கடிதம்

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

நாகூர் ரூமி


‘பிறைநதிபுரத்தானுக்கு பதில்’ என்ற கட்டுரையில் வெ.சா. “நாகூர் ரூமி satanic verses-க்கு ஆதரவாக எழுதப்போக இப்போது அவர் தன் இஸ்லாமிய புனிதத்துவத்தை நிரூபிக்க எப்படியெல்லாம் ஆவேச ஆட்டம் ஆட வேண்டியிருக்கிறது” என்று போகிற போக்கில் எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது.

நான் சல்மான் ரஷ்டியின் தடை செய்யப்பட்ட நாவலான சடானிக் வெர்சஸுக்கு ஆதரவாக எதுவும் எழுதவில்லை. அந்த நாவல் தடை செய்யப்பட்ட விஷயம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் ஒரு கடிதம் எழுதினேன். அதில், சல்மான் ரஷ்டி அவருடைய Midnight’s Children என்ற நாவலில் தொழுகையை உயர்த்தும் விதத்தில் எழுதியிருக்கிறார் என்றும், பிரதமர் ராஜீவ் காந்திக்கு அவர் எழுதிய திறந்த கடிதத்தில் இஸ்லாத்துக்கு விரோதமாக தான் எதுவும் எழுதவில்லை என்றும் கூறியிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டி, இந்த காரணங்களினால் இஸ்லாத்துக்கு விரோதமாக எழுதும் ஒரு எழுத்தாளராக அவர் இருக்கமாட்டார் என்று நான் நினைக்கிறேன் என்றும், ஒரு புத்தகத்தைத் தடை செய்தால் அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம்தான் அதிகமாகும். எனவே இந்த நாவலைத் தடை செய்வது அதன் விற்பனையும் புகழும் அதிகமாகவதற்கு உதவி செய்யும் என்று எழுதினேன்.

அதைத் தவறாகப் புரிந்து கொண்ட சிலர் நான் இஸ்லாத்துக்கு விரோதமாக எழுதிவிட்டேன் என்றும், சல்மான் ருஷ்டியின் தடை செய்யப்பட்ட நாவலுக்கு ஆதரவாக எழுதிவிட்டேன் என்றும் சொன்னார்கள். (பல நாட்களுக்குப் பிறகு, அந்த நாவலின் பகுதிகள் பல படிக்கக் கிடைத்தது. அதிலிருந்து ரஷ்டி மிகவும் மோசமாகத்தான் எழுதியிருந்தார் என்று தெரிந்து கொண்டேன்).

நடந்தது இதுதான். அதற்குள் வெ.சா. என்னென்னவோ எழுதிவிட்டார். இஸ்லாத்தின் புனிதத்தை நான் நிரூபிக்க வேண்டியதில்லை. அதை இஸ்லாமே நிரூபித்து விட்டது. உண்மைகள் எல்லாமே புனிதமானவைதான்.

வெ.சா. பற்றிய என் கடந்த கால விமர்சனத்தை இன்னும் அவரால் மறக்க முடியவில்லை போலிருக்கிறது!

அன்புடன்
நாகூர் ரூமி


ruminagore@gmail.com

Series Navigation

author

நாகூர் ரூமி

நாகூர் ரூமி

Similar Posts