K.ரவி ஸ்ரீநிவாஸ்
திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,
மறையும் மறையவர்கள்: கோயிலைச் சூழும் அரசியல் என்ற தலைப்பில் எஸ். இராமச்சந்திரன் எழுதியுள்ள கட்டுரை சில கேள்விகளை எழுப்புகிறது. கடந்த காலச் சான்றுகள் சிலவற்றைப் புரிந்து கொள்ள உதவும். இன்றைய சூழலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது குறித்து விவாதிக்க நாம் அரசியல் சட்டம் கூறும் வழிபாட்டு உரிமையையும், பிறப்பின் அடிப்படையிலான பாரபட்சங்களை நீக்குவது ஆகியவை எப்படி விளக்கப்பட்டுள்ளன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். நாத்திகத்தில் நம்பிக்கை உள்ள கட்சி ஆளும் போது அது கோயில்கள் குறித்து எதுவும் செய்யக் கூடாது என்றெல்லாம் வாதிட முடியாது, அதற்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை.அதே சமயம் அரசு எந்த அளவு கோயில் வழிபாட்டு முறைகளில் தலையிடலாம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. அந்த வழக்கு ஒரு குறிப்பிட்ட கேள்வியைப் பற்றியது, அர்ச்சகராக பிராமணர்கள் மட்டும்தான் இருக்கலாமா, முறையான பயிற்சியும், தகுதியும் உடைய இன்னொருவர், பிரமாணரல்லாதவர், அர்ச்சகராக பணி புரிய முடியாதா ?. உச்ச நீதிமன்றம் நடைமுறையில் பிரமாணர்தான் அர்ச்சகராக இருந்தாலும், பிராமணர் அல்லாதோர் அர்ச்சகராக இருக்க தடையில்லை, அவர்(கள்) முறையான பயிற்சியும், தகுதியும் பெற்றிருந்தால் என்று தீர்ப்பளித்தது.இது கோயில் நடைமுறைகளில், வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் கொண்டுவர அனுமதிக்கும் தீர்ப்பல்ல. தமிழ் நாட்டுக் கோயில்களைப் பொருத்த வரை இத்தீர்ப்பினை முன் வைத்து கோயில் நடைமுறைகளில்,பழக்க வழக்கங்களில்,வழிபாட்டு முறையில் மாற்றம் செய்ய முடியாது. வேறு வார்த்தைகளில் சொன்னால் அர்ச்சகர் எந்த ஜாதியாக இருந்தாலும் ஆகம முறையைப் பின்பற்றும் கோயில்களில் ஆகம விதிகள், தொன்று தொட்டு பின்பற்றப் படும் நடைமுறைகளைத் தான் பின்பற்ற வேண்டும். இத்தீர்ப்பினை காரணம் காட்டி தமிழ் வழிபாட்டினை திணிக்க முடியாது, ஆகம விதிகளை நாங்கள் மாற்றுவோம் என்று அரசு கூற முடியாது.ஆன்மிக விஷயங்களில் அரசுக்கு கட்டற்ற சுதந்திரம் இல்லை. இருக்கிற அர்ச்சகர்களின் உரிமைகளைப் பறிக்க முடியாது. சில பகுத்தறிவாளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் இத்தீர்ப்பினை வேறு விதமாகப் புரிந்து கொண்டால் அது அவர்களின் பிழை மற்றும் அறியாமை.
இந்த ஆணை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளினை எடுத்துவிட்டது என்று நாடகீயமாக அறிக்கை விடலாம், கலைஞர் போற்றி, வீரமணி போற்றி என்று எழுதலாம். ஆனால் உண்மை மிகவும் வித்தியாசமானது. அது பத்திரிகைகளும், இதை வாழ்த்துவோரும் முன் வைக்கும் எளிமைப்படுத்தப்பட்ட புரிதல்களுக்கு அப்பாற்பட்டது.அது சிக்கலானது,பல பரிமாணங்கள் கொண்டது. இதைப் பற்றி விரிவாக எழுதக்கூடும்.
கடந்த இதழில் இட ஒதுக்கீடு குறித்து எழுதியிருந்தேன். தலித்கள்,பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டினை நான் அங்கு கேள்விக்குட்படுத்தவில்லை, அது தேவை, தொடர வேண்டும் என்று கருதுகிறேன். பிற்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்தே அக்கட்டுரையில் எழுதியிருக்கிறேன். ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீடு என்ற கருத்தாக்கமே கட்டுடைக்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து. என் வலைப்பதிவிலும் இட ஒதுக்கீடு குறித்து பதிவுகள் இருக்கின்றன. வாசகர்கள் அதையும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கற்பக விநாயகம் கோயில்கள், சிறுபான்மை, குறித்து எழுதியிருக்கிறார். அவர் கட்டுரை ஒரு தலைப்பட்சமாக உள்ளது. வழக்கமான தி.க கண்ணோட்டத்தினைத் தாண்டி இதை அவர் புரிந்து கொள்ள முயல வேண்டும். வழிபாட்டு உரிமை அனைவருக்கும் பொதுவானது. நாளைக்கே பெரியாருக்கு ‘கோயில்’ எழுப்பி பெரியார் பக்தர்களாகிய நாங்கள் ஒரு பிரிவினர், பெரியாரிய நாத்திகம் எங்கள் மதம் என்று உரிமைகள் கோர முடியும். கோயில்களுக்கு சொத்துத் தேவையில்லை என்றால் பிற வழிபாட்டுத்தலங்கள், தூதர்கள், இறைப் பிரதிநிதிகள் பெயரில் உள்ள வழிப்பாட்டுத் தலங்களுக்கும் அவை தேவையில்லை என்பது மதச்சார்பற்ற நிலைப்பாடாக இருக்க முடியும். இந்து மதக்கோயில்களுக்கு சொத்துக்கள் வேண்டாம், பிற மதங்கள் குறித்துப் பேச மாட்டோம் என்பது போலி மதச்சார்பின்மை. ஒரு புறம் இந்து மதத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை எடுக்கும் ‘பகுத்தறிவு/முற்போக்கு,மதசார்பற்ற வாதிகள்’, இன்னொரு புறம் இந்து மதக் கோயில்களிலிருந்து அரசுத் தலையீட்டினை நீக்குவது என்ற பெயரில் இந்த்துவ நிலைப்பாடு எடுப்பவர்கள். நான் இந்த இரண்டு நேரெதிர் நிலைப்பாடுகளையும் ஏற்க மாட்டேன். அரசியல் சட்டம் தரும் உரிமைகள், மனித உரிமைகள், வழிபாடு குறித்த சமூகங்களின் உரிமைகள் இவற்றின் அடிப்படையிலேயே இதை அணுக வேண்டும் என்று கருதுகிறேன். இதில் தனிப்பட்ட நம்பிக்கைகளையும், நிலைப்பாடுகளையும் போட்டு குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. தீவிர நாத்திகர் கூட வழிப்பாட்டு உரிமையினை, மத நம்பிக்கை குறித்த உரிமைகளை மனித உரிமைகளின் அடிப்படையில் ஆதரிக்க முடியும். அப்போது வழிபாட்டுத் தலங்களை ஏற்படுத்த, நிர்வகிக்க உரிமை ஒரு மதத்தினை சார்ந்தவர்களுக்கு அல்லது ஒரு பிரிவினருக்கு உண்டு என்பதை ஏற்க முடியும்.மேலும் அரசு இதில் தேவையில்லாத போது தலையிடக் கூடாது என்றும் வாதிட முடியும்.
K.ரவி ஸ்ரீநிவாஸ்
http://ravisrinivas.blogspot.com/
ravisrinivas@rediffmail.com
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-2)
- “தமிழர் மருத்துவமே வர்மக்கலை!” – சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்
- பூநீறு: சித்த மருத்துவத்தின் பெருமிதம்
- செர்நோபில் அணுமின் உலை விபத்தின் காரணங்கள் -5
- இளவேனில் கடற்கரை – புகைப்படத் தொகுப்பு
- கீதாஞ்சலி (74) ஆத்மாவின் கருவில் உறைபவன்.
- இளவேனில் நிழல்கள் – புகைப்படத் தொகுப்பு
- கடித இலக்கியம் – 6
- நரசய்யாவின் ” கடல்வழி வணிகம் ” : மகிழ்வூட்டும் ஒரு சிறப்பான வரவு
- ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் வாழ்வும் பணியும்
- மரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..?
- வளர்ந்த குதிரை (4)
- அக்ஷ்ய திருதியை
- ஓட்டைப் பானைகளில் ஊற்றப்பட்ட தண்ணீர்
- கடிதம்
- கடிதம்
- அறிவு ஜீவிகள்………?!
- கடிதம்
- கடிதம்
- லெமூரியா கொண்ட கலைஞர்
- அரவாணிகளின் முதல் வாழ்க்கை ஆவணம்
- புன்னகையின் பயணம்…
- மறுபடியும் ஒரு மகாபாரதம் அத்தியாயம் – 22
- குறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா! – 4
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 7)
- வானமே கூரை.
- தனிமரம் நாளை தோப்பாகும் – 4
- மார்க்ஸின் ஆவியுடனான உரையாடல்
- புலம் பெயர் வாழ்வு – 12 – ‘Free Man’ பட்டத்தோடு இருக்கும் தமிழர்கள்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல்
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 5 : வியப்பில் வாழ்தல்
- நான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி
- இட ஒதுக்கீடு: எதிர்க்க வேண்டியவர்கள் தலித்துகளும் வனவாசிகளும்
- ஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்
- கயிறெடுத்தான் உயிரெடுக்க
- நெருப்பு நெருப்பு
- பெரியபுராணம் – 89 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- யாருமற்ற கடற்கரை
- கடிதம்