தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

ஈஷா சக்தி
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் தொடர்ச்சி:

அட்டவணை # 2 :

சேது சமுத்திர திட்டம்:
– அடுத்த பத்தாண்டிற்குள் சேது சமுத்திரத்திற்குள் உடைந்து விழுந்த இயந்திர பாகத்தை மீட்போம். அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் இதற்குக் கூடுதல் தொகை கோரப்படும்.
– அடுத்த தேர்தலுக்கு முன்னர் உல்லாச படகையாவது சேதுவில் கண்டிப்பாக ஓட்டிக் காட்டுவோம்.

இலவச வாகனம், பெட்ரோல் திருத்தம்:
– Engineers and Doctors இவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் போன்றவற்றைச் செய்ய முயன்றால், அவர்களுக்கும் இலவச வாகனம் மற்றும் இலவச பெட்ரோல் திட்டம் விரிவு செய்யப்படும்.

இலவச ரெஃப்ரிஜரேடர்:
– இலவச டி.வி. யின் தொடராகக் குளிர் பதனப் பெட்டி (ரெஃப்ரிஜரேடர்) ஒவ்வொரு குடும்பத்திற்கும்.

தென்மாவட்ட தொலைக்காட்சி:
– அடுத்த ஐந்தாண்டில் அழகிரி டி வி. இதை உருவாக்க ஸ்டாலின் டி.வி. யில் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டு, அழகிரி டி.வி. உருவாகி நிலையான பிறகு, முக்கியமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் இரு குழுவினருக்கும் சமரசம் ஏற்படுத்தப்படும்.

கூவ மேம்பாடு:
– கடல் தண்ணீரைக் கொண்டு கூவத்தைக் கழுவ முயற்சி எடுக்கப்படும். கூவ நதி ஓரங்கள் அனைத்தும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பூங்காக்களாக மாற்றப்படும். கூவ நதியை மீட்டெடுக்கும் பணியின் மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்குவோம்.

பிச்சைக்காரர் மேம்பாடு:
– தமிழகத்தில் தமிழிலே பிச்சை எடுத்தால் மட்டுமே பிச்சையெடுக்க அனுமதி மற்றும் வரிவிலக்கு.

போலீஸ் மேம்பாடு:
– உயர் அதிகாரிகளுக்கு கார் கதவு திறக்க, எடுபிடி வேலை செய்ய குறைந்த சம்பளத்தில் தனிப் போலீஸ்காரர்கள் நியமிக்கப் படுவர்.
– கோர்ட்டு வளாகங்களில் வக்கீலுக்குப் படித்த போலீசார் மட்டுமே நியமனம்.

வக்கீல்களுக்குச் சட்டம்:
– சொந்தப் பயன்பாட்டிற்கு மற்றும் சமையலுக்கு என்று டிக்லரேசன் ஃபார்ம் கொடுத்தால் மட்டுமே முட்டை.
– வன்முறையில் ஈடுபடும் வக்கீல்களுக்கு நீதிபதியாகத் தடை.

பாத காணிக்கை:
– செருப்பாண்ட நாடு என்றும் பின்னர் செருப்பாய் உழைப்பேன் என்றதையும் உடன் பிறப்புக்கள் மறந்திருக்க மாட்டீர்கள். எனவே ஒவ்வொரு குடிமகனும் சிறப்புற இலவச செருப்புக்கள் வழங்கப்படும். இதை காலுக்கு மட்டுமே அணிய வேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

– மனிதர்கள் செருப்புத் திருட்டிலிருந்து விடுபடவேண்டும். மனிதக் கேவலத்தில் ஒன்றான இன்னொருவரின் செருப்பைத் திருடும் அவலம் நாட்டில் ஒழிய வேண்டும். அத்துடன் காலணிப் பாதுகாப்பு எனும் தொடர் கேவலமும் நாட்டில் ஒழிக்கப் பட வேண்டும். எனவே கட்டணக் காலணிப் பாதுகாப்பு மையங்கள் அனைத்தும் இலவசமாக்கப்படும். அத்துடன் அனைத்து வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றிற்கு இலவச காலணி வளாகங்கள் ஏற்படுத்தப்படும்.

போக்குவரத்துக் கழகங்கள்:
– சென்னை மற்றும் பெரிய நகரங்களில் நடத்தும் பிரமாண்ட விழாக்களில் பயன் படுத்த நடப்பில் உள்ள போக்குவரத்து பஸ்களை இனிப் பயன் படுத்த மாட்டோம். வழக்கமான பயணியர் அல்லலுக்கு உள்ளாவதாக அன்பர்கள் முறையிடுவதால் விழாக்களுப் பயன்படுத்த என்றே சிறப்புப் பஸ்கள் வாங்கப்படும்.

கலாச்சாரச் சட்டம்:
– ஆட்சியிலுள்ள முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர் மருத்துவமனையில் இருக்கும்வரையில் அவரை மானில அவையின் எதிர்கட்சித் தலைவர் கண்டிப்பாக நேரடியாகச் சென்று நலம் விசாரிக்க வேண்டும். அவர் குணம் அடையும் வரையில் மற்றைய கட்சிகளும், உறுப்பினர்களும் புண்படுத்தும் வகையில் பேசக் கூடாது என்பன போன்றவற்றை நாட்டின் கலாச்சார நலன் கருதி சட்டமாக்கப்படும்.தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)

அ.இ.அ.தி.மு.க. வாக்குறுதிகள்:

ஜெயலலிதா முன்னுரை:
தேர்தல் வாக்குறுதிகள் என்றால் என்னவென்றே தெரிந்திராத கருணாநிதி, நான் சென்ற முறை நமது தேர்தல் வாக்குறுதிகள் என்று சொன்னதன் பிற்பாடே அவசரம் அவசரமாக வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார் என்பதை நினைவு படுத்துகிறேன்.
இது எதற்காக என்றால் தானாகவே ஒரு வாக்குறுதியைச் சொல்லக் கூடக் கருணாநிதிக்குத் தெரியாது என்பதுதான்.

இம்முறை நமது தேர்தல் வாக்குறுதிகள் குருவாயூரப்பன் பாதத்தில் வைத்து சிறப்புப் பூஜை செய்த பிறகு வெளியிடப்படும். இவ்வமயம் குருவாயூரப்பனிற்கு யானை வழங்கப்படமாட்டாது.

அட்டவணை # 1 :

வேலை வாய்ப்புத் திட்டம்:
– நாட்டின் வேலை வாய்ப்பைப் பெருக்க ஒவ்வொரு மாநகரங்களிலும் ஜெ.ஜெ. உல்லாச ஓய்வு இல்லங்கள் (மாளிகைகள்) கட்டப்படும்.

குளிர் / கோடைக் கால அரசவை:
– தமிழக சட்டசபையின் குளிர்காலத் தொடரை சென்னையிலும், கோடைகாலத் தொடரை ஊட்டியிலும் கூட்ட வசதி செய்யப்படும். இதற்காகவே ஊட்டியில் உல்லாச மாளிகை என்று சொல்லப்பட்ட கட்டிடம் தமிழக அரசுக்கு வாடகைக்கு விடப்படும். இப்போதாவது தமிழர்களுக்கு எனது புண்ணிய நோக்கம் புரிந்திருக்கும் என்பதைக் கருணாநிதி அறிந்து கொள்ளட்டும்.

காவிரிப் பிரச்சினை:
– காவிரிப் பிரச்சினை தீராத வரையில், வெள்ளத்தால் ஏற்படும் அதிக நீரைக் கர்நாடகாவே நிறுத்திக் கொள்ளவேண்டும். அல்லது வெள்ள நீரைக் கர்நாடகாவிற்குத் திருப்பி அனுப்ப வசதி செய்து தரவேண்டுமென மத்திய அரசை வற்புறுத்துவோம்.
– காவிரி ஆற்றில் பட்டா போட்டால் விவசாயிகளுக்கே முன்னுரிமைதர அ.தி.மு.க. அரசு வலியுறுத்தும்.

சென்னைத் தண்ணீர்:
– சென்னைக்கு செயற்கை மழை. வருடத்திற்கு மும்முறை பெய்யும்படி செய்யப்படும். நீர்த் தேக்கங்கள் அவ்வமயம் நிறையும்படி செய்து சென்னைக்குத் தொடர்ச்சியாகக் குடிதண்ணீர் கிட்டும்படி செய்வோம்.

மின்சாரப் பிரச்சினை:
– இடைநிலை அமைப்பாக குஜராத் கிரிட்டிலிருந்து தமிழகத்திற்கு அதிக மின்சாரம் வாங்குவோம்.
– அத்துடன் தமிழக அணு மின் உற்பத்திக்கு சீனாவுடன் ஒப்பந்தம் செய்து, அதிக மின் உற்பத்தியைப் பெருக்கி இதர நாடுகளுக்கு விற்கும் நிலைக்குக் கொண்டு வருவோம்.

பெண்கள் முன்னேற்றம்:
– ஒவ்வொரு கோவிலின் தீர்த்தங்களிலும் பெண்கள் துறைக்கு மறைவு பாத்ரூம், கழிப்பறை மற்றும் அலங்கார அறை வசதி.
– கணவனை ஒதுக்கி தந்தையுடன் அல்லது தோழியிடன் வாழும் பெண்களுக்கு பணியில் முன்னுரிமை மற்றும் முழு வருமான வரி விலக்கு.
– வார்ட் ரோப், ஷூ ஸ்டாண்ட் போன்ற முக்கிய உபகரணங்கள் பெண் வயதுக்கு வந்தவுடன் அரசால் வழங்கப்படும்.

இலவச தாலி/மோதிரம்:
– ஜாதி, சமய வேறுபாடின்றி ஒவ்வொரு திருமணத்திற்கும் அரசின் சார்பில் ஒரு பவுன் தங்கத் தாலி/மோதிரம் வழங்கப்படும். காதல் மற்றும் கலப்புத் திருமணம் செய்பவர்களுக்கு ஒரு குடும்பம் துவங்கத் தேவையன மற்றைய உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும்.

தோழி டி.வி.
– நாட்டு மக்கள் மகிழ்வடைய 24 மணி நேர ஒளிபரப்பில் தோழி எஸ்.கலா டி.வி.
– மேலும் ஜெவின் பாடல்களை மட்டுமே ஒளிபரப்ப எஸ்.கலா. மியூசிக் சானல்.

அ.தி.மு.க.வின் புதிய வரித் திட்டம்:
– அ.தி.மு.க. வினர் சம்பாதிப்பதோடு வரியும் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த, ஒவ்வொரு அ.தி.மு.க. நிர்வாகியும் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கை அ.தி.மு,க. காரியாலயத்திலுள்ள வருமான வரி உண்டியலில் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வார இறுதியிலும் உண்டியல் திறக்கப்பட்டு வருமான வரித் துறைக்கு டி.டி. யாக வழங்கப்படும்.

சுப்பிரமணிய சுவாமி தீர்வாயம்:
– நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுப்பிரமணிய சுவாமியின் மீது முட்டை எறிந்த வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டிப்பு வழங்கப்படும்.
– சுப்பிரமணிய சுவாமி அடையாளம் காட்டும் வக்கீல்கள் மீது அரசாங்கச் செலவில் சுப்பிரமணிய சுவாமியே முட்டை எறிய ஆவன செய்யப்படும். மேலும் அவர் கோர்ட்டிற்கு வந்து போகும் செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.

வக்கீல்கள் / போலீஸ் மோதல் விவகாரம்:
– மோதலில் ஈடுபட்ட வக்கீல்கள் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இருவருக்கும் துறை மாற்றம் செய்து தண்டிக்கப்படுவர், அதாவது சம்பந்தப்பட்ட வக்கீல்கள் போலீஸ்காரர்களாகவும், போலீஸ்காரர்கள் வக்கீல்களாகவும் மாற்றப்படுவர்.
– இம்மாதிரிப் பிரச்சினைகள் வருங்காலத்தில் தோன்றாதிருக்க வக்கீல்களுக்குப் போலீஸ் பயிற்சியும், போலீசுகளுக்கு வக்கீல் பயற்சியும் அளிக்கப்படும்.

திரைத் துறை மேம்பாடு:
– வீடியோ பார்லர்கள் அரசால் அமைக்கப்பட்டு நடத்தப்படும். இதனால் திருட்டு வி.சி.டி/டி.வி.டிக்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்.
– நலிந்த திரையுலகினருக்கு வருடத்திற்கு ஐந்து படங்கள் அரசு செலவால் தயாரிக்கப்படும். இப்படங்களின் மூலம் கிட்டும் வருமானம் முழுதும் வரி நீக்கம் செய்யப்பட்டு நலிவடைந்த பிரிவினருக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
– ”அன்னை ஜெயலலிதா பரிசு” உயரிய திரைத்துறைக் கலைஞருக்கு(!) வழங்கப்படும்.
– ஆஸ்காரைப் போலவே, இந்தியாவின் ’ஜே’ஸ்கார் அவார்டுகள் நிர்மாணிக்கப்பட்டு அனைத்து மொழிப்படங்களுக்கும் சென்னையில் பரிசு வழங்கப்படும்.

அரசுப் பணியாளர் முன்னேற்றம்:
– ஒவ்வொரு அரசுப் பணியாளருக்கும் குடும்பத்துடன் வருட விடுமுறையில் வெளிநாடு சென்று வர இலவச டிக்கெட் வழங்கப்படும்.
– அரசுக்கு நன்கொடை வழங்க விரும்பும் ஒவ்வொரு அரசுப் பணியாளரும், ஏதாவது வெளிநாட்டில் டாலரில் எடுத்த செக்கையே அனுப்பி வைக்க வேண்டும்.
– அரசுப் பணியாளர் ஒவ்வொருவருக்கும் ஒரு நானோ கார்.

இலங்கை:
– இலங்கைத் தமிழருக்கு சமமான உரிமை கோரி, இலங்கைத் தேர்வில் அ.தி.மு.க. பங்கெடுத்துப் போராடும்.
– இலங்கைத் தமிழர்களுக்கு சமமான உரிமையை இலங்கை அரசு வழங்காத பட்சத்தில் தமிழர் பகுதியை ஈழத் தமிழ் மாநிலமாக இந்தியாவுடன் இணைக்க, மத்திய அரசை வலியுறுத்துவோம்.
– இலங்கைத் தமிழர் பகுதியிலும், கச்சத் தீவிலும் உல்லாச ஓய்வு இல்லம் கட்டப்பட்டு வேலை வாய்ப்பை இலங்கைத் தமிழருக்கு விரிவு படுத்துவோம்.
– கதிர்காமக் கோவிலுக்கு யானைகள் பரிசாக வழங்கப்படும்.

மாணவக் கண்மணிகளுக்கு:
– ஐந்தாம் வகுப்புத் தேறிய மாணவர்களுக்கு இலவச மடிக் கணனி.
– ஏழைக் கல்லூரி மாணவர்களுக்குப் படிப்புக் காலம் பாதியாகக் குறைக்கப்படும்.

இலவசங்கள்:
– நலிந்த வயோதிகர்களுக்கு
இலவச படுக்கை மற்றும் போர்வை.

– அனைத்து குடிமக்களுக்கும் ஆடைகள் இலவசம். இதனால் தொழில் துறை முடங்காது பாதுகாக்கப்படும்.
– ரேஷன் சிஸ்டம் நீக்கப்பட்டு அதிக அளவில் உணவுக் கூடங்கள் திறக்கப்படும். மதிய உணவுத் திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு இலவச உணவுத் திட்டத்தில் இணைக்கப்படும். பாரதியின் ‘தனியொரு மனிதனுக்கு உணவிலையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்பதற்கிணங்க ஒவ்வொரு குடிமகனின் உணவும் அரசால் உறுதி செய்யப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் அவரது எடை, உயரம் போன்றவற்றின் அடிப்படையில் டயட்டீசியனால் கணக்கிடப்பட்ட பகல், மதியம் மற்றும் இரவு உணவு இலவசமாக வழங்கப்படும். உணவுகளோடு இலவச நல்ல குடிநீரும் அவர்கள் விரும்பும் தேனீர், காப்பி அல்லது பால் வழங்கப்படும். முக்கிய பண்டிகைக் காலங்களில் கூடுதலாக இனிப்பு மற்றும் சிறப்பு உணவு வகையும் வழங்கப்படும். நடைமுறைப் படுத்த எடுக்கும் இடைக்காலத்தில் எந்த ரெஸ்டாரண்டிலும் ஒப்புக் கொள்ளும்படியான உணவுகளுக்கான கூப்பன்கள் வழங்கப்படும்.

இதனால் நாட்டில் குடிமக்கள் அனைவருக்கும் கேஸ், கேஸ் அடுப்பு போன்றவையின் தேவை அகற்றப்படும். இருப்பினும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தேவையானால் வைத்துக் கொள்ளலாம்.

போக்குவரத்து மேம்பாடு:
– உள்நாட்டு மற்றும் வெளி நாட்டுப் பயணியரை முன்னிட்டு
ஜெ.ஜெ. ஏர்வேஸ் துவங்கப்படும். முக்கியமாக இலண்டனிற்கு தினசரி சேவை. டெல்லி-சென்னை நாளுக்கு மூன்று முறை.
– உள்நாட்டுத் தேவைக்காக தோழி ஹெலிகாப்டர்ஸ் அனைத்து அரசியல் பிரமுகர்களும் வாடகைக்குப் பயன் படுத்தும் வகையில் இது ஏற்படுத்தப் படும். இவற்றைப் பிற மானில அரசியல் வாதிகளும் பயன் படுத்திக் கொள்ளலாம்.
– ஜேஜே கப்பல் கார்பரேஷன் நிறுவப்பட்டு ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் கார்கோவிற்குப் பயன் படுத்தப் படும்.
– கருணாநிதியின் வாசகங்கள் என்று தமிழகப் போக்குவரத்தில் எழுதப்பட்ட பேத்தல்களை கறுப்புப் பெயிண்டால் அழித்துக் கழுவிவிட்டு அதற்கு மாற்றாக மகாகவி பாரதியின் பொன் மொழிகள் எழுதப்படும்.

பட்டங்கள் திட்டம்:
– புலமைப்பித்தனுக்கு கவிமாபேரரசு.
– பன்னீர் செல்வத்திற்கு பரதன் பரிசு.
– மனோரமாவிற்கு முதல் ”அன்னை ஜெயலலிதா பரிசு” மற்றும் பத்மபூஷண்
– செந்திலிற்கு பத்மஸ்ரீ
– ஜெயலலிதாவிற்கு பாரதரத்னா
– சிம்ரனிற்கு சிறந்த நடிகை மற்றும் நைட்டிங் கேர்ல் அவார்ட். மேலும் அவர் விரும்பினால் ராஜ்ஜிய சபா உறுப்பினர் பதவி.

எதிர்காலத் திட்டம்:
– ஜெ நடித்த படங்கள் யாவும் நாட்டுடைமை ஆக்கப்பட்டு அனைவரும் இலவசமாகப் பார்க்கும்படி குறுந்தகடுகள் செய்யப்பட்டு,
இலவச DVD Player களுடன் ரூபாய் 30 உடன் அனைவருக்கும் வழங்கப்படும். (ரூபாய் 30க்கு பாப்கார்ன் கிட்டாத பட்சத்தில் இதை அதிகரிக்கக் கோருவோம்).
– தமிழகம் முதல் மாநிலமாகத் திகழப் பாடுபடுவோம். குறைந்த பட்சமாக குஜராத் மாநிலமாவது திகழ உதவுவோம்.
– தமிழகத்திற்கு வெளியில் பெருமைப் படுத்தப்படும் தமிழர்கள் தமிழகத்திலும் உண்மையிலேயே பெருமைப் படுத்தப்பட அவசியம் பாடுபடுவோம்.
– ஜெயின் காலம் பொற்காலம், ஒளிமயமான காலம், கருணாநிதியின் காலம் இருண்ட காலம், கற்காலம், மருண்ட காலம் எனும்படி தமிழகம் முன்னேறியதைப் பறைசாற்றும்படி எழுதும் அல்லது புலப்படுத்தும் கலைஞர்களுக்கு கலைமாமணிப் பட்டம் வழங்கப்படும்.
– கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு பாடல் தடை செய்யப்படும்.
– என்னுயிர் தோழிப் பாடலை அ.தி.மு.க.வின் கொள்கைப் பாடலாக அறிவிக்கப்படும்.

கலாச்சாரச் சட்டம்:
– தமிழகத்தில் மேலும் தமிழர்களில் ஜெவைத் தவிர எந்தக் கட்சியினரும், முக்கியமாக ஹார்வர்ட் பல்கலையில் படித்தவர்கள் உட்பட யாரும் ஆங்கிலத்தில் பேசவோ, பேட்டி அளிக்கவோ கூடாது.
– எம்.ஜி.ஆரின் பெயரை தேர்தலுக்குப் பின்னர் அடுத்த தேர்தல் அறிவிப்பு வரும் வரையில் யாரும் முக்கியமாக அ.தி.மு.க.வினர் பயன்படுத்தக் கூடாது. அவர் பெயரை தேர்தலுக்கு மாத்திரமே பயன்படுத்துவதை அனைத்துப் பிரிவினரும் பின்பற்றவேண்டும்.
– ஆட்சியில் ஒரே கட்சியைச் சார்ந்த தந்தையும், மகனும், மகளும் அல்லது சகோதரர்கள் அல்லது கணவன் மனைவி இருப்பின் ஒருவருக்கே பதவி. மற்றவர் பதவி பறிக்கப்படும். மற்றவர் தேர்தலும் செல்லாது. இருப்பினும் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ஒரே சமயத்தில் ஆட்சியில் பங்கு பெறலாம். இது அரசியலில் வாரிசுகளை உயிரோடு இருக்கும்போதே உருவாக்குவதைத் தடுக்கும் சட்டம்.
– வெளி நாட்டவருக்குப் இந்தியாவில் பிறந்த இந்தியரோ, இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவரோ, இந்தியரை மணம் புரிந்த வெளிநாட்டவரோ இந்தியாவின் பிரதமாராக முடியாது எனும் புதிய சட்டம்.

சிறப்புப் பொறுப்பு:
– சுப்பிரமணிய சாமிக்கும், சோ இராமசாமிக்கும் சிறப்புப் பொறுப்புக்கள் வழங்கப்படும்.
– தோழி டி.வி.யின் நிர்வாக இயக்குனராக விசுவிற்கு பொறுப்பு வழங்கப்படும்.
– சோவிற்கு மாக்சேசே அவார்ட் வழங்க அரசு பரிந்துரை செய்யும்.

முக்கிய அறிவிப்பு:
– ஆடலரசரின் ஆட்களோ, கருணாநிதியின் ஆட்களோ அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்தினால் அவர்களைப் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவர். அத்தோடு அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை விமரிசிப்போருக்கும் இது பொருந்தும்.

(தொடரும்)

Series Navigation

author

ஈஷா சக்தி

ஈஷா சக்தி

Similar Posts