பித்தன்
திரு ‘மாண்புமிகு ‘ அரவிந்தன் நீலகண்டனின் கடிதம் கண்டோம். கோபத்தில் என்ன சொல்கிறோம் என்பதே தெரியாமல் ‘உட்காருமிடத்தில் கொப்பளம் வந்தவன் போல ‘ குதி குதியென்று குதித்திருக்கிறார். நாம் கேட்டிருந்த நியாயமான கேள்விகளுக்கு பதிலோ, விளக்கங்களுக்கு விளக்கங்களோ இவர் கடிதத்தில் எதிர்பார்த்திருந்தால் அது நம் முட்டாள்தனம்தான். பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் ‘மாண்புமிகு ‘-வின் கடிதத்தில் விஷத்தையும், வெறுப்பையும் தவிர வேறெதுவுமில்லை.ஆர்.எஸ்.எஸ் என்பது தடைசெய்யப் படவேண்டிய முதல் இயக்கமென்றும், தீவிரவாத, பிரிவினைவாத இயக்கமென்றும் தோலுரித்துக் காட்டியதற்காகவும், அப்படிப்பட்ட இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய சாவர்க்கரைக் கொலைகாரன் என்று சுட்டிக் காட்டியதற்காகவும் காதிலிருந்து புகை வரும் அளவுக்கு அவர் கொண்டிருக்கும் கோபத்தை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. ‘சாவர்க்கரை பிடித்து வந்தது எதற்காக என்பது உலகத்திற்கே தெரியும் அதனால் சொல்லவில்லை ‘ என்று கூறும் அவர் ‘நேர்மை ‘யையும், தன் வாயால் ‘கொலைகாரன் ‘ என்று சொல்லமுடியாத அளவிற்கு அவர் கொண்டிருக்கும் பக்தியையும் அதனால் சொல்லாமல் விட்டுவிட்டதையும் கூட நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. அப்படியானால் அவனை கொலைக் குற்றத்திற்காகத்தான் கொண்டுவந்தார்கள் என்பதை ‘மாண்புமிகு ‘ ஒத்துக்கொள்கிறார். பின், கொலைகாரனை கொலைகாரன் என்று சொல்லாமல் தியாகி என்றா சொல்லமுடியும் ? தியாகி என்று சொல்ல வேண்டுமென்று ‘மாண்புமிகு ‘ அரவிந்தன் எதிர்பார்ப்பது ஏனோ நமக்கு வியப்பளிக்கவில்லை. இப்படி யாருமறிந்த – அவரே ஒப்புக்கொண்ட – உண்மையை, கொலைகாரனை கொலைகாரன் என்று நாம் சுட்டிக்காட்டினால் அது ‘கோயபல்ஸ்தனமாக செயல்படும் குள்ளநரித்தனமாக ‘ இந்த மாண்புமிகு-க்கு தெரிவதும் கூட ஏனோ நமக்கு வியப்பளிக்கவில்லை! சாதி, மத வெறிபிடித்த சங்பரிவாரங்களிலோ, பிரிவினைவாத-தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ஸிலோ பயிற்சி எடுத்திருந்தால் ஒருவேளை நமக்கும் கூட கொலைகாரன், நாட்டுப்பற்று மிக்க தியாகியாகத் தெரிந்திருக்கக்கூடும். அப்படி ஒரு பயிற்சியும் எடுக்காதது நம் முட்டாள்தனமென்று ‘Mr.மாண்புமிகு ‘ அரவிந்தன் சொன்னால் அதையும் நாம் கேட்டுகொள்ளவேண்டியவர்களாகிறோம்.
காசு கொடுத்தால் ஜனாதிபதிக்கே பிடிவாரண்ட் கொடுக்கக்கூடிய நிலையில்தான் நீதிமன்றங்கள் உள்ளன. விசாரணைக் கமிஷன்களையோ கேட்கவே வேண்டாம். எந்த விசாரணைக் கமிஷனும் குற்றவாளிகளை முழுமையாகக் கண்டுபிடித்ததாக சரித்திரமேயில்லை. இந்த நிலையில் கபூர் கமிஷன்களும், தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்-ஸை தடைசெய்யாமல் விட்ட நீதிமன்றங்களும் சொல்லிவிட்டதாக ‘மாண்புமிகு ‘ சொல்லிவிட்டதால், அதைப் பற்றி நாம் எதுவும் பேசகூடாதவர்களாகிறோம். ‘எந்த தனிமனிதனுக்கும் மகாத்மாவைக் கொல்ல எந்த நியாயமான காரணமும் இருக்கப் போவதில்லை. எனின் ஒரு இயக்கமோ, தீவிரவாதக் கூட்டமோதான் சதி செய்து அவரைக் கொன்றிருக்கவேண்டும். முஸ்லீம் லீக் போன்ற இயக்கங்களையோ காந்தி அரவணைத்து சென்றார். அவர்களுக்கு ஒரு காரணமும் இருக்க முடியாது. காங்கிரஸ்காரர்களே காந்தியின் கொள்கைகள் பிடிக்காமல் அவரைக் கொன்றுவிட்டார்கள் என்பதை புத்தி பேதலித்தவன்கூட – சில மாண்புமிகு தீவிரவாதிகளைத்தவிர – நம்பமாட்டான். பிரிவினைவாத, தீவிரவாத இயக்கமாக அப்போது இருந்தது -இப்போதும் இருப்பது- ஆர்.எஸ்.எஸ் தான். காந்திஜியின், அனைத்து மத மக்களையும் அரவணைத்து செல்லும் கொள்கைகள், குறிப்பாக முஸ்லீம்களை அரவணைத்து செல்லும் கொள்கைகளோ ஆர்.எஸ்.எஸ்-ன் அடிப்படை பிரிவினைவாதக் கொள்கைகளுக்கே எதிரானது. காந்திஜியின் தீண்டாமைக் கொள்கைகளும், ஹிந்து வெறிபிடித்து மனுவின் கொள்கைகளை நிலை நாட்டத்துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரக் கும்பல்களின் கருத்துக்கு நேரெதிர். காரணங்கள் பலமாக இருக்கின்றன. கொலைகாரனோ ஆர்.எஸ்.எஸ் காரன். ‘அவன் ஆர்.எஸ்.எஸ்-லிருந்து விலகிவிட்டான் என்று சொல்வது கோழைத் தனமானது. அவன் கடைசிவரை பரிவாரத்தின் ஆதரவில்தான் இருந்தான் ‘ என்று கூடவே இருந்த அண்ணன் பகிரங்கமாக சொல்லியிருப்பதும் கூட ஆவணப்படுத்தப் பட்ட உண்மைகள்தான். ( செலக்டிவ் அம்னீஷியா கொண்ட ‘மாண்புமிகு ‘ தீவிரவாதிகளுக்கு இந்த ஆவணங்கள் ஏனோ கண்ணுக்குத் தெரிவதில்லை!) ‘. இத்தனை நியாயமானக் காரணங்களையும் கூறி, கொலைகாரன் ஆர்.எஸ்.எஸ்-லிருந்தவன் என்று அவன் அண்ணன் சொன்ன ஆவணப்படுத்தப்பட்ட உண்மையையும் நாம் விளக்கிக் கூறினால் நம் பண்பையும் நடுநிலையையும் கேள்விக்குறியாக்கி, தர்க்கவாதி என்று எளிதாக நம்மை முத்திரைக் குத்திவிடும் தந்திரம் ‘மாண்புமிகு ‘ அரவிந்தனுக்கு கைவந்தக்கலையாக இருக்கிறது. நாம் அப்படியே மலைத்து போய் நிற்பதைத் தவிர வேறெதுவும் செய்யமுடியாதவர்களாகிறோம்..
‘மேல்மாடி காலியாக இருக்கிறது ‘ என்று நம்மைப் புகழ்ந்ததற்காக ‘மாண்புமிகு ‘ அரவிந்தனுக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஜென் துறவிகள் பற்றிய ஒரு கதை உண்டு. ஒரு இளம் ஜென் துறவி ஞானம் தேடி, குருவைத்தேடி பல வருடங்கள் அலைந்து கடைசியில் ஒரு குருவை அடைகிறார். குரு அவரை சோதிப்பதற்காக ‘ஏனப்பா நீ ஊரிலிருந்து கிளம்பும் போது அரிசி என்ன விலை விற்றது ? ‘ என்று கேட்கிறார். ‘அந்தக் குப்பைகளெல்லாம் வேண்டாமென்றுதானே ஒதுக்கிவிட்டு வந்திருக்கிறேன். அவற்றையெல்லாம் சுமந்து வரவேண்டுமென்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம் ? ‘ என்று இளந்துறவி கோபமாகக் கேட்க குருவோ புன்னகைத்தபடி ‘நீ தான் உண்மையாக ஜென்னை அறிந்திருக்கிறாய் ‘ என்று கூறி வாழ்த்தினாராம். எண்ணங்களற்ற மனம் தான் தெய்வீகத் தன்மையடைந்த ஞானிகளின் மனம். கற்றறிந்த ஏட்டுச் சுரக்காய்களை மட்டுமல்ல, கடந்தகாலக் குப்பைகளையும், நிகழ்கால நிகழ்வுகளையும், எதிர்கால ஆசைகளையும் துறந்து மனதை வெற்றிடமாகக்கினால்தான் ஞானத் தன்மையடையமுடியும். அத்தகைய எண்ணங்களற்ற மனதை அடையவே துறவிகள் யாகங்களையும் யோகங்களையும் தவங்களையும் செய்கிறார்கள். உண்மையான ஆன்மிகவாதிகளுக்கு இது தெரிந்திருக்கும். ஆன்மீகவாதிகள் என்ற போர்வையில் மதவெறி பிடித்து, மதக்கலவரங்களை உண்டாக்கும் தீவிரவாத கும்பல்களில் ஒருவரான ‘மாண்புமிகு ‘ அரவிந்தனுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லையாதலால், நம்மை மட்டம் தட்டுவதாக நினைத்துக்கொண்டு புகழ்ந்திருக்கிறார். அவர் அறியாமையை நாம் மன்னிப்பதோடு, நம்மை ‘தெய்வீக தன்மை கொண்ட ஞானி ‘ என்று புகழ்திருப்பதால் அவருக்கு நன்றி சொல்லவும் நாம் கடமைபட்டவர்களாகிறோம்! இந்த உண்மையான ஆன்மீகக் கருத்துக்களை ஒதுக்கிவிட்டால் கூட ‘மாண்புமிகு ‘ அரவிந்தன் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘மதக்கலவரங்களை உண்டாக்கவும், மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கவும், சகமனிதனை சாதிப் பெயர் சொல்லி ஒதுக்கவும் உபயோகிக்க, மேல்மாடி, கீழ்மாடி என்று அடிக்கல்லிலிருந்து மொட்டை மாடி வரை ஒரு இடம் விடாமல் விஷத்தை-உங்களைப்போல்- நிரப்பி வைத்திருப்பதைவிட மேல் மாடி காலியாக இருப்பது எத்தனையோ மேல் ‘ என்பதுதான் அது.
சங்கப்பாடலை அப்போது ஆர்.எஸ்.எஸ்-ன் நாட்டுப்பற்றைக் காட்டுவதற்காக அவர் சொன்னதாக நமக்கு ஞாபகம்.
இப்போது அது ‘ஹிந்து தர்ம ‘ பார்வை என்கிறார். அதாவது கிறிஸ்தவமும், இஸ்லாமும் வேறு நாட்டில் தோன்றிய மதங்கள் என்பதால் அவற்றை மண்சார்ந்தவைகளாக கருதமாட்டார்களாம். என்ன ஒரு உளறல் பாருங்கள். இவர்கள் கூற்றுப்படி இங்கிலாந்திலோ, பிரான்சிலோ, அமெரிக்காவிலோ கிறிஸ்தவத்தை மண்சார்ந்த மதமாகக் கருத முடியாது! இன்னும் சொல்லப்போனால் ஜெருசலத்தைத் தவிர வேறு எங்கும் கிறிஸ்தவம் மண்சார்ந்த மதமாக கருதப்படமுடியாது! ஒரே இந்து நாடு என்று நேபாளாத்தை அழைப்பதும் தவறாகிவிடும். மதம் என்பது எங்கு தோன்றியிருந்தாலும் அதை பின்பற்றுபவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அந்த மதம் இருப்பதாகத்தானே அர்த்தம். இந்த அடிப்படைக் கூட புரியாமல், கிறுக்குத்தனமாக மதம் பற்றி புரிந்துவைத்திருப்பவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய என்று நமக்கு ஒரு சம்சயம். சரி கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் விட்டுவிடுவோம். புத்தமதமும் சமண மதமும் இந்தியாவிலேயே தோன்றிய மண்சார்ந்த மதங்கள் தானே அவற்றைப் பற்றியாவது ஆர்.எஸ்.எஸ் சங்கத்தில் புகழ்ந்து பாடுவார்களா என்று நம் மரமண்டைக்குள் ஒரு கேள்வி எழுவதை நம்மால் தடுக்க முடியவில்லை. சரி அதையாவது கேட்கலமா என்றால், ‘இப்போது இந்தியாவில் புத்தமதமும் சமண மதமும் எங்கே பெரும்பான்மையாக இருக்கிறது ? தேவையில்லாமல் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார்கள் அதற்கு நான் பதில் சொல்லவேண்டுமா ? ‘ என்று கற்பூர வாசனையும் அறிந்த நவீன ‘மாண்புமிகு ‘ நம்மை திருப்பிக்கேட்டு புலம்புவாரே என்றுவேறு நாம் யோசிக்கவேண்டியுள்ளது. சரி மதங்கள் தோன்றியதை விட்டு விட்டாலும், அம்மதங்களை பின்பற்றும் 20 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்தியாவிலேயே பிறந்த மண்ணின் மைந்தர்கள் தானே அவர்களை ஒதுக்கிவிட்டு, அவர்களின் மத நம்பிக்கைகளை விலக்கிவிட்டு என்னவிதமான தேசப்பற்றை சங்கம் கொண்டிருக்கிறது ? என்ற நம் அடிப்படைக் கேள்வி இன்னும் அப்படியே அந்தரங்கத்தில் தொங்கிகொண்டிருக்கிறது. இதற்கு பதில் சொல்லாமல் எதையாவது திரித்து எழுதுவார்கள் என்று நாம் எதிர்பார்த்த படியே தான் நடந்திருக்கிறது. நமக்கு வியப்பாயில்லை!
மற்றபடி இந்த ஆழ்வார்கள், பாரதியார், நக்கீரனார் பாடல்கள் எல்லாம் சம்ஸ்கிருதம் தமிழருடையதா மற்றும் இப்போது தேவையா என்ற வாதத்தின் போது சொல்லப்பட்டதாக நமக்கு ஞாபகம். நம் விளக்கங்கள் எதையும் அவர் ஏற்கவில்லை என்பதும் புரிந்துகொள்ளக் கூடியதே. பழையப் பாடல்களை திரித்து திரித்து விளக்கம் சொல்லிக்கொண்டிருக்காமல்,
‘இப்போது சம்ஸ்கிருதம் தேவை என்பதற்கான நியாயமான ஒரு காரணத்தையாவது சொல்லுங்கள் ‘ என்று ஒரு முறைக்குப் பலமுறை கேட்டிருந்ததாக நமக்கு ஞாபகம். ஒரு நியாயமான காரணத்தையும் கூறமுடியாமல் அவர் அடைந்துவிட்ட மெளனத்தையும் நாம் புரிந்துகொண்டு வாதத்தை நிறுத்திக்கொள்கிறோம். இப்போது, முடிந்து போன அந்த வாதத்தைக் கிளறி எடுத்து எதற்காகப் புலம்புகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
சிறுபான்மையினரின் கல்வி நிலையங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றனவாம். சொத்துமேல் சொத்துவைத்திருக்கும் மடாதிபதிகளின் பள்ளிகளுக்கு சலுகைகள் இல்லையாம். இந்த ஒரே காரணத்தினால் மட்டும்தான் மடாதிபதிகளின் பள்ளிகளில் கல்விக் கட்டணம் அதிகமாம். இல்லையென்றால் எந்த சாதியினரும், எந்த ஏழைகளும் படிக்கும் பள்ளிகளாக அவைகள் இருக்குமாம். ‘மாண்புமிகு ‘ சொன்னால் நாம் ஒத்துக்கொள்ளவேண்டியதுதான். சரி. மடாதிபதிகளின் பள்ளி கட்டணங்கள் அதிகமாக இருப்பதற்கான காரணங்களை சப்பை கட்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அது தான் எல்லோருக்கும் தெரிகிறதே. ‘அந்தக் காரணங்களை களைய பாடுபடாமல் அடுத்தவர்களைப் பார்த்து ஏன் பொருமிக் கொண்டிருக்கிறீர்கள் ? ‘ என்பதுதானே நம் கேள்வியே. இவருக்கும் இன்னொருவருக்கும் பிரச்சனை என்று வைத்துக்கொள்வோம். அரசு அந்த இன்னொருவருக்கு சலுகை செய்கிறது. இவர் என்ன செய்யவேண்டு. எனக்கும் சலுகை கொடு என்று கேட்கவேண்டும், கிடைக்காத பட்சத்தில் அதற்கு போராடவேண்டும். அது நியாயமாக இருக்கும். ஆனால் இந்த அறிவுஜீவிகள் என்ன செய்கிறார்கள், தங்களுக்கு கேட்பதைவிட முதலில், அவனுக்கு ஏன் கொடுக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். அதோடு விட்டாலும் பரவாயில்லை, சலுகை பெறும் காரணத்தால் அவனை அழிக்கவும் புறப்பட்டுவிடுகிறார்கள். ‘இவர்கள் கை காட்டும் அரசாங்கம் தானே 5 வருடங்கள் ஆட்சி செய்தது. இதைக் களைய என்ன செய்தார்கள் ? இலட்சக்கணக்கான ‘மண்டூகங்கள் ‘ கடப்பாரையையும் சூலத்தையும் எடுத்துக்கொண்டு தீவிரவாதிகள்போல பிற மத சின்னங்களை அழிக்க ஓடினார்களே. நமக்கும் சலுகைகள் வேண்டுமென்று கேட்டு எத்தனை சங்பரிவாரிகள் வெளியே வந்தார்கள் ? தேவையே இல்லாத அந்த தீவிரவாத செயலை நாடு தழுவிய போராட்டம் போல செய்தார்களே. மிகவும் முக்கியமான, தேவையுள்ள இந்த பிரச்சனையை ஏன் நாடு தழுவிய அளவில் எடுத்து செல்லவில்லை ? (ஏனென்றால் இதில் ஓட்டுகள் இல்லை!). கோடிக்கணாக்கில் கோவில்களில் குவியும் பணத்தை நம் குழந்தைகளின் படிப்புக்காகத் தரசொல்லி எத்தனை சங்பரிவாரிகள் கேட்டிருக்கிறார்கள் ? மதம் மாற்றுகிறார்களே என்று புலம்பாமல், ஏன் மக்கள் மாறுகிறார்கள் என்று பார்த்து இந்து மதத்திலுள்ள ஏற்ற தாழ்வுகளை போக்க ஏன் போராட மறுக்கிறீர்கள் ? இப்படி தேவையுள்ள எதையும் செய்யாமல் மற்ற மதத்தினரைப் பார்த்து பொருமிக்கொண்டு ஏன் கலவரங்களுக்கு காரணமாகிறீர்கள் ? ‘ என்பது போன்ற நியாயமான கேள்விகளைக் கேட்டால் அது ஊளையிடுவதாக ‘மாண்புமிகு ‘ சங்பரிவார அரவிந்தனுக்குத் தெரிகிறதாம்! நமக்கு வியப்பாயில்லை!
அன்னை தெரசா மாதிரி சோனியா என்றோ அல்லது அவர்களை ஒப்பிட்டோகூட பேசியதாக நமக்கு ஞாபகமில்லை. மாண்புமிகு அரசியல்வாதிகளே பிச்சை கேட்கும் அளவிற்கு திரித்து எழுதுவதில் அரவிந்தனுக்கு நிகர் அவரேதான் (அந்த காரணத்தாலேயே அவரை ‘மாண்புமிகு ‘ என்று அழைக்கிறோம் என்பதையும் இங்கே உண்மையின் பொருட்டு சொல்லிக்கொள்கிறோம்!) என்பதை அறிந்திருந்தும் நாம் சற்று குழம்பிப்போகிறோம். ஒரு வேளை நமக்கே தெரியாமல் அப்படி ஏதும் ஒப்பீடு செய்துவிட்டோமோ என்று ஒரு தயக்கம். எத்தனை முறை படித்துப் பார்த்தாலும் அப்படி ஏதுமில்லை. இந்தியாவில் பிறந்ததால் மட்டும் ஒருவர் இந்தியராகிவிடுவதில்லை என்பதையும், இந்தியர்களுக்காக பாடுபடுபவர்கள் எல்லாம் இந்தியர்கள் என்பதும்தான் நாம் சுட்டிக்காட்டியது. இந்தியாவிலேயே பிறந்திருந்தாலும் இந்தியாவுக்கு துரோகம் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்றும் அதற்கு உதாரணமாக எட்டப்பனையும், ரவீந்தர் சிங்கையும் குறிப்பிட்டிருந்தோம். அதுபோல வேறு நாட்டில் பிறந்திருந்தாலும் இந்தியர்களுக்காக பாடுபடுபவர்களும் இருக்கிறார்கள், அவர்களை இந்தியர்களாக கருதுவதே சரி என்றும் அதற்கு உதாரணமாக தெரசா அவர்களையும் சுட்டிக்காட்டியிருந்தோம். நம் கட்டுரையைப் படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்குக் கூட இது எளிதாக புரிந்துவிடும்! மாண்புமிகுகளுக்குப் புரிவதில்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் எல்லாம் அன்னை தெரசா போல இருப்பார்கள் என்றும் நாம் சொல்லவில்லை. பிரச்சனை சோனியாவையோ தெரசாவையோ பற்றியதேயில்லை. (சோனியாவை வைத்து எழுப்பபடுவதால் இங்கு குறிப்பிடுகிறோம்). பிரச்சனை பொதுவாழ்வில் ஈடுபடுவர்களுக்குள்ள உரிமை பற்றியது. நாளை நம் மகனோ மகளோ வேறு நாட்டில் திருமணம் செய்துகொண்டு வந்து அவர்களும் இந்திய குடியுரிமை வாங்கிய பின்பும் பொது வாழ்வில் ஈடுபட தடை யாரும் சொல்லக்கூடாது என்பதுதான் நாம் சொல்வது. பொது வாழ்வையும், குடும்ப வாழ்வையும் ஏன் கலக்கவேண்டும் ? திருமணத்திற்கு மனம் பொருந்தியவர்களாகவும், மனதிற்கு பிடித்தவர்களாகவும் இருக்கவேண்டும். மற்ற எதுவும் தேவையில்லை. கலப்புத் திருமணங்களே சமதர்ம சமுதாயம் ஏற்பட வழி என்று அறிஞர்கள் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில், பிற்காலத்தில் பிரதமராகக் கூடும் என்பதால் ராகுல் தனக்குப் பிடித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்பதோ அல்லது அப்படி செய்துகொண்டால் அவர் பதவியில் அமரக்கூடாதென்றோ சொல்வது மடத்தனமானது. சோனியா உலகின் சிறந்த பெண்மணி என்றோ, ஊழலே செய்யமாட்டாரென்றோ நாம் சொல்லவில்லை. அறக்கட்டளையில் தவறு செய்திருந்தால் அது இந்தியாவில் இருக்கும் மற்ற ஊழல்வாத அரசியல்வாதிகளைப் போலவே அவரும் ஒரு ஊழல்வாத அரசியல் வாதி என்றுதான் காட்டும். என்றாலும் மற்ற ஊழல்வாதிகளுக்கு அதிகாரங்களையும் பதவிகளையும் பிடிக்க இருக்கும் அதே உரிமை இவருக்கும் உண்டு என்பதே நம் வாதம். மற்றபடி ஊழல்வாதிகளை ஆட்சியில் அமரவைக்கலாமா கூடாதா என்பது மக்கள் பதில் சொல்லவேண்டிய கேள்வி.
ஆட்சி அதிகாரங்களைப் பிடிக்க மட்டும்தான் இந்தியர்கள் வேண்டுமென்று கேட்கிறீர்கள். மற்ற பொது நலத் தொண்டுகளுக்கு அப்படிக் கேட்பதில்லை. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவ பில் கேட்ஸ் ஒரு 100 கோடி கொடுத்தால் பல்லிளித்துக்கொண்டு வாங்கிக்கொள்வார்கள். அப்போது அவர் வெளிநாட்டவர் என்று தெரியாது. சங்கர மடங்களும், சங் பரிவாரங்களும் ஏன் சில கோடிகளையோ, சில இலட்சங்களையாவது இது போன்ற பொதுநலக் காரியங்களுக்குக் கொடுக்கவில்லை ? என்று நாம் கேட்கக் கூடாது. தெரசா ஒரு விதிவிலக்கு அவர் ஒருவரை மட்டும் பார்த்துவிட்டு சொல்லக்கூடாது என்று குறுக்குக் கேள்விகள் கேட்பார்கள் என்று தெரிந்திருந்ததாலேயே இப்படி குறிப்பிட்டிருந்தோம். அதாவது ‘மனதாலும், உணர்ச்சியாலும், மனிதாபிமானத்தாலும் இந்தியர்களாய், இந்தியர்களுக்குத் தொண்டு புரியும், சகோதர சகோதரிகளும், அன்னைகளும், நண்பர்களும் எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் இந்தியர்கள் தான். அப்படி சொல்வது நமக்குப் பெருமையே. ‘ என்று. ஆட்சி அதிகாரங்களுக்கு மட்டும் தாங்கள்தான் என்று கூறிக்கொள்ளும் அத்வானிகளும், ஜோஷிகளும், உமா பாரதிகளும், சுஸ்மாக்களும், சங்கரர்களும் ஏன் இந்த தொண்டுகளை செய்யமாட்டேன் என்கிறார்கள் ? என்பது போன்ற நியாயமான கேள்விகளைக் கேட்டிருந்தோம். அரவிந்தன் வழக்கமான தந்திரத்தைக் கையாள்கிறார், அதாவது கேள்விக்கு எதிர் கேள்வி. வெளிநாட்டிலிருந்து வந்த தெரசா போன்றோர் நோயாளிகளைத் தொட்டு தூக்கி துண்டு செய்கிறார்கள் என்று நாம் குறிப்பிட்டிருந்ததை அவர் வசதிக்காக தந்திரமாகத் திரித்து ‘சோனியா எத்தனை நோயாளிகளை தூக்கினார் ? என்று. பதில் சொல்வதை தந்திரமாக தவித்து விடுவதோடு, நம்மை வேறு பதில் சொல்லும் நிலமையில் வைத்துவிடுகிறார். தந்திரமய்யா தந்திரம், சங் பரிவார தந்திரம்! சரி சோனியா எந்த நோயாளியையும் தொட்டு தூக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம். அந்தக் காரணத்தினால் அவர் பிரதமர் பதவியில் அமரக்கூடாதென்றால், அதே காரணத்துக்காக வாஜ்பாயிகளும், அத்வானிகளும், மோடிகளும், சங்பரிவாரத்தை சேர்ந்த யாரும் இது போன்ற பதவிகளில் அமரக் கூடாதே. இதையெல்லாம் நாம் கேட்டால் நாம் உளறுகிறோமாம்!
ஒரு பெரியவர் சோனியாவின் காலில் செருப்பும் மாட்டிவிடும் புகைப்படத்தை நாம் பார்க்கவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறோம். அதுபோன்ற ஒரு புகைப்படம் அரவிந்தன் நீலகண்டனைப் போன்ற ஒருவருக்குள் ஏற்படுத்தும் அதிர்ச்சியையும் நாம் புரிந்துகொள்ளலாம். ‘அம்மா ‘க்களின் கால்களில் முதுகெலும்பில்லாத அமைச்சர்கள்களும், எம்.எல்.ஏ-க்களும் விழுந்து கிடக்கும் காட்சியையும், அத்வானிகளும் வெங்கட் ராமன்களும் சங்கராச்சாரிகளின் கால்களில் கிடக்க, உலகத்தையே வெற்றி கொண்டுவிட்டவர் போல மமதையில் பல்லிளித்துக்கொண்டு ஆசீர்வதிக்கும் சங்கராச்சாரிகளையும் பத்திரிக்கைகளின் முகப்புப் பக்கங்களில் பார்த்து புல்லரித்துப் புளங்காகிதம் அடைந்துகொண்டிருப்பவர்களுக்கு, அப்படி ஒரு புகைப்படம் ஏற்படுத்தும் அதிர்ச்சியை நம்மால் எளிதாக புரிந்துகொள்ள முடியும். ‘வர்ணாசிரம மனு பொறுக்கி ‘, யார் காலில் யார் விழவேண்டும் என்றெல்லாம் சொல்லிவைத்திருக்க, அதையே தலைமேல் வைத்துக்கொண்டு உயிராகக் காப்பாற்றி வருபவர்களுக்கு, அந்தக் கொள்கைகளுக்கு சம்பந்தமில்லாமல் ஒருவர் இன்னொருவர் காலில் – எதேச்சையாகக் கூட இருக்கலாம் – விழுந்தால் ஏற்படும் அதிர்ச்சி சாதாரணமானதாகவா இருக்கும் ? சோனியா அந்த பெரியவரை வேண்டுமென்றே செருப்பை எடுக்க சொல்லியிருக்க மாட்டார் என்று ‘மாண்புமிகு ‘வையும் சேர்த்து யாருக்கும் தெரியும். எதேச்சையாக கீழே விழுந்துவிட்ட செருப்பை, தலைவர்களைக் கண்டால் தலை கால் புரியாமல் செயல்படும் நம் மக்கள் கூட்டத்தில் ஒருவர் எடுத்துக் கொடுத்திருக்கிறார். (அவரே காலில் மாட்டிவிட முனைந்திருக்கிறார்). இப்படி எதேச்சையாக நடந்துவிட்ட ஒரு செயலையும் அரசியலாக்கி, சோனியா எதோ கொலை குற்றம் செய்துவிட்டதுபோல (இந்தியாவில் அரசியல்வாதிகளின் கால்களில் அதற்குமுன் யாருமே விழுந்ததில்லை என்பது போலவும்) காட்டும் தந்திரம் நமக்கில்லை. சோனியா செய்தது தவறான செய்கை என்பதிலோ, அவரே சென்று செருப்பை எடுத்திருக்கவேண்டுமென்பதிலோ, குறைந்த பட்சம் கையிலாவது அதை அந்த பெரியவரிடமிருந்து வாங்கியிருக்கவேண்டுமென்பதிலோ ஒரு சந்தேகமுமில்லை. பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒரு தலைவருக்கு, அந்த செயல் ஒரு தவறான முன்னுதாரணம் என்பதால் நாம் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அடுத்ததாக திருமாவளவன். ‘ஹிந்து இல்லை ‘ என்று அவர் சொல்வது நீங்கள் ‘ஹிந்து ‘ என்பதற்கு வரையறுத்து வைத்திருக்கும் சட்டங்களுக்குட்பட்ட ‘ஹிந்து ‘ இல்லை என்று. சங்கராச்சாரிகளின் கால்களில் விழுந்து அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்பவன் தான் ‘ஹிந்து ‘ என்று நீங்கள் கூறும் ‘ஹிந்து ‘ இல்லை என்று. வருணாசிரம மனுக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, சாதி பெயர்களை சொல்லி இந்திய சகோதரனை தள்ளி வைப்பவன் தான் ‘ஹிந்து ‘ என்று சொல்கிறீர்களே அந்த ‘ஹிந்து ‘ இல்லை என்று. இந்துத்வா என்று இந்து மதத்திற்கு சம்பந்தமில்லாத கோஷம் எழுப்பிக்கொண்டு
சூலங்களையும் கடப்பாரைகளையும் எடுத்துக்கொண்டு தீவிரவாதிகள் போல மாற்று மதத்தினரின் கோவில்களை நோக்கி செல்லும் சிறுமதி படைத்தவன் தான் ‘ஹிந்து ‘ என்று நீங்கள் சொல்லும் ‘ஹிந்து ‘ இல்லை என்று. ‘ஹிந்து ‘ என்று வெளியில் வந்து முதலில் சொல்லட்டுமே என்று நீங்கள் கேட்கும் ‘ஹிந்து ‘ இல்லை அவர். ஒரு உண்மையான இந்து. ஒரு உண்மையான இந்துவைப் போல, ஒரு தமிழனைப் போல தன் குல தெய்வக் கோவிலில் சென்று வணங்கி வந்ததை இந்த வார ஆனந்த விகடன் படத்துடன் வெளியிட்டிருக்கிறது. அவர் இந்து என்பதற்கு வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை. வெளியில் வந்து சொல்ல வேண்டிய அவசியமோ, உங்களிடமோ அல்லது ஆர்.எஸ்.எஸ்-டமோ இந்து சான்றிதழ் வாங்கவேண்டிய அவசியமோ எந்த இந்துவுக்கும் இல்லை. தேரிழுப்பதற்கு ஆசையோ, வேண்டுதலோ கூட வேண்டும் என்பதில்லை. சாதி பெயரை சொல்லி ஒரு பிரிவினரை தேரிழுக்கவிடாமல் தடுக்கிறார்கள் என்று தெரிந்தால் அதை தடுப்பதற்காக மட்டுமே அவர் தேரிழுக்க சென்றிருந்தாலும் அது வரவேற்கப்படவேண்டியதே. விட்டால் அடுத்ததாக சங் பரிவாரங்கள் சொல்பவர்கள் தான் தேரிழுக்கவேண்டும் என்று இந்த ‘மாண்புமிகு ‘ சொன்னாலும் சொல்லுவார்! அதையும் நாம் சத்தம் போடாமல் கேட்டுகொள்ளவேண்டுமாம்.
பண்டிகைகளும் திருவிழாக்களும் ஏற்பட்டிருப்பதே ஒரு சமுதாயத்திலுள்ள எல்லாவிதமான மக்களையும் ஒன்றிணைத்து ஒரு சுமுகமான சூழலை உருவாக்கவே. சாதி, மத, மாற்சாரியங்களை மறந்து எல்லோரும் இணைந்து ஊருக்காக ஒரு விழா நடத்தும்போது, அவர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் மறைந்து ஒரு அன்பான சூழல் உருவாகும் என்பதற்கே திருவிழாக்கள் ஏற்பட்டிருக்கின்றன. பக்கம் பக்கமாக ஏட்டுச் சுரைக்காய்களை எழுதிக் குவிக்கும் ‘மாண்புமிகு ‘ அறிவுஜீவிக்கு இந்த சிறு அடிப்படை உண்மைகூட புரிந்திருக்கவில்லையே என்று நாம் மலைக்கிறோம். ஊர் கூடி தேர் இழுக்கவேண்டும் என்று அதானால் தான் சொல்லப்பட்டிருக்கிறது.(ஊரிலுள்ள ஒரு மதத்தினர் கூடி என்றோ அல்லது ஒரு சாதியினர் என்றோ சொல்லப்படவில்லை.) ஒரு இஸ்லாமியரோ கிறிஸ்தவரோ தேரிழுக்க வந்தால் மகிழ்ச்சியோடும் பெருந்தன்மையோடும் சேர்த்துக்கொள்ளவேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவர்களை அதற்கு நாம் அழைக்கவேண்டும், அப்போதுதான் நாம் ஒரு அன்பும் பண்பும் நிறைந்த சமூகமாக இருக்கமுடியும். மற்றபடி தனக்கு தேரிழுக்கவேண்டுமென்றோ அதுவும் ஒரு சமூகத்தினர்தான் இழுக்கவேண்டுமென்று எந்த சாமியும் கேட்டதாக நாம் எந்த இந்துமத புத்தகங்களிலும் படித்ததில்லை. தம்மை ஊர்வலமாக அழைத்துசெல்ல வேண்டுமென்றோ அதுவும் குறிப்பிட்ட சாலை வழியாகத்தான் அழைத்து செல்லவேண்டுமென்று பிள்ளையார் கேட்டதாகவும் நாம் கேள்விபட்டதில்லை. சாதி மத வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் பண்டிகைகளுக்கு அழைப்பதும், மற்ற பண்டிகைகளில் கலந்துகொள்வதும் தான் ஒரு சமூகத்தின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாகும். வாஜ்பாயிகளும், கருணாநிதிகளும் ஜெயாக்களும் ஓட்டுக்காக கலந்துகொள்ளும் அரசியல் விருந்தைப் பற்றி நாம் சொல்லவில்லை. உண்மையாக நாம் பள்ளியில் படித்த காலத்தைய நிகழ்வுகளையே சொல்கிறோம். அப்போதெல்லாம், எம் தந்தையாருடன் வேலை பார்த்த கிறிஸ்தவ நண்பர்களுக்கும் சேர்த்தே ஒவ்வொரு தீபாவளிக்கும் பொங்கலுக்கும் பலகாரம் செய்வார்கள். ஆடிப் பெருக்கிற்கு பொன்னி நதியை வணங்கிவிட்டுக் கையில் மஞ்சள் நூல் கட்டிவிடும்போது தமையனாரின் இஸ்லாமிய நண்பர்களுக்கும் கட்டிவிடுவார்கள். யாரும் மறுப்பேதும் சொல்லமாட்டார்கள். படையலிட்ட பழங்களையும் இனிப்பு மாவு வகைகளையும் சாதி மதம் பார்க்காமல் யாவரும் மாறி மாறி பரிமாறிகொள்வதெல்லாம் வெகு சாதரணமான காட்சிகளாகும். கிறிஸ்துமஸ்-கு கேக் வழங்குவதும், ரம்ஜானுக்கு அழைத்து பிரியாணி போடுவதும் கூட சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கும். ஆர்.எஸ்.எஸ்-ம், பிஜேபி, சங்பரிவாரங்களும், ராமகோபாலன்களும், ராஜாக்களும், இல.கணேசன்களும் தமிழகத்திற்குள் வந்துவிட்ட பின் ‘ஆமை புகுந்த வீடு போல ‘ என்று சொல்வார்களே அதுபோல ஆகிவிட்டது தமிழகம். பண்டிகைக் காலங்களில் ஊருக்கு சென்று பல வருடங்களாகிவிட்டது. இப்போது பண்டிகைகள் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. ஹும்ம்…
நாம் முன்பே ஒருமுறை ‘மாண்புமிகு ‘ அரவிந்தனைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டிருந்தோம். [ ‘2 அல்லது 3 வாரங்களுக்கு ஒரு முறை வந்து பெரியார் இனவாதப் பிரசாரம் செய்தார் என்றும் இன்னும் என்னவெல்லாம் அவரை திட்டமுடியுமோ அவ்வளவையும் திட்டாவிட்டால் அவருக்கு தூக்கம் வராது போலிருக்கிறது. (பாவம் அப்படி ஒரு நிலை!). ‘] இப்போது மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார். சம்பந்தமேயில்லாமல் போகிறபோக்கில் ‘ஈவேரா பகுத்தறிவுக் கும்பல் ‘ பற்றி ஒரு திட்டு திட்டிவிட்டுத்தான் செல்கிறார். பகுத்தறிவுக் கும்பல் மீது அவருக்கு இருக்கும் துவேஷ பக்தியையும் நாம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். முதலில் இருக்கவேண்டும் அப்புறம்தானே பகுப்பதைப் பற்றி யோசிக்கமுடியும். தன்னிடமில்லாததை வைத்துக்கொண்டு அவர்கள் உண்மைகளை சொல்லி நம் (கும்பல்களின்) முகமூடியைக் கிழிக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் அவர் புலம்புவதும் நம்மால் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதுதான். தி.க.காரர்கள் கூட இந்த அளவு பெரியாரைப் பற்றி நினைப்பார்களா என்பது சந்தேகமே. ‘மாண்புமிகு ‘ அரவிந்தன் ‘ஈவேரா ஈவேரா ‘ என்று ஒரு ஜபம் போலவே சொல்வார் போலிருக்கிறது. (அப்படியும் மதவெறி குறைந்ததாகத் தெரியவில்லை என்பது வேறு விஷயம்!) நிலமை நாம் நினைத்திருந்ததைவிட மோசமாக உள்ளது. பாவம். அவர் நலன் கருதி சீக்கிரமே ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகுமாறு நாம் அவரைக் கேட்டுக்கொள்ளவேண்டியவர்களாகிறோம். மீண்டும் அவர் திண்ணைக்கு ஒதுங்கும் வரை அவர் ஜபம் செய்யும் ஈவேரா அவருக்கு ஜாதி-மத வெறியில்லாத நல்ல புத்தியைக் கொடுக்கட்டுமாக!
-பித்தன்.
piththaa@yahoo.com
- குறுந்திரைப்பட விழா
- கடிதம்
- தமிழ் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பின் இடம் – கருத்தரங்க அழைப்பிதழ்
- கடிதம்
- கடிதம்
- அன்புள்ள திரு.வாசனுக்கு,
- APPEAL – FUND RAISING FOR THE LEGAL BATTLE IN THE SATI CASES
- யார் இந்த தாரிக் அலி ?
- மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை
- கடிதம் -07-12-2004
- யானையப் பற்றிய ஆய்வுக்கட்டுரையும் அதன் எதிர் வினைகளும்!
- ஒரு கனவு துகிலுரிகின்றது
- முகவரி
- பயணம்
- மொழி
- தீர்க்கமும் தரிசனமும்
- ஓட்டம்!
- அன்புடன் இதயம் – 27 – திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள்
- சுட்டெரிக்கும் மனசாட்சி
- அன்புடன் தாய்க்கு
- முன்னேற்றம்
- பெரியபுராணம் – 4
- சிங்காரச் சிங்கை
- வா வா வா…!!!
- ஆட்டோகிராஃப் – 13- மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
- தமிழில் பாப்லோ நெருதா: சில குறிப்பகள்.
- பேரிடர் விழிப்புணர்வுக் கல்வி
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 1
- புதுச்சேரி (புதுவை, பாண்டிச்சேரி) நினைவுகள்
- ஜமாத்தின் அதிகாரம் என்ன ? ஜமாத் தேவைதானா ?
- பொடாவுக்கு ஒரு தடா!
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 32
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- சொர்க்கத்தில் கல்யாணம்
- கணேஸ்மாமா
- எலிசெபத் ஏன் அழுதாள்
- நீ சொல்லு
- வேடத்தைக் கிழிப்போம்-6 (தொடர் கவிதை)
- உயிர்க்கொல்லி
- திருக்குறள் ஒரு மறை நூலா ?
- மெய்மையின் மயக்கம்-12 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
- தந்தை இல்லா தலைமுறைகள்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – 6
- அடக்கம்
- ஆற்றுவெள்ளம் ஆசையானால்
- நினைவார்ச்சனை – கவிக்கட்டு 19
- நேர்த்திக்கடன்
- குருவிகள்
- காம்பின் எடையால் பூவின் இடை ஒடியும்!
- மாற மறுக்கும் மனசு