கடிதம் டிசம்பர் 23,2004

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

விசிதா


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு

வணக்கம்.

எம்.எஸ். : அஞ்சலி என்ற கட்டுரையில் [http://www.thinnai.com/ar12160412.htm] திரு ஞாநி

அவர்கள் சில கருத்துக்களை எழுதியுள்ளார். இது குறித்த எனது விமர்சனத்தினை சுருக்கமாக

இங்கு முன் வைக்கிறேன்.

திரு. ஞாநி அவர்கள் சம்ஸ்கிருதமயமாக்கல் என்பதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.இக்கோட்பாட்டை முன் வைத்த மறைந்த சமூகவியலாளர் எம்.என்.ஸ்ரீனிவாஸ் இதை இவ்வாறு வரையறுத்துள்ளார்

Sanskritization may be briefly defined as the process by which a ‘low ‘ caste or tribe or other group takes over the customs, ritual, beliefs, ideology and style of life of a high and, in particular, a ‘twice-born ‘ (dwija) caste

மூன்று அல்லது நான்கு தலைமுறைக்களுக்கு முன் எளிய முறையில் தங்கள் குல அல்லது ஜாதிப் பூசாரி முன்னிலையில் திருமணம் செய்த பழக்கம் மாறி பிராமணப் புரோகிதர் முன்னிலையில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒதப்பட்டு, பிராமண அல்லது உயர் ஜாதி முறையில் திருமணம் செய்து கொள்வது, வரதட்சணை வாங்குவது அல்லது கொடுப்பது, பிராமண மடாதிபதிகளை தங்கள் குருவாக ஏற்பது, புதுமணை புகு விழா போன்றவற்றில் பிராமணர்கள் போல் ஹோமம் வளர்ப்பது, தங்கள் குலக்கடவுள்களுடன் பிரபலமான கடவுள்களையும், உதாரணமாக திருப்பதி வெங்கடாஜலபதி, வணங்குவது – இவையெல்லாம் சம்ஸ்கிருதமயமாக்கலுக்கு எடுத்துக்காட்டுக்கள்.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் தாக்கம் சம்ஸ்கிருதமயமாக்கலின் வலிமையை குறைத்தது. தமிழ்ப் பெயர் வைத்தல்,சுயமரியாதைத் திருமணம், கடவுள் மற்றும் ஜாதி மறுப்பு போன்றவற்றை முன்னிறுத்தியது.நவீனமயமாக்கலுடன், சம்ஸ்கிருதமயமாக்கலினையும் ஒன்றெனக் கருதிக் குழப்பிக்கொள்ளக்கூடாது. திராவிட இயக்கம் முன்னிறுத்திய நவீனமயமாக்கம் சம்ஸ்கிருதமயமாக்கலுக்கு எதிரான ஒன்று.

எம்.எஸ்.சுப்புலஷ்மி ஒரு தமிழ் பிராமணரை, ஒரு ஐயரை திருமணம் செய்தததால் ஐயர் மாமியானார். பெண்கள் திருமணத்திற்குப் பின் கணவனின் மத, குல, ஜாதி வழக்கங்களைப் பின்பற்றுவதும், கணவன் சார்ந்துள்ள மதத்திற்கு மாறுவதும், பெயரை மாற்றிக் கொள்வதும் நடைமுறையில் உள்ளன. கலப்புத் திருமணங்களும் இதற்கு விதிவிலக்காக பெரும்பாலும் இல்லை. ஜாதிய அடுக்குமுறையில் பிராமணர்கள்

உயர் நிலையில் உள்ளதால் கலப்புத் திருமணங்கள் செய்துகொண்டவர்களில் ஒருவர் பிராமணராக

இருந்தால் குடும்பமே பிராமணக் கலாச்சாரத்தினை பின்பற்றுவதை பல சந்தர்ப்பங்களில் நாம் பார்க்கிறோம்.

இதற்கு உதாரணமாக இந்தியாவின் பத்திரிகைகளிலும், இணையத்திலும் வெளியாகும் மணமகன்,மணமகள் தேவை விளம்பரங்களில் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் கூட we follow brahmin customs at home or brought up as a brahmin என்ற பொருள் தரும் வகையில் குறிப்பிடுவதைக் காணலாம். இங்கும் அதுதான் நடந்துள்ளது. எம்.எஸ்.சுப்புலஷ்மி ஒரு முதலியாரை அல்லது பிள்ளையை திருமணம் செய்திருந்தால் அவர் ஐயர் மாமியாகியிருக்கமாட்டார். அந்த ஜாதிப் பண்பாட்டினைப் பின்பற்றும் ஒரு பாடகியாக மாறியிருக்கக்கூடும். இளையராஜாவை சம்ஸ்கிருதமயமாக்கலுக்கு உதாரணமாக கூறவே முடியாது. எம்.எஸ்.சுப்புலஷ்மியுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கலைஞராக அவரைக் காண முடியும்.

திரு. ஞாநிக்கு வைணவத்தின் சரணாகதித் தத்துவம் குறித்தும் குழப்பம் இருப்பதை இக்கட்டுரையில் நாம் அவதானிக்க முடிகிறது. கணவனே கண்கண்ட தெய்வம் என்பதும் அல்லது அனைத்தினையும் கணவனே தீர்மானிக்கட்டும் என்ற முடிவெடுப்பதும், அவ்வைணவக் கோட்பாடும் ஒன்றல்ல.

விசிதா

http://wichitatamil.blogspot.com

wichitatamil@yahoo.com

http://wichitatamil.blogspot.com

Series Navigation

author

விசிதா

விசிதா

Similar Posts