கண்ணகி சிலை விமரிசனங்களில் ஏன் இந்து விரோதக் காழ்ப்புணர்ச்சி?

0 minutes, 11 seconds Read
This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

ஜடாயு


ஜூன்15 திண்ணை இதழில் ‘கண்ணகி எதன் அடையாளம்?’ கட்டுரையில், ராமாயணம் தொலைக்காட்சித் தொடர் போன்று சிலப்பதிகாரத்தைத் தொடராக்கும் கோரிக்கயைக் கண்டுகொள்ளாமல் அரசு விட்டுவிட்டதாக எழுதியிருக்கிறார். இது தவறு, சிலப்பதிகாரம் மத்திய அரசு பணித்ததன் பேரில் தூர்தர்ஷனில் தொடராக எடுத்து ஒளிபரப்பப்பட்டது – இந்தத் தொடரை உருவாக்கியது கிருஷ்ணசாமி அசோஸியேட்ஸ் நிறுவனம். “கண்ணகீ .. மாதவீ… மணீமேகலை..” என்னும் typical டி.வி சீரியல் தொனியில் அமைந்த சீரியல் பாடல் கூட நினைவு வருகிறது. மாதவி பாத்திரத்தில் சிறந்த நடனக் கலைஞர் அர்ச்சனா ஜோக்லேகர் நடித்தார் என்று நினைக்கிறேன்.

இன்னொன்று – கண்ணகிக்காக வரிந்து கட்டிக்கொண்டு கடிதம் எழுதும் கண்மணிகள் சிலருக்கு ராமாயணம், மகாபாரதம், இந்து சமயம் பேரில் ஏன் இந்த அளவுக்கு வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும்? திராவிட இயக்க நச்சுப் பாம்புகளின் விஷம் இன்னும் இந்த ஆசாமிகளை விட்டு இறங்கவில்லை என்றே தெரிகிறது. இந்த இதிகாசங்கள் மற்றும் வேறு பல புராணங்கள் பற்றிய குறிப்புக்கள் சிலம்பிலேயே ஏராளம் உள்ளன என்பது சிலப்பதிகாரத்தை சாதாரணமாகக் கற்றவர்க்கே விளங்கும். சிலம்பில் வரும் கண்ணகி, கோவலன், செங்குட்டுவன் இமய வெற்றி இதெல்லாம் தமிழரின் தொன்மை மரபின் அடையாளங்களாம், ஆனால் அதே சிலம்பில் வரும் சிவன், ராமன், கண்ணன், துர்க்கை துதிகள், வேத, புராண, இதிகாசக் கருத்துக்கள் எல்லாம் எல்லாம் ‘ஆரிய’ ‘இந்துத்துவ’ சமாசாரங்களாம், வெறுக்கத் தக்கவையாம், தமிழ் மரபின் கூறுகளே இல்லையாம், ஒருவேளை இளங்கோ ‘அன்னியன்’ மாதிரி splilt personality ஆக இருந்திருப்பாரோ? திராவிட பகுத்தறிவின் மேதா விலாசம் இதற்கும் விளக்கம் அளிக்கும் !

ஆய்ச்சியர் குரவையில் வரும் ‘நாராயணா என்னா நாவென்ன நாவே’ போன்ற பக்திரசம் பொங்கும் பகுதிகளையெல்லாம் கதை மாந்தர் வாயிலாகத் தானே இளங்கோ இவ்வாறு கூறுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். நகர் நீங்கு காதையில் “அருந்திறல் இழந்த அயோத்தி போல, பெரும்பெயர் நகரம் பெரும் பேதுற்றது” போன்ற கவிக்கூற்றாகவே வரும் வரிகளை என்ன சொல்வது? “கோவலனும், கண்ணகியும் விட்டுப்பிரிந்த புகார் நகரம் ராமனை விட்டுப் பிரிந்த அயோத்தி போல துயரமடைந்தது” என்று உவமை சொல்லும் அளவுக்கு ராமாயண காதை தமிழ் மண்ணில் வேரூன்றி இருந்திருக்கிறது, இளங்கோவின் காலத்திலேயே ! கண்ணகியைப் போற்றுவோம் – வணங்குவோம் – சிலை வைப்போம், ஆனால் கண்ணகியும், அவளது காவியம் படைத்த இளங்கோவும், அவர் காலத்திய தமிழ்ச் சமுதாயமும் போற்றி வணங்கிய சிவன், சக்தி, திருமால், அவர்கள் வழிபாடு பற்றி வந்த இந்து சமய மரபை இகழ்வோம், எதிர்ப்போம், அவமதிப்போம் – திராவிட இயக்கத்தின் அறிவு ஒருமை (intellectual integrity) பிரமாதம் !

இந்துத்துவ, சங்க பரிவாரத்தின் நிலைப்பாடு இந்த விஷயத்தில் மிகச் சரியாகவும், நேர்மையாகவும், தெளிவாகவும் இருக்கிறது. பாரத நாட்டின் எல்லா பகுதிகளிலும், மதித்துப் போற்றப்படும் மரபின் பிரதிநிதிகள் அனைவரும் இந்து மரபின் அடையாளங்களே என்பதே சங்க கொள்கை. எல்லா ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களிலும் பாடப் படும் ‘ஏகாத்மதா ஸ்தோத்திரம்’ என்னும் பாடலில், கண்ணகியின் பெயர் மற்ற வீராங்கனைகள், சிறப்புமிக்க பெண்களுடன் கூட துதிக்கப்படுகிறது.

அருந்தத்யனசூயா ச சாவித்ரீ ஜானகீ ஸதீ
த்ரௌபதீ கண்ணகீ கார்க்கீ, மீரா துர்காவதீ ததா (சுலோகம் 10)
(நன்றி: http://www.hssworld.org/homepage/html/boudhik/ekatmata_stotra/all.html)

இது மட்டுமல்ல, பஞ்சாபிலும், அஸ்ஸாமிலும், குஜராத்திலும் மற்றும் நாடு முழுதும் கூடும் எல்லா ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் கண்ணகி, திருவள்ளுவர், அகத்தியர், கம்பர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் இவர்கள் நினைவைப் போறும் வகையில் பெயர் கூறி அவர்களைத் துதிக்கிறார்கள், இதே தோத்திரத்தின் வேறு வேறு சுலோகங்களில். தமிழ்ப் பண்பாட்டின் குறியீடுகளை நாடு முழுவதும் போற்றி வணங்க வைத்தது தி.க, தி.மு.க இல்லை ஐயா, ஆர்.எஸ்.எஸ் தான் அதைச் செய்தது!

கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்
நம்பரும் திறலோடொரு பாணினி ஞாலமீதில் இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதி கண்டுண்மையின் இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும்

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பாரளித்துத் தருமம் வளர்த்ததும்
பேரருட்சுடர் வாள்கொண்டசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்..”

தமிழ்ப் பண்பாடும், பாரதப் பண்பாடும் அற்புதமாக பாரதி பாடலில் ஒன்று கூடி வருவதைப் பாருங்கள்! இதைத் தான் இளைய தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமே அல்லாது பழைய ஆரிய-திராவிட, வடக்கு-தெற்கு மற்றும் சாதி துவேஷம் வளர்க்கும் குப்பை சமாசாரங்களை அல்ல.

jataayu_b@yahoo.com

Series Navigation

author

ஜடாயு

ஜடாயு

Similar Posts