லென்னி புரூஸ் பொன்மொழிகள்

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

லென்னி புரூஸ்


வார்த்தை ஒன்று தடை செய்யப் பட்டால் அந்த வார்த்தைக்கு வலிமை வருகிறது. அந்த வார்த்தை வன்முறையை அடைகிறது. அந்த வார்த்தையில் விஷமேறிப் போகிறது.

‘The word ‘s suppression gives it the power, the violence, the viciousness. ‘

*

ஒவ்வொரு நாளும் மக்கள் சர்ச்சிலிருந்து வெளியேறி கடவுளிடம் மீண்டும் தஞ்சமடைகிறார்கள்.

*

இந்த சின்ன நகரங்களை நான் வெறுக்கிறேன். அந்த நகரங்களின் பூங்காவில் இருக்கும் பீரங்கியைப் பார்த்தபின்னால், அங்கு செய்ய ஒன்றுமில்லை.

*

என்னுடைய பள்ளிக்கூடத்தை கண்டிப்பான பள்ளிக்கூடம் என்று சொல்லமாட்டேன். ஆனால் எங்கள் பள்ளிக்கூடத்திலும் ஒரு பிணம் அறுக்கும் மருத்துவர் போல ஒருவர் இருந்தார். ‘நான் வளர்ந்ததும் என்ன செய்வேன் ? ‘ என்ற கட்டுரைகளை எழுதியிருக்கிறோம்.

*

நல்லவேளை யேசு கிரிஸ்து 2000 வருடத்திற்கு முன்னால் சிலுவையில் அறையப் பட்டு செத்தார். யேசு கிரிஸ்து 20 வருடங்களுக்கு முன்னால் இறந்திருந்தால், கத்தோலிக்க பள்ளிச்சிறுவர்கள் தங்கள் கழுத்துக்களில் சிலுவைக்குப் பதிலாக மின்சார நாற்காலியை அணிந்து கொண்டு திரிவார்கள்.

*

நீதியின் வளாகங்களில் நீதி வளாகங்களில்தான் இருக்கிறது

*

நீ ஏன் யேசு கிரிஸ்துவைக் கொலை செய்தாய் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை.. ஒருவேளை இது நான் பங்கு பெற்ற ,கட்டுக்கு மீறிச் சென்றுவிட்ட ஒரு பார்ட்டியில் நடந்திருக்கலாம். ‘அவர் ஒரு மருத்துவராக ஆக விரும்பவில்லை. அதனால்தான் நாங்கள் அவரைக் கொன்றோம் ‘

(யூதர்கள் பெரும்பாலோர் அமெரிக்காவில் மருத்துவர்கள் . அதைக் கிண்டல் செய்வது இந்த வாசகம் . – மொ பெ)

*

என்னுடைய எல்லா நகைச்சுவையும் அழிவையும் அவநம்பிக்கையையுமே அடிப்படையாகக் கொண்டது. உலகம் வியாதியும் வன்முறையும் இல்லாததாக இருந்திருந்தால், நான் ஜே எட்கார் ஹ்ஊவர் பின்னால் ரொட்டி வாங்கும் வரிசையில் நின்று கொண்டிருப்பேன்.

(எட்கார் ஹூவர் அமெரிக்க உளவுத் துறையின் தலைவராய் இருந்தவர். கடுமையான வலதுசாரி – மொபெ)

*

அங்கதம் என்பது சோகநாடகம் – காலப் போக்கில் அடையும் இடம். காலம் போகப் போக எதுவும் அங்கதத்திற்கு உகந்ததாய் ஆகிவிடும். நினைத்துப் பார்த்தால் இது ரொம்ப அபத்தம் தான்.

*

இடதுசாரிகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறார்கள் – மக்களைத் தான் புரிந்துகொள்வதில்லை.

*

உலகத்திலேயே உண்மையான கலை என்பது சிரிப்புத்தான். நகைச்சுவை பண்ணுவதுதான். இதனை நீங்கள் போலித்தனமாகச் செய்யவே முடியாது. ஒரு மணி நேரத்துக்குள் மூன்றுதடவை போலித்தனமாக சிரிக்க முயன்றுபாருங்களேன். ஹா ஹா ஹா ஹா ஹா… அவர்கள் உங்களை பைத்தியக் கார ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் விடுவார்கள். உங்களால் சிரிப்பு வராமல் போலியாக தொடர்ந்து சிரிக்கவே முடியாது.

*

நான் இந்த தொழிலில் இருப்பதற்குக் காரணம், ஏன் எல்லா கலைஞர்களும் இந்தத் தொழிலிலிருப்பதற்குக் காரணம் ‘அம்மா என்னைப் பார் ‘ அம்மா உங்களை சிறந்தவன் என்று ஒப்புக்கொள்ளவைப்பதுதான். தெரியுமா ? ‘அம்மா என்னைப் பார். அம்மா என்னைப் பார்,, அம்மா என்னைப் பார் ‘ அம்மா உங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால், நீங்கள் களைத்துப்போகும் வரைக்கும் கலை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருப்பீர்கள். அம்மா போய்விட்டால் அவ்வளவுதான்.. ப்யூ….

*

காமெடியனின் வேலை பார்வையாளர்களை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு முறை சிரிக்க வைப்பது.

*

‘எப்படி இருக்கவேண்டும் ‘ என்பது எப்போதுமே இருந்ததில்லை. ஆனால் மக்கள் அதன்படி நடக்க முயற்சி செய்கிறார்கள். ‘எப்படி இருக்கவேண்டும் ‘ என்பது இல்லை. என்ன இருக்கிறது என்பதுதான் இருக்கிறது.

*

எப்போதுமே ‘நான் உன்னைக் காதலிக்கிறேன் ‘ என்று சொல்வதற்கு இவ்வளவு தரம் தான் சொல்லவேண்டும் என்ற விதி இருந்ததில்லை.

*

லென்னி புரூஸ் (அக்டோபர் 13 1925- ஆகஸ்ட் 3 1966) பிறக்கும்போது லியோனார்ட் ஆல்பிரட் ஷ்னெய்டர் ஆக பிறந்தார். விவாதத்துக்குரிய அங்கதக்காரராகவும் காமெடியனாகவும் 1950-60களில் பிரகாசித்தார். வெறுமே நகைச்சுவைத் துணுக்குகளை மேடையில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த காலகட்டத்தில் இவர், இப்படிப்பட்ட மேடைக் காமெடியை ஒரு அறிவார்ந்த கலையாக மாற்றியமைத்தார்.

இவரது மேடைக்கலை கதைகளாகவும், சிறு நாடகங்களாகவும், சிறு விவரணைகளாகவும் அவ்வப்போது ஆபாசமாகவும் இருந்தது. இவரது ஆபாசமான பேச்சு அடிக்கடி இவரை காவல்துறை சிறைப்பிடிக்க காரணமாக இருந்தது. இவரது ஆபாசப் பேச்சு வழக்குக்கள் இன்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தின் மைல்கற்களாக அமெரிக்காவில் கருதப் படுகின்றன.

புரூஸின் காமெடி மேடைப்பேச்சு பெரும்பாலும் பாத்ரூம் நகைச்சுவைத் துணுக்குகளோடு ஆரம்பித்தது. ‘மனித உடலைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் அருவருப்பு இருக்குமாயின், உடலைப் படைத்தவரிடம் போய் முறையிடுங்கள் ‘ என்று சொன்னார்.

1961இல் கார்னகி ஹாலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தன்னுடைய மேடைப்பேச்சை நிகழ்த்தினார். இதில் அவர் தனது பாத்ரூம் நகைச்சுவைத் துணுக்குகள் மட்டுமின்றி, அரசியல், மதம், சட்டம், இனம், கு கிளக்ஸ் கிளான் (அமெரிக்க கிரிஸ்துவ இனவெறி அமைப்பு), கத்தோலிக்க சர்ச் ஆகிய அனைத்தையும் கலாய்த்தார். அவ்வாறு பேசியதன் பின் , ஒருவருடத்துக்குள் அவர் சான்பிரான்ஸிஸ்கோவில் ஆபாசப்பேச்சுக்காகக் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்தாலும் கூட, அவர் எந்த மாவட்டத்துக்குள் நுழைந்தாலும், அந்த மாவட்ட போலீஸ் அவரைக் கைது செய்தது. இவரைப் பேச வைக்க கிளப் சொந்தக்காரர்கள் தயங்கியதால், இவர் நகைச்சுவை மேடைப்பேச்சு மூலம் சம்பாதிப்பது கடினமாயிற்று.

தனது மேடைப்பேச்சுக்களில் புரூஸ் தொடர்ந்து, போலீஸ் தன்னை எந்தமாதிரி நடத்தியது என்பதை விவரித்துக்கொண்டே இருந்தார். இதனால் போலீஸ் அவருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தது. அவரை அடக்க அடக்க, அவர் குறைகூறுவதும் அதிகரித்துக்கொண்டே வந்தது.

புரூஸ் ஹெராயின் உபயோகத்தில் அதிகம் மூழ்கினார். தன்னுடைய ஹாலிவுட் மலைப்பகுதி வீட்டு பாத்ரூமில் ஒரு கையில் ஊசியுடன் இறந்து கிடந்தார். மார்பின் ஓவர்டோஸ் காரணமாக அவர் இறப்பதற்கு முன்னால் அவர் எல்லா அமெரிக்க காமெடி கிளப்களிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு அவர் செல்வதற்குக் கூட தடை இருந்தது. அவரது கடைசி நிகழ்ச்சிகள் சுதந்திர கருத்து வெளிப்பாடு நோக்கிய புலம்பல்களாக இருந்தன.

1974இல் வெளிவந்த லென்னி என்ற படத்தில் டஸ்டின் ஹாஃப்மன், புரூஸ் வேடமேற்று வாழ்க்கையை நடித்திருந்தார். இவரது ஞாபகத்தில் பாப் டைலன், ஜான் லென்னன், ரெம் ஆகியோர் பல பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

***

Series Navigation

author

லென்னி புரூஸ்

லென்னி புரூஸ்

Similar Posts