தமிழ் இனி 2000

This entry is part 28 of 49 in the series 19991203_Issue

உலகத் தமிழ் இலக்கிய அரங்கு


2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி மாநாடுத் திட்ட வரைவு.

முகவுரை

உலக மொழிகளில் ஆறரை கோடி மக்களின் பேச்சு மொழியாக இந்தியா, இலங்கை, கிழக்கு ஆப்பிாிக்கா, மொாீஷியஸ், சிங்கப்பூர், பியூஜி தீவுகள், தெற்கு ஆப்பிாிக்கா மற்றும் மலேசியா நாடுகளில் பேசப்படும் மூத்த மொழி தமிழ். இது நீங்கலாக ஐரோப்பாவிலும் வட அமொிக்காவிலும் தமிழர் பெருமளவிற்குக் குடியேறியுள்ளனர். தமிழ் இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்று. இலங்கையிலும், சிங்கப்பூாிலும் இது ஆட்சிமொழிகளில் ஒன்றாக உள்ளது. கனடா நாட்டுத் தலைநகரான டொரண்டோ நகாின் நகரசபையில் பயிலும் 15 மொழிகளில் தமிழும் ஒன்று.

தமிழின் இலக்கியச் செழுமையும் கவித்துவச் சாதனையும் தனித்துவமானவை என்பதோடு இந்திய நாகாிகத்தின் முக்கிய அங்கம் வகிப்பவை. ஆறாம் நூற்றாண்டுக்கு முந்திய தமிழ்ச் சமூகம் பற்றிய செய்திகள் யாவும், தொல்பொருள் ஆய்விலிருந்து கிடைத்துள்ள குறைந்த அளவிலான தகவல்கள் நீங்கலாக, தமிழிலக்கியத்தில் இருந்து பெறப்படுபவையே. இது தமிழிலக்கியத்தின் முக்கியத்துவத்தை செவ்வனே உணர்த்துவதாகும்.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில் அபாரமான படைப்புச் சாதனைகள் நிகழ்ந்துள்ளன. தமிழியல் ஆய்விலும் சில குறிப்பிடத்தக்க பாய்ச்சல்கள் ஏற்பட்டுள்ளன. இச்சாதனைகள் பொிதும் தமிழ்பேசுவோர் மட்டுமே அறிந்தவையாக உள்ளன. இந்நிலையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள், கல்வித்துறையினர், திறனாய்வாளர்கள், பத்திாிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் புதிய நூற்றாண்டின் வருகையைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி மாநாடு நடத்துவது பற்றி மின் இணையம் மூலமாக தொடர்ச்சியாக உரையாடி இத்திட்ட வரைவை உருவாக்கியுள்ளனர்.

இலக்கிய வடிவங்கள், பார்வைகள், விமர்சனப் போக்குகள் தமிழகத்திலும், இலங்கையிலும், சிங்கப்பூாிலும், மலேசியாவிலும் இந்த நூற்றாண்டில் முக்கிய இலக்கியப் பங்களிப்புகள் நிகழ்ந்துள்ளன. மாநாட்டில் அமர்வுகள் கீழ்க்கண்ட பொருள்களில் நடைபெறும்.

* கவிதை
* நாவல்
* சிறுகதை
* நாடகமும் அரங்கியலும்

இவற்றில் இந்த நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையின் இருபெரும் போக்குகளைக் கணக்கில் கொண்டு

* மரபுக்கவிதை
* புதுக்கவிதை

என இரு தனி அமர்வுகள் நடைபெறும்.

மேலும் இலக்கியத்தில் அரசியல் இயக்கங்களின் தாக்கத்தை ஆய்வு செய்யும் விதமாக

* தேசிய இலக்கியம்
* திராவிட இலக்கியம்
* மார்க்சிய இலக்கியம்
* பெண்ணிய இலக்கியம்
* தலித்திய இலக்கியம்

என ஐந்து பிாிவுகளாக அமர்வுகள் ஒழுங்கு செய்யப்படும்.

அத்தோடு பல்வேறுபட்ட இலக்கியப் போக்குகளைக் கணக்கில் கொண்டு

* நவீனத்துவ இலக்கியம்
* தமிழ் இலக்கியத்தில் புதிய போக்குகள்
* இலக்கியமும் இணையமும்

என வகைப்படுத்தப்பட்டு தனித்தனி அமர்வுகளில் விவாதிக்கப்படும்.

தமிழ் இலக்கியத்தின் இன்றியமையாத பகுதியாகத் தமிழ் இலக்கிய விமர்சனம் இயங்கி வருகிறது. ஆகவே தமிழ் இலக்கிய விமர்சனப் போக்குகளைத் திறனாய்வு செய்யும் நோக்கோடு

* மார்ச்சிய விமர்சனம்
* நவீனத்துவ விமர்சனம்
* தலித் விமர்சனம்
* நவீனத்துவத்திற்கு பின்னைய விமர்சனப் போக்குகள்
* பெண்ணிய விமர்சனம்

என அமர்வுகள் நடத்தப்படும்.

வெகுஜன இலக்கியம்

பெருவாாியான தமிழ் வாசகர்களைச் சென்றடையும் வெகுஜன இலக்கியத்தின் தாக்கத்தை ஆய்வு செய்யும் நோக்கோடு இப்பொருளில் தனி அமர்வு ஒழுங்கு செய்யப்படும்.

புலம்பெயர்ந்தோர் இலக்கியம்
இலங்கையில் நடைபெற்றுவரும் இனப்போரை அடுத்து ஈழத் தமிழர்கள் ஐரோப்பாவிலும், வட அமொிக்காவிலும் பெருமளவிற்குக் குடியேறியுள்ளனர். ஜெர்மனி, கனடா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஈழத்தமிழர் தற்போது பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அங்கு பல இலக்கிய இதழ்கள், தினசாிகள், மலர்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருகின்றனர். தற்காலத் தமிழ் இலக்கியத்தில் இவர்கள் பங்களிப்பும், பாதிப்பும் முக்கியமானதும் இன்றியமையாததும் ஆகும். இந்த மாநாட்டில் புலம் பெயர்ந்தோாின் இலக்கியம் தனி அமர்வுகளில் ஆய்வு செய்யப்படும்.

குழந்தைகள் இலக்கியம்
குழந்தைகள் / சிறுவர் சிறுமியர்களுக்கான இலக்கியத்தை கவனப்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் இப்பொருள் பற்றி தனி அமர்வு ஒழுங்கு செய்யப்படும்.

தமிழ் – பிற மொழி உறவு
பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கும் இலக்கியத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்ததாகும். குறிப்பாக, தமிழுக்கும், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சிங்களம், ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கும் இடையேயுள்ள கொடுக்கல் வாங்கல் பற்றிய கணக்கெடுப்பு தமிழின் எதிர்கால வளர்ச்சிக்கு இன்றியமையாதது. மொழி இலக்கியமும் மொழி மாற்றத்தின் பிரச்சினைகளும் தனி அமர்வுகளாக விவாதிக்கப்படும்.

இடம்
மாநாடு சென்னையில் 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மூன்று நாட்கள் நடைபெறும். மொத்தம் மேற்குறிப்பிட்ட பொருட்களில் 50 அமர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுரைகள் கேட்டு இதழ்கள் மூலம் அறிவிக்கப்படும். நூறு கட்டுரையாளர்களை, அமர்வுக்கு இரண்டு கட்டுரைகள் வீதம் தேர்வு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினராக சுமார் நூறு படைப்பாளிகள், பேராசிாியர்கள், இலக்கியப் பணியாளர்கள் அழைக்கப்படுவர். இது நீங்கலாகச் சிறப்புச் சொற்பொழிவுகளும் இடம் பெறும். பிற மொழி அறிஞர்களும் இதில் பங்கு பெறுவர்.

* * * * உங்கள் ஆதரவை வரவேற்கிறோம். உங்கள் எண்ணங்கள் கருத்துக்கள் தொிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவாிகள்:

kalachuvadu@vsnl.com (India)
cheran@cheran.net (Canada)

நன்றி. வணக்கம்.

‘தமிழ் இனி 2000 ‘ அமைப்புக்குழு.

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< இன்டெர்நெட்டில் திவசம்திருநெல்வேலி >>

author

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

Similar Posts