கடிதம்

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

திசைகள் அ.வெற்றிவேல்



அன்புள்ள நண்பர் திரு.குருராகவேந்திரன் அவர்களுக்கு நன்றியுடன் வணக்கம்.

எனது கட்டுரை குறித்து தங்களின் கடிதம் கண்டேன்.

கட்டுரையின் நோக்கம் “மக்கள் தொலைக்காட்சியின்” மக்கள் பணிகள் பற்றியே.அது ஒரு மொழி ஆராய்ச்சிக் கட்டுரை அன்று.அதற்கு நான் தகுதியானவனும் கிடையாது.

தினந்தோறும் 20 முறையாவது உச்சரிக்கும் ஒரு சொல்லுக்கு, என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் பயன்படுத்துவதின் விபரீதத்தை உணர்த்தவே அவ்வாறு என் மனைவியிடம் சொன்னதை குறிப்பிட்டு இருந்தேனே தவிர,மற்ற மொழியினை தாழ்த்திப் பேச வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.மேலும் தாங்கள் எடுத்துக் காட்டிய ரமேஷ்,சுரேஷ்,தினேஷ் போன்ற பெயர்களின் அர்த்தம் எனக்குத் தெரியாததல்ல..உரையாடல் நடந்த அதே நாளில் அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் அந்தப் பெயர்களின் முழுமையான அர்த்தத்தை எனது மனைவிடம் சொல்லி மனைவி முகத்தில் மலர்ச்சியைப் பார்த்தவன்.கட்டுரைக்கு அது தேவையில்லை என்ற நோக்கில்தான் அதை தவிர்த்து இருந்தேனே தவிர அதன் அர்த்தம் தெரியாமலோ, அல்லது மற்ற மொழிகளை தாழ்த்த வேண்டும் என்பதோ எனது நோக்கம் அன்று.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் திரு.ராசேந்திரப் பிரசாத் அவர்களை மக்கள் அன்புடன் “பாபு” என்று அழைத்ததும்,மறைந்த திரு.ஜெகஜீவன்ராம் அவர்களை”பாபுஜி” என்று அழைத்ததும் எனக்குத் தெரியாதது அல்ல. தெரிந்தே இருந்தும்,நாம் கூப்பிடும் பெயர்ச்சொல்லுக்கு,அதன் அர்த்தம் தெரியாமல் கையில் அகராதியுடன் திரியத் தேவையில்லை என்பதை உணர்த்தவே “பாபு” என்ற சொல்லுக்கு அவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன்.”பாபு” என்றால் நாற்றம் என்று நான் படித்த நூலையும் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன்..ஆனால் இந்திய மொழிகளில் எந்த மொழியில் என்பதைத்தான் மறந்துவிட்டேன் என்று குறிப்பிட்டு இருந்தேன்.நான் படித்த அந்த ஓஷோவின் நூல் இந்தியாவில் எனது வீட்டு நூலகத்தில் உள்ளது.அடுத்த விடுமுறைக்குச் செல்லும் பொழுது மறக்காமல் பக்க எண்ணுடன் விபரம் தருகிறேன்.

தமிழ் என்று நீட்டி முழக்கும் எங்களது இல்லங்களில் கூட, அழையா விருந்தாளிகளாக டி.வி,போன்,கார் என வேற்று மொழிகள் நுழைந்துவிட்டது என்பதைத் தான் மன வருத்தத்துடன் குறிப்பிட்டு,இந்தச் சூழலில்,இதனை மாற்றி அமைக்கும் வகையில் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் உள்ளன என்று எழுதி இருந்தேன்.

ஒவ்வொரு வருடமும் ஒரு மாதகாலம் இந்தியாவிற்கு விடுமுறைக்காக செல்லும் பொழுது,போன விடுமுறையில் பழக்கத்தில் இருந்த சொல்,இந்த விடுமுறையில் காணாமல் போவதையும்,அதன் இடத்தில் வேற்று மொழிச் சொற்கள் வந்து உட்கார்ந்து கொள்வதையும் நேரில் வருத்தத்துடன் உணர்ந்தவன் நான்.

இத்தகைய பின்புலத்தில்,மக்கள் தொலைக்காட்சியின் பாதையில் பெரும் சவால்கள் நிறைந்துள்ளது. அந்தச் சவாலை ,மக்கள் தொலைக்காட்சி நிறுவனத்தினர் நன்கு கையாள்கிறார்கள் என்ற பாராட்டினையும் இக்கடிதம் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

அ.வெற்றிவேல்


E-mail: vetrivel@nsc-ksa.com

Series Navigation

author

திசைகள் அ.வெற்றிவேல்

திசைகள் அ.வெற்றிவேல்

Similar Posts