நேச குமார் மற்றும் ஜெயமோகன் பார்வைகளுக்கு

0 minutes, 3 seconds Read
This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

தாஜ்


நண்பர் நேச குமார் இலக்கியத்தின் பக்கம் நகர்ந்து வந்திருப்பது வித்தியாசமான கோணம். அவரது மேதமையை வேறு வேறு பக்கங்களில் படித்திருக்கிறேன். பொதுப் பிரச்சனைகளை யொட்டி அவர் எழுதிய கட்டுரைகள் நிஜத்தை சார்ந்த தாகவே இருந்தது. உதாரணத்திற்கு சங்கராச்சாரியார் கைதானபோது அவர் எழுதிய கட்டுரையைச் சொல்லலாம். தவிர சு.ரா. இறந்ததையொட்டி கட்டுரையும் அப்படித்தான். நிஜமும், யதார்த்தமுமாக இருந்தது. மதசர்ச்சைகள் குறித்த அவரது எழுத்தில் உழைப்பு அதிகம். அந்த கட்டுரைகள் சிலவற்றை விரும்பி வாசித்திருக்கிறேன்.

இப்பொழுது இலக்கியத்தின் பக்கம், சில கணிப்புகளுடன் அவர் எழுதி இருப்பது அபத்தமாக இருக்கிறது. உடன் பாடும் இல்லை. புதிதாக இலக்கியம் குறித்து அவர் ஆர்வம் கொண்டு, இந்தப் பக்கம் இளம் நடைபோட்டிருப்பதால் நேர்ந்த தடுமாற்றம் இது.

சாருவும், ஜெயமோகனும்தான் இன்றைக்கு சிறந்த எழுத்தாளர்கள் என்பது, வேடிக்கையான கணிப்பு. யதார்த்த நோக்கில் சாருவும், ஜெயமோகனுமே இதை ஒப்புக் கொள்வார்கள் என்று தோன்றவில்லை. சொல்வதற்கில்லை, அவர்கள் அதை ஒப்புக்கொண்டாலும் கொண்டதுதான். ஆச்சரியப்படுவதற்கில்லை!! இருவருமே கொஞ்சம் முறுக்கிக் கொண்ட பேர்வழி கள்தான்.

சாரு, அவரது நண்பர் ஒருவருடைய ஆக்கத்தை தனது பெயரில் பிரசுரித்துக் கொண்டதை நேச குமார் சுட்டிக் காட்டி, தீர்ப்பையும் எழுதி இருக்கிறார். அவரது தீர்ப்பு சாருவை நியாயப்படுத்துவது மாதிரியும், மழுப்பல் கூடியதாகவும் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட நண்பரது மனநிலையைப் பற்றியோ, இன்றுவரை சாரு அதற்கு சாரி சொல்லாத்தைப் பற்றியோ நேச குமார் யோசிக்காதுப்போனது வியப்புதான்!! காலத்தின் விசாரணையின்போது அவர் என்ன சொல்லி மீள்வார்யென நேச குமார் குறிப்பிட்டிருப்பது சரி. ஆனால் அதன் தொடர்சியான தாக்கத்தின் முன், அவரால் அவரை மீட்டுக்கொள்ள முடியாது.

வேறொரு வலைத்தளத்தில் நண்பர் நேச குமார் சாருவை தீரவிமர்சித்து வெறுத்திருந்தார். இப்பொழுது சாருவை ‘நமது’ என்ற ஒருமையிலும், நட்புடனும் கைகோர்த்திருக்கிறார். நேசத்தின் கரங்கள் மீண்டும் நீள்வதில் எனக்கும் மகிழ்ச்சி தான், ஆனால் ஒரு விமர்சகனின் பார்வை இப்படி திடுதிப்பென்று மாற்றம் கொள்வதிலான உள்ளார்ந்த தன்மைகளின் மீது கேள்விகள் கசியத்தான் செய்யும். கசியவும் கசிகிறது.

‘தம்மூர் முஸ்லிம் அன்பர் ஒருவர்’ என்று நேச குமார் சுட்டியிருக்கும் அந்த அன்பரது படைப் பின் ஆளுமைக் குறித்து நண்பர் நேச குமார் அறிந்திருக்கமாட்டார்! தமிழில் இரண்டு பெரிய எழுத்தாளர்களுல் ஒருவராக நேச குமார் குறிப் பிட்டிருக்கும் சாரு, தனது தேவைக்காக உபயோகப் படுத்திக் கொண்ட எழுத்திற்கு சொந்தக்காரர் அவர்!! வளமும், வனப்பும் கூடும் எழுத்துக்காரர்!! தனது சொந்த இன மக்களையே விமர்சனத்திற்கு உட்படுத்திப் பார்க்கும் தீர்க்க மான சிந்தனையாளி!! ஆபிதீன் என்கிற அந்த படைப்பாளியை, நவீன இலக்கிய உலகம் திரும்பிப் பார்க்கும் நாள் என்பதும் வெகுதூரத்தில் இல்லை.

**
ஜெயமோகனின் மொளனம் கலைந்திருப்பது வரவேற்கத்தக்கது. திண்ணையில் வாசிக்க நேர்ந்த அவரது ‘இருகலைஞர்கள்’ மிகவும் தட்டையாக இருந்தது. குமுதம் ஒரு பக்கக் கதைக்கு போட்டியோ என்றுகூட நினைக்கத் தோன்றிற்று. சுமார் இருபது வருட காலமாக நான் வாசித்த அவரது சிறுகதைகளில், இப்படியொரு சாதாரண கதை மையத்தை நான் கண் டதில்லை. ‘கைபோகும் போக்கிற்கு தடையற எழுத வரும்’ எழுத்து என்பது இதுதானோ என்னமோ!

ஒரு புகைப் படத்தை பார்த்து அழுவதற்குகாக வேண்டி, யுவராஜா சற்றும் யோசிக்காமல் ஜெ.கே.யும் அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை போனதே அதிகம்! அதையும் தாண்டி ஜெ.கே.யைப் பார்த்து “உங்களால் ஏன் அழமுடியவில் லை?” என்று கேட்பது நிச்சயம் அத்துமீறும் விசயம்தான். சரியாகத்தான் ஜெ.கே. சாடியிருக்கிறார். ‘கள்ளமோ கரைந்தழும்’ என்று. ஜெயமோகன் கூட தாளாமையால் கரைந்தழுகிறவர்தான். பார்த்துமிருக்கிறேன்/கேட்டுமிருக்கிறேன்.

**

satajdeen@gmail,com

Series Navigation

author

தாஜ்

தாஜ்

Similar Posts