அப்துல் கையூம்
கோடை விடுமுறையில் தாயகம் சென்ற என்னை இந்த ‘மியாவ் போபியா’ ரொம்பவும்தான் ஆட்டிப் படைத்து அல்லாட வைத்து விட்டது.
“மியாவ் மியாவ் பூனை – அட
மீசையில்லா பூனை
திருடி திங்க பாக்குதடா
திம்சு கட்ட மீனை”
வானொலி பண்பலையில் இப்பாடல் ஒலித்தபோது, பாரதிராஜா படத்தில் வரும் வெள்ளை தேவதைகள் போல, பூனைகள் கோஷ்டியாய் சூழ்ந்து நின்று, என் இதயத்தை நகத்தால் பிறாண்டி ரத்தக்களறி ஆக்குவதைப் போன்ற இனம் புரியாத ஒரு திகிலுணர்வு.
யாரோ ஒரு விவேகமான பாடலாசிரியர் இந்த பூனைப்பாட்டை எழுதப்போக – டீக்கடை, பேருந்து, கல்யாண வீடு, காதுகுத்து, பொதுக்கூட்டம் என்று எங்கெங்கு காணினும் ஒலிபெருக்கியில் ‘மியாவ்.. மியாவ்..’ கூச்சல்தான். பன்றிக்காய்ச்சல் பயத்தைவிட இந்த பூனைக்காய்ச்சல் பயம் என்னை பாடாய்ப் படுத்தி விட்டது.
அன்று கண்ணதாசன் எழுத, மழலைக் குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரி குரலிசைக்க, ‘குமுதம்’ படத்தில் இடம் பெற்ற “மியாவ் மியாவ் பூனைக்குட்டி/ வீட்டை சுத்தும் பூனைக்குட்டி/ அத்தான் மனசு வெல்லக்கட்டி என்ற சத்தான பல்லவியானது சிதைந்து சின்னாபின்னமாகி இன்று காமெடி குத்துப்பாட்டாய் உருமாறி ஊர் முழுதும் உறுமிக் கொண்டிருக்கிறது. சந்து பொந்துகளிலெல்லாம் இந்த கந்தசாமி புராணம்தான்.
சிறுபிராயம் முதலே பூனை பெயரைக் கேட்டாலே எனக்கு லேசாக கதிகலங்கும். என் சித்தப்பாவிற்கு இருந்த Ailurophobia என்னையும் உடும்புப்பிடியாய் தொற்றிக் கொண்டது. (பூனை பயத்திற்கு – Ailurophobia என்ற பிரத்தியேகமான ஒரு சொற்பதத்தை ஆங்கிலத்தில் கண்டுபிடித்து வைத்தவர் என்னைப் போல பாதிக்கப்பட்டவரோ என்னவோ?)
‘தெனாலி’ படத்தில் வரும் கமல் ஹாசனுக்கு எலி என்றால் எவ்வளவு பயமோ அதை விட பன்மடங்கு பயம் என் சித்தப்பாவிற்கு பூனை மீது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் பூனை அருகில் வந்து விட்டால் போதும். மனுஷன் வைத்தது வைத்தபடி பாதி சாப்பாட்டோடு எழுந்து விடுவார்.
ஒருமுறை அவருக்கு Food Poison ஏற்பட்டு வயிற்றுப்போக்கு மற்றும் அலர்ஜி ஆகி விட்டது. பூனைமயிர் சாப்பாட்டில் பறந்து வந்து விழுந்ததினால் இருக்கலாம் என்று யாரோ சொல்ல அதிலிருந்து அவருக்கு இந்த ‘மியாவ்’ பயம்.
என் இளமைக் கால சம்பவங்கள், மனத்திரையில் வந்து நிழலாடியது. எங்களுடைய ஓட்டுவீட்டுக் கூரையில் கேர்ள் பிரண்ட்டு, பாய் பிரண்டு சகிதம் ஜாலியாக லூட்டி அடித்து விட்டு, ஓடுகளை இடம் பெயரச் செய்துவிட்டு, மழைக்காலத்தில் கூரையை ஒழுக வைத்து விடும் – பொல்லாத பூனை.
அடுப்பங்கரையில் என் தாயார் வைத்து விட்டுப் போகும் பால் பாத்திரத்தை தலை கீழாய் கொட்டி நாசாமாக்கிவிட்டு ‘பூனைப்பாதம்’ வைத்து நைஸாக நழுவி விடும்.
“இந்தா முத்தம்மா! இந்த பூனையை சாக்குப்பையிலே புடிச்சுக் கொண்டு போய் தர்கா மீன் மார்க்கெட்டுலே விட்டுட்டு வந்துடு” என்று ஆணையிடுவார்கள் என் தாயார்.
“அப்பாடா! சனியன் தொலைஞ்சிச்சு” என்று நிம்மதி பெருமூச்சு விடுவேன். அன்று மாலையே மறுபடியும் வீடு தேடி வந்து விடும் அப்-பிராணி. எப்படித்தான் தெரு, வீட்டு விலாசம், கதவு எண் இதையெல்லாம் சரியாக கண்டுபிடித்து வந்து சேர்ந்து விடுகிறதோ தெரியாது.
உதட்டோரத்தில் அரும்பு மீசை துளிர்விட்ட காலத்திலே “என்னடா அதுக்குள்ளே உனக்கு பூனைமசிறு முளைக்க ஆரம்பிச்சுடுச்சே?” என்று குசலம் விசாரித்த என் தாய்மாமாவை நெற்றிக்கண் திறக்காமலேயே கோபப்பார்வையால் சுட்டெரித்தது ஞாபகம் வந்தது. எனக்கு முடி முளைத்தால் அந்த பாழாய்ப்போன ‘மொசுமொசு’ பிராணியை ஏன் இணைத்துப் பேச வேண்டும்?
மலையாளத்தில் மிகப் பொருத்தமாகவே “பூச்சா” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பூச்சாண்டி என்ற பயமுறுத்தும் பெயரிலிருந்த ஆண்டியை நோண்டி எடுத்து விட்டு “பூச்சா” ஆக்கி விட்டார்களோ என்னவோ.
படுக்கையில் படுத்து கண்ணை இறுக மூடினாலே பூனைக்கூட்டம் “நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்” என்று கும்மியடித்துக் கொண்டு பாடி என்னை துரத்துவதைப் போன்று ஒரு திக்பிரமை.
“பூனை எப்படிய்யா பாட்டு பாடும்?” என்றெல்லாம் கேள்வி கேட்டு என்னை படுத்தக் கூடாது, ஆமாம்.
“Pussy Cat, Pussy Cat, Where have you been?
I have been to London to See the Queen”
என்று ‘புஸ்ஸிகேட்’ ஆங்கிலத்தில் எசப்பாட்டு பாடும்போது, தமிழில் பூனைக்கூட்டம் கோரஸ் பாடக் கூடாதா.. என்ன?
“எங்கே மாமாவுக்கு ரைம்ஸ் பாடிக் காட்டு” என்று குழந்தைகளிடம் பெற்றோர்கள் சொல்ல, வாண்டுகள் குறிப்பாக இந்த பூனைப் பாட்டையை ‘ரிபீட்’ போட்டு அநியாயத்துக்கும் நம் பொறுமையை சிற்சமயம் சோதித்து விடுவார்கள்.
லண்டன் வாண்டுகள் இந்த பாடலைப் பாடினாலாவது பொருத்தமாக இருக்கும். இங்கிருக்கும் இந்த நண்டு சுண்டுகளுக்கு ஏன்தான் இந்த பாட்டைச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை.
பூனை இங்கிருந்து விமான டிக்கட் எடுத்து லண்டனுக்கு சென்று இங்கிலாந்து ராணியைச் சந்திப்பது தேவைதானா? அதுவும் இவ்வளவு செக்யூரிட்டி கெடுபிடி நிறைந்த ‘பக்கிங்ஹாம்’ அரண்மனைக்குள் இந்த பூனைக்குட்டி ‘கேட்வாக்’ செய்ய அனுமதிப்பார்களா? சரி. அப்படியே ராணியை நேரடியாகப் போய் சந்தித்து அப்படி என்ன பெரிதாக அது சாதித்து விடப் போகிறது? முகத்தை அஷ்டகோணலாக்கி ‘மியாவ்’ என்று கத்துவதைத் தவிர அதுக்கு வேறு என்ன தெரியும்?
“அரண்மனைக்கு வெளியே நிற்பதால் யானைக்கு சிறுமை உண்டாவதில்லை. அரண்மனைக்குள்ளே சுற்றித் திரிவதால் பூனைக்கு யாதொரு பெருமையும் உண்டாவது இல்லை” என்ற கபீர்தாஸரின் போதனை இச்சமயம் எனக்கு ஆயிரம் அர்த்தங்களைக் கற்பித்தது.
ஒரு ரயில் பிரயாணத்தின்போது, பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரியமான வேளையில், ஒரு சக பிரயாணி. எனக்கு பிடிக்காத இந்த பிராணியின் சத்தத்தை ‘மியாவ் மியாவ்’ என்று தனது கைப்பேசியில் ‘ரிங்டோனாக’ வைத்து என் பிராணனை வாங்க, “அடக் கண்றாவியே! இப்படியும் ஒரு ரசிப்புத்தன்மையா?” என்று வாழ்க்கையே வெறுத்துப்போய் விட்டேன்.
பூனையை தொட்டுப் பழகுவதுதான் எனக்கு புடிக்காதேயொழிய தூர நின்று அது செய்யும் கோணங்கி சேஷ்டைகளை கண்காணித்ததுண்டு.
அதிகாலையில் நான் படுக்கையிலே படுத்துக்கொண்டு, பாதிக்கண்களை மூடியபடி, மோவாயை தூக்கி, முகத்தை அஷ்டகோணாலாக்கி சோம்பல் முறிப்பதைப் போலவே இதுவும் செய்வதைப் பார்க்கும்போது என்னை அது இமிடேட் பண்ணுகிறதோ என்ற சந்தேகம் எனக்கெழும்.
கண்ணாடி அணிந்திருக்கும் நான் செல்போன் நம்பரை பார்ப்பதற்கு கண்ணாடியை உயரே தூக்கிவிட்டு கண்களை இடுக்கிக்கொண்டு கூர்ந்து நோக்குவேன். இந்த பாழாய்ப்போன விலங்கும் அதே போன்று கண்களை சுருக்கிக் கொண்டு சைனீஸ் பார்வை பார்க்கும். என்னமாய் ஒரு ‘நக்கல்’ பார்த்தீர்களா?
சிலவேளை நடுநிசியில் கைக்குழந்தை அழும் சப்தம் கேட்டு ஜன்னலைத் திறந்து பார்த்தால் அங்கு இந்த பூனை ‘மிமிக்ரி’ பிராக்டீஸ் செய்துக் கொண்டிருக்கும்.
பச்சைக்குழந்தை அழுவதைப்போல இவ்வளவு அட்சர சுத்தமாக ‘மிமிக்ரி’ செய்ய வெங்கடேஷ், ரோபோ சங்கர், கோவை குணா, மைக்கேல் அகஸ்டின் இவர்களால்கூட சாத்தியப்படாது. இந்த ஒரே ஒரு காரணத்துக்காக பூனையை தத்துப் பிராணியாக்கி பித்துப் பிடித்துப் போக நான் தயாராக இல்லை.
‘அக்ராஹரத்துப் பூனை’ என்று சிறுகதை எழுதிய ஜெயகாந்தன் முதற் கொண்டு, சாரு நிவேதிதா, ஹரன் பிரசன்னா வரை, பூனையைப் பற்றி கதை/ கட்டுரை வரைந்து அதற்கொரு இலக்கிய அந்தஸ்த்து அநியாயத்துக்கும் கொடுத்து அதை ஹீரோ/ ஹீரோயினாக்கி விட்டார்கள் என்பது என் கருத்து.
பூனையைப் புகழ்ந்து அழ வள்ளியப்பா எழுதிய குழந்தை பாடல்களையாவது நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் இந்த விடுதலைக்கவி பாரதியின் கேரக்டரைத்தான் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை.
“வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும் !
சாம்பல் நிறத்தொரு குட்டி,
கருஞ் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி ”
என்று இந்த துஷ்டப் பிராணியை ஏன் பாடித் தொலைக்க வேண்டும்? முகத்திலிருந்து வழியும் மீசை இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதால் ஒரு பாசப்பிணைப்பு ஏற்பட்டிருக்கலாமோ? ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்றவன் நல்லவேளை பூனையையும் சேர்த்துக் கொள்ளவில்லை.
“பாவம் அது ஒரு வாயில்லாப் பிராணி. அதுமேலே உனக்கு ஏன்யா இப்படியொரு கொலைவெறி? என்று பூனைப் பிரியர்கள் என்னை மியாவக் கூடும்.
இந்த பிராணி பார்ப்பதற்குத்தான் அப்பிராணி. உண்மையிலேயே பெரிய களவாணி. “திருட்டுப்பூனை” என்று சிலர் வசைபாடுவதைக் கேட்டாலே நமக்குத் புரிந்து போகும் இந்த பூனை யோக்கியமான ஜாதி இல்லை என்று. “யாராவது திருட்டு எலி அல்லது திருட்டுக் கோழி” என்று திட்டுவதை கேட்டிருக்கிறீர்களா?
ஒற்றுமைக்கு காகத்தையும், நன்றிக்கு நாயையும் உதாரணம் காட்டியவர்கள் திருட்டுக்கு பூனையைத்தானே உதாரணம் காட்டுகிறார்கள்?
கழுதையைப் பார்த்தால் யோகம், நரி முகத்தில் முழித்தால் அதிர்ஷ்டம் என்று சொன்னவர்கள் ஏன் பூனையை மட்டும் அபசகுனம் என்று ‘அக்மார்க்’ முத்திரை குத்த வேண்டும்?
செய்ய வேண்டிய அநியாயங்களையெல்லாம் செய்துவிட்டு பரம சாதுவாக வேஷம் போடும் ஆசாமிகளை யாரோடு சம்பந்தப்படுத்தி பேசுகிறார்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். “நூறு எலிகளை விழுங்கிய பூனை தீர்த்த யாத்திரைக்கு போனதாம்” என்று பெரியவங்க சொல்ல நாம கேள்விப்பட்டதில்லையா?
நமக்கிருக்கும் ‘நான்வெஜ் மெனு கார்டில்’ உள்ள அயிட்டங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த பூனை இருக்கிறதே பூனை, சுமார் 1000 வகையான அசைவ உணவு வகைகளை உட்கொள்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இந்த லட்சணத்தில் “பூனை கண்களை மூடிக்கொண்டு உலகமே இருட்டு என்றதாம்” என்ற பழமொழி வேறு. எந்த பூனை வந்து இவர்களிடத்தில் “நான் கண்ணை மூடினேனா? உலகமே இருட்டு என்று நினைத்துக் கொண்டேன்” என்று வாக்குமூலம் கொடுத்துப் போனது என்று தெரியவில்லை.
மே மாதம் வந்தாலே நான் வசிக்கும் பஹ்ரைன் நாட்டில் ஒரே கொண்டாட்ட மயமாகிவிடும். “May Queen Ball” என்ற பெயரில் இங்குள்ள Young Goans Club முதல் அனைத்து இந்தியச் சங்கங்களும் அழகிப்போட்டி நடத்தி இளஞ் சிட்டுகளை பூனைநடை நடக்க வைத்து பிராயச்சித்தம் தேடிக் கொள்வார்கள். ஆடு கத்துவதைப் போலிருக்கும் “மே” மாதத்திற்கு பேசாமல் “மியாவ்” மாதம் என்றே பெயர் வைத்திருக்கலாம்.
“மே மாதம் 98-ல் மேஜர் ஆனானே!” என்ற அர்த்தமுள்ள (?) வரிகளுக்கும், இந்த “May Queen Ball”க்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா என்று யாராவது ஆராய்ச்சி செய்வது நலம்.
மீசை வைத்தால் எங்கே நான் பூனையைப் பார்த்து இமிடேட் செய்கிறேன் என்று யாராவது நினைத்து விடுவார்களோ என்ற ஒரே காரணத்தினாலேயே இதுநாள் வரை மீசை வைக்காமலே இருந்து சாதனை புரிந்து விட்டேன்.
என் மகனுடைய காலேஜ் அட்மிஷனுக்காக முயற்சி செய்துக் கொண்டிருந்த வேளையில் வடநாட்டு நண்பரொருவர் “பூனெமே ட்ரை கரோ” என்றுச் சொல்ல எனக்கு பற்றிக்கொண்டு வந்தது. பூனா நகரத்தை ‘பூனெ’ என்றுதான் உச்சரிக்க வேண்டுமாம். (அட..! சீக்கிரம் பெயரை மாத்துங்கப்பா..)
இந்தக் கல்லூரியா, அந்தக் கல்லூரியா என்று அடிக்கடி என் முடிவை மாற்றிய போது “ஏன் இப்படி மதில் மேல் பூனையாக இருக்கிறீர்கள்?” என்று இன்னொரு நண்பர் கூற ‘இந்த பூனை எங்கே போனாலும் துரத்துகிறதே’ என்று நொந்துப் போய் விட்டேன்.
அண்மையில் என் மகன் CAT ஷூ வேண்டும் என்று அடம் பிடித்தபோது, டென்ஷன் என் தலைக்கேறி “அதுமட்டும் இந்த ஜென்மத்தில் நடக்கவே நடக்காது” என்று கத்தித் தொலைந்து விட்டேன்.
“டாடிக்கு என்னாச்சு? இவ்ளோ நேரம் நல்லாத்தானே இருந்தாரு?” என்று அவன் தன் தாயிடம் முணுமுணுத்ததை ஓரக்கண்ணால் நோட்டமிட நான் தவறவில்லை. என் கஷ்டம் எனக்குத்தானே தெரியும்.
“அவர் அப்படித்தான். ‘ஆனைக்கொரு காலம் வந்தால் பூனை ஒரு காலம் வரும்’. பேசாம இரு. நான் உனக்கு வாங்கித் தருகிறேன்” என்று மகனுக்கு அவள் ஆறுதல் கூற சொல்ல எரிச்சல் எனக்கு இன்னும் இரட்டிப்பானது.
நம் முன்னோர்களிடம் எனக்கு பிடித்த ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் எனக்கு பிடிக்காத இந்த பூனையை அபசகுன பிராணி என்று ‘அக்மார்க்’ முத்திரை குத்தியதுதான். எங்க ஊர் சங்கீத வித்வான் வீட்டை விட்டு கிளம்பும்போது பூனை இடமிருந்து வலமாக குறுக்கே போனால் அவ்வளவுதான். ‘கப்சிப்’ என்று உள்ளே வந்து முடங்கிக் கொள்வார்.
மயிலாடுதுறை பேருந்து நிலையத்திற்கு மேற்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது கூறைநாடு. அங்கிருக்கும் கோயிலின் பெயர் புனுகு ஈஸ்வர் ஆலயம். புனுகுப் பூனை சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம் இதுவென்று கொண்டாடுகிறார்கள்.
பூஜிக்கும் பிராணிகளின் பட்டியலில் பூனை இல்லாமல் போனது நல்லதாகப் போனது. மயில், மூஞ்சூறு, கருடன், புலி என்று கடவுள்களின் வாகனப் பட்டியலில் பல்வேறு பிராணிகள் இருக்க பூனை இல்லாதது எனக்கு மட்டிலா மகிழ்ச்சி.
பண்டைய எகிப்தில் கறுப்புப் பூனை வணக்கத்திற்குரிய உயிரினமாகவும் அதனைக் கொல்வது பெரிய குற்றமாகவும் கருதப்பட்டது என்னவோ உண்மை. இதை நாம் அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
இந்த பத்திரிக்கையாளர்கள் மீது கூட எனக்கு வருத்தம்தான். ஆந்தையார், கழுகார், குரங்கு குசலா என்று புனைப்பெயர் வைத்ததென்னவோ சரி. “பூனையார்” என்று வேறு பூனைப்பெயர் வைத்து விட்டார்களே என்றுதான் கோவம்.
எனக்கு அறிமுகமான டெல்லி நண்பரொருவரை எல்லோரும் செல்லமாக ‘பில்லா’ என்று அழைக்கிறார்கள். பில்லா படத்தில் வரும் ரஜினி, அஜீத் ரேஞ்சுக்கு இவரும் ஒரு பெரிய கிரிமினல் ஆசாமியாக இருப்பாரோ என்று முதலில் நினைத்தேன். அவருக்கு பூனைக்கண், அதனால்தான் இந்த செல்லப் பெயர் என்று பின்னர்தான் தெரிய வந்தது.
பூனையின் கண்களுக்கு இரவில் பேய் தெரியும் என்பது பரவலான நம்பிக்கை. அடுத்தமுறை பூனைக்கண் ஆசாமிகளைப் பார்க்கையில் இவர்களின் கண்களுக்கு மோகினிப் பிசாசு, எச்சில் பிசாசு, சங்கிலி பிசாசு, கொள்ளி வாய்ப் பிசாசு, குட்டி சாத்தான் இவையெல்லாம் தெரிகிறதா என்று கேட்டுவிட தீர்மானித்துள்ளேன்.
சீனாவின் தென் பிராந்தியத்தில் குறிப்பாக ஷென்ஜன் நகரில் பூனை மாமிசத்தை விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பது ஒரு கொசுறுச் செய்தி. இந்த தகவலை வெளியிட்டதற்காக பூனை நல ஆர்வலர்கள் என்மேல் சீறிப் பாய்ந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
இங்கு அபசகுனப் பிராணியாக கருதப்படும் பூனையை ஜப்பானில் அதிர்ஷ்டப் பிராணியாக கொண்டாடுகிறார்கள். சரி, அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?
“சிவப்பு ரோஜாக்கள்” படத்தில் பாரதிராஜா ஒரு கறுப்புப் பூனையை அடிக்கடி காட்டி நம்மை திகிலடையச் செய்வார். அந்த அபசகுனப் பிராணி அவரைப்பொறுத்தவரை ஒரு அதிர்ஷ்டப் பிராணி என்றுதானே சொல்ல வேண்டும்? இல்லையென்றால் அந்த படம் அவ்வளவு வெற்றிகளை வென்று குவித்திருக்குமா?
கார்ட்டூன் சேனல் என்ற பெயரில் நாள் முழுதும் “Tom & Jerry” என்ற பெயரில் இந்த எலி vs பூனை கேலிச்சித்திரத்தை காண்பித்து நம்மை சோதனை செய்வது கொடுமையிலும் கொடுமை. குழந்தைகளிடம் இதற்கான ‘மவுசு’ இன்னும் குறையவே இல்லை என்பது வேறு விஷயம்.
தெரியாமல்தான் கேட்கிறேன், பூனை எலியை துரத்துறதும், எலி பூனையை கலாய்ப்பதும், கிண்டலடிப்பதும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான்யா நாங்க பெருசுங்க பார்த்திக்கிட்டு இருப்பது? (பசங்க வேறு சேனலை நம்மளை எங்கே பாக்க விடுறானுங்க?)
இன்னொன்றையும் அவசியம் சொல்லியாக வேண்டும். ஆறறிவு படைத்த அறிவுக் கூர்மையுள்ள பாதுகாப்புப் படைவீரர்களை “கறுப்புப் பூனைகள்” என்று வருணிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கறுப்புக் கரடிகள், கறுப்பு ஆமைகள் என்று வேறு ஏதாவதொரு பெயர் வைத்து தொலைக்க வேண்டியதுதானே?
ஆட்டுக்கு குஞ்சு தாடி ஓகே. பூனைக்கு மட்டும் ஏன் நக்கீரன் கோபாலைப்போல் இவ்வளவு பெரிய மீசை என்று ஆராய்ந்தேன். அது இறைவனின் படைப்பாற்றலை உணர்த்தியது.
எலி அல்லது ஏதாவதொன்றை துரத்தும் போது பொந்துக்குள் பூனை தலையை நுழைக்கும். அப்போது தலை உள்ளே போகும். ஆனால் உடல் போகாது. ஓட்டைக்குள் பூனை தலையை நுழைக்கும்போது மீசை இடிக்காமல் இருந்தால் உடல் தாராளமாக உள்ளே நுழையும் என்று அர்த்தமாம். மீசைதான் பூனைக்கு சென்ஸார், ராடார் எல்லாமே.
“உலகிலேயே அதிகமாக வளர்க்கப்படும் செல்லப்பிராணி பூனைதான். அதை போய்ச் சாடுகிறாயே?” பூனையினத்திற்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கினான் என் நண்பன் மணிமாறன்.
‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்பார்கள். எலி, பூச்சி, கரப்பான், தேள் பாம்பு போன்ற தீங்குயிர்களை கொல்லும் ஒரே காரணத்தினால்தான் ஆதாய நோக்கோடு மனிதர்கள் பூனையை தங்கள் செல்லப் பிராணியாய் வீட்டில் வளர்க்கிறார்கள் என்பதுதான் உண்மை. மற்றபடி பூனைக்கும் மனிதனுக்கு பெரிதாக ஆத்மார்த்த ரீதியான உறவு, பந்தபாசம், நெருக்கம், நட்பு என்று எதுவுமே கிடையாது.
மனிதனுக்கும் பூனைக்கும் உள்ள உறவு கிட்டத்தட்ட 9,500 ஆண்டுகள் பழமையானதாம். சரி இருந்துவிட்டுப் போகட்டுமே. அதைக் காட்டிலும் பல ஆயிரம் ஆண்டுகளாக சிலந்திப்பூச்சி மனிதனுக்கு பரிச்சயம். அதற்காகாக வீடு முழுவதும் சிலந்திப் பூச்சியை வளர்த்து, வீட்டை “பூட்பங்களா” ஆக்க வேண்டுமா என்ன?
உலகமெங்கும் செல்லப் பிராணியாய் வளர்க்கப்படும் பூனையின் உணவு மற்றும் மருத்துவச் செலவுக்காக செலவு செய்யும் பணத்தை சேமித்தாலே போதும். பசியால் வாடி வதங்கும் மூன்றாம் உலகு நாடுகளின் குழந்தைகளை தாராளமாக பராமரிக்க முடியும்.
பூனைக்கு முகரும் தன்மை நம்மைக் காட்டிலும் 14 மடங்கு அதிகமாம். இருந்து என்ன பயன்? “துப்பறிவதற்கு யாராவது மோப்ப நாய்க்கு பதிலாக மோப்பப்பூனையை பயன் படுத்துகிறார்களா?
சூடுபட்ட பூனை/ ருசிகண்ட பூனை/ பூனைக்கு யார் மணி கட்டுவது/ குட்டி போட்ட பூனை மாதிரி/ பூனை அடுப்பிலே தூங்குது/ பூனையும் எலியும் போல/ புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை/ பாலுக்கு பூனை காவலா? என்று தமிழில் காணப்படும் Idioms & Phrases-களில் அநியாயத்துக்கும் ஒரே பூனைமயமாக்கி விட்டர்கள்.
பூனைக்கு இந்தியில் பில்லி என்ற பெயர் என்று என் நண்பனிடம் தகவல் பரிமாற, அப்படியென்றால் “பில்லி சூன்யம்” என்பது பூனையை வைத்து செய்யப்படும் செய்வினையா? என்று அப்பாவித்தனமாக கேள்விக் CATடான் . எனக்கு பூனை மீது இருந்த ஆத்திரத்துக்கு “ஆமாம்” என்று பொய்ச் சொல்லி மனதுக்குள் சமாதானம் அடைத்துக் கொண்டேன்.
vapuchi@hotmail.com
- குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 குறுக்கெழுத்து புதிரின் விடைகள்
- பாராட்டலாம் பரிமாற்றம்தான் சாத்தியமில்லை
- மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா உயிரோசை ஓராண்டு நிறைவு விழா
- கவிஞர் தாணுபிச்சையாவின் உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- NJTS 20th ANNIVERSARY/DEEPAVALI FUNCTION
- screening of the film The Other Song
- அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
- மியாவ் மியாவ் பூனை
- சமாதானத் தூதுவர்கள்
- ‘திண்ணை’யில், திரு. ச. இராமசாமியாரின் சமசுகிருதம் பற்றிய மடல்
- வல்லினம் இதழ் ‘கலை இலக்கிய விழா’
- ஆசிரியருக்கு
- கருத்துப் பரிமாற்றத்திற்கு ஆவலுடன்
- குறுங்கவிதைகள்
- அகம் அறி
- சியாமளாதேவியே சீக்கிரம் அருள்கவே!
- வேதவனம்- விருட்சம் 48
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 50 << உன்னைக் காணும் வரை >>
- எச்சம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -2 (மரணத்தின் அணைப்பு)
- முதிர் இளைஞா..
- புலம்பெயர் பறவைகளை இனி…
- மனிதன் 2.0
- கால்டுவெல் முதல் கவிதாசரண் வரை
- வெளிப்படுத்தப்படும் சில உண்மைகள்
- அஞ்சலி கட்டுரை: யஸ்மின் அமாட் மலேசிய திரைப்பட ஆளுமை – அழகியலும் தீவிரமும் (1958 – 2009)
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பது
- மிச்சம்
- ரோபோ
- வாரத் தேவை
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -9
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினெட்டாவது அத்தியாயம்
- நினைக்கத் தெரிந்த மனம்…
- மாண்டு விட்ட கனவுகள்….
- தொலைத்தூர பயணம்
- யாழ்ப்பாணத்து அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்
- மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்
- இந்தியத் துணைக்கோளும் நாசாவின் விண்ணுளவியும் சந்திரன் வடதுருவக் குழியில் பனிப்படிவு கண்டுபிடிப்பு (கட்டுரை : 5)
- இடைத்தேர்தல்
- தேடல் (ஒளிப்பட கவிதை)
- குருவிகளின் சாபம்:
- சித்திரக்காரனின் சித்திரம்
- விட்டுச்சென்ற…
- இறகுகள் தொலைத்த தேவதை
- அழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…