கடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

கே ரவி ஸ்ரீநிவாஸ்


ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு

ஆசார கீனனின் உண்மையான அக்கறை என்ன என்பது எனக்குப் புரியவில்லை. இடதுசாரிகளையும்,

ஹிந்துவையும் விமர்சிப்பது என்றால் அதை தெளிவாகவே அவர் சொல்லிவிடலாம், அதற்கு முஸ்லிம்

பெண்களை ஒரு சாக்காக பயன்படுத்ததேவையில்லை. ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தைப் பற்றி ஹிந்து எழுதவில்லை என்பதைக் குறிப்பிடும் அவர் ஹிந்துவில் அம்பை உட்பட பலர் முஸ்லீம் பெண்களின் நிலை குறித்தும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பெண்ணுரிமை விரோதப் போக்கினை விமர்சித்தும் எழுதியிருக்கிறார்கள் என்பதை ஏன் குறிப்பிட மறுக்கிறார். அஸ்கார் அலி இன்ஜியர் உட்பட பலர் ஹிந்துவில் பெண்ணுரிமைக்கு ஆதரவாக எழுதியிருக்கிறார்கள். இந்த விதத்தில் ஹிந்துவை ஒரு லிபரல் பத்திரிகை என்றே நான் கருதுகிறேன். எல்லா ஏடுகளும் எல்லாச் செய்திகளையும் வெளியிடுவதில்லை.ஆனால் ஒரு ஏடு தொடர்ந்து எத்தகைய கருத்துகளை வெளியிடுகிறது, எவற்றை ஆதரிக்கிறது என்பதை வைத்து அதன் நிலைப்பாட்டை நாம் அறியமுடியும். மனுஷி பெண்களும், சமூகமும் குறித்த ஒரு ஏடுதான். ஆனால் அதில்

ஏன் பெண்கள் இயக்கங்கள் தரும் அறிக்கைகள், கையெழுத்து இயக்கங்கள், உட்பட பலவற்றைப் பற்றி

செய்திகள், குறிப்புகள் வருவதில்லை என்றே கேள்விக்கு, மது கிஷ்வார் கூறிய பதில் இங்கு நினைவுக் கூறத்தக்கது. மனுஷி ஒரு ஏடு, நாங்கள் எங்களுக்கு கிடைப்பதையெல்லாம் பிரதி எடுத்து விநியோகிக்க

மனுஷியை கொண்டு வரவில்லை. ஒரு ஏடு என்ற முறையில் மனுஷி ஒரு விவாதக்களம், கட்டுரைகள்,

பேட்டிகள், கடிதங்கள், கவிதைகள், கதைகளுக்கு இடமுண்டு. நாங்கள் முக்கியமானவை என்று கருதும்

விஷயங்களுக்கு நாங்கள் முன்னுரிமை தருவோம், இதன் பொருள் நாங்கள் வெளியிடாத அறிக்கைகளுக்கு

நாங்கள் விரோதிகள் என்பதல்ல. ஒரு ஏட்டில் பெண்கள் குறித்த எல்லாப் பிரச்சினைகளுக்கும், இயக்கங்களின் போராட்டங்கள் குறித்த எல்லாத் தகவல்களுக்கும் இடம் அளிப்பது சாத்தியமில்லை. மனுஷி போஸ்டர் ஒட்டப்படும் சுவர் அல்ல.

இண்டர் நேஷனல் ஹெரால்ட் டிரிபியுனுக்கு கீரிப்பட்டியும், பாப்பாரபட்டியும் முக்கிய செய்திகளாக இருக்காது. பினான்ஷியல் டைம்ஸ் காவிரி பிரச்சினைக்கு தொடர்ந்து இடம் தராது. இதற்காக டிரிபியுன் தலித் விரோதி என்று சொல்ல முடியுமா. ஏன் இதே ஆசார கீனன் இந்தியாவில் விவரணப்படங்கள் தணிக்கை குறித்த சர்ச்சை குறித்து ஒன்றும் எழுதவில்லை, எனவே அவர் கருத்துத் சுதந்திரத்திற்கு விரோதி என்று எழுதினால் அது ஏற்புடையதா. இரண்டு அடிப்படைவாதங்கள் – ஒன்று இஸ்லாமிய அடிப்படைவாதம், இன்னொன்று நவ நாசிசத்துடன் தொடர்புடைய, குடியேரியவர்களை, குறிப்பாக முஸ்லீம்களை எதிர்மறையாக சித்தரித்து அவர்களை ஆபத்தானவர்கள் என்று முத்திரையிட்டு அவர்களது கலாச்சார உரிமைகளை குறைக்க முயலும் அடிப்படைவாதம், இது வலதுசாரி அடிப்படைவாதம்.

இரண்டும் லிபரல் கண்ணோட்டங்களுக்கு எதிரானவை. இரண்டையும் எதிர்க்க வேண்டும், இதுதான் என்

நிலைப்பாடு. இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிக ஆபத்தானது என்று கூறி இன்னொரு அடிப்படைவாதத்தினை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்க முடியாது.

இப்படி இல்லாமல் ,இஸ்லாமிய பெண்களின் பிரச்சினை, அவர்களது உரிமைகள் குறித்து விவாதிக்க முடியும், ஒரு லிபரல் கண்ணோட்டத்திலிருந்து. இஸ்லாமிய பெண்களின் இயக்கங்கள், முஸ்லீம் லிபரல் சிந்தனையாளர்கள் குறித்தும் பேச வேண்டும். இத்துடன் multi culturalism,cultural rights குறித்தும் விவாதிக்க வேண்டும். இவை குறித்து பல நூல்கள், கட்டுரைகள் உள்ளன. சிலவற்றை நான் திண்ணையில் குறிப்பிட்டுள்ளேன். இந்தியாவிலும் இவை குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது, நடைபெறுகிறது. உதாரணமாக

பிரான்சில் மாணவிகள் head scarf அணிவது குறித்த தடை பற்றி நளினி ராஜன் எழுதியிருக்கிறார். இவற்றைப் படித்து, புரிந்து கொண்டு சில கருத்துக்களை முன்னிறுத்துவது கடின உழைப்பையும், தொடர்ந்த அக்கறையையும் கோருவது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதிவிட முடியாத விஷயங்கள் இவை.

ஒரு புரிதலுக்காக நூல்களை, நீண்ட கட்டுரைகளை படிப்பதை விட, அதன் அடிப்படையில் ஒரு விரிவான விவாதத்திற்கு இடமளிக்கும் வகையில் எழுதுவதை விட, செய்திகளின், சில சான்றுகளின் அடிப்படையில் ஒரு சில வெறுப்புகளை முன்னிறுத்துவதும், அதை வெளிப்படையாகக் கூறாமல் சிலவற்றை காரணம் காட்டுவதும் எளிது. ஆசாரகீனன் தொடர்ந்து அதைத்தான் திண்ணையில் செய்துவருகிறார்.

—-

k.ravisrinivas@gmail.com

Series Navigation

author

கே ரவி ஸ்ரீநிவாஸ்

கே ரவி ஸ்ரீநிவாஸ்

Similar Posts