ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

சத்யானந்தன்


அயோத்தியா காண்டம்

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.

பால காண்டத்தை வாசித்த பின்பு ராமாயண கதா பாத்திரங்கள் இரு தண்டவாளங்கள் மீது மிக ஒழுங்காக எப்போதுமே எதிரும் புதிருமாக வாராது சீராகக் கட்டுப்படுத்தப் பட்ட ரயில் வண்டிகள் போலத் தோன்றலாம்.

பாத்திரங்கள் அனைவரும் சமூகத்தின் மிகப் பணிவான எளிய கீழ்ப்படிதலுள்ள அங்கமாக மன்னன் அல்லது குரு சுட்டும் திசையில் தனித்தன்மை ஏதுமில்லாது வழிநடப்போராய் தோன்றுகின்றனர்.

மன்னன் தசரதனோ, ராமன் மற்றும் மூன்று சகோதரரோ விதிவிலக்கானோர் அல்லர். அவரது நடவடிக்கைகள் தனித்தன்மை என்று ஒன்று தேவையில்லை தொன்று தொட்டு எல்லாமே சரியாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது என்பதாகவே படுகிறது.

ஆனால் அயோத்தியா காண்டம் பரதன் வடிவில் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது. இதிகாச காலத்தில் தனித்த மீறலான வித்தியாசமான சிந்தனை மற்றும் செயல்கள் பரதனால் அயோத்தியா காண்டத்தில் நிகழ்த்தப் படுகின்றன.

கம்பராமாயணத்தில் ராமன் வனம் புகுவதும் பரதன் நாடாளப் போவதுமான முடிவை கைகேயி ராமனுக்குக் கூற அவனது எதிர் வினையைக் காண்போம்.

” மன்னவன் பணி அன்றாகிலும் நும் பணி மறுப்பேனோ என
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ
என் இனி உறுதி அப்பால் இப்பணி தலைமேல் கொண்டேன்
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்”

மன்னனது கட்டளையாக இல்லாமல் தங்களது கட்டளையாக இருந்தாலும் இதைத் தலைமேல் ஏற்று கானகம் புகுவேன். விடை பெறுகிறேன் எனப் பொருள் படும். (பாடல் 291)

அடுத்து
“என்று கொண்டு இனைய கூறி அடி இணை இறைஞ்சி மீட்டும்
தன் துணைத் தாதை பாதம் அத்திசை நோக்கித் தாழ்ந்து
பொன் திணி போதினாளும் பூமியும் புலம்பி நைய
குன்றிலும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான்”

மலையை விஞ்சும் பெருந்தோளான் ராமன் மீண்டும் கைகேயியின் பாதங்களைப் பணிந்து தந்தையின் பாதங்களை அவ்ர் இருந்த திசை நோக்கி வணங்கி விட்டு பூமி தேவி துன்பமுற கோசலை மாளிகையை அடைந்தான்.

ராமன் தனது சின்னம்மாவான கைகேயிக்குக் காட்டும் மரியாதை கூர்ந்து நோக்கப்பட வேண்டியது. ராமன் இதன் மூலம் தாய்க்குச் சமமானவராகிய கைகேயியை எதிர்க்கவோ அவருடன் விவாதிக்கவோ செய்யாது பாதங்களில் விழுந்து வணங்கி விட்டு காட்டுக்குப் புறப்படத் தயாராகிறான். அதாவது இதையே சுமித்திரை சொல்லியிருந்தாலும் ராமன் அதே போலவே நடந்திருப்பான். எனவே இதை ஒரு பாரம்பரியத்தின் நீட்சியாகவே ராமன் செய்கிறான்.

ராமனும் அவனது மூன்று சகோதரர்களும் ஒரே பின்னணியும் ஒரே குருகுலக் கல்வியும் பெற்றவர்கள். வளர்ப்பிலும் தாய்தந்தை வெவ்வேறு விதமான ஆளுமைகளாய் அவர்களை வளர்க்கவில்லை. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் பாரம்பரியப்படியும் பயிற்சிப்படியும் நடப்பதில் இவர்கள் ஒரே மாதிரியானவர்கள். நடத்தை, அணுகுமுறை, சமூக நோக்கு, குடும்ப உறவினர்களிடம் பழகும் முறை அனைத்தும் இவர்களுக்கு ஒன்று போலவே சொல்லித் தரப்பட்டுள்ளது. தசரதனும் ராமனும் குருவைப் பணிந்து நடந்தது போல ராமனின் இளைய சகோதரர்களும் தாயோ சின்னம்மாவோ பெரியம்மாவோ தாள் பணிவர்.

ஆனால் அப்படி நடக்கவில்லையே ?

” காட்டுக்குப் போ ” என அப்பா சொன்னார் என்று சின்னம்மா சொன்னதும் மறுத்து ஒரு வார்த்தை பேசவில்லை ராமன். ஆனால் பரதனோ தனது சொந்தத் தாய் ‘முடி சூட்டிக் கொள்’ என்றதும் அவள் தாள் பணிந்து முடி சூடவில்லை. அத்தோடு விட்டிருந்தாற்கூடப் பரவாயில்லை. பின்வருமாறு ஏசுகிறான்.

“நோயீர் அல்லீர் நும் கணவந்தன் உயிர் உண்டீர்
பேயீரே நீர் இன்னும் இருக்கப் பெருவீரே
மாயீர் மாயா வன்பழி தந்தீர் முலை தந்தீர்
தாயீரே நீர் இன்னும் எனக்கு என் தருவீரே”

இதன் பொருள் உமது கணவன் உயிரை பறித்த நோயல்ல நீர். பேய். அவர் போய் சேர்ந்ததும் இன்னும் சாகாமல் உயிரோடு இருக்கிறீரே. செத்துப்போவீராக. அன்று பாலைக் கொடுத்தீர். இன்று பெரும் பழியை. இன்னும் என்னவெல்லாம் தரப் போகிறீரோ? (பாடல் 858 அயோத்தியா காண்டம்)

“ந த்வம்ஷ்வப்பதேஹே கன்யா தர்மராஜஸ்ய தீமத:
ராட்சஸி தத்ர ஜாதாஸி குல்ப்ர்த்வம்ஸினிபிது:”

அறிவாளியான அரச அஸ்வவதியின் மகளே அல்ல நீ. அவர் குலத்தில் உதித்த ராட்சஸி. அவரின் வம்சத்தை அழிக்க வந்திருக்கிறாய். ” (ஸர்க்கம் 74 பாடல் 9 வால்மீகி ராமாயணம்)

“ஜப் தே(ந்) குமதி குமத் மன் டயவு
கண்ட் கண்ட் ஹோயீ ஹ்ருதய கயவு
வர் மாங்கத் மன பயீ நஹீ (ந்) பீரா
ஜரி ந ஜீப் முஹ் பரேவு ந கீரா”

இதன் பொருள் ” கெட்டவளே ! இந்தக் கெட்ட எண்ணம் உனக்குத் தோன்றிய போது உன் நெஞ்சு ஏன் வெடிக்கவில்லை ? அந்தக் கொடிய வரத்தைக் கேட்ட போது உன் நெஞ்சில் வருத்தமே இல்லையே. உன் நாக்கு அப்போது வெந்து போயிருக்கக் கூடாது? உன் வாயெல்லாம் புழுத்துப் போயிருக்கக் கூடாது ?” (பக்கம் 416 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

இந்த முரண் எவ்வாறு சாத்தியமானது ? தனிமனிதன் தனது நடத்தையையும், சிந்தனையையும், நடவடிக்கைகளையும் பரம்பரியத்தை, சமூகக் கட்டுக்கோப்பால் அங்கீகரிக்கப் பட்ட பீடங்களை ஒட்டி அமைத்துக் கொள்வான் என்றால் இரு சகோதரர்களிடையே இது எவ்வளவு பெரிய முரண் ?

ராமனே யாருடைய ஆணைகளை மறுபேச்சின்றி ஏற்றானோ அதுவும் சொந்தத் தாயான அந்தப் பெண்ணை எந்த அடிப்படையில் பரதன் ஏசினான் ?

முடி சூட மறுப்பதும் தாய் கோரிய வரங்கள் தவறானவை என்று வாதிடுவதும் புரிந்து கொள்ளக் கூடியவை. ஆனால் இந்த அளவு இழிவு செய்து தாயைத் தாக்கிப் பேசுகிறான் என்றால் தனிமனித மன எழுச்சி அல்லது உணர்ச்சிப் பெருக்குக்கு ராமாயண காலத்தில் இடம் இருந்தது என்று தானே பொருள் ? சமுதாயப் பீடங்களைத் தாண்டி ஒருவரின் செயலை எடை போடும் தனிமனித சிந்தனை வெளிப்பாடு நடக்கத்தானே செய்தது ?
தனது தூய நிலையை, சிம்மாசனத்துக்கு ஆசைப் படாத நிலைப் பாட்டை பொது மக்களிடமோ, மந்திரிகளிடமோ குருமார்களிடமோ சொன்னால் போதாதா ? தாயை இந்த அளவுக்கு ஏச வேண்டிய கட்டாயம் என்ன ?

பாரம்பரியமும், பயிற்சிகளும், சூழ்நிலையும் ஒரு தனிமனிதனை அதிக தூரம் கொண்டு சேர்ப்பதில்லை என்பதற்கு கைகேயி நல்ல உதாரணம்.

இந்தத் தோல்வி சமுதாயத்தின் அது நம்பி வருகிற பாரம்பரியத்தின் தோல்வி. அந்த ஒன்றைச் சுற்றியே தனது புரிதலைக் கட்டமைத்துக் கொண்ட பரதனுக்கு அது பேரிடி. ஏனெனில் இது அந்தப் பாரம்பரியத்தின் ஏனைய பரிமாணங்களை விழுமியங்களைக் கேள்விக் குறி ஆக்குகிறது.

இதை எப்போதுமே பரதன் எதிர் பார்த்ததில்லை. தனது தாயே தன் வலுவான விழுமியங்களைத் தாண்டிச் சென்று புதிய வடிவெடுப்பதை அவனால் பொறுக்க இயலவில்லை. அந்த ஆதங்கத்திலும் ஆத்திரத்திலும் வெளிப்படும் சொற்களே இவை.

இந்த நிலைகுலைவை அல்லது சரிவை சமன் செய்யும் விதமாக பரதன் தன்னளவில் ஒரு மீறலைச் செய்கிறான். அது தான் பாதுகா பட்டாபிஷேகம். இது சிம்மாசனத்தின், செங்கோலின் அல்லது அதிகார மைய்யத்தின் வழிபாட்டுக்குரிய தன்மையைக் கேள்விக்குறியாக்கிய செயல்.

பரதன் தன்னளவில் தனது தன்னலமற்ற நிலையைப் பிரகடனப்படுத்தும் ஒரு குறியீடாக செருப்புக்களைப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் கடவுளுக்கு நிகராகக் கருதப்பட்ட மன்னனின் அதிகார பீடத்திற்கு பரதனின் மாற்று ஏற்பாடு முன்பின் கண்டிராததே.

ராமாயணத்தில் ஒரு தனி மனிதன் தனது தனித்துவத்தை உணர்ந்து இயங்கிய ஒரு உதாரணம் பரதன். ராமனிடம் சமுதாயத்தின் அங்கமாக இயங்கி தனித்தன்மையைக் கேள்விக் குறியாக்கும் போக்கு தென்படுகிறது. பரதனும் லட்சுமணனும் எதிர்வினை ஆற்றும் போதோ அல்லது மீறல்களின் சுழலில் சிக்கி இன்னொரு மீறலை நிகழ்த்துவோராகவோ நம்முன் வருகின்றனர்.

பரதன் எப்படித் தன் தாயை ஏசினானோ சற்றும் தயங்கவே இல்லையோ அந்த மீறல் லட்சுமணனிடமும் தென்படுகிறது. முதலில் காட்டுக்கு அனுப்ப வரம் வாங்கி அதை ராமன் ஏற்றதும் கைகேயியைப் பற்றிய கடுஞ்சொற்களை உரைக்கயில். அடுத்து பரதன் ராமனை திரும்ப அயோத்தி வந்து அறியணை ஏற்க வரும்படி அழைக்க பெரும் படையும் மக்களுமாக வருகையில். அப்போது லட்சுமணன் இது ராமனை அழிக்க வரும் பரதனின் சேனை என ஐயமுறும் போது அது மிகப் பெரிய மீறலே.

இந்த மீறல்கள் ராமனுக்கு ஏற்புடையவை ஆகா; கொள்கைப் பிடிப்பு மற்றும் சமூக அடையாளமே ஆகச் சிறந்தது என்னும் ராமனின் ஆளுமையின் காரணமாய். பரதனை சந்தேகிக்கும் போது லட்சுமணனைப் பார்த்து ராமன் கூறுகிறான் :
“பொன்னொடும் பொரு கழல் பரதன் போந்தனன்
நல்நெடும் பெரும் படை நல்கல் அன்றியே
என்னொடும் பொரும் என இயம்பற்பாலதோ
மின்னொடும் பொருவுற விளங்கு வேலினாய்”

இதன் பொருள் : மின்னலைப் போன்ற வேலுடையவனே! பரதன் என்னுடன் போர் செய்ய வருகிறான் என்று கூறுவது உனக்குத் தகுதியுடைய சொல் தானா ? தங்கக் கழல் அணிந்த காலுக்குரிய பரதன் நால்வகைப் பெரும் படைகளையும் என்னிடத்தில் அளிப்பதற்காகவே வருகிறான். (பாடல் 1120 கம்பராமாயணம்)

“அம்பாம்ச கேகயீம் ருஷ்ய பரதஷ்சாப்ரியம் வதன்
ப்ரசாத்ய பிதரம் ஷ்ரீமான் ராஜ்யம் மே தாதுமாதக:”

இதன் பொருள் : அன்னை கைகேயின் மீது கோபங் கொண்டு அவரைக் கடிந்து கூறி பின்னர் என்னிடம் ராஜ்ஜியம் அளிப்பதற்கே திருவாளர் பரதன் வருகிறார். (ஸர்க்கம் 97 பாடல் 12 வால்மீகி ராமாயணம்)

“திமிர தருண தரணிஹிம் சக கிலயி
கரண் மகன்மகன் மகு மேகஷி மிலயி
கோபஜல் பூடஹி கட் யோனி
ஸஹஜ் ஷமா பரு சாண்டவி சோடனி
மஷக் ஃபூங்கி பரு மேரு உடாயி
ஹோயி ந நிருபமத பாதஹின் பாயி
லஷன் துமாரா ஷ்பத் பிது ஆனா
ஷூசி ஸம்பந்து நின் பரத் சமானா”

இதன் பொருள் : இரவில் சூரியன் உதிக்கலாம், ஆகாயம் மேகத்துள் ஒன்றி விடலாம், அகத்திய முனிவர் தண்ணிரில் மூழ்கி விடலாம், பூமி தனது மன்னிக்கும் குணத்தை இழக்கலாம்,கொசுவின் மூச்சில் சுமேரு மலை பறக்கலாம். ஆனால் பரதன் அரசைக் கைப்பற்றும் பேராசை கொள்ள மாட்டான். லட்சுமணா! பரதனைப் போல ஒரு கபடமற்ற சகோதரனைக் காண இயலாது.

(பக்கம் 479, 480 ராமசரித மானஸ்)

தனித்தன்மையுடைய சிந்தனை உடையவர்கள் எந்த அளவு ச்முதாயத்தின் வழி செல்வோரால் கட்டுப்படுத்தப் பட்டார்கள் என்பதே வரலாறு. ராமாயணத்தில் தனித்துவம் மிகுந்த சிந்தனை எவ்வாறு சித்தரிக்கப்பட்டது என்பதையும் சமுதாயத்தின் ஒரு அங்கமாக ஒரு தனிமனிதன் இயங்கினாற் போதுமா என்பதையும் ராமாயணத்தின் தொடர்ந்த வாசிப்பில் காண்போம்.

Series Navigation

author

சத்யானந்தன்

சத்யானந்தன்

Similar Posts