கற்பு யாருடையது

This entry is part [part not set] of 22 in the series 20051006_Issue

கோவிந்த்


குஷ்பு கொளுத்தித் போட்ட 1000 வாலா அங்கங்கு வெடித்துக் கொண்டிருக்கிறது.

சில சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்…

1. கற்பு பற்றி..

கற்பு நெறிபற்றி சிலப்பதிகாரம், திருக்குறள், பாரதியார் என்றப் பெருந்தகைகள் கூறியது காண்போம்…

சிலப்பதிகார பாத்திரப்படைப்பில் , கணவனே அனைத்தும் என்று கட்டிய மனைவியும், நாட்டியக்காரி நிலையானாலும், மனதில் கொண்டவனை மட்டுமே மணாளனாக கொண்டவளுமாக இரு நிலை பார்த்தோம்.

அது உறவின் மேன்மையை சொன்னது.

கோவலா நீ கண்ணகிப் பக்கம் போனால் நான் இன்னொருவனைத் தேடுகிறேன் என்று நிலை கொள்ளவில்லை.

இதில் பெண்ணிய ஆணாதிக்க சிந்தனைகள் கிடையாது.

அன்று, பொருளீட்ட கணவன், குடும்பம் விருத்தியாக்கி வழிநடத்த மனைவி என்று வரையறுக்கப்பட்டு இருந்தது..

திருக்குறளில் பிறன்மனை நோக்கான் என்று தெளிவகச் சொல்லப்பட்டிருந்தது. பிறன்மனை என்பதை ஆண்பால் என்று மட்டும் சொல்லாமல் , கணவனோ மனைவியோ பிற மனைகளை அதாவது பிற வீட்டு மாந்தரை நோக்காமல் இருத்தல் என்றும் கொள்ளலாம்.

எப்படியோ, திருக்குறளும் தெளிவாகச் சொல்லியுள்ளது.

இந்தக் காலங்கள் தாண்டி, ஆண் – பெண் சமம் என்ற காலம் வந்த போது, பாரதி ‘ஆணுக்கும் பெண்ணிற்கும் கற்பு நெறியை பொதுவில் வைப்போம் ‘ என்றாரேயன்றி, பெண்ணை சில ஆண்களை போல் நீயும் தவறுகள் செய் என்று சொல்லவில்லை.

இவர்களுக்குச் சமூக அக்கறை இருந்தது.

எந்தக் கட்டுக்கோப்புமில்லாத ஒரு சமுதாயம் கட்டவிழ்த்து விடப்பட்ட எருது போல் தான்.

குஷ்புவோ ஈ.வே.ரா பெரியாரோ யார் சொன்னாலும் கற்பு பற்றிய சிந்தனை அவர்களின் தனிப்பட்டக் கருத்து எனக் கொள்ளலாம். ஆனால் இருவருமே பாரதியாரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய…

குஷ்பு, ஈ.வே.ரா இருவரும் பாரதியைப் போல் ‘ஆணிற்கும் பெண்ணிற்கு கற்பு பொதுவில் வைப்போம் ‘ எனச் சொல்லும் தெளிவில்லை… துணிவுமில்லை..

சிலர் தாங்கள் வாழும் சாக்கடைக் கலாச்சாரத்தை பொது மனிதனும் வாழத் தூண்டுகிறான். ஏன்.. ? அப்போது தான் அனைவரும் சமமாகும் எனும் தத்துவத்துடன்.

இன்று மானுட வாழ்வை சீர்தூக்கவோ, சமன் செய்யவோ.. தத்துவங்களை சொல்பவர்களை விட திறந்த எல்லாம் செய்யலாம் எனும் நிலை கொள்ளச் சொல்பவர்கள் அதிகம்..

இந்த மாதிரி வாழ்வை ஒரு மத்தியத் தர குடும்பப் பெண்ணோ இல்லை நம்ம வீட்டு வேலைக்காரியோ வாழ்ந்தாலோ அல்லது வாழச் சொன்னாலோ நாம் என்ன நிலை எடுத்திருப்போம்… ?

மனது தொட்டு யோசிப்போம்.

குஷ்பு விஷயம் ரொம்ப விஷமமானது.

ஒரு தவறான கலாச்சாரத்திற்கு அங்கீகாரம் தேடுவது.

இன்று பல பிரபல பெரும்புள்ளிகள் அத்தகைய வாழ்வு வாழ்ந்தாலும் அதில் சிலருக்கேனும் அந்த வாழ்வு தவறு என்று சொல்லும் மனநலம் இருக்கிறது – சிவகாசி ஜெயலஷ்மி உட்பட.

எது தவறு என்று யார் சொல்வது… ?

நாம் நம் முன்னோர்களையும் , கலாச்சாரக் காவலர்களையும் ஒதுக்கலாம். ஆனால் விஞ்ஞானிகளை.. ? மனநல மருத்துவர்களை.. ?

Dr.நாறாயண ரெட்டியின் ( தென் இந்தியாவின் முதல் முறையான பட்டம் பெற்ற கலவியியல் துறை வித்தகர் -Sexologist – ) பேட்டிகளில் தெளிவாகச் சொல்கிறார் – திருமணத்திற்கு முந்தைய கலவி பெரும் மன அழுத்தத்தையும் உறவு இழப்புகளையும் ஏற்படுத்தும் என்று உலகின் பல பகுதியிலும் இருக்கும் மனநல உறவு ஆலோசகர்கள் சொல்வதாக இவர் சொல்கிறார். இவரின் விரிவான பேட்டி ஜூனியர் விகடனில் வந்துள்ளது. படியுங்கள் அவசியம்.

நாம் வெறும் உணர்ச்சிபூர்வமாக சில வெறுப்பு விருப்புகளால் இந்த விஷயத்தைக் கையாளக்கூடாது. நமது நாளைய சந்ததியை நாசமாக்கும் விஷயம் இது.

பணம் கொழுத்து திரிபவர்கள் நடன கேளிக்கைகளுக்கும், காமாந்திர லீலைகளுக்கும் பொது அங்கிகாரம் கேட்கும் நிலை வெட்க கேடானது.

பாரதியார், திருவள்ளுவர், என்ற பெருந்தகைகள் தோன்றிய பூமி. அவர்கள் சமூக ஈடுபாட்டுடன் வார்த்தைகளைக் கொட்டினர்.

ஆனால், இன்று தங்களில் வியாபாரம் , பணபலம், வாழ்வு வசதி பெருக்கவே பலரும் தங்களின் பிரபல மற்றும் கவர்ச்சித்தன்மை உபயோகிக்கின்றனர்.

சமுதாயம் இதில் ஜாக்கிரதையுணர்வுடன் இல்லாமல் போனால், திருவள்ளுவரும். பாரதியாரும் வாழ்ந்ததற்கு அர்த்தமில்லாமல் போய் விடும்.

ஒருவனுக்கு ஒருத்தி, கட்டுப்பாடுள்ள கலவி முறை கசப்பாக இருக்கலாம் . ஆனால் ,அது ஒரு நிம்மதியான வாழ்வு முறை.

ஆண் பெண் சமத்துவமும் , 2.ஆணாதிக்க முறை ஒழிவதும், நிச்சயம் வேண்டும். அதற்காக ஆண்களின் தவறுகளை போல் பெண்களும் தவறு செய்தல் வேண்டும் என்பது நல்ல முடிவல்ல…

இங்கு ஏற்கப்படக்கூடாத ஆண் சம்பந்த பழக்க வழக்கங்கள் மாறப் போராட வேண்டுமே தவிர பெண்களையும் அந்தப் புதை குழிக்குள் தள்ளக் கூடாது..

சாக்கடைக் குழிக்கள் விழுந்தவர்கள் மேல் ஏறியும் வரலாம் இல்லை மற்றவர்களைச் சாக்கடை குழிக்குள் இழுத்தும் விடலாம்.

அழைக்கும் கரங்கள் எதற்காக என்று குழியில் விழாதவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

:: கோவிந்த் ::::

gocha2004@yahoo.com

Series Navigation

author

கோவிந்த்

கோவிந்த்

Similar Posts