பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 1

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்‘ சிவாஜி பலப்பம் ‘ ! சிலேட்டில் எழுதுகிற மாவுக் குச்சி. பல்பொடி சிவப்புக்கு அடுத்து வெள்ளை, பச்சை என்று மூவர்ணம் அப்பியிருக்கும். இதை ‘காங்கிரஸ் பலப்பம்’ என்றும் சொல்வதுண்டு.

‘ எம்ஜார் பெல்ட் ‘ ! மலிவான வழு வழு பிளாஸ்டிக்கில் சுமார் ஒரு அங்குல அகலத்துக்கு பட்டை. அதை கறுப்பு, சிவப்பு
பளிச்சென பிரிக்கும். டவுசரை சுற்றி அதை அணிந்துக் கொண்டு, அடிக்கடி சட்டையைத் தூக்கிக் காண்பிப்பதில் விசேஷப் பெருமிதம்.

இது தவிர பாம்பே மிட்டாயிலும் கூட இந்த வர்ண பேதங்களுண்டு. பரோட்டாவுக்கு பிசைந்து வைத்த மாவு போலிருக்கும் இனிப்பு வஸ்து. வானவில் கணக்காய் பல வண்ணங்கள் சேர்ந்த கலவையாக இருக்கும் அந்த இனிப்பு மாவை துணிப் பந்தைப் போலச் சுருட்டி , சுமார் நான்கடி உயரமிருக்கும் கம்பின் தலையில் சொருகி வைத்துக் கொண்டு வருவது தான் ‘பாம்பே மிட்டாய்’.

கம்பை, ஒரு குழந்தையைப் போல வாஞ்சையுடன் தோளில் சாய்த்து வைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்தை குறி வைத்து வருவான்
மிட்டாய் வியாபாரி. கம்பை இறக்கி, அதன் உச்சியில் ‘உட்கார வைத்திருக்கும்’ இனிப்பு மாவிலிருந்து கொஞ்சம் பிய்த்தெடுத்து தன் கையாலேயே அதில் தொங்கட்டான் செய்து பொண்ணு பசங்க காதில் ஒட்டி விடுவான். வாட்சு செய்து பையன்கள் கையில் கட்டி விடுவான். ‘சிவாஜி செட்’ பையன்களுக்கு காங்கிரஸ் கலர்லே வாட்சு. நாங்களெல்லாம் ‘கருப்பு சேப்பு’. தவறியும் கலர் மாறிடாது. மாறிடவும் கூடாது.

இது போதாதென, ‘தொப்பை’ என்றும் ‘ கெழவன்’ எனவும் பரஸ்பரம் கிண்டல் கணைகளை ஏவி மோதிக் கொள்வதுமுண்டு.

(கடந்த 1960-70களில், சிலேட்டு புத்தகங்களை மஞ்சத்துணிப் பையில் திணித்துக் கொண்டு ‘உஸ்கோலுக்கு’ போனவர்களுக்கு இதெல்லாம் இப்போதும் மறந்திருக்காதென சாமி சத்தியமாய் சொல்லலாம்)

முப்பத்தைந்து , நாப்பதாண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவோடு அரசியல் எந்தளவுக்குப் பின்னிப் பிணைந்து பள்ளிக்கூடங்கள் வரை வந்து விஸ்தாரமாக சம்மணமிட்டு அமர்ந்திருந்ததென்பதற்கு சின்ன சாம்பிள்கள் தான் மேலே குறிப்பிட்டவை. இது போல நிறைய…!
இன்னும் சொல்லப் போனால், மூணாம் வகுப்பு வரை நான், ‘ எம்ஜியாரின் அப்பா அறிஞர் அண்ணா ; சிவாஜியின் அப்பா கர்மவீரர் காமராஜர்’ என்று நினைத்திருந்த அளவுக்கு அந்த பிணைப்பின் இறுக்கம் இருந்தது.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாய் தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இடையே இருந்து வரும் இந்த
‘மாமன் – மச்சான்’ உறவு சரியா தப்பா என்று அடித்து துவைத்து அலசுவதல்ல இந்த தொடரின் நோக்கம். இவ்விரு துறைகளும் பரஸ்பரம் தங்களுக்குள் செய்துக் கொண்ட ‘ கொடுக்கல் வாங்கல்’ லுக்குள் கொஞ்சம் எட்டிப் பார்க்கும் முயற்சி தான் இது.

**************

” மகாத்மா காந்திகீ ஜே !”

21-10-1931. தெலுங்கோடு கலந்து ‘காளிதாஸ்’ , தமிழ் பேசிய அந்நாள் தொடங்கி கணக்குப் பார்த்தால் தமிழ் டாக்கீக்கு வயது இப்போது 75 ஆகப் போகிறது. இதர மொழிகளின் பேசும் படங்களுக்கு வயது இதை விட சற்றுக் கூடக் குறைய இருக்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சியிலோ, தரத்திலோ பிரபல்யத்திலோ முந்தியும் கூட இருக்கலாம்.

ஆனால், பேசும் தமிழ் சினிமாவின் வரலாறோ அசாதாரணமானது. சினிமாக் காட்சிகளைப் போலவே சுவாரஸ்யமானது. தன் துறையையும் தாண்டிய திருப்பங்களையும் சலசலப்புகளையும் உள்ளடக்கியது. பிளாக் அண்ட் ஒயிட்டில் கட்சிகளின் கலர்களை காண்பித்தது. நீட்டி முழக்குவானேன் ! இந்த விஷயத்தில் தமிழ் டாக்கீ ஒரு ‘Trend setter’. உள்நாட்டளவில் மட்டுமல்ல உலகளவிலும் கூட.

தமிழ் டாக்கீயின் அதாவது பேசும் தமிழ் சினிமாவின் ’75’-ஐ இரண்டு காலகட்டங்களாக பிரிக்கலாம். அவை : 1. திராவிட இயக்கத் தாக்கத்துக்கு முன் ; 2. திராவிட இயக்கத் தாக்கத்துக்கு பின்.

முதலில் தி.இ.தா.மு.,-வை பார்ப்போம்.

பேசும் சினிமாவின் சக்தியை முழுமையாகப் புரிந்து வைத்துக் கொண்டு அதனை தங்களின் இயக்க வளர்ச்சிக்கு கெட்டிக்காரத்தனமாக பயன்படுத்திக் கொண்டு வளர்ந்த முதல் அரசியல் இயக்கம் உலகளவில் திராவிட இயக்கம் தான். அதற்கேற்ப, ‘விட்டகுறை தொட்டகுறை’யாக ஒன்றை பின் தொடர்ந்தே இன்னொன்றும் பிறந்தது. ஆம். திராவிட இயக்கத்தின் ஆணிவேரான ஈ.வெ.ரா.பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றி சுமார் ஆறு ஆண்டுகளுக்குள் தமிழ் சினிமாவும் பேச ஆரம்பித்து விட்டது. முன்னது நிறுவப்பட்டது 1925ல். பின்னது 1931ல்.

இதில் சுவாரஸ்யமான சங்கதி என்னவென்றால், பின்னாளில் ஈருடல் ஓருயிராகி சேர்ந்தே வளர்ந்த இந்த ‘இரு சகோதரர்’களும் ஆரம்பத்தில் கை கோர்த்திருக்கவில்லை என்பதேயாகும்.

அடித்தட்டு மக்களை தனது திசையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்தில் , அப்போது வெகுஜன சாதனமாக உருவாகிக் கொண்டிருந்த பேசும் சினிமாவை பெரியதாகக் கருதவில்லை என்றே தெரிகிறது. நிழல்
பிம்பத்தை விட மக்களை நேருக்கு நேர் சந்திக்கும் பிரசார மேடைகளையும் எழுத்துக்களையுமே அந்த இயக்கம் அதிகம் நம்பியிருந்திருக்க வேண்டும். அல்லது அப்போது நிலவிய (நாட்டில் மட்டுமின்றி தமிழ் சினிமா துறையிலும்) அரசியல், சமூக சூழ்நிலையில், ‘கடவுள் இல்லை’ என்று சொல்லியும் வைதீகத்தை மட்டம் தட்டியும் வந்த சுயமரியாதை இயக்கத்துக்கு தனது கதவை திறக்க தமிழ் டாக்கீ தயங்கி இருந்திருக்க வேண்டும்.

எது எப்படியோ… அப்போது பக்த பிரஹலாதர்களின், சதி அனுசுயாக்களின் மகாத்மியங்களை பேசியளவுக்கு பகுத்தறிவோ, நாத்திக வாதமோ, திராவிடமோ பேசவில்லை தமிழ் சினிமா.

தமிழில் முதல் பேசும் படமான ‘ காளிதாஸ்’ (21-10-1931ல் ரிலீஸ்) தொடங்கி பட்டியலைப் பார்த்தாலே தெரியும். பாரிஜாத புஷ்பஹாரம், ராமாயணம், ஹரிச்சந்திரா (1932), பிரஹலாதன், சாவித்திரி, சீதா கல்யாணம், நந்தனார், வள்ளி (1933), கிருஷ்ண
லீலா, சக்குபாய், திரெளபதி வஸ்திராபரணம், பவளக்கொடி, தசாவதாரம், லவகுசா (1934), ராதா கல்யாணம், மார்க்கண்டேயா (1935)…. இப்படி பக்திப் பழமாக நீளும் இந்த பட்டியல்.

நடுநடுவே, ‘உஷா கல்யாணம் (அல்லது) கிழட்டு மாப்பிள்ளை’ (1936), ‘சுகுண சரஸா’ (1939) போன்ற கஷ்டங்களை மாத்திரமே சுமக்கும் பதிவிரதா சிரோமணிகளைப் பற்றிய சமூகப் படங்களும் ; ‘ மிஸ்டர் அம்மாஞ்சி’ (1937), ‘ மிஸ்டர் டைட் அண்ட் லூஸ்’ (1937), ‘ஏமாந்த சோணகிரி’ (1937) போன்ற அச்சுபிச்சு காமெடி டிராக் படங்களும் தலைகாட்டின.

இவ்வாறு புராண, இதிகாச பஜனைகள் – அழுமூஞ்சி, அம்மாஞ்சி அசட்டுத்தனங்களுக்கு மத்தியில்…அவ்வப்போது அரசியலையும் ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ளவே செய்தது தமிழ் டாக்கீ. காலத்துக்கேற்ப காந்திய காங்கிரஸ் பேசி பயாஸ்கோப்பில் பாலிடிக்ஸ்க்கு துண்டை போட்டு ஆரம்பத்திலேயே ‘சீட் ரிசர்வ்’ செய்து விட்டதெனலாம்.

தமிழ் டாக்கீயின் ஆரம்ப காலமான 1930கள், நாட்டில் சுதந்திரப் போராட்டத்தின் தீவிர காலகட்டம். எம்.கே.காந்தி மகாத்மா காந்தியாக விஸ்வரூபமெடுத்து அவரது ஒற்றைச் சொல்லுக்கும் சின்ன அசைவுக்கும் கூட பெரிய ஒளிவட்டம் உருவாகியிருந்த நேரம். காந்திஜி, காங்கிரஸ், கைராட்டினம், கதராடைகள், வந்தேமாதரம், தேசாபிமானம், மதுவிலக்கு, பிரஜா சேவை போன்றவை பொது மக்கள் மத்தியில் போற்றுதலுக்குரிய அம்சங்களாக இருந்தன. இதை நன்கு உணர்ந்து வைத்திருந்த தமிழ் டாக்கீ இந்த ‘ஹாட் கேக்’குகளை சமயாசந்தர்ப்பத்துக்கு ஏற்ப கச்சா பிலிமில் சுட்டுத் தந்தது.

அந்தப் படங்கள் நிறைய காந்தியம் பேசின. காட்சிக்கு சம்பந்தமிருக்கிறதோ இல்லையோ முடிந்தளவுக்கு காந்தியை புகழ்ந்து தள்ளின. ‘வந்தேமாதரம் – காருண்ய மூர்த்தி மகாத்மாவின் தாரக மந்திரம்’ என்ற பாணியில் பாடின. கதர்சட்டை, காந்திக் குல்லாய் சகிதம் காங்கிரஸ் கெட்அப்பில் கதாபாத்திரங்கள் மதுவிலக்கு, கைராட்டினம் பற்றி நீண்ட லெக்சர்கள் அடித்தன.

முதல் தமிழ் டாக்கீயான ‘காளிதாஸ்’ படமே “ராட்டினம்; காந்தியின் கைபாணம்’ என்று பாடியதாம். தீண்டாமைக் கொடுமையைக் கதைக் கருவாகக் கொண்ட படம் ‘தேச முன்னேற்றம்’ என்ற டைட்டிலில் 1938ல் வெளி வந்தது. ‘ஹரிஜன சிங்கம் (1938), ‘மாத்ருபூமி’ (1939) என்றும் சில படங்கள் வந்தன. ஆனாலும் இது போன்று தீண்டாமைக் கொடுமையை பிரதானப்படுத்திய படங்களிலும் பெரும்பாலும் காந்தியப் பார்வையே மேலோங்கி காண்பிக்கப்பட்டதாக விமர்சனங்கள் உண்டு.

ஆக இப்படியாக… 1930கள் முழுவதும் உரக்கக் கேட்ட வைதீகப் பழம்பஞ்சாங்கச் சப்ளாக்கட்டைகளின் சத்தத்துக்கும், கதர் கோஷங்களுக்கும் மத்தியில், பேசும் தமிழ் சினிமாவில் முதன் முதலாக பகுத்தறிவைப் பதிவுச் செய்ய 1936ல் ஒரு குரல் சன்னமாக எழுந்தது; சுடலைமுத்து மகனின் உதட்டிலிருந்தும் உள்ளத்திலிருந்தும்.

(வளரும்)

அடுத்து : ‘தீனா..மூனா…கானா…’


vee.raj@rediffmail.com

Series Navigation

author

சாய் (என்கிற) பேப்பர்பாய்

சாய் (என்கிற) பேப்பர்பாய்

Similar Posts