கடிதம் 23, 2004 – நேச குமாருக்கு விளக்கம் 3. கண்ணியம் காக்க!

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

சலாஹுத்தீன்


இஸ்லாத்தில் பர்தா – வரலாறும் நிகழ்வுகளும் என்ற கட்டுரையில் [1] பர்தா

கடமையாக்கப்பட்டதன் பிண்ணனியை விளக்க முயன்ற நேசகுமார் முஹம்மது

நபியவர்கள் அன்னை ஜைனப் அவர்களை மணந்து கொண்டது தொடர்பாக எழுந்த

சர்ச்சையை குறிப்பிட்டுள்ளார். நபியவர்கள் ஒருநாள் ஜைனப் அவர்களின் ‘ஆடை

விலகியதை கண்டு’ அவரது அழகில் மயங்கிவிட்டார் என்று கிசுகிசுக்கள்

பரப்பப்பட்டதாக நேசகுமார் தெரிவிக்கிறார். ‘ஆடை விலகிய

நிலையில்’ நபிகளார் பார்த்தார்கள் எனும்போது, அன்னை ஜைனப் அவர்கள்

தங்கள் ஆடை விலகியதை கவனிக்காமலும், அன்னிய ஆடவர்கள் அதைப்பார்க்க

நேருமே என்ற கூச்சமும் இல்லாது இருந்திருக்க வேண்டும். மேலும் நபிகளார்

அன்னிய பெண்கள் இருக்கும் வீடுகளினுள் அனுமதி பெறாமல் திடாரென

நுழையக்கூடியவர்களாக இருந்திருக்க வேண்டும் போன்ற அர்த்தங்கள்

தொனிக்கிறது. பொதுவாகவே தனது கட்டுரைகளில் ஏராளமான ஆதாரங்களை

அடுக்கும் நேசகுமார், இதற்கு மட்டும் ஆதாரம் எதையும் தரவில்லை.

அதனாலேயே அந்தக் கட்டுரைக்கு நான் பதிலளிக்கும்போது [2] அதற்கான

ஆதாரங்களை கேட்டிருந்தேன். அதன் நோக்கம், இப்படி ஒரு சம்பவம்

நிகழ்ந்ததா இல்லையா என்று அறிவதை விட, ‘ஆடை விலகிய நிலையில்’

என்ற வார்த்தைகள் அந்த ஆதாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றவா, அல்லது

அவை நண்பர் நேசகுமார் அவர்களின் இடைச்செருகல்களா என்று அறிவதுதான்.

அந்த வார்த்தைகள் நேசகுமாரின் இடைச்செருகல்களாகத்தான் இருக்கும் என்பதால்

நபிகளாரையும், அன்னை ஜைனப் அவர்களையும் தவறாக சித்தரிக்கும்

இவ்வார்த்தை பிரயோகங்களை ஆட்சேபித்து, கண்ணியக்குறைவான வார்த்தைகளை

தவிர்க்கும்படி கேட்டிருந்தேன்.

நான் கேட்டிருந்த ஆதாரம் எதையும் தராத நிலையில் மேலும் விளக்கமளிக்க

முனைந்த நேசகுமார் தனது விளக்கக்கடிதத்தில் [3] இதே சம்பவத்தை

குறிப்பிடும்போது, ஒரு நாள் நபிகள் நாயகம் அவர்கள் தமது (வளர்ப்பு) மகன்

ஜைத்தின் வீட்டுக்குச் சென்றபோது, ‘சரியான முறையில் ஆடை அணியாத

(வீட்டுடையில்)’ ஜைனப் அவரை வரவேற்றதாக குறிப்பிடுகிறார். இதற்கும்

அவர் ஆதாரம் எதையும் குறிப்பிடவில்லை. ஒரே சம்பவம் நேசகுமாரின்

இரண்டு கட்டுரைகளில் இரண்டு விதமாக சித்தரிக்கப்பட்டிருந்த காரணம் என்ன ?

அதற்கு ஆதாரமான ஹதீஸை அவர் ஏன் மறைக்கிறார் என்பதுதான் எனது

கேள்விகள்.

தனது தந்தையைப்பற்றிய உண்மையை கூறினால், வரலாற்றை சுட்டிக்காட்டினால்,

அது உண்மையாகவும் வரலாறாகவும் இருக்கும் பட்சத்தில் தான் வருந்த முகாந்திரம்

எதுவும் இல்லை என்று நேசகுமார் குறிப்பிட்டிருக்கிறார். அவர் தனது

கட்டுரைகளில் இருவேறு விதமாக குறிப்பிட்டிருக்கும் மேற்கண்ட சம்பவம்,

உண்மையும் இல்லை, வரலாறும் இல்லை, வெறும் அவதூறுப் பிரச்சாரமே

எனும்போது, நேசகுமாரின் கண்ணியக்குறைவான வார்த்தைப்பிரயோகங்கள்

என்னைப்போன்ற முஸ்லிம்களை எந்த அளவுக்கு வருந்தச் செய்கிறது என்பதை அவர்

புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

விவாதங்களும் விமரிசனங்களும் இஸ்லாத்திற்கு புதியது அல்ல. அவற்றை

எதிர்கொள்ளவும், தகுந்த பதிலளிக்கவும் இஸ்லாம் என்றும் தயங்கியதும் இல்லை.

விவாதங்கள் ஆரோக்கியமான விவாதங்களாகவே இருக்கும் பட்சத்தில்,

இஸ்லாத்தைப்பற்றிய நேசகுமாரின் ஒவ்வொரு கருத்திற்கும் மார்க்க

அறிஞர்களின் விளக்கங்களுடன் தகுந்த பதில் அளிக்கவும் இன்ஷா அல்லாஹ்

நாங்கள் தயாராகவே இருக்கிறோம். நாங்கள் நேசகுமாரை

கேட்டுக்கொள்வதெல்லாம், ஆதாரபூர்வமான செய்திகளை உணர்ச்சி வசப்படாமல்,

கண்ணியக்குறைவான வார்த்தைகளை தவிர்த்து தம் வாதங்களை எடுத்து வையுங்கள்

என்பதுதான்.

நேசகுமார் எடுத்து வைத்த பல வாதங்களுக்கு, சகோதரர் அபூமுஹை தனது

வலைப்பதிவில் தெளிவான விளக்கங்களை அளித்திருப்பதோடு [4] , சில

கேள்விகளையும் முன் வைத்திருக்கிறார். நண்பர் நேசகுமார் அக்கேள்விகளுக்கு

முறையான பதிலளிப்பார் என்று நம்புகிறேன்.

– சலாஹுத்தீன்

[1]

 • திண்ணை கட்டுரை

  [2]

 • திண்ணை கட்டுரை

  [3]

 • திண்ணை கட்டுரை

  [4]

 • அபூ முஹை வலைப்பதிவு

  —-

  salahudn@yahoo.co.uk

  Series Navigation

 • author

  சலாஹுத்தீன்

  சலாஹுத்தீன்

  Similar Posts