ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -2

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

சத்யானந்தன்


பால காண்டம்

“ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.

பாலகாண்டத்தில் மனப்போராட்டமோ அல்லது தனிமனித மற்றும் சமுதாய அடையாளத்திற்கும் இடையிலான தேர்வுக்கோ பாத்திரங்கள் தள்ளப்பட்ட சூழ்நிலைகள் குறைவே.

முதல் சோதனை விசுவாமித்திரரின் வடிவில் தசரதருக்கு வருகிறது. தாடகை மற்றும் பல அரக்கர் முனிவர்களது தவத்துக்கு ஊறு விளைவிக்கின்றனர். அப்போது ராமனை அரக்கர்களுடன் யுத்தம் செய்யவென அழைத்துச் செல்ல விசுவாமித்திரர் விரும்புகிறார். அப்போது இரண்டு காரணங்களில் அவர் சொல்லை மீற முடியாது. ஒன்று ரிஷி முனிவர்கள் பேச்சுக்கு அரசர் கட்டுப்பட்டவர். மற்றொன்று முனிவருக்குப் பாதுகாப்புத் தர வேண்டியது மன்னர் கடமை.

ஆனால் தசரதனுக்கோ
” எண் அலா அருந்தவத்தோன் இயலிய சொல்
மருமத்தில் எறிவேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தா
லெனச் செவியில் புகுதலோடும்
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த
ஆர் உயிர் நின்று ஊசலாட
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான்
கடுந்துயரம் காணவேலான்”

கம்பராமாயணம் வேலினால் ஏற்பட்ட புண்ணின் மீது நெருப்பு பட்டது போலவும், கண்ணைப் பெற்ற பார்வையற்ற ஒருவர் பட்ட வருத்தத்தைப் போலவும் இருந்ததென்கிறது.

வால்மீகி ராமாயணத்திலோ தசரதர் மூர்ச்சையே அடைந்து விடுகிறார்.
‘தச்ச்ருத்வா ராஜ ஸார்தூலோ விஸ்வாமித்ரஸ்ய
முஹூர்த்தமிவ நிஸ்ஸ்ம்யஞ ஸன்ஞ்ஞாவா நிதம்ப்ரவீத்”

(ஸர்க்கம் 20 சுலோகம் 1)

மேலும் பல விதமாகவும் ராமனை அனுப்ப இயலாது என்பதைக் கூறி ஏன் தன்னை வைத்து அந்த ராட்ச்சர்களை அடக்கக் கூடாது என வாதிடுகிறார். இந்த அளவுக்கு கம்ப ராமாயணத்தில் வாதிடவில்லை.

அதே போல் தசரதன் சொன்னதைக் கேட்டு வால்மீகி ராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் விசுவாமித்திரர் மிகுந்த கோபம் கொள்கிறார். கம்பராமாயணத்தில் அவரது கோபத்தை உணர்ந்து வசிஷ்டர் இடை மறிக்கிறார். திடமான மனநிலை இல்லாத தசரதனை ஏசுகிறார். ராமசரிதமானஸிலோ தசரனது நிலையைப் புரிந்து கொள்கிறார். அதிகம் கோபமே படவில்லை.

ராமசரிதமானஸ் ” சுபசுத் ப்ரிய மோஹி ப்ராண்கி நாயி ராம் தேத் நஹி பனை கோசாயி’ ( பக்கம் 176- 1936 வது வருட பதிப்பு – அலஹாபாத் ராமநாராயணலால் வெளியீடு). எல்லா மகன்களும் எனக்கு உயிரிலும் பிரியமானவர்கள் எனினும் ராமனை அனுப்ப இயலாது என்கிறார்.

இதன் தொடர்ச்சியாக தாடகை வதத்தில் ஷத்திரிய தர்மமா குருவின் ஆணையா என்னும் கேள்வி எழுகிறது. இரண்டு கட்டாயக் கடமைகள் எதிரெதிரே நிற்கின்றன. குரு பீடத்தில் உள்ளவர் சொல்வதற்காக அவளைக் கொல்லலாம். அல்லது ஷத்திரிய தர்மப்படி அவளைக் கொல்ல மறுக்கலாம்.

பால காண்டம் 388வது பாசுரத்தில்
“ஐயன் அது கேட்டு அறன் அல்லவும்
எய்தினால் அது செய்க என்று ஏவினால்
மெய்ய நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ அறம் செய்யும் ஆறு என்றான்.”

அதாவது நீர் கட்டளை இட்டால் உன் சொல்லே வேதம் எனக் கொண்டு அறமல்லாத செயலையும் செய்வதே அறம். எனவே குருவின் சொல்லுக்குக் கீழ்ப்படியும் அறம் பெண்ணைக் கொல்லாமை என்னும் அறத்தை விஞ்சுகிறது.

வால்மீகி ராமாயணம் 25வது ஸர்க்கம் 24வது சுலோகத்தில்
“அதர்ம ஸஹிதா நார்யோவாதா: புருஷ ஸத்தமை:
தஸ்மாதே நாம் க்ருணாம் த்யத்வா ஜஹீ மச்சாஸநாந்ருப”

இதன் பொருள் “ பல தர்மாத்மாக்களும் புருஷ சிரேஷ்டிரர்களுமான ராஜகுமாரர்கள் அதர்மத்தையே செய்து வந்த ஸ்திரிகளைக் கொன்றிருக்கிறார்கள். ” என்னும் விளக்கம் வருகிறது. ராமசரிதமானஸில் இப்படி ஒரு கேள்வியே எழவில்லை.

தனித்தன்மை அல்லது தனது கருத்து என்று ஒன்றை முன் வைக்காமல் குரு அல்லது ரிஷிமுனிவர் வழிக்குக் கட்டுப்படுவது என்னும் மிக எளிய அணுகுமுறை தென்படுகிறது. ஆனால் சமூகம் என்பதில் குருமார்கள், தவமுனிவர்கள் என்போர் மட்டும் நிறைந்திருக்கவில்லை. உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு நபர் ஒரு எளிய பெண்ணின் வாழ்க்கையில் விளையாடி அவளை மீளாத்துயரில் ஆழ்த்த இயலும்.

அகலிகையின் கதை ஒரு பெண்ணுக்குக் கட்டாயமாக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மட்டுமன்றி அவளை வேட்டையிடும் விதிமீறல்களையும் பதிவு செய்கிறது. அகலிகையின் மீது நிகழ்ந்த திட்டமிட்ட ஒரு தாக்குதலை அவள் எந்த மாதிரி எதிர் கொள்ள வேண்டும் என வரையறுக்க இயலாது என்பதே அகலிகையின் கதையை மூன்று ராமாயணங்களில் வெவ்வேறாய் பதிவு செய்துள்ளதில் இருந்து காணலாம்.
கம்பர்
” சரம் தரு சாபம் அல்லால் தடுப்ப அருஞ் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாய
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்
புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர் பூசை ஆய்ப் போகலுற்றான்” என்றார்.

இது அதிகாலையில் கௌதம முனிவர்
நீராடி சூரியனை வணங்க நதிக்குச் சென்ற வேளையில் ஆசிரமத்தில் புகுந்து அகலிகையுடன் சுகித்த இந்திரன் அவர் திரும்பி வரும் வேளையில் பூனை வடிவில் தப்ப முயல்வதைக் காட்டும் பாடல். சாபம் என்ற சொல்லுக்கு வில் என்னும் பொருளும் உண்டு.

கம்பரின் வாக்கில் சாபத்தால் இந்திரன் உடல் முழுவதும் பெண்குறி ஆகிறது. அகலிகை கல்லானாள். ராமனின் கால் பட்டு சாபவிமோசனம் பெற்றாள். அவளின் கதையைக் கேட்ட பின்பு ராம லட்சுமணன் இருவரும் விசுவாமித்திரருடன் கௌதம முனிவரின் ஆசிரமம் சென்றடைகின்றனர். விசுவாமித்திரர் கௌதமரை வேண்டி அவளை ஏற்கச் செய்கிறார்.

இதை ஒப்பிடுகையில் வால்மீகி ராமாயணத்தில் மூன்று முக்கியமான வித்தியாசங்கள் உள்ளன. முதல் வேறுபாடு கௌதம முனிவரின் சாபத்தால் இந்திரன் இழந்தது பீஜங்களை. பித்ருக்களின் அருளால் அவனுக்கு சாப விமோசனம் கிடைக்கிறது. இந்திரன் உடல் முழுவதும் பெண்குறி ஆகவில்லை.

“மமரூபம் சமாஸ்தாய க்ருதவானஸி துர்மதே
அகர்தவ்யமிதம் யஸ்மாத் விபல்ஸ்வம் பவிஷ்யதி”

(பால காண்டம் 48 வது ஸர்க்கம் பாடல் 27)

இதன் பொருள் ” கெட்ட புத்திக் காரனே ! என்னுடைய வேடம் பூண்டு செய்யக்கூடாதன செய்த நீ ப ல னற்றவனாய்ப் போகக் கடவது “. “விபல்” என்னும் சாபத்திற்கு பீஜங்களை இழ என்பதே பொருள். அகலிகைக்கான சாபமும் வால்மீகி ராமாயணத்தில் வேறு படுகிறது.

கௌதமர் அகலிகைக்கு அளித்த சாபம்
” வாத பக்ஷா நிராஹாரா தப்யந்தி பஸ்மஷாயினி
அத்ருஷ்யா ஸர்பூதாநாமாஷ்ரமேஸ்மின் வஸிஷ்யஸி”
(பாடல் 30 ஸர்க்கம் 49)

இந்த சாபத்தின் பொருள் “நீ சாம்பலில் யார் கண்ணிலும் படாதவளாய் அன்ன ஆகாரமின்றிக் காற்றை உண்டு தபம் செய்வாயாக ”

மூன்றாவது வேறுபாடு கம்பராமாயணப்படி மனதிற்குள் மட்டுமே அகலிகைக்கு வந்தது இந்திரன் என்று தெரியும். ஆனால் வால்மீகி ராமாயணத்தில் தான் ஆனந்தமடைந்ததாகவும் அவர் வருவதற்குள் எந்தத் துன்பபுமின்றிப் போகும்படியும் கூறுகிறாள்.

கம்பராமாயணம் வால்மீகி ராமாயணம் இந்த இரண்டிலுமே இந்த விவரங்கள் அனைத்தும் விசுவாமித்திரரால் ராமனிடம் கூறப்பட்டது. ராமசரிதமானஸிலும் அதுவே. ஆனால் அகல்யையின் பெயர் கூறாது கௌதமரது மனைவி என்று மட்டுமே வருகிறது. ( பக்கம் 141-1936 வது வருட பதிப்பு – அலஹாபாத் ராமநாராயணலால் வெளியீடு).

“கௌதமநாரி ஷாபவஷ் உபல் தேஹ்தரி தீர்
சரண்-கமல்-ரஜ் சாஹதி, க்ருபா கரஹு ரகுவீர்”

கம்பராமாயணத்தில் ராமன் அகல்யையை வணங்கி விடை பெறுகிறான். ராமசரிதமானஸில் அகல்யை கைகூப்பித்தொழுது சுருக்கமாக சாபம் பற்றிக் கூறி நன்றி தெரிவிக்கிறாள். மேலும் அவள் ஒரு சிலையாய் இருக்கிறாள். கல்லாய் அல்ல.

இவ்வாறாக, பாலகாண்டத்தில் அரசன் அல்லது அவனது குரு எடுக்கும் முடிவுகளுக்கு ஏனையர் கட்டுப்படுகின்றனர். ஆனால் இதுவே முடிவானதென யூகிக்கலாமா?

நாம் அடுத்து வாசிக்கும் அயோத்தியா காண்டம் ஒரு புதுப் பரிமாணத்தைக் காட்டுகிறது.

Series Navigation

author

சத்யானந்தன்

சத்யானந்தன்

Similar Posts