ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -5

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

சத்யானந்தன்


கிஷ்கிந்தா காண்டம்

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.

ஆரண்ய காண்டம் வரை மற்ற கதாபாத்திரங்கள் எப்படியோ ராமன் சமுதாய ஜீவியாக சமூகத்தின் ஒரு அங்கமாகத் தனக்கென விதிக்கப்பட்ட பணிகளைத் தனது ஷத்திரிய தர்ம நெறிகளுக்குட்பட்டே செய்து வந்தான். சூர்ப்பனகையை அங்கஹீனமாக்கியது பொருந்தவில்லை. இருப்பினும் ராமனின் வழி சமூக வழியே அன்றித் தனிமனித உந்துதலுடன் ஏன் இது என் வழியாகக் கூடாது என்னும் கேள்விக்கே இடமில்லை. இந்த நிலைப்பாட்டிலிருந்து ராமன் பிறழ்ந்தானா இல்லையா என்ற ஒரு வாதத்திற்குத் தேவையான களம் கிஷ்கிந்தா காண்டத்தில் தென்படுகிறது. அரசியல் சதுரங்கம் அறியாது ஒரு ஷத்திரியன் இயங்க இயலாது என ராமன் கிஷ்கிந்தா காண்டத்தில் மிகவும் துல்லியமான செய்தி விடுப்பதாக நாம் காண்கிறோம்.

கிஷ்கிந்தா காண்டம் ராம லட்சுமணர்களின் ஒரு எதிர்பார்ப்புடன் தொடங்குகிறது. ராவணன் சீதையை அபகரித்தான் என்ற அளவில் தெரிந்திருந்தாலும் சீதை சிறைப்பட்டிருப்பது எங்கே என்று தெரியாமற்தான் அவர்கள் இருவரும் ஆரண்ய காண்ட முடிவில் சுக்ரீவன் பற்றிக் கேள்விப் படுகின்றனர்.

அயோத்திக்குச் செய்தி அனுப்பிப் படைகளை வரவழைக்க ராமன் விரும்பவில்லை. அதனால்தான் படைபலம் மற்றும் காட்டுவாசிகளின் ஆதரவு என்னும் நோக்கில் சுக்ரீவனைத் தேடுகிறான்.

சுக்ரீவனுக்கோ அனுமனுக்கோ ராமனின் வரலாற்றுப் பின்னணி பற்றித் தெரிந்திருக்கவில்லை. மேலும் ராமன் மற்றும் சுக்ரீவன் இருவருக்குமே தத்தமது மனைவியை மீட்டெடுக்க வேண்டியது பொதுவான கடமை ஆகிறது. இந்தச் சூழலில் தான் ஒரு அரசியல் உடன் படிக்கை போல சுக்ரீவனுக்கும் ராமனுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்படுகிறது.

சுக்ரீவனுக்கும் அவன் அண்ணன் வாலிக்கும் தீராப்பகை. வாலி மிகவும் வலுவானவன் (சுக்ரீவனை ஒப்பிட). சுக்ரீவனால் வாலியை வெல்ல முடியவில்லை என்பதைத் தவிர எப்போதும் உயிர் பயத்துடன் வேறு காலத்தைத் தள்ள வேண்டியிருக்கிறது. சிங்கத்தை யார் காட்டுக்கு ராஜா ஆக்கினார் என்னும் கேள்விக்கு உதாரணமான விடையாக வாழ்ந்தான் வாலி. எனவே அவன் சுக்ரீவனின் மனைவியை வலுக்கட்டாயமாகத் தன்னுடன் கொண்டு போய் வைத்துக் கொண்ட போதோ அல்லது சுக்ரீவனைத் தாக்கிய போதோ கேட்பாரில்லை. ஒரே ஒரு மலை மட்டுமே சுக்ரீவனுக்குப் புகலிடம். அங்கே வந்தால் வாலி தலை வெடித்துச் செத்து விடுவான் என்னும் முனிவர் ஒருவர் சாபத்தால் வாலி அங்கே வருவதில்லை.

ராமலட்சுமணர்களால் வாலியை அழிக்க முடியும் என்னும் நம்பிக்கை சுக்ரீவனுக்கு இல்லை. எனவே அவனுக்குப் புரியும் படி ஆச்சா மரங்களை ஒரே அம்பால் துளைத்துக் காட்டுகிறான் ராமன்.

வாலியை வதம் செய்யும் திறனுள்ளவன் ராமன் என்று தெரிந்த பிறகு வாலியை வதம் செய்யத் திட்டம் வகுக்கப் படுகிறது. அதன்படி சுக்ரீவன் வாலியை சண்டைக்கு அழைக்க வேண்டும் எனவும் அப்படிச் சண்டையிடும் போது ராமன் மறைந்திருந்து அம்பு எய்து வாலியை வதம் செய்வது என முடிவாகிறது. அவ்வாறே நடக்கவும் செய்கிறது.

ஷத்திரிய தர்மங்களையும் யுத்த தர்மங்களையும் நன்கு அறிந்தவன் ராமன். அப்பா அம்மாவைத் தாண்டி சின்னம்மா சொன்னாலே போதும் எனத் தன்னை வழி நடத்தும் நெறிமுறைகளுக்குப் புது வடிவம் கொடுத்தவன். ராமாயணம் மகாபாரதம் என்ற இரு இதிகாசங்களை ஒன்றாக வைத்துச் சீர் தூக்கினாலும் கதாபாத்திரங்களால் செய்யப்பட்ட மீறல்களில் மிகவும் தலையானதாக நிற்பது வாலி வதமே.

கம்பராமாயணத்தைப் பொறுத்த அளவில் வாலி மிக நீண்ட ஒரு விவாதத்தில் ராமனைக் குற்றம் சாட்டுகிறான். நாம் ராமன் தரும் பதில்களைக் காணும் போது வாலியின் கதையையே முடிப்பதற்கான வலிமையான காரணங்கள் எதுவும் தென்படவில்லை. ராமனின் ( அல்லது அயோத்தியின் ) கீழ் அந்தக் காடு வரவில்லை. ராமன் மன்னனுமில்லை. வாலிக்கும் அவனது சகோதரனுக்கும் இடையே கண்டிப்பாக ஒரு சச்சரவு உள்ளது. ஆனால் அதில் ஒருவரைக் கொன்று அதைத் தீர்க்கும் முடிவை ஒரு அரச பதவிக்குத் தகுதி உள்ள ஒருவர் எந்தச் சூழ்நிலையில் எந்தெந்த நடவடிக்கைகளுக்குப்பின் எடுக்க வேண்டும்? சமூகமும் பாரம்பரியமும் எதிர்பார்க்கும் அணுகுமுறை எது ? ஒரு சமூகத்தின் அங்கமாக – அதுவும் தலைவனாக- இயங்கும் ஒருவன் செய்யக் கூடிய காரியம் தானா ராமன் செய்தது ?

ஏதேனும் ஒரு ஆவேசத்தில் உணர்ச்சி வசப்பட்டு அதைச் செய்தானா ராமன் ?

இல்லை. திட்டமிட்டு காத்திருந்து சரியான தருணத்தில் மறைந்திருந்து அதைச் செய்தான். எனவே மிகப் பெரிய மீறலொன்றை ராமன் நிகழ்த்தியுள்ளான். கம்பராமாயணம் வாலியின் வாதங்களை மிக அழகாகச் சித்தரிக்கிறது. ஒரு வானரம், விலங்கு என்னும் நிலையில் நின்று இதை வாலி பேசியிருக்க வாய்ப்பே இல்லை. ஆணித்தரமான வாதங்கள். தருக்கம் மற்றும் தரும நியாயம் பற்றிய அடிப்படைக் கேள்விகள்! மூன்று ராமாயணம் சொல்லுவதை முதலில் பார்ப்போம்.
“இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே
ஒருவர் மேல் கருணை தூண்டி ஒருவர் மேல் ஒளித்து நின்று
வரி சிலை குழைய வாங்கி வாய் அம்பு மறுமத்து எய்தல்
தருமமோ பிறிதொன்று ஆமோ தக்கியது என்னும் பக்கம்”

பொருள்: ஒரு போரில் இரு வீரர் எதிர்த்து நிற்கும் போது அவ்விரண்டு பேரையும் சமமாக நல்ல உறவினராகக் கொள்வது சிறந்தது. நீ அவ்வாறு கருதுவதற்கு மாறாக அவ்விருவருள் ஒருவர் மீது கருணை கொண்டு மற்றவர் மீது மறைந்து நின்று வில்லை வளைத்துக் கூரிய அம்பை மார்பில் பாய்ச்சுதல் அறமாகுமோ ? இது தக்கதன்று என்று கருதப்படும் பச்சாதாபமே ஆகும்” (பாடல் 317 கிட்கிந்தா காண்டம் கம்ப ராமாயணம்)

“நூல் இயற்கையும் நும் குலத்து உந்தையர்
போல் இயற்கையும் சீலமும் போற்றலை
வாலியை படுத்தாய் அல்லை மன்அற
வேலியைப் படுத்தாய் விறல் வீரனே”

பொருள்: “வீரனே! நூல்கள் கூறும் இயல்பான முறைகளையும் உங்கள் குலத்து முந்தையர் போல அவர்களின் வழக்கத்தையும் ஒழுக்கத்தையும் நீ ஏற்று நடக்கவில்லை. அரச அறத்தின் வேலியையே அழித்து விட்டாய்”
(பாடல் 323 கிட்கிந்தா காண்டம் கம்ப ராமாயணம்)

“கஹ ஷத்ரியக்குலே ஜாதஹ ருத்வான் நஷ்ட ஸம்ஸயஹ
தர்மலிங்கபிரதிச்சன்னஹ க்ரூரர் கர்ம ஸமாசரேத்”

“ஷத்திரிய குலப் பிறப்பும், சாஸ்திர ஞானமும் கொண்டு, காவி உடை தரித்த பின்பும் எப்படி ஒரு மனிதனால் இந்தக் கொடூரச் செயலைச் செய்ய முடிகிறது ? ”
(பாடல் 17- ஸ்ர்க்கம்-17 வால்மீகி ராமாயணம்)
“தர்ம ஹேது ஷ்ரவத்ரேஹூ குஸாயி
மாரேஹூ மோஹி(ன்) வ்யாத்கி நாயி
மை(ன்) வைரி சுக்ரீவ ப்யாரா
காரண் கவன் நாத் மோஹீ(ன்) மாரா”

“தலைவா ! தர்மத்தைக் காக்கவென அவதரித்தவர் நீங்கள். ஒரு வேடனைப் போல ஒளிந்திருந்து என்னை அம்பால் வீழ்த்தினீர்கள். சுக்ரீவனை நண்பனாகவும் என்னை விரோதியாகவும் கருதக் காரணம் என்ன? என்னைத் தாக்கியதன் காரணத்தைக் கூறுங்கள். ” (பக்கம் 611 ராமசரிதமானஸ் ராமநாராயணன் அலஹாபாத் பதிப்பு 1936)

இவ்வாறாக வாலி ராமனின் தாக்குதலை எதிர்த்து வாதிடுகிறான். இதற்கான பதில் வால்மீகி ராமாயணம் மற்றும் ராமசரிதமானஸில் தம்பியின் மனைவியை அபகரித்த முக்கியமான குற்றம் என்று வருகிறது.

“அனுஜ்-பதூ பகின் சுத்-நாரி
ஸுன் ஷட் யே கன்யா சம ஸாரி
இன்ஹே குதிருஷ்டி வ்லோகை ஜோயி
தாஹி(ன்) பதே க சு பாப் ந ஹோஹி”

பொருள்: ” முட்டாளே ! தம்பியின் மனைவியும், சகோதரியும், மருமகளும், மகளும் ஆகிய நால்வரும் சமம். இவர்களைக் கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவனைக் கொல்வதில் பாபம் எதுவும் இல்லை” (பக்கம் 616 ராமசரிதமானஸ் ராமநாராயணன் அலஹாபாத் பதிப்பு 1936)

” அஸ்ய த்வம் தர்மாணஸ்ய சுக்ரீவஸ்ய மகாத்மனஹ
ருமாயாம் வர்த்தஸே காமாத் ஸ்னுஷாயாம் பாப கர்மக்ருத்”

பொருள்: “நற்குணம் கொண்ட சுக்ரீவன் உயிரோடு இருக்கும் போதே அவனது மனைவி ருமாகாவை உன் காமத்துக்குப் பயன் படுத்திக் கொள்கிறாய். அதனால் பாவி ஆனாய்” (பாடல் 19- ஸ்ர்க்கம்-18 வால்மீகி ராமாயணம்).

இப்படியாகத்தானே ராமனால் குற்றச்சாட்டுக்கு பதிலும் தரப்பட்டு விடுகிறது. வால்மீகி ராமாயணத்திலும் ராமசரிதமானஸிலும் வாலி உடனே ராமனின் நல்ல தன்மையைப் புரிந்து கொண்டு சரணாகதி அடைந்து விடுகிறான்.

ஆனால் கம்பராமாயணத்தில் அவன் தொடர்ந்து வாதிடுகிறான். வானர இனத்திற்கு மனித இனத்தின் வரைமுறைகள் பொருந்தாது என்றும் குறிப்பிடுகிறான். கம்பராமாயணத்தில் மட்டும் முத்தாய்ப்பாக லட்சுமணன் ஒரு விளக்கம் கூறுகிறான்.

“முன்பு நின் தம்பி வந்து சரண்புக முறை இலோனைத் தென்புலத்து உய்ப்பேன் என்று செப்பினன் செருவில் நீயும் அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்தது என்றான்”

பொருள்: “அவன் (லட்சுமணன்) வாலியை நோக்கி ‘முன்பு உன் தம்பி தன்னிடம் அடைக்கலம் அடைந்ததால் நீதி நெறியில்லாத உன்னை வதம் செய்வதாய் ராமன் அவனுக்கு வாக்களித்தான். உன் தம்பியைப் போலவே நீயும் அடைக்கலம் என்று வண்ங்கி நிற்க வாய்ப்பு இருந்ததாலேயே அவன் மறைந்து நின்று அம்பு எய்தான்” (பாடல் 351 கிட்கிந்தா காண்டம் கம்பராமாயணம்)

தொடர் வாசிப்பில் தான் சுக்ரீவனுக்கும் ராமனுக்கும் இடையே ஏற்பட்டது ஒரு அரசியல் உடன்படிக்கையே என்பது தெளிவாகிறது. இந்த பாடலை வாசிப்போம்:

“பெறல் அருந்திருபெற்று உதிப் பெருந்
திறம் நினைந்திலன் சீர்மையின் தீர்ந்தனன்
அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம்
மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான்”

பொருள்: ” பெறுவதற்கு அரியதான அரசு என்னும் செல்வத்தைப் பெற்ற அவன் (சுக்கிரீவன்) நான் செய்த உதவியை மறந்து விட்டான். அது தவறு. தனக்கு உதவி செய்தவருக்கு திரும்ப உதவி செய்ய வேண்டும் என்ற தர்மத்தை அவன் மறந்திருப்பது மட்டுமல்ல நமது வீரத்தையுமல்லவா மறந்து விட்டான். தனது (ராஜபோக) வாழ்வில் மயங்கிக் கிடக்கிறான்” (பாடல் 562 கிட்கிந்தா காண்டம் கம்பராமாயணம்)

ஒருவர் செய்த உதவிக்குப் பிரதி உபகாரம் செய்ய வேண்டியதை ராமன் குறிப்பிட்டுப் பேசுவது அத்தகைய ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய ஒப்பந்தமாக ஒரு புரிந்துணர்வுடன் கூடிய பரஸ்பர ஆதரவாகவே சுக்கிரீவனுடனான நட்பு அமைந்ததைத் தெளிவு படுத்துகிறது.

நாம் இதற்கு முன் வாசிப்பில் கவனித்தது போல் பல இடங்களில் ராமனின் முயற்சிகளும் போக்கும் தான் ஒரு அவதாரம் என்று அறிவிப்பதாகவோ நிலைநாட்டுவதாகவோ இல்லை.

சீதையை ராவணன் கடத்திச் சென்றவுடன் அவன் எங்கே சிறை வைத்திருப்பான் என்ற யூகங்கள் செய்யாமல் அவளைத் தேடவே ராமன் விரும்புகிறான். தேடவும் பிறகு தேவையானால் போர் தொடுக்கவும் கண்டிப்பாக ஆட்பலம் ராமனுக்குத் தேவை. அந்த அடிப்படையிலேயே ஒரு அரசியல் நடவடிக்கையாக சுக்ரீவனுடன் ஒரு புரிந்துணர்வு ஏற்படுகிறது.

இந்த ஏற்பாடும் பரஸ்பர உதவியும் தவிர்க்க இயலாதவையே. ஒரு மன்னனுக்கான தகுதியும் மக்கள் ஆதரவும் உள்ள ராமனின் ராஜக நடவடிக்கையே. எனவே இந்த அளவு ஒரு சமூக ஜீவியாக (அதன் தலைவனாக) இயங்குவோனாகவே ராமன் இருக்கிறான்.

ஆனால் வாலியின் அட்டூழியங்களை, தவறான போக்கை, சுக்ரீவனைத் தொடரும் கொலை அபாயத்தைத் தடுக்க வாலியை வதம் செய்வது மட்டுமே ஒரே வழி என்கிற முடிவு ராமனின் பண்புகளுக்குப் பொருத்தமானதாக இல்லை. ஏனெனில் ராமன் அவசரப்பட்டு ஒரு முடிவை எடுக்காது பாரம்பரியத்தையும் சமூக விழுமியங்களையும் மதித்து நடப்பதே தலையாய கடமை என்னும் வழியிலேயே பெரும்பகுதி செல்கிறான்.

எனவே இது சுக்ரீவனால் உறுதியாக முன் வைக்கப்பட்டு வேறு வழியில்லை என்ற அடிப்படையில் ராமனால் ஏற்கப்பட்ட ஒன்றாகவே நாம் கருத வேண்டும்.

சூழ்நிலைகளை மனதிற் கொண்டு சமூகம் வகுத்த நியதிகளை ராமன் மீறிய முதல் முறையாக வாலியின் வதத்தைக் கொள்ளலாம். வாலியை வதம் செய்த முறை அதற்குப் பின் வரும் காலங்களில் ராமன் ஒரு போதும் மேற்கொள்ளாததாகும்.

மீறல்கள் சாத்தியமானவையே மற்றும் சகஜமானவையே என்னுமளவு கிஷ்கிந்தா காண்ட முடிவில் நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால் தனிமனித நோக்கிலா அல்லது சமூக நோக்கிலா பாத்திரங்கள் இதில் எந்த வழியில் செல்கின்றனர் எந்த வழியை எந்த சூழ்நிலையில் எந்தக் காரணத்திற்காக மேற்கொள்கின்றனர் என்பதை மேலும் செய்யும் வாசிப்பில் ஆய்ந்து அறிவோம்.

Series Navigation

author

சத்யானந்தன்

சத்யானந்தன்

Similar Posts