கடிதம்

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

அரவிந்தன் நீலகண்டன்


அவுரங்கசீப்பின் ஆட்சிக்கும், ஹிட்லரின் யூத வெறுப்புக்கும் வக்காலத்து வாங்கியுள்ள ஹமீது ஜா·பர் எனக்கும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். நன்றி ஜா·பர். சகோதரர் ஜா·பர் நிச்சயமாக எனது அவுரங்கசீப் குறித்த கட்டுரையை மீண்டும் ஒருமுறை வாசிக்கட்டும். அதில் எந்த இடத்தில் நான் எலியட் & டவ்ஸனை பயன்படுத்தியுள்ளேன் என மீண்டும் ஒருமுறை சரி பார்க்கட்டும். ஜா·பர் போன்றவர்கள் எலியட் & டவ்ஸனை பயன்படுத்தினால் ‘ஆங்கிலேய பிரித்தாளும் சூழ்ச்சி’ எனக் கூறுவார்கள் என்பதற்காகவே சிறிதே கஷ்டப்பட்டு இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் கூறியவற்றினை இஸ்லாமிய வரலாற்றறிஞர்கள் (ஆம் ஜாப்பர், வரலாற்றறிஞர்கள்) மொழிபெயர்த்தவற்றைத் தேடிக்கண்டுபிடித்து அளித்திருந்தேன். உதாரணமாக, நான் பயன்படுத்திய ·பதுகத்-இ-அலம்கிரி தன்ஸீம் அகமதுவால் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நூலின் 82 ஆவது பக்கத்தில் உள்ள விசயத்தை மீண்டும் ஜா·பருக்கு நினைவூட்டலாமா? “பேரரசர் அப்துல் நபி கானுக்கு மதுராவில் உள்ள ஒவ்வொரு கோவிலையும் உடைத்து அங்கே பெரிய மசூதிகளை எழுப்ப உத்தரவிட்டார்.” அல்லது ஜிஸியா விவகாரத்தையும் சத்நாமிகள் புரட்சி மற்றும் அவர்களது படுகொலை விவகாரத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.
1.ஜிஸியா அதீதமான அளவில் கொடுமையாக வசூலிக்கப்பட்டது.
2.இது இராணுவ அதிகாரிகளால் வசூலிக்கப்பட்டது.
3.இதற்கு எதிர்ப்பு காட்டிய ஹிந்துக்கள் அவுரங்கசீப்பின் நேரடி ஆணையின் பெயரில் ஆனைகளால் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
இதற்கான ஆதாரமாக நான் காட்டுவது வெள்ளைக்காரன் எழுதிய வரலாற்றினை இல்லை. வரலாற்றாசிரியரான கவாஜா மிரின் மகனும் வரலாற்றாசிரியருமான காபி கான் எனப்படும் முகமது காசிம் எனும் காசில் அலி கான் எழுதிய முந்தகாபு-இல்-லுபப் முகமது ஷாஹி (எனும்) தாரிக்-இ-காபி கான் எனும் நூலை. இந்நூலின் மொழிபெயர்ப்பு எலியட் & டவ்ஸனால் செய்யப்பட்டது உள்ளது. ஆனால் நான் பயன்படுத்திய மொழிபெயர்ப்பு எஸ்.மொய்னுல் ஹக் எனும் இஸ்லாமியரால் செய்யப்பட்டது. அதனை வெளியிட்டவர்கள் கராச்சியின் Pakistan Historical Society அமைப்பினர். வருடம் 1975. ஹிந்துக்கள் சாத்தியப்படும் போதெல்லாம் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு நான் காட்டியுள்ள ஆதாரம் முகமது யாசின் எழுதிய A Social History of Islamic India எனும் நூல். ஆக, முகமது யாசினும், தன்ஸீம் அகமதுவும், மொய்னூல் ஹக்கும் எழுதிய மற்றும் மொழிபெயர்த்த நூல்களை முன்வைக்கிறேன். ஆனால் ஜா·பருக்கோ எலியட் & டவ்ஸனாக தெரிகிறது. இது மட்டுமல்ல சீக்கிய ஆவணங்கள் கூறும் அவுரங்கசீப்பின் கொடுமைகளை நான் இன்னமும் பட்டியலிடவில்லை. குரு தேஜ்பகதூரின் சீடர்களுக்கு செய்யப்பட்ட சித்திரவதைகள், குரு தேஜ்பகதூரினை கொன்றது மற்றும், குருகோவிந்த சிங்கின் இரு பாலகர்களை மதம் மாற நிர்ப்பந்தப்படுத்தி அவர்களை உயிருடன் சமாதி வைத்த காட்டுமிராண்டித்தனம் – இவை அனைத்தையும் செய்த கொடுங்கோலன்தான் அவுரங்கசீப். இத்தகைய ஒருவன் சீக்கிய குருத்வாராக்களுக்கு மானியம் வழங்கினான் என்பது எத்தகைய கொடூரமான நகைசுவை. ஹிட்லர் யூத வழிபாட்டுத்தலங்களுக்கு மானியம் வழங்கினான் என்பது போல.

மேலும் ஜா·பரினால் கூறப்படும் பர்மான்கள் அவுரங்கசீப்பின் நேரடி உத்தரவின் கீழ் வழங்கப்பட்டவை அல்ல. தப்பிப்பிழைத்தவை என்பது நான் கூறும் வாதம். மாசிர்-இ-லம்கிரி, அக்பரத், ·பாத்தியா-இ-இப்ரியா, கலிமத்-இ-அவுரங்கசீப், மரகத்-இ-அபுல் ஹ¤சைன், ·பதுகத்-இ-அலம்கிரி, கன்ஸ¤ல் மக்பஸ், முந்திகபு லபப் கிய அனைத்துமே அவுரங்கசீப் குறித்த மொகலாய வரலாற்று ஆவணங்கள். இவை ஒவ்வொன்றிலும் அவுரங்கசீப் கோவில்களை இடிக்க அளித்த உத்தரவுகள் மலிந்து கிடக்கின்றன. ஆனால் இவை எதிலுமே அவுரங்கசீப்பால் கோவில்களுக்கு மானியம் அளிக்கப்பட்டதாக இல்லை. மாறாக பாண்டே தாம் கண்டதாக கூறிய செய்தி மட்டுமே உள்ளது. ஏன் அத்தகைய மானியங்கள் அளிக்க பிறப்பித்த அரசாணை தொகுப்பு கூட வெளியிடப்படவில்லை. மாறாக, இவர் பார்த்தார், அவர் கேட்டார் என்கிற ரீதியிலான செய்திகள் மாத்திரமே உள்ளன. சரி நான் மடையன், அறிவில்லாதவன், வரலாற்றாசிரியர்கள் கூறியதை அப்படியே ஒப்புவிப்பவன் என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஜா·பர் அவ்வாறல்ல. அவர் வரலாற்றாசிரியர்களை கடந்து வரலாற்றிஞர்களை எல்லாம் கரைத்து குடித்து, மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்கிற நிலையில் உள்ளவர். ஹிட்லர் யூதர்களை வெறுத்ததற்கு காரணம் யூதர்கள் ஜெர்மானிய பொருளாதாரத்தை நாசமாக்கியது என்கிற அளவில் ஆழமான வரலாற்றறிவு உள்ளவர். நிச்சயமாக தலிபான்கள் ஹிந்துக்களை அடையாளம் தெரியும் படியான உடையணிய சொன்னதற்கு பின்னணியில் உள்ள நியாயமான காரணத்தைக் கூட அவர் நமக்கு சொல்லுவார். எனவே அவுரங்கசீப் கோவிலுக்கு அளித்த பர்மானை தேதி சகிதம், வாக்கியசுத்தமாக முன்வைத்தால் அது கிடைக்கப்பட்ட ஆவண ஆதாரத்தையும் முன்வைத்தால் சிறிதே என்னைப் போன்றவர்கள் பயனடைவார்கள். உதாரணமாக, சாஹி முஸ்தாத் கான் எழுதிய “மா ஸிர்-இ-ஆலம்கிரி” கூறுவது போல: “இசுலாமிய ஆண்டு 1080 இன் இந்த ரம்ஸான் அற்புதங்களின் காலமாக இருந்தது. நீதியை நிலைநாட்டுபவரும், அநீதியை அழிப்பவருமான பேரரசர் மதுராவில் இருந்த புகழ்பெற்ற கேசவநாதர் கோவிலை உடைத்தழிக்க உத்தரவிட்டார். விரைவில் அந்த பொய்மைதலம் அழித்தொழிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஒரு உன்னதமான மசூதியை பெரும் பொருட்செலவில் எழுப்பினார்… .அக்கோவிலில் இருந்த விக்கிரகங்கள் ஆக்ராவுக்கு கொண்டு வரப்பட்டு பேகம் சாகிப் மசூதியின் படிகளில், இஸ்லாமியர்களின் கால்களால் தினந்தோறும் மிதிபடும் படி போடப்பட்டன.” இதே மாதிரியான தெளிவுடன் “பேரரசர் அவுரங்கசீப் இன்ன ஹிந்து கோவிலுக்கு இத்தனை ரூபாய் அல்லது இவ்வளவு நிலம் மானியம் வழங்க உத்தரவிட்டார்” என்கிற மாதிரியாக ஒரு கட்டளையை மேல் கூறிய நூல்களிலிருந்து காட்டட்டும். அதன் பின்னர் ஜிஸியாவின் உண்மைத்தன்மை மற்றும் ஸக்கத் குறித்து விரைவில் விரிவாக கூறுகிறேன்.
————————————————-
aravindan.neelakandan@gmail.com

Series Navigation

author

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

Similar Posts