காடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்

0 minutes, 3 seconds Read
This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

சூரியா


பாவண்ணன் ஏழாம் உலகம் பற்றி எழுதியிருந்த குறிப்பு சிறப்பாக இருந்தது . நுணுகியும் உணர்ச்சிபூர்வமாகவும் வாசித்திருக்கிறார். அந்நாவலைப்பற்றி இதுவரை நல்ல குறிப்புகள் எல்லாமே இணையத்தில் தான் வந்திருக்கின்றன. சிற்றிதழ்களில் வெறும் காழ்ப்பு அல்லது மெளனமே காணக்கிடைக்கிறது. மரத்தடி இதழில் ஹரன் பிரசன்னா எழுதியது பதிவுகள் இதழில் பல்லவன் எழுதியது போன்றவை நல்ல குறிப்புகள்.

ஜெயமோகனின் மற்ற நாவல்களில் இருந்து காடு ஏழாம் உலகம் இரண்டும் மிக மாறுபட்டவை. இவற்றில் அவர் முக்கியமான மையங்களை சற்றும் விளக்க முயலவில்லை. அவற்றை கண்ணுக்குத்தெரியாத மெல்லிய கோடுபோல காட்டுகிறார். நல்ல வாசகனுக்கு மட்டுமே தெரியும்படியாக. அதான்லேயே பலருக்கு ஒன்றும் பிடிகிடைக்கவில்லை என்பதையும் காணாமுடிகிறது. உதாரணமாக காடு நாவலில் பக்கம் பக்கமாக குறிஞ்சி வர்ணிக்கப்படுகிறது. குறிஞ்சி மட்டுமே காடு என்று காட்டப்படுகிறது. ஆனால் குறிஞ்சி மலரை இரு காதலர்களும் பார்க்கச்செல்லும் இடம் மிக மென்மையாக மிக மிகச் சாதாரணமாக சொல்லப்படுகிறது. குறிஞ்சி மலரின் ஒரே சிறப்பு அது பன்னிரண்டுவருடங்களுக்கு ஒருமூறை மட்டும் பூக்கும் என்பதே என்று சொல்லப்படுகிறது. வேறு எவ்வகையிலும் அது முக்கியமல்ல. அதன் தேனை அருந்தும் பூச்சிகள் பிறகு எப்போதுமே அதை அருந்தப்போவது இல்லை என்ற வரி முக்கியமானது.

அங்கிருந்து நகர்ந்து நாவலை பார்த்தால் அது ஒரு காதல் கதையே அல்ல என்று தெரியும். காதலர்கள் சந்தித்ததே சில நாட்கள். பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. ஒன்றுமே புரிந்துகொள்ளவும் இல்ல. உடனே பிரிவு வந்துவிடுகிறது. பிரிவும் சர்வ சாதாரணமாக மரணம். ஒன்றுமே நடக்கவிலை . ஆனால் மிஞ்சின வாழ்நாள் முழுக்க அவன் அவளையே நினைத்துக்கொண்டிருக்கிறான். பிறகு வாழ்க்கையில் வந்த துக்கங்களிலெல்லாம் இனிய கனவு போல அது இருக்கிறது. எவ்வளவு இனிமையாக இருந்தாலும்கூட குறிஞ்சி என்பது அவ்வளவுதான் என்று நாவல் காட்டுகிறது என்று எடுத்துக் கொள்ளலாம்..

இதேபோல நாவலில் உள்ள பல விஷயங்கள் பல கோணங்களில் கேள்விகளை எழுப்பக்கூடியவை. உதாரணமாக இந்த ‘தெய்வீகக் காதல் ‘ நாவலில் மிக நெருக்கமான உண்மையான ‘உயிரின் உயிராகிய ‘ உறவாக காட்டப்படுவது ஒருபால் உறவினராகிய ராபி ஆபேல் உறவு. அது உறவைப்பற்றி எழுப்பும் கேள்விகள் அனேகம். இப்படி படிக்க படிக்க நாவல் விரிந்தபடியே போகும். அதன் பல அம்சங்கள் கவிதைபோலவே சொல்லப்பட்டுள்ளன. அந்த மிளா முக்கியமாக. ஆனால் வெறும் காதல்கதையாக இதை வாசித்து மனப்பதிவை சொல்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். விதிவிலக்கான நல்ல கட்டுரை உயிர்மை இதழில் எழுத்தாளார் பி ஏ கிருஷ்ணன் எழுதியது[வெந்துதணிந்த காடு] ஆனால் அவரும் நாவலின் நகைச்சுவை மொழிநுட்பம் ஆகியவற்றுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அதன் கவித்துவத்துக்கு தரவில்லை.

அதேபோல ஏழாம் உலகமும் முக்கிய விஷயங்களை நுட்பமாகவே சொல்கிறது. இது பிச்சைக்காரர் உலகம் பற்றிய நாவல். அதன் துக்கங்கள் கடுமையாக சொல்லப்படுகின்றன. இதுதான் எளிய வாசகனுக்கு கிடைக்கும் முதல் வாசிப்பு. ஆனால் சில அத்தியாயங்களிலேயே அதில் வரும் நகைச்சுவையை நாம் ரசிக்க ஆரம்பிக்கிறோம். அந்த உலகை விரும்ப ஆரம்பிக்கிறோம். ஆசிரியரின் நோக்கம் அதிர்ச்சி தருவதுதான் என்றால் ஏன் அத்தனை நகைச்ச்சுவை ? ஒரே காரணம்தான். அதன் மூலம் அவர் மிக எளிதாக அந்த உலகிலும் மக்கள் மக்களாக வாழ்கிறார்கள் என்று காட்டுகிறார். அவர்களை பிறர் ‘உரு ‘க்களாக நினைக்கையில் அவர்களை மனிதர்களாக வாசகர்கள் நினைப்பது அந்த நகைச்சுவை மூலமே. நாமும் அவர்கள் கூட இருந்து பேசிக்கொண்டிருக்கலாமே என்று நினைக்க வைக்கிரார். ஒவ்வொரு உருவுக்கும் ஒரு தனி குணாதிசயத்தை மிக நுட்பமாக அளிக்கிறார்,. அதை பாவண்னன் பலபடியாக தொட்டுக்காட்டுகிறார்.

இரு முக்கியமான புள்ளிகளை பாவண்ணனும் தொடவில்லை. ஒன்று சாமி. மாங்காண்டி சாமிதான் நாவலின் மையம். சாமி திரும்பிவரும் இடம். அதைவைத்துதான் நாவலின் சாரம் நோக்கி செல்லமுடியும். அனைத்தையும் துறக்கும் சாமி இந்தமனிதர்களை துறக்கவில்லை .அதேபோல நாவல் முடியும் இடம் குய்யனுக்கு அத்த்னை உருப்படிகளும் சேர்ந்து சோறு வாங்கி தரும் இடம். அவர்களை பிறர் எப்படி எண்ணினாலும் அவர்கள் உயர்ந்த மனிதர்களாக காட்டும் இடம் அது.நாவலில் உண்மையான பிரியம் தெரியும் ஒரே இட்மும் அதுதான். கற்பனையும் நுண்ணுணர்வும் கோண்ட வாசகனுக்காக காட்டப்படும் இடம் இது.

நாவல் எந்த விஷயத்தையுமே ஒற்றாஇப்படையாக தட்டையாக சொல்லவில்லை. எங்குமே தகவல்களை நேரடியக சொல்லவில்ல. சொல்லப்போனால் அதிக தகவல்கள் இதில் இல்லை. உருப்படி வியாபாரி பண்டாரம் குழந்தைகள் விற்பனையை கொடுமையாக பார்க்க்கிறார். அதை அவரால் தாங்கவே முடியவில்லை. பிறன் பிள்ளையை விற்பவர் தன் பிள்ளைமீது உயிரையே வைத்திருக்கிறார். அதேபோல ஆபாசம் அழுக்கு என்பதன் மீதே போத்திக்கு காமம் தோன்றும் இடம்.அது உண்மையில் இந்நாவலை வேறு ஒரு இடத்துக்கு கொண்டுசெல்கிறது. ரூரு வியாபாரமே மாப்பிள்ளை வியாபாரமாக , சாமி வியாபாராமக நடக்கிறது என்று நாவல் லேசாக சொல்லிச் செல்கிறது.

நாவலின் பெண் கதாபாத்திரங்களைப்பற்றி விரிவாகவே எழுதலாம். ‘நாம ஆருக்கும் ஒரு தீங்கும் செய்யல்ல ‘ என்று சொல்லும் ஏக்கியம்மை, ஓடிப்போகும் இளைய பெண், மாங்காய்மாலைக்காக அப்பாவை உதாசீனம் செய்யும் மூத்தவள், எருக்கு, மாமியார்கிழவியாக வரும் கொடூரப்பெண்மணி என்று பலவகையான முகங்கள். ஓரிரு கட்சியில் வரும் கதாபாத்திரங்களில் கூட நுட்பமான அக ஆழங்கள் உள்ளன. கொச்சன் நாயர் ஓர் உதாரணம் .பிக்பாக்கெட் திருடன். நாவலை நம் கண்முன் நிறுத்துவதே ஆப்சர்வேசன்கள்தான். விபச்சாரி கர்சீப்பை எப்படி வைத்திருக்கிறாள் என்பது சொல்லிக்காட்டி விளக்கலாம்.

இந்நாவலை மனசில் நிறுத்துவது அதன் நகைச்சுவைதான். தமிழில் இதுவரை இந்த அளவுக்கு பிளாக் ஹ்யூமர் கொண்ட நாவல் வந்தது இல்லை. இந்தியன் வாட்டர் மெலோன் மற்றும் உணவு உடை உறையுள் பற்றி நண்பர்களிடம் பேசி சிரிக்கிறேன்.அப்போது ஆழமானஒரு வருத்தமும் ஏற்படுகிறது.அதுதான் இந்நாவலின் ஆன்மீகமான வெற்றி

**

suurayaa@rediffmail.com

Series Navigation

author

சூரியா

சூரியா

Similar Posts