கடிதம் செப்டம்பர் 9,2004

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

பித்தன்


‘மாண்புமிகு ‘ அரவிந்தன் வழக்கம்போல ‘ஆர்.எஸ்.எஸ் ரக பொய்ப்பிரச்சாரத்தை ‘ தொடர்ந்திருக்கிறார்.

‘நாம் ‘ என்று நான் எழுதியிருப்பது எதோ என்னை ராஜ பரம்பரை என்று நினைத்துக்கொண்டு நான் எழுதியிருப்பதாக அரவிந்தன் குறிப்பிடுகிறார். தமிழில் இருக்கும் ஏராளமான நடைகளில் அப்படி எழுதுவது ஒரு வகை. பாரதியிலிருந்து, கல்கி வரை ஏராளமான சான்றுகள் இதற்கு இருக்கிறது. நானும் அந்த நடையில் எழுதியிருக்கிறேன். ‘consistency ‘-காக என்னைப்பற்றிய சில வரிகளையும் அப்படியே எழுதியிருக்கிறேன் அவ்வளவுதான். மற்றபடி அங்கு நான் குறிப்பிட்ட ‘நாம் ‘ என்பது என்னைப் போன்ற திண்ணை வாசகர்களை. ஆயிரக்கணக்கான வாசகர்களை தம் பொய்ப் பிரச்சாரத்தை நம்ப வைக்க பலகாலமாக திரித்து எழுதிக்கொண்டிருப்பதால் அவர்கள் அனைவரின் சார்பாக அப்படி எழுதியிருக்கிறேன்.

சாவர்க்கர் நிச்சயமாக கோழைதான் என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை. அந்தக்கால அரசியல்வாதிகளும் நீதிபதிகளும் இப்போதிருப்பவர்கள் (பிஜேபி) போலல்ல. நேர்மையானவர்கள் என்கிறார். நேர்மையான அரசியல்வாதிகளுக்கும் அரசியல் காரணங்கள் இருக்கலாம். சரி அதைவிடுவோம். அரவிந்தனோ அல்லது இப்போதிருக்கும் ஆர்.எஸ்.எஸ் காரர்களோ அந்தமானுக்கு சென்று பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்தமானில் அப்போதிருந்த உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள் எல்லாம் சாவர்க்கர் கடிதம் எழுதிக் கொடுத்து ஆங்கிலேயர்களின் காலில் விழுந்தவர் என்று கூறிவருகிறார்கள்.

இந்தவார திண்ணையிலும் கூட ஒருவர் ஆதாரங்களுடன் இதை சொல்லியிருக்கிறார். அந்தக்கால அரசியல்வாதிகளே பொய் சொல்லமாட்டார்கள் என்று கூறும் ‘மாண்புமிகு ‘ அரவிந்தன் அவர்களே, அந்தக்கால சுதந்திரப் போராட்ட வீரர்கள் எதற்காக பொய் சொல்லவேண்டும் ? இதற்கும் கூட ஒரு பெரிய ‘பிரச்சார ‘ விளக்கத்தை அரவிந்தனிடமிருந்து ‘நாம் ‘ (திண்ணை வாசகர்கள் – ‘ராஜ ராஜ ‘ என்று ஆரம்பித்துவிடப் போகிறார்!) எதிர்பார்க்கலாம். அந்தமானிலேயே சிறையிலிருந்து வந்த தியாகிகள் சொன்னால்கூட ஒத்துக்கொள்ள மாட்டார்களாம், கொலைகாரக் கோட்ஷே-வின் கூடவே இருந்த அண்ணன் சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்களாம், அவைகளெல்லாம் தவறாம். ஆனால் அரசியல்வாதிகள் சொன்னால் ஒத்துக்கொள்வார்களாம். அடடா என்ன ஒரு நேர்மை. இதுவே ஆர்.எஸ்.எஸ்-ஐப் பற்றி தவறாக ஒரு அரசியல்வாதி சொல்லியிருக்கட்டும் (அந்தக்கால அரசியல்வாதியாகவே இருந்தாலும்) பாய்ந்து வந்து கேவலம் அரசியல்வாதி, எதோ அரசியல் காரணங்களுக்காக சொல்லியிருக்கிறார் என்று அத்தர் பல்டியடிப்பார்கள்.

சாவர்க்கர் ‘கடுமையான சிறைதண்டனைக்குப் பிறகு வந்து… ‘ என்று இன்னும் தன் ‘கதையை ‘ தொடர்ந்து கொண்டிருக்கிறார். எத்தனை தடவை சொன்னாலும் பொய் உண்மையாகிவிடாது. கோழை வீரனாகிவிடமாட்டான். சாவர்க்கர் ஒரு கோழைதான். கடுமையான சிறைதண்டனைகளை அவர் அடையவில்லை. ஆங்கிலேய வார்டன்களின் காலில் விழுந்த துரோகிதான். ஆங்கிலேயர்களுக்கு உதவுவதாக எழுதிக்கொடுத்து கொடிய சிறைத்தண்டனையிலிருந்து தப்பித்த கோழை. (நேதாஜி போன்றோர்களே ஏமாந்திருக்கிறார்கள் பாவம். அந்தமானிலிருந்து வந்திருப்பதால் சுதந்திர போராட்ட வீரர் என்று நினைத்து ஏமாந்திருக்கக் கூடும்.) புது வியாக்யானம் கொடுக்கிறார் ‘மாண்புமிகு ‘. வரலாற்றில் இதுபோல நடந்திருக்கிறதாம், கலிலியோ கூட இப்படி செய்திருக்கிறாராம், அதனால் இது ராஜதந்திரமாகத்தான் இருந்திருக்கும் என்று நம்மை நம்பச்சொல்கிறார். இந்தக் கோழைத்தனத்திற்குப் பெயர் ராஜதந்திரமாம். வெட்கக்கேடு. சாணக்கியனும் மனுவும் சொல்லிக்கொடுத்த தந்திரமல்லவா, அப்படித்தானிருக்கும். பகத்சிங்களும், சுக்தேவ்களும், செக்கிழுத்த செம்மல்களும் ராஜதந்திரம் தெரியாதவர்கள் போலிருக்கிறது! கலிலியோ ஒன்றும் சுதந்திரப் போராட்ட வீரரில்லை. அது வேறு கதை. இப்பொதைய இந்துத்வ தீவிரவாதிகள் போன்ற அப்போதைய கிறிஸ்தவ தீவிரவாதிகள் கதை. எந்த நாட்டுப்பற்று மிக்க வீரனும், சுதந்திரப் போராட்ட வீரனும் அந்நியன் காலில் விழ மாட்டான். எனவே பகத்சிங்கையும், சுகதேவையும், ராஜகுருவையும் கோழை யான சாவர்க்கரோடு ஒப்பிடவேண்டாம் என்பதுதான் நாம் தொடர்ந்து வலியுருத்திவருவது.

என் முந்தையக் கடிதத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். வாஞ்சிநாதனோடும், பகத்சிங்கோடும் ஒப்பிட்டுக் காட்டி தங்களையும் தியாகிகளாகவும், தேசப்பற்றுமிக்கவர்களாகும் காட்டிக்கொள்ளும் தந்திரம் என்று. அதே தந்திரத்தையே இப்போதும் காட்டுகிறார் அரவிந்தன். சாவர்க்கர் ஒரு தேசப்பற்றில்லாத கோழை என்று நான் சொன்னால் இவர் ‘பித்தனுக்கு வாஞ்சி, பகத்சிங், சுகதேவ் இவர்களெல்லாம் வீரமில்லாத கொலைகாரர்கள் ‘ என்று புதிதாக திரித்து எழுதுகிறார். நான் எப்போதும் இந்த உண்மையான தியாகிகளை அப்படி சொன்னதேயில்லை. (என் எந்தக் கடிதத்தையும் எடுத்துப் பார்க்கலாம்). இப்படி வழக்கம்போல திரித்து எழுவதால் என்னைப் பற்றிய ஒரு மோசமான தோற்றத்தை உருவாக்கலாம் என்று நினைப்பதோடு, இப்படி உண்மையான வீரர்களோடு ஒப்பிட்டு சொல்லிவிட்டதால் சாவர்க்கரையும் ஒரு வீரனாக சித்தரித்துவிடலாம் என்ற தந்திரம். இதுகூட ஆர்.எஸ்.எஸ் ரக ‘ராஜதந்திரமாக ‘த் தானிருக்கும். அந்தமானிலிருந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக கோழையை வீரர்களோடு ஒப்பிட்டுவிட முடியாது. தொடர்ந்து மூன்றாவது கடிதமாக காந்தி ஒரு ‘உப்புத்திருடன் ‘ என்று சொல்லிவருகிறார். அதாவது பித்தன் அப்படி சொல்வார், அப்படி சொல்வார் என்று அவராகவே அவர் மனத்திலிருப்பதை சொல்லி வருகிறார். ( இரு கடிதங்களாக நான் இதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை, காரணமாகவே. இவர் தொடர்ந்து அவ்வாறு சொல்லி தன் சங்க ‘காந்தி வெறுப்பை ‘ இப்படி நிரூபித்திருக்கிறார்.) இப்படி தொடர்ந்து சொல்லிவந்தால், யாராவது புதிதாக வந்து படிப்பவர்கள் ஒருவேளை பித்தன் என்பவர்தான் அப்படி சொல்லிவிட்டாரோ என்று நினைக்கட்டும் என்று எதிர்பார்ப்பார் போலிருக்கிறது. மகாத்மா தான் பல விஷயங்களுக்கு என் மானசீக குரு என்று திண்ணையில் நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். காந்திஜியைப் பற்றி அவதூறு சொல்வதற்கும், அவர் ஒன்றுமே செய்யவில்லை என்பதற்கும், அவர் தேசத்தந்தையில்லை என்பதற்கும் நான் என்ன ஆர்.எஸ்.எஸ்-ல் பயிற்சி பெற்றவனா ?

‘இத்தனைக்கும் மேலாக எனக்கு என் பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயம் ஸ்மிருதியிலோ புராணங்களிலோ இருக்குமெனில் அதை நான் தூக்கி எறிந்துவிடும் சுதந்திரம் ஹிந்து தர்மத்தில் இருக்கிறது ‘ என்று சொல்லியிருக்கிறார் அரவிந்தன். அவருக்கு சம்பந்தமில்லாத பகுத்தறிவைப் பற்றி அவர் பேசுவது வியப்பாக இருக்கிறது. ‘ஈவேரா ஈவேரா ‘ என்று அவர் செய்து வரும் ஜபத்திற்கு பலன் கிடைக்கத் தொடங்கிவிட்டது போலிருக்கிறது! சரி, விஷயத்திற்கு வருவோம். பகுத்தறிவுக்கு ஒவ்வாதக் கருத்துக்களின் மொத்த உருவமாக இருக்கும் மனு ஸ்மிருதியை இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக பின் ஏன் தூக்கியெறியவில்லை ? சுதந்திரம் இருந்தாலும் தூக்கியெறியாமல் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதற்கும், நாலு வருணத்தார், 5 வருணத்தார் என்று கலர் கலராகக் கதை விட்டுக்கொண்டிருப்பதற்கும் கூட காரணமிருக்கக் கூடும். இல்லையா ? எங்கே, அதற்கும் உங்கள் ‘ஆர்.எஸ்.எஸ் ரக ‘ விளக்கத்தை கூறுங்கள், நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்! தூக்கி எறிந்துவிடுவோம் என்பதற்கும் தூக்கியெறிவதற்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது. ‘சொல்வது யார்க்கும் எளியது – அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் ‘. சாதிகள் இல்லை என்று சொன்ன பாரதியே, சொல்லியதை செய்யமுடியாமல் மனுக் கருத்துக்குத் தோற்றுப் போனவன் தானே. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கலந்துரையாடல். எனக்கு முன்னே பேசியவர், ‘சாதிகள் இல்லையடிப் பாப்பா ‘ என்று பாடிய பாரதியும் ஒரு அந்தணன் தானே ‘ என்று பேசி சென்றார். நான் பேசும்போது கேட்டேன். ‘ ‘சாதிகள் இல்லையடிப் பாப்பா ‘ என்று பாடினானே பாரதி, பூணுல்களை அறுத்து எறிந்துவிட்டா பாடினான் ? ‘ என்று. பாரதி என்ன 10 பூணூலா போடிருந்தான் பூணுல் ‘களை ‘ அறுப்பதற்கு என்று கேட்கும் அறிவு ஜீவிகளுக்கும், ‘பாரதியைப் போய் மற்றவர்களின் பூணூல்களை அறுத்து எறிந்துவிட்டு வரச் சொல்கிறாரா பித்தன் ‘ என்று திரிப்பு வேலையில் இறங்கும் ‘மாண்புமிகு ‘க்களுக்கும் – பூணூல்கள் என்று நான் சொல்லியிருப்பது ஒரு குறியீடாகத்தான். பூணூல் முதற்கொண்டு, மற்ற சாதிய சிந்தனைகள், தளைகள், கட்டுப்பாடுகள், அடையாளங்கள் அனைத்தையும் அறுத்து எறிந்துவிட்டா பாடினான் பாரதி என்று அதற்கு அர்த்தம். ‘ஈவேரா பிரச்சாரம் ‘ என்று அரவிந்தன் ஜபத்தை ஆரம்பிக்கும்முன் அவருக்கு கூடுதலாக ஒரு தகவல். ‘அப்போது நான் பெரியாரைப் படித்திருக்கவில்லை. பாரதியைப் படித்திருந்தேன் ‘. பாரதியைப் பற்றி பித்தன் அவதூறாகப் பேசுகிறான் என்று பாய்ந்து வருவதற்கும் முன் பாரதி பிரியர்கள் மேலே படிக்கவும். இப்போது இருப்பது போலவே அப்போதும் இந்து மத சமூகத்தில் சாதிவெறி தலை விரித்தாடியது என்பதால்தான் மகாகவி அப்படி பாடினார் என்பதிலோ, அதைக்களையும் முகமாகத்தான் ‘சாதிகள் இல்லையடிப் பாப்பா ‘ என்று பாடினார் என்பதிலோ எனக்கு சிறு சந்தேகமுமில்லை. சாதிப் பிணியை ஒழிக்க வேண்டுமென்ற பாரதியின் குறிக்கோளில் எனக்கு சந்தேகமில்லை. பாரதியின் வாழ்க்கையைப் படித்தால் ஒரு நிகழ்ச்சி, ( ‘பாரதி ‘ படத்தில் கூடக் காட்டுகிறார்கள்) அதாவது, தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்படுபவர்கள் சிலரை அழைத்துவந்து பாரதியார் அவர்களுக்கு, மந்திரம் சொல்லி பூணூல் மாட்டிவிடுகிறார். பூணூலை மாட்டிவிடுவதன் மூலம் அவர்களை உயர்ந்தவர்களாக்கிவிடலாம் என்று நினைத்தபோதே பாரதி மனுவிடம் தோற்றுப் போய்விட்டான். அவன் பாட்டு வலுவிழந்துவிட்டது. சாதிகள் இல்லையென்று பாடிய, தீர்க்கதரிசியாகக் காட்சிதரும் ஒரு மகாகவி, சாதியக் கொள்கைகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்குப் பதிலாக, பூணூலை மாட்டி அவர்களை இன்னும் சாதியத்தின் பிடிக்குள் தள்ளியதன் மூலம் மனுக்கருத்துக்களிடம் தோற்றுவிட்டார் என்பதே என் கருத்து.

‘கிருபா நிதியோ பங்காரு லட்சுமணனோ பூணூல் அணிந்துகொள்ள முடியுமா, சங் பரிவாரம் விடுமா ? ‘ என்று கேட்டதன் மூலம் திரு. பிறைநதிபுறத்தான், கண்ணிமைக்கும் நேரத்துக்குள் சாதியத்தின் பிடிக்குள் மாட்டிகொண்டுவிட்டதாகத் தெரிகிறது. சாதியத்தின் வலையை எவ்வளவு நுண்ணியதாக விரித்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அரவிந்தன் சொல்கிறார், ‘திரு. பிறைநதியே தான் கிணற்றுத்தவளையாக இல்லாமல் மனிதனாக விரும்பினால் வாருங்கள் சகோதரரே நீங்கள் ஹிந்துவாகவும், உங்களுக்கு அந்தணராக பயிற்சியளித்து பூணூலும் அணிவிக்க தயாராக உள்ளது ஆர்.எஸ்.எஸ். ‘ என்று. நான் கேட்கிறேன் ‘ஏன் – வாசகர்கள் மன்னிக்க, இந்த சாதிவெறி வக்கிரத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை- பூணூல் போட்டுக்கொள்ள வேண்டும் ? ‘. பூணூல் என்பதே சாதியத்தின் அடையாளம் தானே. கிருபா நிதியும், பங்காரும், பிறைநதியும் பூணூலைப் போட்டுக்கொண்டால் ‘மனிதர்களாகி ‘ விடுவார்களாம். என்ன ஒரு வக்கிரம் பாருங்கள். இப்போது என்ன அவர்கள் தெய்வங்களாகவாக இருக்கிறார்கள், பூணூல் மாட்டி அவர்களை கீழிறக்க ?. உணர்ச்சிவசப்பட்டு தன் முகமூடியைத் தானே கிழித்துக்கொண்டு தன் சாதிவெறி பிடித்த வக்கிர முகத்தைக் காட்டியிருக்கிறார் அரவிந்தன். ஆர்.எஸ்.எஸ் ரக வேதாந்த வளர்ப்பு அப்படி. பாவம் எத்தனை நாள்தான் முகமூடிக்குள் இருக்க முடியும் ? ‘ஏற்கனவே கேரளத்தில் சங்க அமைப்புகளால் பூணூல் அணிவிக்கப்பட்டவர்கள் தேவஸ்தானத்தால் கோவில்களில் பூசாரிகளாக நியமிக்கப்படவும் தகுதியுடையவர்களாக உள்ளனர் ‘ ‘ என்கிறார் அரவிந்தன். உக்கிர வக்கிரத்தின் அடுத்த முகம் இது. என் கடவுளை நான் வணங்க இடையில் நீ எதற்கு பூசாரி. சரி, நடைமுறையில் அனைவரும் கடவுளுக்கு பூசை செய்வது இயலாது என்பதால் ஒரு பூசாரி இருக்கட்டும். ஆனால் அவனுக்கு எதற்கு பூணூல் ? பூணூல் போட்டவன் தான் தகுதியுடையவன் என்று எவன் சொன்னது ? இந்துமதத்தின் புனித நூலான பகவத் கீதையின் எந்த மொழி பெயர்ப்பிலும் கூட அப்படி சொல்லப் படவில்லையே. சாதிகளைக் காட்டிக்கொள்ளவும், முதுகு சொறியவும் தவிர பூணூலுக்கு என்ன உபயோகமிருக்கிறது ? ஆதி அந்தமில்லாதவராக, எங்கும் நிறைந்தவராக எல்லோருக்கும் பொதுவானவராக இருக்கும் கடவுளுக்கும் பூணூலுக்கும் என்ன சம்பந்தம் ? கடவுளுக்கும் பூணூல் மாட்டி, சாதியத்திற்குள் தள்ளிவிட்ட சங் பரிவாரக் கும்பல்களின் வக்கிரத்தை என்ன சொல்ல ? கடவுள் பூணூல் போட்டிருப்பதை போய் பார்த்துவிட்டு வந்திருப்பார்களோ ? சாதிவெறி பிடித்த இவர்களும் அணிந்துகொண்டு அதையே கடவுளுக்கும் அணிவித்து கடவுளையும் கேவலப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கடவுளுக்குப் பிடிக்கிறதோ இல்லையே இவர்களாகவே பூணூல் மாட்டிவிடுவார்கள். மீசையை சிரைத்து விட்டுவிடுவார்கள். கம்பீரமிக்க ஆண்களான ராமனும், கண்ணனும், சிவபெருமானும் மீசை வைத்துக்கொள்ள மாட்டோம் என்று இவர்களிடம் வந்து சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. இவர்களுக்கு கஷ்டமில்லாமல் பணம் சம்பாதிக்க உதவும் ஆரிய கோவில் கடவுள்களைத்தவிர மற்ற தமிழ்க் கடவுள்கள், சிறு தெய்வங்கள் (அய்யனார், ராக்கப்பன்..etc..) அனைவரும் மீசை வைத்திருக்கிறார்கள்! கடவுள்களையும் சாதிப் பிரித்து வைத்திருக்கிறார்கள் இந்த வக்கிர கும்பல்கள். பூணூல் மாட்டி, மீசையை எடுத்துவிட்டு கோவிலுக்குள் வைத்தால் அவர் பணத்தை இவர்களுக்குக் கொட்டும் பணக்கார சாமி. (மறக்காமல் யாகவா முனிவர் போல யாருக்கும் புரியாத மொழியில் மந்திரம் சொல்லவேண்டும்). மற்றவர்கள் எல்லாம் வருவாய் இல்லாத ‘ஏழை ‘ சாமிகள். ‘ஏழை ‘ சாமிகளின் கோவில்களில் எந்த அந்தணரும் பூசாரிகளாக இருந்து நான் பார்த்ததில்லை!! காஞ்சி கருவறையிலும், திருப்பதி கோவிலிலும் ‘ஒன்றுக்கும் உதவாத-ஆகம விதிகள் தெரிந்த, சம்ஸ்கிருதம் தெரிந்த அவா ‘ தான் பூசாரிகளாக இருக்கவேண்டும் என்று கொடி பிடிக்கும் சங்பரிவாரக் கும்பல்கள் இந்த ‘ஏழை ‘ சாமிகளைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். ஒவ்வொரு ஊரிலும் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்துவைத்து அவாளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் சங்கராச்சாரிகள் இந்த ‘ஏழை ‘ சாமிகள் எதற்கும் ஒரு சிறு கூரையாவது கட்டிக் கொடுத்ததாக சரித்திரமேயில்லை. (ஆதி சங்கரர் முதற்கொண்டு, எனக்குத் தெரிந்து). கோவில்களில் எத்தனைக் கோவில்கள் வருமானமில்லாமல், கோவில் பராமரிப்பு செய்யும் அளவுக்குக் கூட வருமானமில்லாமல் இருக்கின்றன தெரியுமா என்று புள்ளி விவரத்தோடு பாய்ந்துவருவார்கள் என்பதால் இதையும் சொல்கிறேன். ஒதுக்குப் புறமுள்ள கிராமப்புற கோவில்களைத் தவிர நகர்ப்புறக் கோவில்களில் நல்ல வருமானம் உண்டு. வருமானம் ஒரு நோக்கம் என்றால் அதைவிட முக்கியமாக சாதியப் படிகளில் தங்களை உயரத்தில் வைத்துக்கொள்வது மற்றொரு முக்கிய நோக்கம். புனிதமான இந்து மதத்தை சாதியத்திற்குள் தள்ளி, தங்கள் சாதி வெறியை நிலை நாட்டிக்கொள்ள பயன்படுத்தும் மூடர் கூட்டத்தைக் கண்டுதான் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே ‘ என்று பாரதி பாடினான் போலும்.

மேற்கண்டது போன்ற நியாயமான கருத்துக்கள், கேள்விகள் அனைத்தையும் ‘ஈவேரா பிரச்சாரம் ‘ என்று கூறி மிக எளிதாக ஒன்றுமில்லாததுபோல ஒதுக்கிவிடும் தந்திரம் அரவிந்தனுக்கு கைவந்த கலை. நியாயமான, உண்மையான எதையும் அப்படித் தான் ஒதுக்குவார். இதையும் அப்படி ஒதுக்கிவிடுவார் என்பதில் ஐயமில்லை. எனவே திண்ணை வாசகர்களை, தங்கள் சார்பு நிலைகளைக் கடந்து வெளியே நடு நிலையில் நின்று படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்போது உங்களுக்கு இதில் கேட்கப் பட்டிருக்கும் கேள்விகளிலுள்ள நியாயம் விளங்கும். பகவத் கீதையும், குரானும், பைபிளும், ஜென் கதைகளும், சத்திய சோதனையும், ரஜனீஷும், சு.ராவும், கல்யாண்ஜியும், வைரமுத்துவும், புதுமைபித்தனும், பாரதியையும் படித்தது போலவே பெரியாரையும் படித்திருக்கிறேன் என்பதைத் தவிர எனக்கும் பெரியாருக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. நான் படித்தவற்றில் உள்ள, மனித குலத்துக்கு நியாயமாக உள்ள, மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் கருத்துகளின்பாற்பட்டே நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பது என் எழுத்தைப் படிக்கும் நேர்மையாளர்களுக்குப் புரியும் என்றே கருதுகிறேன்.

இதற்குமுன் எந்த அரசியல் வாதிகளின் காலிலும் யாரும் விழுந்ததில்லையா ? எதேச்சையாக, உணர்ச்சி வேகத்தில் ஒருவர் திருமதி. சோனியா காலில் விழுந்ததற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் தேவையா ? என்று கேட்டிருந்தேன். பெரிய ‘வால் ‘களின் கால்களில் தான் அனைவரும் விழ வேண்டுமா என்றும் கேட்டிருந்தேன். இப்போது திருப்பினாரய்யா ஒரு திருப்பு. அமிர்தானந்தாயி காலில் வாஜ்பாயி விழவில்லையா (ஒரு அரசியல்வாதி), மேல்மருவத்தூரார் காலில் அத்வானி விழவில்லையா (இன்னொரு அரசியல்வாதி) என்று. இப்படி கதையை 90 டிகிரிக்கு திருப்புவீர்கள் என்றும் யார்தான் எதிர்பார்க்க முடியும் ? அப்படியானால் சோனியா அரசியல்வாதி என்பதுதான் பிரச்சனை. அவரே சோனியா மாதாஜி அல்லது சோனியானந்தாயி என்று பெயர் கொண்டு இருந்தால் அரவிந்தன் முதல் அத்வானி வரை எல்லா சங்பரிவாரிகளும் போய் சோனியா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிடுவீர்கள் இல்லையா. அடடா அடடா என்ன ஒரு பக்தி! இப்படி எல்லோரும் காலில் விழவேண்டுமென்பதற்காகத்தான் ‘பெரியவா ‘க்களெல்லாம் (பூசாரிகளும்) அந்தணராக இருக்கவேண்டும் (and vice versa) என்கிறார்களோ ? அத்வானி போய் மேல்மருவத்தூராரின் ‘அடிபணிந்த ‘ புகைப்படத்தையெல்லாம் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. (இது போன்ற புகைப் படங்கள் ஒருவேளை சங்கத்துக்கு மட்டும் ஸ்பெஷலாகக் கிடைக்கும் போலிருக்கிறது). முகப்புப் பக்கத்தில் ‘துணை பிரதமர் ‘ அத்வானி சங்கராச்சாரியின் காலில் விழுவதுபோன்ற ஒரு புகைப்படத்தை மட்டும்தான் அவா வெளியிட்டிருந்தா. கூடனே ஒரு வரியில், வழியில் அத்வானி மேல்மருவத்தூராரை ‘சந்தித்தார் ‘ என்றும் கிசு கிசு போல செய்தியும் வெளியிட்டிருந்தார்கள். மற்றபடி ‘அடிபணிந்தாரா ‘ இல்லையா என்பது அத்வானிக்கும், அரவிந்தனுக்குமே வெளிச்சம். இந்த சந்திப்பும் கூட எப்படி நடந்தது என்று கழுகார்களும், வம்பானந்தாக்களும் புட்டு புட்டு வைத்திருந்தார்கள். அதாவது, தன்னை மட்டும் சந்தித்தால், தங்களின் அரசியல் சந்திப்பு வெளியே தெரிந்துவிடும் என்பதால், மேல் மருவத்தூருக்கும் ‘சென்று வருமாறு ‘ காஞ்சி மடத்திலிருந்தே அத்வானிக்கு ‘அறிவுறுத்தப்பட்டதாம் ‘. எனவே, வழியில் மேல் மருவத்தூருக்கும் சென்று வந்தார். விஷயம் அவ்வளவுதான். எனவே அத்வானி மேல்மருவத்தூரார் ‘அடிபணிந்த ‘ பக்திக் கதையையெல்லாம் வேறு யாராவது காதில் பூ வைத்திருப்பவர்களைப் பார்த்து அரவிந்தன் சொல்லலாம். ‘அத்வானி ஒரு இந்து. அவர் தனிமனிதராக சென்று அவருக்குப் பிடித்த ‘மட ‘த்தலைவர் காலில் விழுகிறார். இதிலென்ன தவறு ? அந்த தனி மனித சுதந்திரம் கூட அவருக்கு இல்லையா ? ‘ என்று கேட்பார்கள். (அதே தனி மனித சுதந்திரம் சோனியா காலில் விழுந்தவருக்கும் இருப்பது அவர்களுக்கு தெரியாது, அது தனிக் கதை!) சரி, நியாயமான கேள்வி. அத்வானி சங்கராச்சாரி காலில் விழட்டும், பிரேமானந்தா காலில் விழட்டும், அது அவர் இஷ்டம் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் இதை முகப்புப் பக்கத்தில் புகைப்படமாக வெளியிட வேண்டிய அவசியம் என்ன ? துணைப் பிரதமர் என்பதால் புகைப்படம் என்றால், அவர் சந்தித்த (அடிபணிந்த ?!) மற்ற சாமியார்களுடன் அவர் இருக்கும் புகைப்படங்களும் வெளியிடப்பட வேண்டும். அல்லது மடாதிபதிக்காகத் தான் புகைப்படம் என்றால் அவர் காலில் தினம் விழும் ஆயிரக்கணக்கான அசடுகளின் புகைப்படங்களும் வரவேண்டும். அப்படி எதுவும் இல்லை. ஏன் ? அங்கு தான் இருக்கிறது சூட்சமம். ‘ஜனாதிபதி ‘ வெங்கட்ராமன் காலில் விழுந்தால், ‘பிரதமர் ‘ காலில் விழுந்தால், ‘துணைப்பிரதமர் ‘ காலில் விழுந்தால் மறுநாளே உங்களுக்கு அந்த ‘அரிய ‘ புகைப்படம் முகப்புப் பக்கத்தில் பார்க்கக் கிடைக்கும்! இப்படி இந்தியாவின் மிக உயர்ந்த பதவிகளிலிருப்பவர்கள் காலில் விழும் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு காஞ்சிமடம் ஒரு அதிகார மையம் (மற்றும் பெரியவா(ல்)) என்பதைக் காட்டும் தந்திரம். எம்.எல்.ஏ சீட்டுக்கும், எம்.பி. சீட்டுக்கும் காஞ்சியில் தவங்கிடக்கிறார்கள் என்றால் சும்மாவா.

‘ஏதோ பாஜக ஆட்சியில் ஹிந்துக்கள் கையில் கடப்பாறையும், திரிசூலமும் ஏந்தி மற்ற மதத்தினரை கொல்ல தெருதெருவாக திரிந்தது போல சித்தரிக்கிறேன் ‘ என்று கூறும் அரவிந்தன் அவர்களே, அப்படி நீங்கள் குஜராத்தில் திர்ந்தது தான் உலகம் முழுவதும் சிரிப்பாய் சிரித்ததே. அது தெரியவில்லையா ? அதற்குமுன் கோத்ராவில் நடந்த வன்முறை தெரியவில்லையா என்று எதிர் கேள்வி கேட்பீர்கள். சந்தேகமில்லாமல் அதுவும் தவறுதான். எல்லாவித வன்முறைகளும் தவறுதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒரு கும்பலோ, தீவிரவாதிகளோ செய்வதையே ஆட்சியிலிருப்பவர்கள் செய்யக் கூடாது. மோடி அதைத் தடுக்காதது மட்டுமல்ல, தூண்டிவிட்டு உதவியுமிருக்கிறார். கொலைகார ஹிந்துக்களைத் தப்பவிட்டு சட்டத்தைக் கேலிக்குரியதாக்கியிருக்கிறார். உச்ச நீதிமன்றம் கொடுத்த சாட்டையடியே இதை விளக்கும். பாஜக ஆட்சியில் மட்டுமல்ல, காங்கிரஸ் ஆட்சியில்தான் மசூதி இடிக்கப்பட்டது என்று நீங்கள் கூறலாம். யார் ஆட்சி செய்தாலும், கடப்பாறையும், சூலமும் ஏந்தி தறுதலைகளாக, தீவிரவாதிகளாகத் தான் இந்துத்வ சங்பரிவாரிகள் திரிவார்கள் என்பது இதனால் விளங்கும். மதச்சார்பற்ற ஆட்சியில் இந்து கோவில்கள் இடிக்கபடுவதும், இந்துக்கள் கொல்லபடுவதும் நடந்தால் அதுவும் தவறுதான். அதற்குக் காரணமானவர்கள் கட்டாயமாகத் தண்டிக்கப் படவேண்டியவர்கள்தான். நியாயமான போராட்டங்களில் மூலம் அதை வெளிக்கொணர்ந்து, சட்டத்துக்குமுன் நிறுத்தலாம். சட்டம் ஒழுங்காக இல்லையெனில் முதலில் அதை சரிப்படுத்த போராடலாம். அதைவிடுத்து ஆளாளுக்கு கையில் கடப்பாறையும், சூலமும் எடுப்பது ஒத்துக்கொள்ள முடியாத செய்கைகள்.

‘மனு ஸ்மிருதியை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொண்டதுமில்லை. ஏதாவது ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் அப்படிக் கூறியுள்ளாரா ? ‘ என்றுக் கேட்கிறார். எந்தத் திருடனாவது திருடுவதுதான் என் தொழில் என்று சொல்லுவானா ? அல்லது எந்த அரசியல்வாதியாவது நான் ஊழல் செய்பவன் என்று சொல்லுவானா ? மனு ஸ்மிருதியை ஒத்துக்கொள்கிறோம், அதன்படி சாதிகள்/வருணங்கள் பல உண்டு என்று சொன்னால் துடைப்பத்தால் அடிப்பார்கள் என்பதுகூடவா ஆர்.எஸ்.எஸ்-கு தெரியாமலிருக்கும் ?! இதையெல்லாம் வெளியே சொல்லவே தேவையில்லை. நான் முன் பத்தியில் குறிப்பிட்டிருக்கும், பத்திரிக்கைக் காரர்களும், மடத்தலைவர்களும், அரசியல்வாதிகளும் கூடிப் பேசியா அந்தப் புகைப்படங்களை முகப்புப் பக்கத்தில் இடுகிறார்கள் ? எதை எதை யார் செய்யவேண்டுமோ அதை அதை அவர்கள் பாட்டுக்கு செய்வார்கள். அதுதான் ஸ்பெஷாலிட்டியே. இல்லையென்றால், கடவுள் மேல் பக்தியுள்ள, பூசை செய்ய சில பதிகங்கள் தெரிந்த, நல்ல உள்ளங்கள் யாராக இருந்தாலும் வாருங்கள், காஞ்சியிலும், திருப்பதியிலும் கருவறையுள் வந்து பூசை செய்யலாம் என்று ஆர்.எஸ்.எஸ் காரார்களை அழைக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்! நான் முன்பே குறிப்பிட்டது போல இந்தியாவின் மிக முக்கியமான பிரச்சனை, வளர்ச்சியைத் தடுக்கும் பிரச்சனை சாதிப் பிரச்சனைதான். அதை மறைக்கத்தான் மதப் பிரச்சனையைப் பெரிதாக்குகிறார்கள் சங்பரிவாரிகள். இஸ்லாமிய தீவிரவாதிகளும், கிறிஸ்தவ மதமாற்றிகளும், இந்து மதத்துக்கு வேண்டுமானால் பிரச்சனையாக இருக்கலாம். அது இந்தியாவிற்கான பிரச்சனையில்லை. ஆனால் சாதிப் பிரச்சனை என்பது இந்தியாவின் வளர்ச்சிக்கே தடையாக இருக்கும் பிரச்சனை. எனவே அதைத்தான் முக்கியமாக கையிலெடுக்கவேண்டும். அதைத் தவிர்த்து, மதப்பிரச்சனையைக் கையிலெடுப்பவர்கள், ஓட்டுக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப் பட்டே அவ்வாறு செய்கிறார்கள். மதப் பிரச்சனையில் உயிர்விடும் ஹிந்துக்களைவிட (இந்துத்வா கோஷத்திற்குப் பின் அதிகமாகியிருக்கலாம்) சாதிப் பிரச்சனையில் உயிர் விடும் இந்துக்கள் 100 மடங்கு அதிகமாக இருப்பார்கள். சாதிப்பிரச்சனையில் அவதிப்படும், உரிமைகளை இழக்கும் இந்துக்கள் மிக மிக அதிகம். எனவே அதைத் தான் முதலில் கவனிக்கவேண்டும்.

நான் ஹிந்துவா, ஜென் ஞானியா, ஜகத்குரு பித்தர்வாளா என்பதெல்லாம் தேவையில்லாதது. (பெரியவால், சின்னவால் எல்லாம் இருக்கும் விலங்கினங்களில்லை நான். சாதாரண மனிதன்) என்னை எப்படி வேண்டுமானாலும் நீங்கள் அழைத்துக்கொள்ளலாம். அதனால் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. ஞானி என்று நான் சொல்லிக்கொள்ளவில்லை. நீங்கள் தான் என்னை அப்படி அழைத்து என்னைக் கூச்சப்பட வைத்துவிட்டார்கள். மனித நேயம் மிகக் கொண்ட சாதாரண மனிதன். அண்ட பகிரண்டங்களில் ஒரு அணு நான், பூலோகப் பந்தில் ஒரு புள்ளி நான் என்பதை உணர்ந்தே இருக்கிறேன். ‘ஹிந்து சமுதாயம் எனும் சிறு வட்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஞானியா நீங்கள் ? ‘ என்று கேட்டிருக்கிறீர்கள். ‘இலவச சூலம் வழங்கி ‘, ‘திக காரன் ‘ என்று அவரவர்கள் எண்ணங்களுக்கு ஏற்ப அவரவர்கள் கண்ணுக்கு தெரிந்தாலும், நிச்சயமாக இது போன்ற சிறுவட்டங்களுக்கெல்லாம் அப்பால் நிற்கும் மனிதன் தான். ஒரு இந்து என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமையே. ஆனால் உங்கள் கட்டுப்பாடுகளுக்கும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் உட்பட்டவன் தான் ஹிந்து என்றால், நான் அந்த இந்து இல்லை. இதுபோலத்தான் திருமாவளவனும் சொல்லியிருக்கிறார் என்றே கருதுகிறேன். இந்து சான்றிதழ் வழங்குவது சங் பரிவாரிகளின் வேலையில்லை என்றால், திருமாவளவன் இந்துவா, டி.ஆர். பாலு இந்துவா என்று கேட்கும் வேலையையும் விட்டுவிடுங்கள். நான் இந்து என்று சொல்ல வெட்கப் படுகிறேன் என்று டி.ஆர்.பாலு சொன்னால் அது அவர் கருத்து அவ்வளவுதான். ‘இந்துக்களைக் கேவலப் படுத்திவிட்டார், தேர்தலுக்கு முன் சொல்லவேண்டியதுதானே ‘ என்று சங்பரிவாரப் பத்திரிக்கைகள்-குறிப்பாக தினமலர்- புலம்புவது எதற்காக ? அவர் இந்து என்று சொல்லிக்கொள்ள வெட்கப்பட்டால் இதில் மற்ற இந்துக்களை கேவலப் படுத்த என்ன இருக்கிறது ? அது அவர் கருத்து, சுதந்திரம், அவ்வளவுதான். அவர் இந்து என்பதால்தான் ஓட்டுப் போட்டார்களா ? தகுதியைப் பார்க்காமல் இந்து என்றுப் பார்த்து ஓட்டுப்போடும் முட்டாள்களாக இருந்தால் அது அவர் குற்றமா ? சிறு பிள்ளைத்தனமான இதுபோன்ற புலம்பல்களைப் பார்த்து சிரிப்புத்தான் வருகிறது.

ஒவ்வொரு முறை பாடல் சொன்ன போதும் அதில் அவர் விளக்கத்தை சுட்டிக்காட்டியும், அவர் விளக்கங்களிலிருந்தே சமஸ்கிருதம் தேவையில்லை என்பதையும் அதற்கும் தமிழ் நெறிக்கும் சம்பந்தமில்லை என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறேன். இப்போது வந்து பித்தன் தயாரா ? என்று கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்போது சம்ஸ்கிருதம் தேவை என்பதற்கான ஒரு நியாயமான காரணத்தையும் சொல்லாதவரை (7 வது தடவையாகக் கேட்கிறேன்!!) அதில் பேசுவதற்கு ஏதுமில்லை. இவருக்கு வேண்டுமானால் மசூதிகளை இடிப்பதற்கும், சங்கத்தில் போய் மதவெறியைப் பரப்ப திட்டமிடுவதற்கும் மேலாக நிறைய நேரமிருக்கலாம். எனக்கு நேரமில்லை. எழுதவேண்டியவைகள் தேங்கிக் கிடக்கின்றன. ‘உதாரணமாக வேளாங்கன்னி மாதா ஆலயம் என்னைப் போன்ற ஹிந்து தீவிரவாதிகளால் உடைக்கப்பட்டு… ‘ என்று தன் கடிதத்தில் எழுதியிருக்கிறார் அரவிந்தன். தான் ஒரு தீவிரவாதிதான் என்று உணர்ச்சிவேகத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இது போன்ற தீவிரவாதிகளின் முகத்தை வெளிக்கொணர ஏற்கனவே நிறைய நேரத்தை செலவாக்கிவிட்டேன். என்றாலும் அதில் எனக்கு வருத்தமில்லை. ஹிந்துத்வ வாதிகளின் தீவிரவாத நோக்கத்தையும், சாதிவெறியும் மதவெறியும் பிடித்த சங்பரிவாரக் கும்பல்களின் வக்கிர முகத்தையும் திண்ணை வாசகர்களுக்கும், உலகத்துக்கும் காட்ட முடிந்ததற்கு என் நேரம் செலவானதில் மகிழ்ச்சியே.

****

திரு. ராமன் ராஜாவின் ‘மசாஜ் ‘ அருமையாக இருந்தது. அனுபவித்து எழுதியிருக்கிறார். நம்மையே மசாஜ் டேபிளில் கொண்டு உட்கார வைத்துவிட்டதுபோல இருந்தது. துள்ளலான, நக்கலான நடை. எனினும் இன்னும் முன்னேற்றத்திற்கு இடமிருக்கிறது. ஆங்காங்கே தெரியும் அலட்சியத்தை குறைத்துவிட்டு முயற்சித்தால் இன்னும் நன்றாக எழுதலாம் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள். [அந்த இடத்தின் பெயரையும், எப்படி முன்பதிவு செய்வது, எப்படி அந்த இடத்தை அடைவது மற்றும் அறை/மசாஜ் செலவுகளையும் பற்றி கோடி காட்டியிருந்தால், அங்கே இனி செல்ல நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கக் கூடும். கட்டுரைக்கு இவைகள் தேவையில்லாத விபரங்கள் என்பதால், பின் குறிப்பாக கொடுத்திருக்கலாம்.]

****

திரு. சின்னக்கருப்பன் அவர்களின் பகுதியிலிருந்து….

பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதத்துக்கும், பணவீக்கம் 8 சதவிகிதமாக அதிகரித்திருப்பதும் கவலைப்படவேண்டிய விஷயம்தான். சென்னை மக்களுக்கு நல்ல நீர் தயாரிக்கும் திட்டத்துக்கு ஒரு 1000 கோடி ஒதுக்காமல், பாஜக அரசு போல சென்னை மக்கள் தண்ணீரில்லாமல் சாகட்டும் என்று நினைத்திருந்தால் பொருளாதார சதவிகிதம் 4-காக இருந்திருக்கும். பாஜக அரசுபோல அரசுப் பணிகளில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்பியிருந்தால் 5-ஆக இருந்திருக்கும். பென்ஷனை நம்பியே வாழும் முதியவர்களின் பென்ஷன் தொகைக்கான வட்டியை பாஜக போல பாதியாகக் குறைத்திருந்தால் 8ஆக இருந்திருக்கும். சேது சமுத்திர திட்டத்துக்கும், வெள்ள நிவாரணப் பணிகளுக்கும் இன்னும் மக்களுக்குத் தேவையான திட்டங்கள் எதற்கும் செல்வு செய்யாமல் பணத்தைப் பூட்டி வைத்திருந்தால் பொருளாதார வளர்ச்சி எங்கேயோ போயிருக்கும். என்ன செய்ய, மன்மோகன் சிங் அவர்கள் பொருளாதாரம் தெரியாத, மனித நேயம் கொண்ட பிரதமராக இருக்கிறார்! இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்போம் என்று காங்கிரஸ்காரர்கள் சொல்லிவிட்டு இன்னும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்காமலிருப்பது அநியாயம்தான். முதலில் அவர்களைக் கொஞ்சம் செயல்படவிடலாம் என்று நான் கருதுகிறேன். மேலும் கொஞ்சம் அவகாசமும் தரலாம் என்றும் கருதுகிறேன். 5 வருடம் ஆட்சி செய்து பல வேலைகளைக் காலி பண்ணியவர்களை விட்டுவிட்டு, ஆட்சிக்கு வந்து 100 நாட்களே ஆனவர்களிடம் போய் இன்னும் வேலை வாய்ப்பே ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என்று கேட்பது கொஞ்சம் ‘ஓவரா ‘கத் தெரிகிறது. இந்தியா போன்ற பெரிய, சிக்கலான ஜனநாயக நாட்டில் 100 நாட்கள் ஆட்சி என்பது ஒன்றுமேயில்லை. (அதாவது உருப்படியாக ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு. ஊழல் செய்து சம்பாதிக்க அல்ல). அதிலும், 99 சதவிகித நாட்களில் பாஜக, சங் பரிவாரக் கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்தவே விடாமல் அராஜகம் செய்திருக்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் பெரிய மனது பண்ணி நீங்கள் கவனிக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

– பித்தன்.

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

—-

piththaa@yahoo.com

Series Navigation

author

பித்தன்

பித்தன்

Similar Posts