பாரி
என் தாத்தா உயிருடன் இருந்த போது ஒரு சிறிய கடை வைத்திருந்தார். சில குறிப்பிட்ட நபர்கள் கடைக்கு வரும் சமயம், என்னை கண்டிப்பாக உடன் அழைப்பார். நான் உடனே சென்று, அவர்கள் உரையாடலை கவனிப்பேன். இந்த நபர்கள் புலம்பலுக்குப் பெயர் போனவர்கள்.
தாத்தா, கடைக்கு வந்தவரிடம் விசாரிப்பார், ‘எப்படி இருக்கிறீங்க முனுசாமி ? ‘
உடனே வந்தவர், ‘என்னங்க போங்க. ஒண்ணும் சரியில்லை, இந்த கோடைக்காலத்தைப் பாருங்க, ஒரே வெயில் கொளுத்துது. என்னைப் படுத்தி எடுக்குது. ஆளை கொன்னுடும் போலிருக்கு, ஒண்ணுமே சரியில்லீங்க ‘ என்று புலம்பி தள்ளி விடுவார்.
தாத்தா வந்தவரிடம், ‘ஆமாமாம், வாஸ்தவம்தான் முனுசாமி. நம்மால என்ன செய்ய முடியும் ‘ என்று கூறி விட்டு என்னைப் பார்த்து கண்ணசைப்பார்.
இன்னொரு நபர், ‘வீட்ல ஒண்ணும் சரியில்லை, தினம் ஒரே ரகளைதான். புள்ளை பொண்டாட்டி தொந்தரவு தாங்க முடியலை, பேசாம சன்னியாசியாப் போயிடலாம் போலிருக்கு ‘ என்று புலம்புவார்.
தாத்தாவும் பாவமாய்த் தலையசைத்து விட்டு, அவருக்கு ஆறுதல் கூறியபடி, என்னையும் பார்ப்பார்.
இவர்கள் கடையை விட்டு சென்ற உடனே, என்னைக் கூப்பிட்டு தன் முன்னே நிற்க வைத்து, தான் இதற்கு முன் என்னிடம் ஆயிரம் முறை கூறிய அதே வார்த்தைகளை திரும்பவும் சொல்வார்.
‘தம்பி, இப்ப வந்து போனவரோட புலம்பலைக் கேட்டியா ? ‘
நான் மெளனமாய்த் தலையசைப்பேன்.
‘தம்பி, இந்த உலகத்தில் எத்தனையோ பேர்கள் குடும்பம்னு சொல்லிக்க இல்லாம அனாதையா இருக்காங்க. நேத்து இராத்திரி படுத்து தூங்கின சில பேர் காலையிலே எழுந்திடுக்கவே இல்லை. அவங்க படுத்திருந்த படுக்கையே அவர்களோட கடைசி படுக்கையாயிட்டு, மரணப் படுக்கையாயிட்டு. இப்படி அனாதையா இருக்கிறவங்களும், இராத்திரியோடு இராத்திரியா செத்துப் போரவங்களும் இந்த வெயிலுக்காகவும், பொண்டாட்டி புள்ளைகளுக்காகவும் எதை வேண்டுமானாலும் கொடுப்பாங்க. அதனால, நீ புலம்புவதை பற்றி ஜாக்கிரதையா இரு. எது உனக்கு பிடிக்கலையோ, அதை மாத்தப் பார், மாத்த முடியலைன்னா, அதைப் பற்றிய உனது நோக்கத்தை மாத்திக்கோ. வீணாாய்ப் புலம்பாதே. ‘
ஒவ்வொரு மனிதருக்கும் தன் வாழ்க்கையிலே ஒரு சில மிகச் சிறந்த கற்பிக்கக் கூடிய தருணங்கள் உண்டு என சொல்வதுண்டு. எனக்கு இளம் பிராயத்திலெ, ஏகப்பட்ட தருணங்கள், என் தாத்தாவினால்.