கடிதம் ஜூன் 10, 2004

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

அக்னிப்புத்திரன்


தமிழக அரசியலில் திருப்பம்!

முதல்வர் ஜெயின் அதிரடி அறிவிப்புகள்! சலுகைகள்!! நலத்திட்டங்கள்..!!! ஜெக்கு திடார் ஞானோதயம்… அடுத்த திருப்பம் என்ன ? திமுகவின் பலம் மத்தியில் அதிகரித்து இருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஜெயின் எண்ணவோட்டம் என்னவாக இருக்கும் ? இது ஒரு கற்பனைதான் என்றாலும் இது எதிர்காலத்தில் நடக்காது என்று கூறமுடியாது! ஜெயின் அரசியல் வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அவரது எதிர்காலத் திட்டத்தை ஊகிப்பது அவ்வளவு சிரமம் இல்லை என்றே தோன்றுகின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளாக அடுக்கடுக்கான அடக்குமுறையுடன் கூடிய அறிவிப்புகள். சில அரசியல் (சோ)மாறிகளிடமும், (வீர)மணிகளிடமும் இருந்து “தைரியசாலி முதல்வர்” என்ற பட்டம் வேறு. அடிவருடிகளின் ஆலாபனையோ சொல்லிமாளாது. என்னே ஆர்ப்பாட்டம்.! அரசு ஊழியர்களை ஓட ஓட விரட்டிய பரிதாபம்…(பொது மக்களும் ஆதரித்தது போல்தான் காட்சிகள் அமைந்தன) இத்தனையும் தேர்தலுக்குப் பிறகு போன இடம் தெரியவில்லை.

கேட்ட சலுகைகள் கேட்காத சலுகைகள் என அத்தனையும் வரிசை வரிசையாக வலம் வருகின்றன. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வீடுகளுக்கு மின்கட்டணக் குறைப்பு, அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை தவிர்ப்பு, மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ்..பால் கொள்முதல் விலை உயர்வு..மேலும் மேலும் சலுகைகள் வரும் என்ற ஊகங்கள்.

ஜுனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற அரசியல் வார இதழ்கள் தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று ஆருடம் கூறியுள்ளன. இக்கூற்றை முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளமுடியாது என்றே தோன்றுகின்றது. ஏனென்றால், ஜெயின் சூழ்நிலையும் அப்படித்தான் அமைந்துள்ளது. திமுக இவ்வளவு உயரத்தில் இருப்பதை அவரால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.

சரி என்னதான் செய்யக்கூடும் ? கற்பனைதான்..ஆனால் இதுவே எதிர்காலத்து உண்மையாகவும் இருக்கக்கூடும்.

உடனடியாக மக்களிடம் ஆதரவு பெற்றாக வேண்டும். அதற்கு மக்களைக் குளிப்பாட்டும் ஜில் ஜில் அறிவிப்புகள் நாள் தோறும் வெளியாகலாம். அதுதான் தற்போது நடந்துவருகின்றன. அதேசமயம் திமுகவின் மீது சேற்றை வாரியிறைக்க வேண்டும். குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் மீது பாலம் கட்டியதில் ஊழல் என்ற பொய்வழக்கை விரைவுபடுத்த வேண்டும். அதுவும் தொடங்கி விட்டது என்றே சொல்ல வேண்டும். கடந்த வாரம் அதற்கான அறிவிப்பு வெளியானதைப் பலரும் கவனித்து இருப்பார்கள்.

மத்தியில் தமக்குத் தற்சமயம் பஜகவின் ஆதரவு தேவை என்பதால் அதற்கும் காய் நகர்த்தப்படும். என்னதான் திருநாவுக்கரசர் போன்றவர்கள் கடுமையாக விமர்சித்தாலும் இப்போது கண்டுகொள்ளமாட்டார்கள். (இப்பொன்னான வாய்ப்பை திருநாவுக்கரசரும் நன்கு பயன்படுத்தி வருகின்றார்) சகட்டுமேனிக்கு விட்டு விளாசுகிறார். ஆனால் இதையே காரணம் காட்டி பின்னாளில் தேர்தல் நேரத்தில் பஜக உறவு தேவையில்லை என்ற நிலையில் ஜெ. பிரச்சனை பண்ணக்கூடும். பஜக மட்டும் இளைத்தவர்களா என்ன ? திருநாவுக்கரசரையே கட்சியில் இருந்து விலக்கிவிட்டு ஜெயிடம் கையேந்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சரி இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவை மட்டுமா திட்டமாக இருக்கும் ? இவை வெற்றிக்கு உதவுமா ? கண்டிப்பாக இதைத் தவிர மேலும் பல திட்டங்கள் இருக்கும். கட்சி மட்டத்திலும் ஆட்சி மட்டத்திலும் மாபெரும் மாற்றங்கள் இருக்கக்கூடும். கட்சிக்காரர்களுக்கு “வழிகாட்ட” வாரியங்கள் ஆணையங்கள் பதவி வாரி வழங்கப்படும்.

மாற்று எதிர்முகாமில் இருந்து உதிரி கட்சிகளை உருவமுடியுமா என்ற முயற்சியும் நடக்கலாம். ஆனால் மத்திய மந்திரிகள் என்று பதவிக்கயிறு கொஞ்சம் இறுகக் கட்டப்பட்டுள்ளதால் உதிரிகள் உருள வழியில்லை என்றே தெரிகிறது. இதையும் மீறி “அன்புச்சகோதரி” என்ற பாசம் நிறைந்த நாடகம் உருவானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

தங்களுடன் கூட்டணி ஏற்படாவிட்டாலும் குறைந்தபட்சம் எதிர்முகாமை உடைக்க அனைத்து அஸ்திரங்களும் பயன்படுத்தப்படலாம். சோ போன்ற அரசியல் ஞானிகளுக்கு( ? ? ?) வேலை தரப்படலாம். வாசனை வளைக்கலாமா ? தங்கபாலுவை தக்க வைக்கலாமா ? என்ற ஆராய்ச்சிகள் முடுக்கி விடப்படும்.

அதிமுக, தற்போதைய தேர்தலில் நாற்பது இடங்களிலும் தோல்வியைத் தழுவினாலும் அதன் ஓட்டு வங்கி அப்படியே உள்ளதைக் கவனிக்க வேண்டும். என்னதான் ஆட்டம் போட்டாலும் 28% லிருந்து 32% ஓட்டு நிலையாக உள்ளது.

தற்போது சலுகைகளை வாரியிறைக்கும் நிலையில் மழுங்கிய அல்லது மயங்கிய மக்களின் ஓட்டும் விழ வாய்ப்புள்ளது. எதிர்கட்சிகளின் கூட்டணி உடையும் சூழலில் மும்முனைப் போட்டி என்ற நிலையில் கணிசமான இடங்களை கைபற்றவும் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. தமக்கு ஏதாவது பிரச்சனை என்றால்தான் அரசு ஊழியர் போன்ற நடுத்தர மக்கள் பொங்கி எழுந்து ஓட்டு போட ஓட்டுச்சாவடிக்கு வருவார்கள். பிரச்சனை இல்லாவிட்டால் யார் ஆண்ட நமக்கு என்ன என்று கூறி வீட்டில் தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக்கொண்டு இருந்து விடுவார்கள். கடந்த திமுக ஆட்சி சிறப்பாக இருந்தும் தோல்வியைத் தழுவியதற்கு இதுவும் ஒரு காரணம்.

அதேசமயம் ஜெ மக்களின் அனுதாபத்தைப் பெறவும் முயலுவார். மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தன்னுடைய ஆட்சியைக் கலைக்க காய் நகர்த்துவார் என்றே தோன்றுகின்றது. அதற்காக மீண்டும் கருணாநிதி கைதுபடலம் அல்லது காவேரி பிரச்சனையை உருவாக்கி சட்டம் ஒழுங்கைப் பாதிக்கச்செய்து அதன் காரணமாக மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி முன்பு திமுக ஆட்சியில் நடத்திய தலைவிரிகோல நாடகத்தை மீண்டும் அரங்கேற்றி மக்களிடம் அனுதாபத்தைப் பெற முயல்வார். அதிரடி அரசியல் நடத்துவதில் கைதேர்ந்தவர் ஜெ.

திமுகவும் திமுக தொண்டர்களும் வெற்றிக்களிப்பில் மிதந்துகொண்டு இருக்க அதிமுகவிலோ விரைவாக காய்கள் நகர்த்தப்படுகின்றன. திமுகவும் தன்பங்கிற்கு சில திட்டங்களைத் தீட்டும். ஆக, அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் தமிழக அரசியலில் சுவாரஸ்யமான காட்சிகள் அரங்கேறும் என்பது மட்டும் உண்மை. இறுதி வெற்றி யாருக்கு ? காலம்தான் பதில் சொல்லும்.

-அக்னிப்புத்திரன்.

agniputhiran@yahoo.com


Series Navigation

author

அக்னிப்புத்திரன்

அக்னிப்புத்திரன்

Similar Posts