கடிதம்

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

நாகூர் ரூமி


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கும், திண்ணை வாசகர்களுக்கும், வணக்கம்.

கொஞ்ச காலமாகவே திண்னையில் இஸ்லாத்தைப் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர் இஸ்லாத்தின் மீதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், என்னைப் போன்ற தனிப்பட்டவர்கள் மீதும் வெறுப்பையும் அவதூறையும் சொல்வதற்கு வாய்ப்பாக திண்ணையைப் பயன்படுத்தி வருகின்றனர். நான் ஒரு அடிப்படைவாதி, பத்ரி ஒரு இரட்டை வேடதாரி இப்படி.

புனை பெயர்களில் எழுதுவது தவறல்ல. நானும் புனைபெயரில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் எங்கே இருக்கிறேன் என்பதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. ஏனெனில் நான் இறைவனுக்கு மட்டுமே அஞ்சுகிறேன்.

ஆனால் நேசகுமார் போன்றவர்கள் ஒளிந்து கொண்டு தாக்குகிறார்கள். நேசகுமார் என்பது அவருடைய உண்மையான பெயரல்ல என்பது தெரிந்ததே. ஆனால் சென்னையில் உள்ள என் நண்பர் ஒருவரிடம் அவர் தனது சென்னை முகவரியை என்னிடம் தெரிவித்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அவர் தெரிவித்தாலும் தெரிவிக்காவிட்டாலும் ஒன்றுதான். என்னால் யாருக்கும் எந்த ஆபத்தும் வரப்போவதில்லை. மற்றவர்களால் எனக்கு வரலாம். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

ஆனால் அடிப்படைவாதி, அருகதையற்றவன் என்றெல்லாம் சொல்வதை நினைத்தால் எனக்கு சிரிப்பாக வருகிற்து. தாக்குவதற்கென்றே ஒரு குழுவாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இணையத்தில் இப்படி எழுதுவதென்பது ஒரு நிழல் யுத்தம் மாதிரிதான்.

எனக்கு சரி என்று பட்ட கருத்துக்களை யாரும் காயப்படாத வகையில் எடுத்துச் சொல்கிறேன். இதுவரை நான் ஹிந்து, கிறிஸ்தவ மதம் சம்பந்தப்பட்ட கடவுளையோ, தீர்க்க தரிசியையோ பற்றி தரக்குறைவாக ஒரு வார்த்தைகூட சொன்னது கிடையாது. சொல்லவும் மாட்டேன். நான் பகவத் கீதை பற்றியும், தீபாவளி பற்றியும், ஓஷோ, ரமணர்,ஜே கிருஷ்ணமூர்த்தி பற்றியெல்லாம் எழுதியதைப் படித்திருந்தால் நான் சொல்வது உண்மை என்று புரியும். ஆனால் படித்தாலும் அதிலும் குற்றம் கண்டு பிடிப்பவர்களைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது.

The fault-finder wil find fault even in Paradise என்று ஹென்ரி டேவிட் தோரோ அழகாகச் சொன்னார். அதுதான் என் விஷயத்தில் நடந்து கொண்டுள்ளது.

சமீபத்தில் விஸ்வாமித்திரா என்பவர் வெ.சா.வுக்கு ஆதரவாக எழுதுகின்ற தோரணையில் என்னைப் பற்றிய அவருடைய ‘கருத்துக்களை’யெல்லாம் திண்ணையில் கொட்டியிருக்கிறார்.

திரும்பத் திரும்ப நான் ரஷ்டி பற்றி எழுதியதையே, எந்தக் காரணமுமில்லாமல் இஸ்லாமிய எதிர்ப்பும் வெறுப்பும் கொண்ட பல மனங்கள் துருப்புச் சீட்டு போல பயன்படுத்தி வருகின்றன. அந்த குழுவில் இப்போது விஸ்வாமித்திராவும் உண்டு என்று தெரிந்து கொள்கிறேன்.

ஒரு மதத்தை விமர்சன ரீதியில் அணுகுவதில் தவறில்லை. உதாரணமாக அஸ்கர் அலி எஞ்சினியர் இந்த காரியத்தை அழகாகச் செய்து கொண்டுள்ளார். ஆனால் ஒரு மதம் சம்பந்தப்பட்ட தனி மனிதர்களைக் குறிவைத்துத் தரக்குறைவாகப் பேசுவதும் எழுதுவதும் தவறு. அதுவும் முஸ்லிம்களால் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கப்படும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி அநாகரீகமாகப் பேசுவதையோ எழுதுவதையோ எந்த சரியான முஸ்லிமும் பொறுத்துக் கொள்ள மாட்டார்.

ரஷ்டி விஷயத்தில் நடந்தது அதுதான். சர்வதேசப் புகழ் பெற்ற அந்த எழுத்தாளர், இஸ்லாத்தின் மீதான ஆக்கப்பூர்வமான விமர்சனமாக ‘சாத்தானின் கவிதைகள்’ என்ற நாவலை எழுதவில்லை. தனிப்பட்ட முறையில் முஹம்மது நபியையும் அவர்களது மனைவிமார்களையும் பற்றி அசிங்கமாக எழுதினார். இலக்கியம் என்ற போர்வையில்.

அதைத்தான் நான் கண்டித்து எழுதினேன். உங்கள் தாயைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுகிற ஒருவனை நீங்கள் கண்டித்தால், திட்டினால் அதை வன்முறை என்று சொல்வீர்களா? ஆனால் அந்த வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது எவ்வளவு காலத்துக்குத் தாக்குப் பிடிக்கும்?

இஸ்லாம் அமைதியான மார்க்கம்தான். ஆனால் நீங்கள் அடித்தால் நாங்கள் வாங்கிக் கொண்டே இருப்போம் என்று அதற்குப் பொருளல்ல. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று சொன்ன இயேசுகூட ஒரு கட்டத்தில் கோயிலின் புனிதத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தவர்களை சாட்டையால் அடித்து விரட்டியதாக புனித பைபிள் கூறுகிறது.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொன்றால் சாதாரணமாக அது கொலை என்று சொல்லப்படுகிறது. அதையே போர்க்களத்தில் ஒரு ராணுவ வீரன் செய்தால் அது நாட்டுப் பற்று என்றும் தியாகம் என்றும் பாராட்டப்படுகிறது. போலீஸ் ‘என்கௌண்ட’ரில் ஒரு தாதா சுட்டுக் கொல்லப்பட்டால் அதையும் சட்டம் கொலை என்று சொல்வதில்லை. தூக்கு தண்டனை கொடுப்பதை கொலை என்று சட்டம் சொல்வதில்லை. ஆனால் இந்த எல்லா உதாரணங்களிலுமே போவது மனித உயிர்கள்தான்.

செயல் நடக்கும் இடத்தைப் (context)பொறுத்து வரையறைகள்,இலக்கணங்கள்,அளவுகோல்கள் மாறும். மாற வேண்டும். அதுதான் அறிவுடைமை. நீதிமன்றங்களும், தண்டனைகளும், காவல் நிலையங்களும், சட்டங்களும் இருப்பது இதற்காகத்தான்.

நீங்கள் என்னை என் வீட்டில் வந்து அடிக்க வந்தீர்களென்றால் உங்களைத் திருப்பி அடிக்கும் உரிமையோ அல்லது குறைந்த பட்சமாக என்னை உங்கள் வன்முறையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமையோ எனக்கு இருக்கிறது. அமைதி மார்க்கம் என்று சொல்லி கோழையாக இருந்து உயிரை விட அங்கே அனுமதி இல்லை.

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போர்கள் அனைத்துமே இப்படிப்பட்ட தற்காப்புப் போர்கள்தான். அடித்தவனை, அடிக்க வந்தவனை திருப்பி அடித்ததுதான். இது எல்லா சமுதாயங்களிலும், எல்லா மதங்களிலும் இருந்த, இருக்க வேண்டிய குணம்தான்.

வன்முறையும் போரும் எல்லாக் காலத்திலும் எல்லாச் சமுதாயத்தாராலும் நடத்தப்பட்டே வந்திருக்கின்றன. உலக வரலாறு தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை தெரியும்.

ஆனால் வெ.சா. ஒரு கற்பனையான குற்றச்சாட்டை அந்தக் கட்டுரையில் தேவையே இல்லாமல் வைத்திருந்தார். யாரோ கலிமா சொல்லு என்று அவரை வற்புறுத்துகிறார்களாம். உன் பெயரை முஸ்லிம் பெயராக மாற்றிக்கொள் என்று சொல்கிறார்களாம்.

இதெல்லாம் என்ன?

எந்த மதத்தின் பெயரால் வன்முறை நடந்தாலும் அது குற்றம்தான். பாபர் மசூதியை மதவெறியர்கள் இடித்ததும் குற்றம்தான். பள்ளி வாசலுக்குள் மத வெறியர்கள் குண்டு வைத்ததும் குற்றம்தான். இஸ்லாத்தின் பெயரால் அல்லாஹு அக்பர் என்று சொல்லி அப்பாவிகளில் கழுத்தை அறுப்பது, மண்ணில் புதைத்து கல்லால் அடிப்பது போன்ற கொடுமைகள் எல்லாம் குற்றம்தான்.

ஆனால் இதையெல்லாம் குற்றம் என்று ஒத்துக் கொள்ளாத பல முஸ்லிம்கள் இருக்கலாம். ஆனால் என்னுடைய பார்வையில் இவை யாவும் குற்றம்தான். (இதையெல்லாம் பற்றி நான் ஏற்கனவே என் தளத்தில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனெனில் அது என்னைத் திட்டுபவர்களது உள்நோக்கத்துக்கு ஊறு விளைவிப்பதாக அமைந்துவிடும். தெரியும்).

குஜராத்தில் அப்பாவி ஏழைக் கன்னிப் பெண்களைக் கதறக் கதறக் கற்பழித்துவிட்டு வீட்டு மொட்டை மாடியில் அவர்களைக் கட்டி வைத்துத் தீ வைத்துக் கொளுத்திவிட்ட ஹிந்து வெறியர்களைப் பற்றி நீங்கள் எப்போதாவது கண்டித்து எழுதியுள்ளீர்களா? கர்ப்பிணிப் பெண்ணொருத்தியின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியில் எடுத்து தீயில் வீசிய வெறிச்செயலை என்றைக்காவது கண்டித்துள்ளீர்களா? வேனில் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவிக் குழந்தைகளை அவர்களின் தந்தையான பாதிரியுடன் சேர்த்துக் கொளுத்திவிட்டார்களே அதைக் கண்டித்துள்ளீர்களா? கோயம்புத்தூரும் குஜராத்தும் சொல்வது என்ன என்று என்றைக்காவது கேட்டிருக்கிறீர்களா?

கடந்தகால வரலாறு என்பது நாம் கண்ணால் காண்பது அல்ல. எழுதப்பட்டதிலிருந்து யூகிப்பதாகவே அது உள்ளது. வரலாற்றாசிரியர்கள் அனைவருமே தங்களுடைய பார்வையின் வெளிப்பாடாகத்தான் வரலாற்றை வடிக்கிறார்கள். எனவே ஒருவிதமான நம்பிக்கை சார்ந்ததாகவே, ஒரு சார்பான பார்வை கொண்டாதாகவே எல்லா வரலாறும் நமக்கு கிடைக்கிறது என்று சொல்லலாம்.

இந்திய வரலாற்றில் சோமநாதபுரக் கோயிலுக்குள் நடந்த சண்டையை ஒரு ஹிந்து படித்தால் அது அவருக்கு கஜினி முஹம்மதுமீது வெறுப்பேற்றுவதாக இருக்கலாம். ஒரு முஸ்லிம் படித்தால் அவருக்கு அது நியாயமாகப் படலாம். சிலுவைப் போர்களைப் பற்றி ஒரு கிறிஸ்தவர் படித்தால் அது அவருக்கு சரியாகப் படலாம். லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த ஹிட்லருக்கு அப்படுகொலைகள் சரியானதாகத்தான் பட்டிருக்கிறது. ஒரு நாட்டையே ஆக்கிரமித்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு சொல்லவொண்ணாத துயரங்களை வழங்கிக் கொண்டிருக்கும் யூதர்களுக்கு பாலஸ்தீனில் நடத்திக் கொண்டிருப்பது சரியென்று தோன்றலாம். அமெரிக்க மனப்பான்மை கொண்ட ஏரியல் ஷரோன்களுக்கும் அது சரிதான் என்று படலாம்.

வெள்ளைக்காரர்களிடம் கேட்டால் வாஞ்சிநாதன் செய்தது கொலை என்பான். ஆனால் இந்திய மனம் அதை அப்படிப் பார்ப்பதில்லை. ஜாலியன் வாலாபாக்கில் நடந்தது நமக்குப் படுகொலை. ஆனால் ஜெனரல் டயருக்கு அது கிறிஸ்தவத் தொண்டாகப் பட்டிருக்கலாம். எது சரி, எது உண்மை என்பது இரண்டுக்கும் நடுவில் எங்கோ இருக்கிறது.

கடந்த காலத்தைச் சுட்டிக் காட்டி நிகழ் காலத்தில் வெறுப்பை விதைப்பது சரியல்ல. ஒரு சில தனி மனிதர்கள், அல்லது இயக்கங்கள் செய்யும் தவறுகளை அல்லது குற்றங்களையெல்லாம் ஒரு மதத்தின் மீது ஏற்றி பொதுமைப்படுத்துவதுதான் இஸ்லாத்தைக் குறை சொல்பவர்கள் செய்யும் தவறு..

இந்த பொதுமைப் படுத்தும் காரியத்தை எப்போதும் எந்த மதத்தின் மீதும் யாரும் செய்யலாம்.

இது ஒரு வீண் வேலை. கால விரயம். உதாரணமாக, முஹம்மது நபி இறுதித் தூதர் அல்ல என்று நேசகுமார் கட்டுரை கட்டுரையாக எழுதினார். இன்னும்கூட எழுதிக் கொண்டிருக்கலாம்.

எதற்காக என்று கேட்கிறேன்.

முஹம்மது நபி இறுதித் தூதராக இருப்பதில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு என்ன பிரச்சனை? மற்றவர்கள் அதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லையே!

வந்தே மாதரம் என்ற பாடலை ஒரு முஸ்லிம் விரும்பினால் பாடிக்கொள்ளட்டும். அதனால் இஸ்லாத்துக்கு நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து அந்தப் பாடலைப் பாடிய பிறகுதான் அதற்கு இதுவரை இல்லாத புகழ் வந்தது என்றே சொல்லலாம். மனம் சரியாக இருக்கும்போது வாயால் எழுப்பப்படும் சப்தங்களை வைத்து விவாதம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஆனால் அதைப் பாடித்தான் ஆக வேண்டும். கட்டாயமாக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வதில் எந்த நியாயமுமில்லை என்றுதான் சொல்கிறேன். அப்படிச் சொல்வது கலாச்சார வன்முறையல்லவா?

வந்தே மாதரம் பாடலைத் தேசிய கீதமாக ஆக்குவது சரியல்ல என்று மிகத்தெளிவாக நமது தேசிய கீதத்தின் தந்தையான தாகூரே கூறியுள்ளார். வந்தே மாதரம் பாடலுக்கு பல முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? அது பங்கிம் சந்திரர் எழுதிய ஆனந்த மடம் என்ற் நாவலில் வரும் பாடல். (ஆனால் அந்த நாவலில் சேர்க்கப்படுவதற்கு முன்பே அது எழுதப்பட்டது). ப்ரிட்டிஷாருக்கும் வங்காள முஸ்லிம்களுக்கும் எதிராக நடந்த போராட்டத்தைப் பற்றிய ஒரு நாவல் அது.

அதோடு அதில் சில வரிகளின் மூலம் அது இந்திய நாட்டை துர்கா தேவியாக உருவகப்படுத்துகிற்து என்றும் தெரிகிறது. உருவ வழிபாட்டை ஒழித்துவிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களை துர்கா தேவியின் வடிவாக இருக்கும் நாட்டை வணங்கு என்று வற்புறுத்து என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

இங்கே பிரச்சனை வந்தே மாதரம் பாடலை ஒரு முஸ்லிம் பாடுவதல்ல. அதைப்பாடித்தான் ஆகவேண்டும் என்று க்ட்டாயப்படுத்துவது.

கொல்கத்தாவில் ஒரு முறை வந்தே மாதரம் பாடலைப் பாடிய் கவி தாகூரே இந்தப் பாடலை தேசிய கீதமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுபாஸ் சந்திர போஸுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்:

“வந்தே மாதரம் பாடலின் மையப்பகுதி அது தேவி துர்கையைத் துதிக்கும் பாடலாக இருப்பதுதான். இது மிகவும் தெளிவாக உள்ளது. இதில் வேறு கருத்துக்கே இடமில்லை. துர்காவும் வங்காளமும் ஒன்றுதான் என்பதாகத்தான் பங்கிம் சந்திரர் கடையில் காட்டுகிறார். ஆனால் தேசப்பற்று என்ற ரீதியில் பத்து தலை கொண்ட துர்கையை ‘ஸ்வதேஷ்’ (தேசம்) என்பதாக எந்த முசல்மானும் ஒத்துக்கொள்ள மாட்டார் என்பது தெளிவு. இந்த ஆண்டு, துர்கா பூஜைகளையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர்களிலெல்லாம் வந்தே மாதரம் பாடலில் இருந்து மேற்கோள்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அந்தப் பாடல் துர்கையைக் குறிப்பதுதான் என்பதாக பத்திரிக்கையாசிரியர்களும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இது. ‘ஆனந்தமடம்’ என்பது ஒரு இலக்கியப் படைப்பு. அதில் அப்பாடல் இடம் பெறுவது பொருத்தமானதே. ஆனால் பாராளுமன்றம் என்பது எல்லா மதக்குழுக்களும் இணைந்து செயல்படும் ஒரு இடமாகும். எனவே அங்கே அந்தப்பாடல் பொருத்தமானதாக இருக்க முடியாது. வங்காள முஸ்லிம்கள் தங்களது அடிப்படைவாதத்தில் பிடிவாதமாக இருக்கும்போது, அது நமக்கு பொறுத்துக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆனால் அவர்களையே பிரதியெடுத்த மாதிரி, நாமும் அவர்களைப் போலவே பிடிவாதமாக பாடித்தான் ஆகவேண்டும் என்று சொல்வோமேயானால், அது நம்மை நாமே தோற்கடிப்பதாக இருக்கும்”

என்று எழுதிய அவர் அக்கடிதத்தின் பின்குறிப்பில்

“வங்காள ஹிந்துக்கள் இந்த விஷயத்தில் கோபமாக இருக்கிறார்கள். ஆனால் இது ஹிந்துக்களை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய விஷயமல்ல. இரண்டு பக்கமும் வலுவான உணர்வுகள் இருப்பதால், நடுநிலையான தீர்ப்பு அவசியமாகிறது. அமைதி, ஒற்றுமை, நல்லெண்ணம் இவைகளை நோக்கித்தான் நமது அரசியல் நகர்வு இருக்கிறது. ஒரு குழுவின் கோஷங்களை மட்டும் கவனிப்பதால் முடிவற்ற போராட்டம்தான் தொடரும். இது நமக்கு வேண்டாம்.”

என்று முடிக்கிறார். (கடித எண் 314, Selected Letters of Rabindranath Tagore, edited by K. Datta and A.Robibson, CUP).

வந்தே மாதரம் பாடலைப் பாடக்கூடாதென்று சீக்கியர்களும் முடிவெடுத்தார்கள். சீக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜதேதார் அவ்தார் மக்கார் சீக்கியர்களால் நடத்தப்படும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இப்பாடலைப் பாடவேண்டாமென்றும் அதற்கு பதிலாக குரு கோபிந்த் சிங்கின் பாடலைப் பாடும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அப்பாடல் பயன்படுத்தப்பட்டுள்ள ஆனந்த மடம் என்ற நாவல்கூட முஸ்லிம்களுக்கு, குறிப்பாக வங்காள முஸ்லிம்களுக்கு, எதிரானதென்ற ஒரு கருத்தும் உள்ளது.

இவ்வளவும் வெ.சா.வுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இருந்தும் அவர் வந்தே மாதரம் பாடலைப் பாடமாட்டார்களாம் என்று போகிற போக்கில் எழுதினார் என்றால், அவரைப் பற்றி என்ன நினைப்பது? அவருக்கு விஸ்வாமித்திர தொண்டரடிப் பொடிகள் வேறு!

‘அட்லாண்டிக்குக்கு அப்பால்’ நூலின் பல கட்டுரைகளை சிலாகிக்கும் விஸ்வாமித்திரா நேசகுமாரைப் பற்றி சிவகுமார் சொல்வது மட்டும் தவறு என்று வாதிடுவதில் உள்ள உள்நோக்கம் என்ன?

எனவே மறுபடியும் சொல்கிறேன். இஸ்லாத்தை விமர்சிப்பது வேறு. தனி மனிதர்களை இழிவு படுத்துவது வேறு. சல்மான் ரஷ்டிக்கு தண்டனை தரவேண்டும் என்று சொன்னது அவர் இஸ்லாத்தை விமர்சித்தார் என்பதற்காக அல்ல. அவர் விமர்சிக்கவும் இல்லை. முஹம்மது நபியையும் அவர்களது மனைவிமார்களையும் பற்றி தரக்குறைவாக எழுதினார். அவ்வளவுதான்.

“இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்றால் ஏனய்யா ருஷ்டிக்கும் சல்மாவுக்கு ஃபத்வா தெரிவிக்கிறீர்கள்?” என்று விஸ்வாமித்திரா கேட்கிறார்.

சல்மான் ரஷ்டியும் சல்மாவும் முஸ்லிமாக இருக்கும்போது, அவர்களை தண்டிப்பதானது எப்படி இஸ்லாத்தை வாளால் பரப்பும் காரியமாகும்? அது முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் குறைக்கவல்லவா செய்யும்? ஒரு மதத்தை அந்த மதத்துக்குள் இருப்பவர்களிடமே பரப்புவார்களா?! இஸ்லாத்தைப் பரப்புவது என்ற அடிப்படைக்கே அது எதிரானதல்லவா? என்ன சொல்ல வருகிறார் விஸ்வாமித்திரர்?

விஸ்வாமித்திராவின் கேள்வியிலிருந்தே அவர் இஸ்லாத்தை எவ்வளவு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் அல்லது எவ்வளவு அறியாமையில் இருக்கிறார் என்று தெரிகிறது.

இங்கேயும் அங்கேயும் இருந்த கோடிக்கணக்கான மாற்று மதத்தினர் எங்கே போனார்கள் என்று கேட்கிறார். யாருக்குத் தெரியும்? வன்முறையால் அவர்கள் மதம் மாற்றப் பட்டிருந்தால், இஸ்லாமிய ஆட்சி போனபிறகு மறுபடியும் தங்கள் தாய் மதத்துக்கே திரும்பிச் சென்றிருக்கலாமல்லவா? ஏன் செல்லவில்லை? இதிலிருந்தே அந்த கோடிக்கணக்கான மக்களும் வாளாலோ வன்முறையாலோ இஸ்லாத்துகு வரவில்லை, மாறாக மனமாற்றத்தால் வந்தவர்கள் என்பது புரியவில்லையா? ஏன் இப்படி சிந்திக்கக் கூடாது?

பல நூறு ஆண்டுகள் முகலாயர்கள் இந்தியாவை ஆண்டும் இந்தியாவில் இன்னும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருப்பதே இஸ்லாம் வன்முறையால் பரப்பப்படவில்லை என்பதற்கு சான்றாக உள்ளது என்ற கருத்தைத்தான் சொன்னேன்.முகலாயர்கள் ஆட்சியில் ம்தம் மாறியவர்கள் எல்லாம் இஸ்லாத்தின் மேன்மைகளை அறிந்து மதம் மாறியவர்கள்தான் என்று நான் எங்குமே சொல்லவில்லை. நான் சொன்னதைத் திரித்து விஸ்வாமித்திரா சொல்கிறார்.

கமலாதாஸ் மதம் மடுத்து என்று சொன்னார் என்று நேசகுமார் முதலில் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டார். அது அப்படியில்லை என்று நிரூபணமானதும், வேறு வழியில்லாமல் ‘வயதான பெண்மணியின் தற்காப்பு முயற்சிகள்’ என்று சொல்லி இப்போது விஸ்வாமித்திரா ‘ஜகா’ வாங்குகிறார்.

“இன்று மக்கள் தாங்கள் செல்லும் பஸ்ஸீல் ஒரு சக இஸ்லாமியப் பயணியைக் கண்டு விட்டால் அடுத்த பஸ்ஸில் போகலாம் என்று தயங்க வைக்கும் காரணம் என்ன ?” — என்று கேட்கிறார் விஸ்வாமித்திரா.

விஸ்வாமித்திரா போன்றவர்கள் செய்யும் காரியம் இதுதான். மேலே எழுப்பியிருக்கும் கேள்வி உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, கற்பனையான ஒரு சூழ்நிலை பரவலாக இருப்பதாக பொதுமைப்படுத்த முயல்வது.

இஸ்லாத்தைப் பற்றியும் முஹம்மது நபியைப் பற்றியும் மாற்று மதத்தினர், அதுவும் உலகப் புகழ் பெற்ற, அதிகாரத்திலும் அந்தஸ்திலும் இருந்தவர்கள், தலைவர்கள், என்ன சொன்னார்கள் என்று கீழே சில உதாரணங்கள் கொடுத்திருக்கிறேன். உண்மை அப்படி இருக்கும்போது இஸ்லாத்தை அசைத்துப் பார்த்துவிட முயலும் முயலும் முயற்சிகள் எங்கேபோய் முடியும் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்:.

அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம்

— நியூயார்க் டைம்ஸ், பிப்ரவரி 21, 1989, பக்கம் 01.

அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம். வழிகாட்டியாகவும் நிலையான தூணாகவும் பலருக்கு அது இருக்கிறது.

— ஹிலரி ரோட்மேன் க்ளிண்டன், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், மே 31, 1996, பக்கம் 3.

இஸ்லாம் அமெரிக்காவில் தொடந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. யாரும் அதை சந்தேகிக்க முடியாது.

— சிஎன்என், டிசம்பர் 15, 1995.

அமெரிக்காவில் முஸ்லிம்கள் இப்போது ஐம்பதிலிருந்து அறுபது லட்சம் பேர் இருக்கிறார்கள். ப்ரெஸ்பிட்டீரியன்கள், எபிஸ்கோபேலியன்கள், மோரோமோன்கள், க்வேக்கர்கள், யூனிட்டேரியன்கள், செவந்த்டே அட்வெண்டிஸ்டுகள், மென்னொனைட்டுகள், ஜெஹோவாவின் சாட்சிகள், கிறிஸ்தவ விஞ்ஞானிகள் இவர்கள் எல்லாரையும் விட முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் இரண்டாவது பெரிய மதமாக யூதமதம் இருந்தது.ஆனால் அந்த இடத்தை இப்போது இஸ்லாம் பிடித்து விட்டதாக பல மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்கள் கருதுகிறார்கள்.

— ஜான் ப்ளாங்க், யூஎஸ்நியூஸ், 07/20/1998.

இஸ்லாத்தில் உள்ள அருமையான கருத்தாக்கங்களில் ஒன்றுதான் அதன் நீதியுணர்வு. அன்றாட வாழ்க்கைக்குரிய, அகில உலகமும் பயன்படுத்தக்கூடிய வாழ்க்கை பற்றிய நடைமுறைக் கோட்பாடுகளை நான் குரானில் படித்தேன். — Ideals of Islam என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட விரிவுரைகள்.

— சரோஜினி நாயுடுவின் பேச்சும் எழுத்தும், (The Speeches and Writings of Sarojini Naidu), சென்னை, 1918, பக்கம் 167.

அடிப்படைவாத முஸ்லிம்கள் வாளில் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது, வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது.

— டெ லேஸி ஓ லியரி, Islam at the Croosroads,லண்டன், 1923, பக்கம் 08.

மனிதர்களுக்கு இடயே உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பிரக்ஞையின் அழிவை ஏற்படுத்தியது இஸ்லாத்தின் தலைசிறந்த சாதனைகளில் ஒன்றாகும். இந்த இஸ்லாமிய உணர்வை தற்கால உலகத்தில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

— ஏ.ஜே.டாய்ன்பீ (உலகப்புகழ் பெற்ற வராலாற்றாசிரியர்), Civilization On Trial, நியூயார்க், 1948, பக்கம் 205.

வழக்கமான அர்த்தப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிமல்ல. ஆனால் இறைவனிடம் சரணாகதி அடைந்தவனே முஸ்லிம் என்ற கருத்துப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிம்தான். குர்ஆனில் பல தெய்வீக உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். எங்களைப் போன்ற மேற்கத்தியர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

— W.மாண்ட்கோமரி, இஸ்லாமும் கிறிஸ்தவமும் இன்று (Islam and Christianity Today), லண்டன், 1983, பக்கம் ix.

இஸ்லாம் வழங்கும் சகோதரத்துவம் உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்குமானதாக இருக்கிறது. அவர் என்ன நிறத்தில், என்ன கொள்கையில், என்ன கோட்பாட்டில், என்ன இனத்தில் இருந்தாலும். இந்த சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஒரே மதம் இஸ்லாம்தான். முஸ்லிம்கள் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, தாங்கள் சகோதரர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.

— ஆர்.எல்.மெல்லமா, ஹாலந்து, மானிடவியலாளர், எழுத்தாளர், அறிஞர்.

முஹம்மது நபி பற்றி

இறைத்தூதர்களிலேயே அதிகமாக வெற்றியடைந்தவர் முஹம்மதுதான்.

— என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா.

இந்த உலகம் சார்ந்த இருபது சாம்ராஜ்ஜியங்களையும் மறுமை சார்ந்த ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவியவ ஒருவர் முஹம்மது.மனிதனுடைய பெருமையையும் புகழையும் அளக்கக்கூடிய எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், முஹம்மதைவிட சிறந்த ஒருவரை நாம் காட்ட முடியாது.

— லா மார்ட்டின், ஹிஸ்டரி துலா துர்கி (ஃப்ரெஞ்ச்), பாரிஸ்,1854, பாகம் 11, பக்கங்கள் 276-277.

அருமையான உயிர்த்தன்மை காரணமாக, முஹம்மதின் மார்க்கத்தை நான் எப்போதுமே ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். மாறிக்கொண்டே இருக்கின்ற இந்த உலகில், எல்லாவற்றையும் இணைக்கும் தகுதி படைத்த ஒரே மதமாக இஸ்லாம்தான் உள்ளது. எல்லாக் காலங்களிலும் கவரக்கூடியதாக அது இருக்கும். முஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டேன். அவர் மனிதகுலத்தைக் காக்க வந்தவர் (Saviour of Humanity). இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப் போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாக இருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டுவந்தௌ பிரச்சனைகளைத் தீர்க்க அவரால் மட்டுமே முடியும். இன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன்.

அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும்.

— ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, த ஜெனியுன் இஸ்லாம்.The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936).

சமய ரீதியாகவும், சமயம் சாராத லௌகீகம் சார்ந்த வகையிலும் வெற்றியடைந்த ஒரு மனிதரைக் காட்ட முடியுமென்றால் அது முஹம்மதுதான். அதனால்தான் இந்த உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 100 மாமனிதர்களில் முதலாமவராக நான் முஹம்மதைத் தேர்ந்தெடுத்தேன்.

— மைக்கேல் ஹார்ட், த ஹண்ட்ரட், நியூயார்க், ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி, 1978, பக்கம் 33.

அன்பின் ஆன்மாவாக முஹம்மது இருந்தார். அவருடைய தாக்கம் உடன் இருந்தவர்களால் மறக்கமுடியாததாக இருந்தது.

— திவான் சந்த் ஷர்மா, The Prophets of the East, கொல்கத்தா, 1935, பக்கம் 122.

போப்புக்கான பாசாங்குகளும், சீசருக்கான படையணியினரும், பாதுகாவலர்களும், அரண்மனையும், நிரந்தர வருமானவும் இல்லாமல், ஒரே சமயத்தில் சீசராகவும் போப்பாகவும் இருந்தவர் முஹம்மது. தெய்விக கட்டளை கொண்டு ஆண்ட ஒரு மனிதன் உண்டென்றால் அது முஹம்மதுதான்.

— பாஸ்வொர்த் ஸ்மித், Mohammad and Mohammadanism, லண்டன்,1874, பக்கம் 92.

அரேபியாவின் மாபெரும் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் வாழ்க்கையையும்,அவர் எப்படி வாழ்ந்தார், எப்படி வாழக் கற்றுக் கொடுத்தார் என்று படிக்கும் யாருக்கும் அவர்மீது மரியாதை தவிர வேறு எதுவும் ஏற்படாது.

— அன்னிபெசண்ட், The Life and Teachings of Muhammad, சென்னை,1932, பக்கம். 4.

கோடிக்கணக்கானவர்களின் இதயத்தில் விவாதத்துக்கு இடமில்லாத வகையில் இடம் பிடித்த ஒருவரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்பினேன்…இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்ற உண்மை எனக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது. இஸ்லாத்தின் பிடிவாதமான எளிமை, இறைத்தூதர் முஹம்மதுவின் பரிபூரணமான சுயநலமற்ற தன்மை, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் அவர் வைத்திருந்த மரியாதை,தன் தோழர்கள் மீதும் தன்னைப் பின்பற்றியவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த அளவற்ற பிரியம், தீவிரமான அர்ப்பணம், அவரது வீரம், எதற்கும் அஞ்சாத தன்மை, கடவுள்மீது அவர் வைத்திருந்த பரிபூரண நம்பிக்கை, அவருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பணி மீது இருந்த கடமையுணர்வு இவைதான் இஸ்லாம் பரவுவதற்குக் காரணம். ஒவ்வொரு தடையையும் மீறி இஸ்லாம் வந்தது இவைகளால்தான். வாளால் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான் படித்து முடித்து மூடியபோது, அந்த ம்காவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது.

— மகாத்மா காந்தி, ‘யங் இந்தியா’ பத்திரிக்கையில் 1924ல் எழுதியது.

ராணுவ வெற்றிகளின்போது, மற்றவர்களிடம் ஏற்படுவதைப்போல, பெருமையோ வீண் பேச்சோ முஹம்மதுவிடம் ஏற்படவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் உழன்று கொண்டிருந்தபோது எப்படி எளிமையாகத் தோன்றினாரோ, நடந்து கொண்டாரோ, அப்படியே வெற்றியின் உச்சியில் இருந்த போதும் இருந்தார்.அநாவசியமாக தனக்கு மரியாதை தரப்படுவதை அவர் வெறுத்தார்.

— வாஷிங்டன் இர்விங், Life of Muhammad, நியூயார்க், 1920.

ரொம்ப உற்சாகமாக நம்மவர்கள் முஹம்மதைப் பற்றிச் சொன்ன பொய்களும் அவதூறுகளும் நம்மையே கேவலப்படுத்துவதாக உள்ளது.

— தாமஸ் கார்லைல். Heroes and Hero Worship and the Heroic in History, 1840.

கற்பனையான குற்றச் சாட்டுக்களிலிருந்தும் கற்பனையான அச்சங்களிலிருந்தும் நீங்கள் மீண்டு வரவேண்டும். முஸ்லிம் துவேஷத் தவங்கள் விஸ்வாமித்திரர்களுக்கு நிச்சயம் வரங்கள் தரப் போவதில்லை.

நாகூர் ரூமி

ruminagore@gmail.com

Series Navigation

author

நாகூர் ரூமி

நாகூர் ரூமி

Similar Posts