கொஞ்சமாய் குட்டிக்கதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

எஸ்ஸார்சி


1
அடுத்தவன்வீட்டுத் தென்னைமரத்தில் ஏறி ஒருவன் தேங்காய் பறித்துக்கொண்டிருந்தான். தென்னை மரத்துக்குச்சொந்தக்காரன் அவனைப் பார்த்துவிட்டான்.
‘யாரது அது தென்னைமரத்தில்’
‘ ஏன் நாந்தான்’
‘ என்னாப்பா செய்யுற’
‘ வேற ஒண்ணும் இல்லே கண்ணுகுட்டிக்கி கொஞ்சம் பில்லு பாக்குரென்’
‘ என்னா இது தென்னை மரத்துல ஏறிகினு கண்ணுகுட்டிக்கி பில்லு பாக்குறயா’
‘ ஆமாம்’,
‘ என்னாப்பா புது சேதியா இருக்கு’
‘ அதான் மரத்துமேல பில்லு இல்லுன்னு தெரிஞ்சிகிட்டேன்’
‘ அப்பறம்’
‘ தோ இறங்கிகிட்டே இருக்கேனே தெரியல’
அவன் பதில் சொன்னான்.

2
ஒரு எஜமானன் வீட்டில் ஒரு கழுதையும் நாயும் இருந்தன.
ஒர் நள்ளிரவில் கழுதை கத்தியது
வீட்டுக்காரன் கதவைத்திறந்துகொண்டு வெளியே வரவில்லை.
மீண்டும் கழுதை கத்தியது.
வீட்டுக்காரன் கதவைத்திறந்துகொண்டு வெளியே வந்தான்.
கைத்தடியால் ஒங்கி ஒரு போடுபோட்டன்.
கழுதை அலறிப்போயிற்று.
நாய் சொன்னது.
‘நானும் குலைக்கிறேன் இப்போது நம் வீட்டுக்காரன் என்னை என்ன செய்கிறான் பார்’ என்றது.
கழுதை அதையும் பார்ப்போம் என்றது.
சொல்லியபடியே நாய் குலைக்க வீட்டுக்காரன் கதவைத்திறந்துகொண்டு வெளியில் வந்து சுற்றிச் சுற்றிப்பார்த்துவிட்டு
பின் கதவு தாளிட்டுக்கொண்டான்.
கழுதைக்கு ஆத்திரமாய் வந்தது.
நாய் சமாதானம் சொன்னது.’ இந்த இடம் சரிவராது ஆளுக்கு ஆளுக்கு ஒரு சட்டமாய் இருக்கு. நாம் இருவரும் இந்த எஜமான் வீட்டைவிட்டு ஒடிவிடுவோமா’
‘ நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ஆனாலும்’
கழுதை லேசாக இழுத்து நிறுத்தியது
‘ ஏன் என்ன சொல்கிறாய்’ நாய்த் திருப்பிக் கேட்டது.
‘ நம் எஜமானனுக்கும் அவன் மனைவிக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு வரும்’
‘ வந்தால்’
‘ உன்னைப் போய் நான் கட்டிகிட்டதுக்கு தெருவுல கட்டிக்கிடக்கிற அந்தக் கழுதைய கட்டிகிட்டுகுடும்பம் பண்ணுலாம்’ இப்படியேத்தான் அடிக்கடி நம் எஜமான் மனைவியிடம் புலம்புகிறார் என் நீண்ட காதுகளால் நானே கேட்டிருக்கிறேன்’.
‘ அப்புறம்’
‘ ஒருக்கால் எஜமான் அப்படி ஒரு நோக்கத்தோடு என்னைத்தேடி வரும்போது நான் இங்கு இருக்கவேண்டும் அல்லவா அதான் பார்க்கிறேன்’ என்றது கழுதை..
‘ நீ சொல்வதும் ஒரு விதத்தில் சரித்தான்’ நாய் பதில் சொன்னது.
3
ஒருவன் ஒருஆமையைக்கொல்ல ஒங்கி ஒங்கிப் பிரம்பால் அடித்தான்
ஆமை சாகவில்லை.
கல்லால் அடித்தான். கம்பால் பெருந்தடியால் அடித்தான்
ஆமை செத்தால்தானே. சாகவில்லை.
அடுத்தவன் ஒருவன் அதைப்பார்த்துக்கொண்டே சென்றான்.
அவனோ ஜீவ ஹிம்சை பிடிக்காதவன் .நமக்கு ஏன் வம்பு என்று வாயைமூடிக்கொண்டான்.
இருந்தாலும் ஒருவனுக்கு வாய் மட்டும் அப்படிச் சும்மா இருந்துவிடுமா என்ன.
ஆமை அடிப்பவனிடம் வந்து நின்றுகொன்டான்.
‘ நாம நம் வாயால சொல்லக்கூடாது. நமக்கு ஏன் வம்பு. அந்தப் பாவம். நாமளா போய் அதைச் சொல்றது மகா தப்பு’.
ஆமையை அடித்துக்கொண்டிருந்தவன் இப்போது அவன் சொல்வதைக்காது கொடுத்துக்கேட்க ஆரம்பித்தான். ஒரு விஷயத்தைச்சொல்வபவர்களுக்கு காதுகொடுத்துக் கேட்பவர்கள் எல்லாமே சாட்சாத் அந்த பரமேச்வரன் ஆகத்தானே. தெரிகிறார்கள்
ஆக மீண்டும் ஆரம்பித்தான்.
‘ ஆமைய அப்படியே போட்டு அடிச்சா அது எப்படி சாவும். புறட்டிபோட்டுட்டு அடிச்சாத்தான் சாவும். அதப்போய் எதுக்கு நம்ப வாயால ஒருத்தருக்குச்சொல்றது. அந்த பாவம்தான் நமக்கு எதுக்கு’ நிறுத்தினான்.
ஆமை அடித்துக்கொண்டிருந்தவன் அடுத்த நொடியே அந்த ஆமையை

புறட்டிப்போட்டு ஒரே அடியில் அதன் கதையை முடித்தான்

4.
ஒரு பிச்சைக்காரன் தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டு சென்றான். ஒரு வீட்டு வாயிலில்
‘ அம்மா தாயே எதானாச்சிம் போடுங்க. வவுறு பசிக்குது’ ஒங்கிக்கத்தினான்.
அந்த அம்மாள் ஒய்யார நடை நடந்து வெளியில் வந்தாள். ஆக
பிச்சைக்காரனுக்கு அந்த வீட்டில் வேறு யாரும் இல்லை என்று உறுதியாகிவிட்டது.
‘ அம்மா தாயே உங்க ஆத்தா அப்பன சொர்க்கத்துல பாத்தேன். ரொம்ப செருமம்.
அங்க பச்ச அரிசி சோறு போடுறது இல்லயாம். கட்டிக்கக் கூட ஒரு நல்ல துணிமணி கொடுக்கமாட்டென்றாங்கன்னு சொல்லி சொல்லி அழுதாங்க. ரொம்ப பரிதாபமா இரிந்திச்சி
எதானா நீ குடுத்தா நா கொண்டு போயி அங்க அவாளிடத்திலே சேத்தும் பூடுவேன் அப்பறம் உன் இஷ்டம் தாயி’’
அப்பா அம்மா கேட்கிறார்கள். அதுவும் புருஷன் வேறு வீட்டில் இல்லாத நல்ல சமயம்.
இதைவிட ஒரு பெண்ணுக்கு என்ன பெரிய பேறு வாழ்க்கையில் கிடைத்துவிடப்போகிறது, எண்ணிய அவள் ஒரு பட்டு வேட்டி, பட்டுப்புடவை பச்ச அரிசி ஒரு பை எனக் கணிசமாய் பிச்சைக்கரனிடம் கொடுத்து
‘ பத்திரமா அப்பா அம்மாகிட்ட நீ சேத்துடு என் சாமி’’ என்று கெஞ்சி முடித்தாள்.

பிச்சைக்காரன் அவள் கொடுத்தது எல்லாம் சுருட்டிக்கொண்டு இடத்தைக்காலி செய்தான்

அவன் அப்படிப்போகவும் அவள் புருசன் வீடு திரும்பவும் சரியாக இருந்தது.

‘யார் வந்தது’
கீழே அரிசி இத்யாதிகள் எல்லாம் சிந்தி இருந்தது.
அவன்தான் கேட்டான்.
‘ அதாங்க என் ஆயும் அப்பனும் சொர்க்கத்துல கொல பட்டினி கெடக்குராங்களாம். சொர்க்கத்துலேந்து வந்த ஒரு பிச்சைக்காரன் தான் என்கிட்ட சேதி சொன்னாரு. அவங்களுக்கு கட்டிக்கத்துணி கூடம் சரியா இல்லயாம். அதான் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் அனுப்பி வச்சேன்’
சொல்லி நிறுத்தினாள்.
‘ எங்க அவன்’ கணவன் சீறினான்.
‘ இந்நேரம் தோ அந்த தெரு தாண்டி இருப்பான்’.
தான் வந்த அதே குதிரையில் ஏறிக்கொண்டு பிச்சைக்காரனை அவன் துறத்திக்கொண்டு சென்றான்
பிச்சைக்காரன் இது விஷயம் எப்படியோ தெரிந்துகொண்டவனாய் வழியில் நின்றிருந்த ஒரு மாமரத்தின் மீது
ஏறி உச்சியில் அமர்ந்து கொண்டான்
பிச்சைக்காரன் மாமரத்தில் இருப்பது அறிந்த அவன்
குதிரையை மாமரத்தின் கீழ் நிறுத்திவிட்டு மரத்தில் பாய்ந்து பாய்ந்து ஏறினான்.
பிச்சைக்காரனும் தாவித்தாவி க்கடைசியாய் பொத்தென்று குதிரை முதுகின்மீது படார் எனக் குதித்து குதிரையோடு ஒடி மறைந்தான்.
கீழே இறங்கிய அவனுக்கு இப்போது அந்தக் குதிரையும் போய்த்தொலைந்தது..
பொடி நடையாய் சோர்ந்துபோய் அவன் வீட்டுக்குத்திரும்பினா¡ன்.
‘ எங்க நம்மக் குதிரையைக்காணும்’ மனைவி ஆரம்பித்தாள்
‘ நல்லக்கதை.யா இருக்குடி நீ கேக்குறது. அங்க சொர்க்கத்துல எம்மாமனுக்கும் மாமிக்கும் எங்க போவுனுன்னாலும் நடயா நடந்து காலு வீங்கிக் கொப்புளமாக்கெடக்குதுன்னுல்ல அந்த பிச்சக்காரன் சொல்லுறான். அதான் பெரியவங்க குதிரையிலயே பொவுட்டும் வருட்டும்னு நானேதான் நம்ம குதிரையை குடுத்துவுட்டேன்’ அழகாய்ச்சொல்லிமுடித்தான்.
‘ அய்யா தருமத்தொரயாச்சே சும்மாவா நானு முந்தி விரிச்சன்’
அவள் சொல்லி முடித்தாள்.
——————————————————–

Series Navigation

author

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

Similar Posts