கடிதம்

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

இந்திரா பார்த்தசாரதி


‘சரித்திரம் ஒரு குப்பைத் தொட்டி ‘ என்றார் ஹென்றிி ஃபோர்ட். அது உண்மயாகிக் கொண்டு வருகிறது போல் தோன்றுகிறது. இந்தக் குப்பைத் தொட்டியில் சத்தியத்தைத்

தேடுவது, வைக்கோல் போரில் குண்டூசியைத் தேடுவது போல்தான்.

டேவிட் இர்விங் என்பவர் பிரிட்டிஷ் சரித்திரப் பேராசிரியர். அவர் கருத்தின்படி, இரண்டாம் உலகப் போரின்போது, ஆறு மிலியன் யூதர்கள், ஜெர்மானிய நாஸிகளால்

கொல்லப்பட்டார்கள் என்ற சம்பவம் (Hollocaust) ஒரு கற்பனை, அது நடக்கவே இல்லை என்பதுதான். அவருடைய இந்தக் கூற்று மற்றைய வரலாற்றாசிரியர்களைத்

திடுக்கிட வைத்தது. அவர் யூதர்களின் எதிரி என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு,

அவர்மீது வழக்குத் தொடரப்பட்டது. பல் நாடுகளில், Holocaustயை மறுப்பதே சட்டப்படிக் குற்றம். இர்விங் தொடர்ந்து தான் சொல்வதுதான் சரியென்று தமக்குத்

தோன்றிய சரித்திர ஆதாரங்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்.

அவருக்கு ஆதரவாகச் சமீபத்தில் ஈரானிலிருந்து ஒரு குரல் ஒலித்தது. ஈரானிய அதிபர், Holocaust உலக யூத லாபியின் சரடு என்றார். இதுதான் திவீர வலது சாரியினரின் மதம் தாண்டிய ஒற்றுமைக்குச் சான்று.

ஆஸ்திரியாவுக்கு விஜயம் செய்த டேவிட் இர்விங்கை ஆஸ்திரியப் போலிஸ் போனவாரம் கைது செய்துவிட்டது. ஏனென்றால் அந்நாட்டின் சட்டப்படி Holocaustயை

மறுப்பது சட்ட விரோதம். ஹிட்லர் ஓர் ஆஸ்திரியன். வரலாற்றூ முரண் நகைக்கு

(historical irony) இதைவிட வேறு எது சிறந்த உதாரணமாக இருக்க முடியும் ?

இப்பொழுது டேவிட் இர்விங் தாம் முன்னர்க் கூறியவை யாவும் தாம் சரித்திரத்தைத் தப்பாகப் புரிந்து கொண்டதுதான் காரணம், Holocaust மறுக்கவியலாத வரலாற்றுச்

சத்தியம் என்கிறார்!

சரித்திரம் என்ன பாடு படுகின்றது பாருங்கள்!

இந்திரா காந்தி பாரதப் பிரதமாரக இருந்தபோது, இருபதாம் நூற்றாண்டு பாரத ‘வரலாற்று உண்மைகளை ‘ ( அவர் மனத்துக்குப் பட்ட ‘உண்மைகளை ‘- இதன்படி பாரத சுதந்திரத்துக்கு நேரு குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் முயன்றதாகத் தெரிய வில்லை) குப்பிகளில் மைக்ரோஃபிலிம்களாக அடைத்து பூமியில் ஆழப் புதைத்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு இவற்றைத் தோண்டியெடுக்கும் இந்திய வரலாற்று அறிஞர்கள் இருபதாம் நூற்றாண்டு இந்திய வரலாற்றூச் செய்திகளை இவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பதுதான் இதன் அடிப்படை நோக்கம்.

இவற்றை எழுதிய வரலாற்று அறிவு ஜீவிகள் இந்திரா காந்தியினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கல்தாம்!

1977ல் இந்திரா காந்தி தேர்தலில் தோற்றார். பதவிக்கு வந்த ஜனதா கட்சியினர் அந்த வரலாற்றுக் குப்பிகளைத் தோண்டி எடுத்து அவற்றைக் குப்பையில் எறிந்தனர்! ஹென்றி ஃபோர்ட் சொன்னது நிரூபணமாகிவிட்டது! அவை அவ்வாறு தோண்டப்படாமல், அகழ்வாரைத் தாங்கும் பூமியில் தொடர்ந்து இருந்திருந்தால்,

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு படிக்கப்படப் போகும் இந்திய வரலாறு இந்திரா காந்தி சொன்ன வரலாறாகத்தான் இருந்திருக்க முடியும்!

சரித்திரம் என்ற களிமண்ணை வைத்துக் கொண்டு, நம் விருப்பத்துக்கேற்ற உருவத்தை நம்மால் படைத்துக் கொள்ளமுடியும். ‘என்னுடையதுதான் உண்மை, உன்னுடையது பொய் ‘ என்று சண்டை போட்டுக்கொாள்ளவும் முடியும்.

மகாத்மா காந்தி சுடப்பட்டபோது, ‘ஹே ராம் ‘ என்று சொன்னாரா, சொல்லவில்லையா

என்பது இப்பொழுது இரு திவீர சரித்திர விவாதம்! அவர் சொன்னால் என்பதாலோ அல்லது சொல்லவில்லை என்பதாலோ அவருக்கோ அல்லது இராமனுக்கோ என்ன பெருமை கூடிவிடப் போகிறது என்பதுதான் தெரியவில்லை!

சரித்திரப் பதிவுகள் செய்வதாகக் கூறிக் கொள்கிறவர்கள் அனைவருமே அவர் ‘உண்மைகளாகப் ‘ பதிவு செய்ய ‘விரும்புவனவற்றை ‘ மட்டுமே கூறுவார்கள். ‘ Truth is something lying dormant between two opposing statements ‘ என்று ஜி.கே.செஸ்டர்டன் கூறியிருப்பதை நினைவு கொள்ளவேண்டும்.

-இந்திரா பார்த்தசாரதி

ps0710@yahoo.com

Series Navigation

author

இந்திரா பார்த்தசாரதி.

இந்திரா பார்த்தசாரதி.

Similar Posts