்கம் செய்யப்பட்டார்.

ஒருவரையொருவர் அவதூறு புரிகிறார் என்று குற்றம் சாட்டிக்கொள்வது இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடையே வழமையான ஒன்று. தமிழக இஸ்லாமியப் பிரச்சாரகர்கள் பற்றிக்கூட இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்படுவதுண்டு. இது எவ்வித மாற்றுச்சிந்தனையையும், மாற்றுக்கருத்தையும் முடக்கும் ஒருவகையான மனநோய். இப்படியே மிரட்டி, காற்றில் எழுப்பப்பட்ட மாயக்கோட்டையை, மனதில் எழுப்பப்படும் கற்பனைக் கோட்டையை எவ்வளவு நாள் தான் காபந்து செய்ய முடியும்?

நேசகுமாரின் முகவரியை கேட்கிறார் நாகூர் ரூமி. எனது கருத்துக்களுக்கும் முகவரிக்கும் என்ன சம்பந்தம்? குடிசைப்பகுதியில் இருந்தாலோ, மாளிகையில் இருந்தாலோ எனது கருத்துக்களின் வீச்சு மாறிவிடுமா என்ன? ஒரு வேளை முழுமையான தகவல்கள் தெரிந்தால் இன்னும் அதிகமதிகம் பேர் ஆர்வத்தில் படிக்கக் கூடும். ஆனால், இஸ்லாமிய உலகின் வன்முறைக்கு பயந்து இஸ்லாமியர்களே அமைதி காக்கும் வேளையில், தனி ஆள் அல்லது குழு என்ன செய்ய முடியும்.

ஏற்கெனவே எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை சென்று அவர்தான் நான் என்று நினைத்து மிரட்டியது பற்றி அவரே விரிவாக எழுதியிருக்கிறார் (எனக்கும் அவருக்கும் இருக்கும் ஏராளமான வித்தியாசங்களும், இருவரும் பல விஷயங்களில் நேரெதிர் என்பது கூட புரியாதவர்களும் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யத்தையே அளிக்கிறது). ஜெயமோகன் இவ்வாறு எழுதியிருக்கிறார்:

“பல வருடங்களுக்கு முன்பு யமுனா ராஜேந்திரன் ‘பதிவுகள்’ இணைய தளத்தில் நேசகுமார் என்ற பேரில் எழுதுவது நானே என்று எழுதியிருந்தார். திட்டமிட்டு அவரால் செய்யப்பட்டது அது. ஏனென்றால் நேசகுமார் வேறு ஒருவர் என அப்போது அவருக்கு நன்றாகவே தெரியும். அதையொட்டி மிக உச்சகட்ட மிரட்டல்கள் எனக்கு வந்தன. நான் மீண்டும் மீண்டும் விளக்கங்கள் கொடுத்து மன்றாடி என்னைக் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த அனுபவங்களை நான் இப்போது எழுதக்கூட முடியாது . பல மாதங்கள் மன உளைச்சல் நீடித்தது. அப்போது நான் பல மின்னஞ்சல்களை யமுனா ராஜேந்திரனுக்கு அனுப்பினேன். அவர் அவற்றுக்கு பதில் போடவில்லை என்பதுடன் என் கதை முடியப்போவதாக பிறரிடம் சொல்லி சிரிக்கவும் செய்தார்.”

இஸ்லாம்: மிரட்டல்கள், அவதூறுகள்

எனவே, ரூமியவர்களின் இந்த வேண்டுகோளின் உள்நோக்கம் என்ன என்பது புரிகிறது, இதை உதாசீனப்படுத்தி விட்டு போவதே சிறந்த வழி, தாற்காலிகமாகவாக என்று தோன்றுகிறது. வேறு எதுவும் சொல்ல இல்லாத நிலையில் , பதிலளிக்க முடியாமல் போகும் நிலையில் இப்படியே சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு அல்லது மிரட்டி தனக்குத்தானே முதுகில் தட்டிக்கொடுத்துக் கொண்டு தனது மண்கோட்டையே கல்கோட்டை என்று கனவு கண்டுகொண்டிருக்க பேராசிரியர் ரூமி நினைத்தாலும் சரி, அல்லது அவர் சொல்லியிருக்கும் பட்டியல் பற்றி விவாதிக்க முன்வந்தாலும் சரி – எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று அனைத்தையும் ஏற்கிறேன் நான்.
***
அடுத்த நாகூரியான ஹமீது ஜாஃபர் எழுதுகிறார், காபிர் என்பதில் இழிவொன்றுமில்லை, தவறொன்றுமில்லை என்று. இதற்கான பதிலை ரசூலே இதே திண்ணையில் எழுதியிருக்கிறார். காபிர் என்றால், அவரது சொத்துக்களை இஸ்லாமியர்கள் பறித்துக்கொள்ளலாம், கொலையும் செய்யலாம் என்று. ஆம், துரதிர்ஷ்டவசமாக முஹமதின் கூற்றுகளும், சுன்னாவும், அவை எல்லாம் கடவுளின் ஆக்கினைகள் என்று கருதும் அடிப்படைவாத முஹமதீயர்களும் இவற்றை இந்த நூற்றாண்டிலும் நம்பி வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் எந்த நாட்டிலும், காபிர் சமூகம் படுகிற பாடே இதற்கு எடுத்துக்காட்டு. பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் அந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களாகிய தலித்துகளும், பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும் சொந்த நாட்டிலேயே மூன்றாம் தரக்குடிகளாக, தினந்தோறும் இழிவையும், இன அழிப்பையும் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர். முஹம்மதின் வாழ்விலேயே இதற்கு முன்னுதாரங்கள் இருப்பதால், ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும் இவற்றை கண்டும் – இதற்கு நாமென்ன செய்ய முடியும், இது இறைவனின் ஆக்ஞை என்று கருதி மனிதத்தை துறந்து மவுனம் சாதிக்கிறது.

***

இது இந்துவான எனக்கு புதிதாய்த் தென்படவில்லை. ஏனெனில், இந்து சமூகமும் ஒரு காலத்தில் தமது சமூகம் செய்த பாலியல் எக்ஸ்ப்ளாய்டேஷன்களுக்கு மத வர்ணம் பூசியது – சவுதியில் வேலைக்கு வரும் இந்தோனேஷிய, இலங்கை பணிப்பெண்களை வன்புணர்கிறார்கள் என்றால், இங்கே நம்மிடையே பாரம்பரியம் – தெய்வக்குத்தம் என்ற பெயரில் பாலியல் ஆக்கிரமிப்புகள் நடந்தேறின.

இன்றும் ஆகம விதிப்படி இயங்கும் ஆலயங்களில் பெண் அர்ச்சகர்கள் இல்லை. அங்கே இமாமாக, முல்லாவாக, பிரார்த்தனையை வழி நடத்தக்கூடியவராக ஒரு பெண்ண ஏற்க அதே பாரம்பரியம், முன்னுதாரணம் முஹமதின் காலத்தில் இல்லை என்பதைக் காட்டி உரிமை மறுக்கப் படுகின்றது. ஏன், இதே நாகூர் ரூமியவர்கள் தனது பதிவில் பெண்கள் மசூதிக்கு சென்று தொழுகை நடத்துவதற்கு எதிராக எழுதியவர்தான், சல்மாவை ‘இடித்துக்கொண்டு நிற்க ஆசைப்படுகிற கூட்டம்’ என்று வக்கிரமாக சாடியவர்தான்.

எல்லா மதங்களிலும் அடிப்படைவாதிகள் இப்படித்தான் இருக்கின்றனர். இஸ்லாத்தில் அதன் அடிப்படையோடு சம்பந்தப்பட்ட காரணங்களினால் விகிதாச்சார அளவிலும், எண்ணிக்கையிலும் அதிக அளவில் இருக்கின்றனர், அதுதான் வித்தியாசம்.

***

Series Navigation

author

நேச குமார்

நேச குமார்

Similar Posts