கடிதம்

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

மலர்மன்னன்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

ஸ்ரீதேவி பற்றி வாஸந்தி எழுதிய கட்டுரையில் மும்பை அரசியல் குறித்தும் சிவ சேனை பற்றியும் இடையில் எழுதப் புகுந்தமையையொட்டி, சிவ சேனை குறித்த எனது சிந்தனைகளையும் ஒரு பத்திரிகைக்காரன் என்கிற அளவில் எனக்குக் கிட்டிய அனுபவத்தையும் நான் எழுதப் போக, அதனை மிகக் கடுமையாகக் கண்டித்து எனது அன்புக்கு மிகுதியும் பாத்திரரான ஸ்ரீ பி.கே. சிவக்குமார், எழுதியுள்ளமையை, ஒரு தகப்பனோ அல்லது பாட்டனோ தனது சிறு வயது மகன் அல்லது பேரன் ஏதேனும் ஒரு கோபம் அல்லது தாபம் காரணமாக மார்பில் குத்தியும் வேட்டியைப் பிடித்து இழுத்தும் துள்ளுவதை ஒரு விளையாட்டைப் பார்க்கிற ரசனையுடன் படித்தேன். நான் சின்ன ராஜு என்று அழைக்கிற அனுஷ் குமார் என்கிற என் பேரன் சமயங்களில் அப்படித்தான் என் மீது தனது வன்முறையைப் பிரயோகித்து மகிழ்விக்கிறான்!

சிவக்குமார் மிக மிகச் சரியாகவே கணித்திருப்பதைப் போல எந்தவொரு பிரபல வெகு ஜன இதழும், வழ வழ பத்திரிகையும் என்னை ஒரு தீண்டத்தகாதவனாக ஒதுக்கி வைத்திருப்பது நிஜந்தான். மேலும், அவ்வறான பத்திரிகைகள் ஞாபகம் வைத்துக்கொள்கிற அளவுக்கு நான் எவ்விதத்திலும் முக்கியமானவன் அல்ல என்பதைத் தெளிவாக அறிந்துள்ளேன். ஆனாலும் ஒரு காலத்தில் அத்தகைய பத்திரிகைகள் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி, முக்கியமான சந்தர்ப்பங்களில் எழுதுமாறு கேட்டமைக்குச் சான்றாக அவற்றின் கடிதங்களை இன்னமும் வைத்துள்ளேன். மூதாட்டி, தான் மஞ்சள் தேய்த்துக் குளித்ததை நினைவு கூர்கிறாள் என்று சிவக்குமார் என்னைக் கிண்டல் செய்யாமல் இருந்தால், ஒருவேளை திண்ணை ஆசிரியர் குழு இடம் அளித்தால், அவற்றில் சிலவற்றையாவது ஸ்கேன் செய்து பிரசுரத்திற்கு அனுப்புவேன். ஆனால் திண்ணையை எனது தம்பட்டத்தை அடித்துக்கொள்ள உபயோகித்துக்கொள்கிறேன் என அதையும் எவரேனும் கண்டிக்கக் கூடும்.

இப்போதல்ல, முன்பு நான் பழக நேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் நான் உரையாடுவதையெல்லம் ஒரு புகைப்படக்காரர் என்ற முறையில் படம் எடுத்துவந்த சுபா சுந்தரம் அவராகவே எனக்கு அவற்றிலிருந்து ஒரு பிரதியை அனுப்பி வைப்பார். இவ்வாறு சேர்ந்த அண்ணா, காமராஜர், எம் ஜி ஆர், மதியழகன் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள், தூதுவர்கள் ஆகியோருடன் நான் உரையாடும் நிலையில் உள்ள புகைப் படங்களையெல்லாம் தொகுத்து முன்பு நாங்கள் வசித்த வீட்டின் முன் அறையில் என் மனைவி என் மீதுள்ள அன்பினால் ஒரே சட்டமிட்டுப் பிரதானமாக மாட்டி வைத்திருந்தாள். என்னைக் காண வருகிறவர்கள் அதைப் பார்த்துவிட்டு சிபாரிசுக்கு வர ஆரம்பிக்கவும், தொல்லை தாங்காமல் அதனை எப்போதோ தூக்கிப் போட்டுவிட்டேன். இன்றும் சில வாசகர்கள் திண்ணையில் நான் எழுதிவரும் கட்டுரைகளைப் படித்து விட்டு, அரசியல் தலைவர்களுடனான எனது பழக்கத்திற்கு என்ன ஆதாரம் என்று கேட்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்ய, அந்தப் புகைப்படங்களை எல்லாம் இன்று எங்கே தேடுவது?

அண்ணாவின் ஹோம் லேண்ட் ஆங்கில வார இதழுக்குச் சந்தா திரட்டி மணியார்டரில் பணம் அனுப்பி அது கிடைத்தமைக்கான சான்றில் அண்ணா தமது கைப்பட ஒப்பமிட்டு அனுப்பிய ரசீதையும், டியர் மலர் என்று அச்சமயம் பாராட்டுத் தெரிவித்து அவர் கைப்பட ஆங்கிலத்தில் எழுதிய அஞ்சலட்டையையும்கூடப் பிற்காலத்தில் அவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் ஏற்படும் என்பதை உணராமல் தொலைத்து விட்டேன். நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஆதாரம் கேட்பார்கள் என்று தெரியாமல் போனதே! நல்ல வேளையாக என் தந்தையாருக்கு ஸ்ரீ அரவிந்தர் கையொப்பமிட்டு அளித்த அவரது நூல் ஒன்றை பத்திரப்படுத்தியிருக்கிறேன், அதன் புனிதம் தெரிந்து!

நான் மிக மிக அற்பமானவன் என்பதை அவையடக்கத்திற்காகவோ சம்பிரதாயமாகவோ அல்ல, மெய்யாகவே உணர்ந்து ஒப்புக்கொள்கிறேன். நான் ஏதோ எழுதிவிட்டேன் என்பதற்காக, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, பிரபல எழுத்தாளர்கள் எவரும் திண்ணையில் எழுதாமல் இருந்து விடுவார்களோ என்று சிவக்குமார் சம்சயிப்பது உண்மையில் என்னைக் காட்டிலும் எல்லா வகைகளிலும் சிறந்த அத்தகைய எழுத்தாளர்களை அவர் மரியாதை செய்வதாகாது. என்னை அடிப்பதற்காக ஓங்கிய அவரது கை , ஓங்கிய வேகத்தில் பின் சென்று, அவர் யாருக்காகப் பரிந்து கொண்டு வந்தாரோ அவர்களை அதிகம் காயப்படுத்திவிட்டதில் மிகவும் வருந்துகிறேன். மன்னியுங்கள், என்னைத் தாக்குவதுதான் உண்மையில் சிவக்குமாரின் நோக்கம், அந்த வேகத்தில் உங்கள் மீது அடி பட்டுவிட்டது என்று சிவக்குமார் சார்பில் சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். நல்லவேளையாகத் திண்ணை ஆசிரியர் குழுவும் எனது முக்கியத்துவம் இல்லாத தகுதியை நன்கு அறிந்திருப்பதால் நானோ வேறு எவருமோ விமர்சித்து விட்டதற்காக எந்த எழுத்தாளரும் திண்ணையில் எழுதாமல் இருந்துவிட மாட்டார்கள் என்கிற உண்மையைத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது.

சிவக்குமார் சொல்வதைப்போல யார் எதை எழுத வேண்டும் என்று கட்டுப்பாடு செய்ய நான் யார்? உண்மையில் வேறு எவருமோகூட அவ்வாறு ஒருவருக்குத் தடை விதிக்கக்கூடுமா என்ன? ஆனால் எழுதுவதற்கு எடுத்துக் கொள்ளும் விஷயம் எதுவோ அதை உட்புகுந்து விரிவாக எழுத வேண்டும் என்பது எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளருக்குமான எழுதப்படாத விதி என்று எண்ணுகிறேன். எழுதுவதில் பயிற்சி பெற்றுள்ள சிவக்குமாருக்கு இதில் கருத்து வேறுபாடு இருக்காது என்றும் நம்புகிறேன்.

வாஸந்தி அவர்கள் ஒரு குறிப்பிட்ட விஷயம்பற்றித்தான் எழுத வேண்டும் என்று ஒரு சட்டாம் பிள்ளை மாதிரியோ நாட்டாமை மாதிரியோ நான் எப்படி அதிகப் பிரசங்கித்தனமாகச் சொல்லி விட முடியும்?

ஆனால் ஒரு விஷயம் பற்றி எழுதுகிற போது அதைக் காட்டிலும் வேறு ஒரு விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தால் அந்த விஷயம் பற்றியும் விரிவாக ஆராய்ந்து எழுதுவதே முறை என்றுதான் நான் அபிப்பிராயம் தெரிவித்திருந்தேன். ஸ்ரீதேவியுடனான சந்திப்பு பற்றி எழுத முற்பட்ட வாஸந்தி, மும்பை அரசியலையும் சிவசேனை பற்றியும் இடையில் எழுதுவதாக இருந்தால் அது பற்றியும் ஆராய்ந்து எழுதியிருக்க வேண்டும் என்றுதான் குறிப்பிட்டிருந்தேனேயன்றி அவர் அதுபற்றியெல்லாம் எழுதக் கூடாது என்று சொல்லவே இல்லையே! மேலும் எனக்குத் தெரிந்த கடந்த கால மும்பை அரசியல் பற்றியும் சிவசேனை குறித்தும் அதன் மூலம் எழுத எனக்கு வாய்ப்பளித்தமைக்காக வாஸந்திக்கு நன்றியும் அல்லவா தெரிவித்திருந்தேன்?

வழ வழ, பள பள பத்திரிகைகள் என்னிடம் கேட்டால் ஓடோடிச் சென்று எழுதாமல் இருந்துவிடுவேனா என்று கேட்டு, அவை என்னைச் சீந்தாமல் இருப்பதால்தான் திண்ணை, தமிழ் சிஃபி போன்ற இணைய இதழ்களில் நான் எழுதிவருவதாகக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் இணைய இதழ்களின் முக்கியத்துவத்தையும் சிவக்குமார் குறைத்து மதிப்பிட்டு விடலாமா? உண்மையில் இணைய இதழ் சிவக்குமாருக்குப் பிறந்த வீடேயல்லவா? அவர் எழுத அப்பியசித்ததும் அங்கேதான் அல்லவா? என்னைத் தாக்கும் உத்தேசத்திலும் உத்வேகத்திலும் தனது பிறந்தகத்தையும் பள்ளிகூடத்தையுமா அவர் குறைத்து மதிப்பிட்டு விடுவது?

மேலும் சிவக்குமார் சம்சயிப்பதுபோலத் திண்ணைக்கு நான் நாட்டாமை அல்ல. எனது கட்டுரை ஒன்றை அது வெளியிடாமல் புறக்கணித்ததும் உண்டு! சிவக்குமார் தனது திண்ணைப் பள்ளிக்கூடமேயான அதனை இவ்வாறு அவமதிக்க நான் காரணமாகி விட்டதில் மெத்தவும் விசனப்படுகிறேன்.

பத்திரிகைத் தொழில் இப்போது ஒரு பெரிய இன்டஸ்ட்ரி. பத்திரிகை என்பது இப்போது ஒரு நுகரும் வஸ்து (கன்ஸ்யூமர் ப்ராடக்ட்). உங்கள் கட்டுரைகளை எடிட் செய்ய நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள்; உங்கள் கட்டுரையை அப்படியே வெளியிடுவதாக இருந்தால் எங்கள் அலுவலகத்தின் மீது கல் விழும். பணியாளர்கள் அடிபடுவார்கள், அச்சடிப்பதற்காக வைத்திருக்கும் விலை உயர்ந்த காகிதச் சுருள்களுக்குத் தீ வைக்கப்படும். பல நாட்கள் தொழில் பாதிக்கப்படும் என்றெல்லாம் சொன்னதால்தான் சலிப்புற்று எதுபற்றியுமே அவற்றில் எழுதாமல் ஒதுங்கிக்கொண்டேன்.

நான் சிறுகதைகளும் நாவல்களும் எழுதுவதில் தீவிரமாக இயங்கி வந்த சமயத்தில் வைர மோதிரம் தருவதாகச் சொல்லி என்னிடம் சிறுகதை கேட்ட குமுதம் இதழிடம் எனது அபிப்ராயப்படித் தமிழ்நாட்டு வாசகனின் வாசிப்புப் பழக்கத்தைச் சீரழித்த பத்திரிகை எனக் குமுதத்தை கருதுவதால் அதில் எழுத மாட்டேன் என்று சொன்னேன். சாவியின் மீதும் தனிப்பட்ட முறையில் அல்லாது பொதுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் எனக்கு மிகவும் கடுமையான விமர்சனம் இருந்த போதிலும், என்னிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் பாராட்டி வந்த சுப்ரமண்ய ராஜுவும் பாலகுமாரனும் எங்களுக்காக எழுதுங்கள் என்று மிகவும் வற்புறுத்தியதால் சாவி இதழின் முதல் இதழுக்கு சாவியே அதைப் படித்துப்பார்த்து மிகவும் சந்தோஷப்படும் விதமாக, அவர்களின் ரசனையை இளக்காரம் செய்வதுபோலவொரு சிறுகதையை எழுதிக்கொடுத்தேன். அதே அடிப்படையில்தான் பால குமாரன் தயாரித்த குங்குமம் வார சிறப்பிதழுக்கு சாவி அதன் ஆசிரியராக இருந்த போதிலும் சிறுகதை எழுதிக் கொடுத்தேன். பிறகு பால குமாரன் மிகவும் வற்புறுத்தியதால் சாவியின் மோனாவுக்கும் ஒரு குறு நாவலைக் கொடுத்தேன். ஆகவே பிரபல பத்திரிகைகள் கேட்பதால் ஓடோடிப் போய் எழுதுகிற சபலத்திற்கு இளம் பிராயத்திலேயே ஆட்பட்டதில்லை. இனிமேலா அது ஏற்படப் போகிறது? ஆனால் பொதுவாக ஹிந்துஸ்தானத்திற்கும் குறிப்பாக ஹிந்து சமூகத்திற்கும் இன்று ஏற்பட்டிருக்கிற சோதனைகளை வெளிப்படையாக எழுத எந்தப் பிரபல பத்திரிகை வாய்ப்பளித்தாலும் அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவற மாட்டேன். பத்திரிகையில் பெயரைப் பார்த்து அகமகிழ்ந்துகொள்வதற்காக அல்ல, பிரச்னையை அதிகம் பேர் உணரவேண்டும் என்பதற்காக.

திண்ணையில் நான் எழுதும் கட்டுரைகளைப் படித்துவிட்டு, இந்த உண்மைகளையெல்லாம் பிரபல பத்திரிகைகளில் ஏன் எழுத மாட்டேன் என்கிறீர்கள் என்று அப்பாவித் தனமாகக் கேட்கிற வாசகர்களும் இருக்கிறார்கள்! அதிலும், குமுதத்தில் இதனை எழுதுங்கள் என்று ஒரு கட்டுரையைப் பற்றித் திண்ணை வாசகர் ஒருவர் எழுதியிருப்பது அதைவிடப் பெரிய வருந்தத் தக்க நகைச்சுவை!

மிக்க அன்புடன்,
மலர்மன்னன்


malarmannan79@rediffmail.com

Series Navigation

author

மலர் மன்னன்

மலர் மன்னன்

Similar Posts