கடிதம்

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

சின்னக்கருப்பன்


எனது சிறிய கட்டுரைக்கு எதிர்வினையாக திரு ரவி ஸ்ரீநிவாஸ் அவர்களும், திரு சுந்தரமூர்த்தி அவர்களும் எழுதிய கடிதங்களுக்கு சிறிய பதில்.

திரு ரவி ஸ்ரீநிவாஸ் அவர்கள் என் மீது எனக்கே இல்லாத அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார். அதற்கு நன்றி. மற்றபடி அவர் காட்டிய சுட்டிகளை நான் ஏற்கெனவே படித்துவிட்டேன். அதில் எங்கே நான் எழுத முயன்றதற்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது என்பதையும் அவர் சற்றே எழுதியிருக்கலாம். இது ஒரு நல்ல கடித முறை. முதலில் கிண்டல், அப்புறம் நான் மகா பெரிய புத்திசாலி, அறிவாளி என்பதற்கு நான் காட்டும் உரல்கள் என்று இரண்டு உரல்களை (படித்தோ படிக்காமலோ) போட்டு விடலாம். எதிர்த்து எழுதியதாகவும் ஆயிற்று, ரொம்பவும் தெரிந்திருக்கவும் வேண்டாம், அதே நேரத்தில் தன்னை அறிவாளி என்றும் காண்பித்தாய்விட்டது.

இதனைக்காட்டிலும் திரு சுந்தர மூர்த்தி அவர்களது கடிதம் குறிப்பாக சில விஷயங்களைச் சொல்கிறது.

ஜீன், பரிணாமம், இந்துத்துவ கருத்தியல்கள் ஆகியவை திராவிட ‘விளிம்பு நிலை ‘ அரசியலைப் பொறுத்தமட்டில் சாணி உருண்டைகள் என்று சொல்கிறார். அது எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஆனால் திராவிட அரசியலை விளிம்பு நிலை அரசியல் என்று சொல்வதுதான் ஆச்சரியமாகவும் சிந்திக்கத்தக்கதாகவும் இருக்கிறது. பெரியார் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த காலத்திலிருந்து மெல்ல மெல்ல இந்து கருத்தியல்களை பிற்போக்காக முத்திரை குத்தி விளிம்பு நிலைக்கு தள்ளியபின்னால், கட்சி அரசியல் ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும், பொது நபர் வழிபாடு ரீதியாகவும், மைய இடத்தில் உட்கார்ந்திருப்பது திராவிட கருத்தியலாக இன்று இருக்கிறது. ஆனால், அதனை விளிம்பு நிலை கருத்தியல் என்று சொன்னால்தான் தொடர்ந்து தன்னை underdog ஆகவும், தன்னை பாஜக போன்ற பெரும்பான்மை (தமிழ்நாட்டில்!) இந்துத்வ கருத்தியல்வாதிகளால் பலிவாங்கப்படும் பலிகடாக்களாகவும் காட்டிக்கொள்ள முடியும், அதன் மூலம் இடதுசாரி இன்னபிற (ரவி ஸ்ரீநிவாஸ்!) அறிவுஜீவிகள் மத்தியில் தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

எனக்கு பரிணாம அறிவு இல்லை என்பதற்கு அவர் காட்டியுள்ள உதாரணம், எந்த அளவுக்கு அவர் பரிணாம அறிவியலை அறிந்து வைத்திருக்கிறார் என்று காட்டுகிறது. (உனக்கு அம்மாவின் கண் என்று ஒரு பையனை காட்டி சொன்னால், அது எக்ஸ் குரோமசோமில் இருக்கிறதா ஒய் குரோமசோமில் இருக்கிறதா என்று திரு. சுந்தரமூர்த்தி அவர்கள் எகிறி குதிப்பார் என்று நினைக்கிறேன்). கொச்சையான உதாரணம்தான் நான் கொடுப்பது. ஜார்கன்களை உபயோகப்படுத்தி படிப்பவரை பயமுறுத்தும் வேலையை நான் செய்வதில்லை.(தமிழில்) ஏனெனில் அதன் மூலம் நான் சொல்லவிரும்புவது படிப்பவரிடம் போவதில்லை. நான் என்னை பெரிய படிப்பாளியாக காட்ட வேண்டுமானால் அது பயன்படலாம். மற்றபடி அதனால் பயனென்ன ? ஆகவே அதனைப் பற்றி நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. மேலும் நான் புலிகளிடமிருந்து மனிதர்கள் வந்தார்கள் என்று எங்கே எழுதியிருக்கிறேன் ? இவர் ஒரு ‘அதாவது ‘ போட்டு தன்னிஷ்டம் போல நான் எழுதியதை விளக்கி அதில் தப்பு கண்டுபிடித்து எழுதுகிறார். இதில் திரு சிவக்குமார் அவர்கள், திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் ஆகியோரையும் குறிப்பிட்டு குழு ஒன்றை உருவாக்க முனைகிறார். கட்சி சார்பு நிலைப்பாடு இல்லாமல் சிந்திக்கத் தெரியாதவர்கள், எல்லோரையும் கட்சி சார்பாகத்தான் எழுதுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு, தன் கட்சி நிலைப்பாடுக்கு எது எதிராக இருந்தாலும், கேலி கிண்டல்களையும் திட்டல்களையும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். முன்பே ஒருமுறை எழுதியதுபோல, நான் எழுதுவதுதான் சரியானது என்று கருத்து ஏதும் என்னிடம் இல்லை. விவாதங்களின் மூலம் நான் நிச்சயம் பயன்பெறுகிறேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.

எல்லோரும் இணைப்புகள், புத்தகங்கள் என்று பரிந்துரைக்கிறார்கள்.

நானும் பரிந்துரைக்கிறேன்.

1) Selfish Gene, Richard Dawkins

2) Cultural Materialism: The Struggle for a Science of Culture, Marvin Harris

3) Guns, Germs, and Steel: The Fates of Human Societies, Zared Diamond

படித்துவிட்டு வாருங்கள். பிறகு விவாதிக்கலாம்.

நட்புடன்

சின்னக்கருப்பன்

Series Navigation

author

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்

Similar Posts