ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் —- நான் நிழலானால்

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

சாலினி


நிலத்தின் தன்மை பயிர்க்கு உளது ஆகுமாம் என்றான் பாரதி. ஆம்! இது பயிருக்கு மட்டுமல்ல உயிருக்கும் பொருந்தும். எழுத்துக்கும் பொருந்தும்! யாழப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்த பட்டதாரியான ரஞ்சனியின் எழுத்துக்களைப் படிக்கும் போது எமது மண்ணின் மரபுப் படிமங்களை ஆங்காங்கே காண முடியும்!
அவரும் ஒரு தாயல்லவா? அதனால் அவரின் எழுத்துகளிலே உணர்வுகள் ததும்மி விளையாடுகின்றன. தொடுகின்ற பாத்திரங்கள் எல்லாம் மனப் போராடட்ங்களோடு உழன்று இறுதியில் பொய்யையும் பழமையையும் புறந்தள்ளி விட்டு மனசாட்சியைக் கையில் எடுக்கின்ற உன்னதமான படைப்புக்கள். இதோ அவற்றுள் சில!
நூலின் பேராலே அமைந்த நான் நிழலானால் என்ற சிறுகதை சுயமரியாதைக்கும் வாழ்வியல் கடமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பற்றியது. யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகளின் மிகை எழுத்துக்களால் கூட மனித மனங்களில் உண்மைக்கு அதிகமான பயத்தைத் தோற்றுவிக்க முடியம் என்ற கருத்து சிந்திக்கத் தக்கது.
கனடாவுக்கு வந்த வயது முதிர்ந்த அம்மா அன்பிருந்தும் நேரமின்மையால் அல்லற்படும் பிள்ளைகளின் பாராமுகம் கண்டு இதென்ன வாழ்க்கை என்று ஊருக்குப் போய்விடுகிறாள். ஆனால் ஊரில் பெரிய காணியும் வீடும் இருந்தும் கனடாவில் பேரப் பிள்ளைகளைப் பிரிந்து வந்த குற்ற உணர்வு நிம்மதியைக் கெடுத்து விடுகிறது. முடிவில் தங்கள் விருப்பு வெறுப்புகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு அந்தத் தாய் கனடாவுக்குத் திரும்புகிறாள் பேரப் பிள்ளைகளுக்காக!
இந்தக் கதை கனடாவில் மனதுள்ளே பொருமும் எத்தனையோ தாய்மாருக்கு உங்கள் குமுறலுக்கு அர்த்தம் இல்லை என்று அறிவிக்க ரஞ்சனியால் எழுதப்பட்டிருக்கின்றது. பணத்தை வைத்துப் பயமின்றி வாழலாம்! ஆனால் பாசத்தை வைத்துத் தான் பதறாமல் வாழமுடியும்!
புகலிடம் தேடி என்ற சிறுகதை யாருமே தொடாத கருப்பொருள். பிள்ளைகளின் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்காமல் அவர்களுக்காக ஓடியோடி உழைக்கும் பெற்றோர்களின் தவறான மனப் போக்கால் ஆறதலற்றுத் தவிக்கும் எத்தனையோ குழந்தைகளின் அபிலாசைகளை வார்த்தைகளாக வடித்திருக்கிறார் நூலாசிரியர். பெரியவர்கள் பிரச்சனைகளையே சிறுகதை ஆக்கும் பலருக்கு இந்தக் கருவைத் தவறவிட்டு விட்டோமே என்ற ஆதங்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்தக் கதை உதயன் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசைப் பெற்றிருக்கின்றது.
நிசாந் பிரியங்கா கேசவன் போன்ற பெற்றோரைக் குறை கூறும் பாத்திரங்களோடு கனேடிய வாழ்வியலைப் புரிந்து கொண்ட இலட்சியப் பெற்றாரால் வளக்கப்படும் குழந்தையொன்று அடைந்த நன்மைகளையும் கோடிட்டுக் காட்டியிருந்தால்! ரீச்சர் எங்களுடைய அம்மா நல்லவ என்று சொல்லும் ஒரு பாத்திரமும் இணைக்கப்பட்டிருந்தால்…!
சின்ன வயதிலே அன்பான ஒரு கணவனிடம் கனடாவுக்கு வந்து அவனின் அன்பு மழையிலே சிலகாலம் நனைந்து வாகன விபத்திலே அவனைப் பறிகொடுத்து அவனின் அன்பின் பிரதிவிம்பமாக ஒரு குழந்தை கூட இல்லாமல் துடித்துப் போகும் ஒரு பெண் மன ஆறுதலுக்காக ஊருக்கு அம்மாவிடம் போன இடத்தில் சுனாமியால் பெற்றாரை இழந்த வினோ மது என்ற குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்வதாக நிசி கிழித்த மென்குரல் என்ற கதை அமைகிறது.
தன்னைப் பெண்ணாக நினைத்துப் பாடிய மணிவாசகரின் திருவெம்பாவையை பெண்ணாகவே இருந்து ஆண்டாள் பாடிய திருப்பாவை நளினமான உணர்வுகளில் வென்றுதானே இருக்கின்றது! இங்கேயும் ரஞ்சனி காதல் உணர்வுகளை மென்மையாகக் காட்டுகிறார். காதோரங்களில் ஈர உதடுகளால் வருடியபடி வெப்பமான மூச்சுப்பட என்பார் ஒரு இடத்தில். தற்செயலாக சத்தி எடுத்தால் எடுக்கும் சத்தம் கேட்டவுடன் பக்கத்தில் வந்து நின்று முதுகு தடவி விடும் கரிசனை என்பார் இன்னொரு இடத்தில். மெல்லிய உணர்வுகளை மீட்டும் இதமான வார்த்தைப் பிரயோகம்.
அம்மா அந்தச் சீலை வடிவாக இருக்குது என்று தற்செயலாகச் சொன்னால் போதும்! அது போலொன்றை வாங்கிப் பிறந்தநாள் பரிசாகத் தரும் அம்மா என்னுடைய பிள்ளைக்கு இது விருப்பம் என்று ஞாபகம் வைத்துச் செய்யும் அம்மா வருகிறாள் அந்தக் கதையில். அவள் கவலைப் படக் கூடாது என்பதற்காக தன் கவலைகளைப் புதைக்கும் மகள்!
பல கவிதைகளுக்குச் சுரம் கொடுக்கும் அலைகள் வடலிக் கருக்கோடு தூக்கி வீசிய குழந்தைகளைக் காட்டுகிறார். உடலெங்கும் பனை மட்டை கீறிய காயம் சின்னவளுக்கு. அக்கா தடவிக் கொடுக்கிறாள். அவளும் சின்னப் பெண் தான். அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டார்கள் சுனாமி அலையில்! இதிலே கற்பனை இல்லை. நடந்த உண்மையும் இது தான். நினைத்துப் பாருங்கள் இந்தக் கொடூரத்தை.
ஆசிரியர் சொல்கிறார். வீடு கட்ட உடுப்புக் கொடுக்க பணத்தைக் கொடுக்க வசதியுள்ள எவராலும் முடியும். ஆனால் ஒருவருக்குத் தாயைக் கொடுக்க யாராலும் முடியாது. என்னால் அதைக் கொடுக்க முடியாவிட்டாலும் பிரதியீடு செய்ய முடியும்!
இயல்பான உரையாடலுக்கு நெருடல் என்ற கதை. உன்னுடைய அம்மா ஒரு வேசி என்று அப்பா கத்துவார் இது துணிவான வார்த்தைப் பிரயோகம். இப்படி எழுதப் பல ஆண் எழுத்தாளர்களுக்கே தைரியம் இருப்பதில்லை. விடைபெறும் கானல் தடம் என்ற கதை இணையத் தளத்தில் மாப்பிள்ளை பிடித்து தலைமேல் வைத்துக் கொண்டாடி பின்பு சாதிப் பிரச்சனையால் தயங்கிய வீட்டுக் காரரை ஒதுக்கிவிட்டு தன் காதலில் உறுதியாக நின்ற பெண் பற்றியது. மல்லிகையில் வெளிவந்தது.
உறவுகள் ஊமையானால் என்ற சிறுகதை கனேடியத் தமிழ் எழுத்தாளர்களிடம் இருந்து ரஞ்சனியைப் பிரித்து உயர்த்திக் காட்டுவதாகும். முடிவில் புரட்சி செய்ய விடாமல் யாழ்ப்பாணத்து வாழ்வியல் கைகளைக் கட்டிப் போட்டாலும் கதை முழுவதுமே மாறுதல் ஒன்றுக்கான வழியைத் திறந்து விடுகின்றது.
கனடாவில் இருந்து ஊருக்கு வரும் ஒருவரின் குண நலம் தெரியாமலே அவசரத்தில் வாழ்க்கைப் படுகிறாள் ஒருத்தி. சனிக்கிழமை கண்டு திங்கள் மணமாகி வியாழன்வரை உறங்கி வெள்ளிக்கிழமை கணவனைக் கனடாவுக்கு வழியனுப்பிய போது வயிறு கனக்கின்றது. கணவனுக்கு செய்தி சொன்னால் காசு அனுப்புகிறேன் பெற்று வளர்த்துக் கொள் என்கிறான். இரண்டு வருடங்கள் சீரழிந்து கனடா வந்தால் குடியும் கும்மாளமும். மனம் பொருந்தா வாழ்க்கை. அதையும் பொறுத்தாயிற்று. குழந்தை அழுதால் பிரச்சனை. அதுக்கும் பக்கத்து அறையில் தனியப் படுத்து தீர்வு கண்டாகி விட்டது. இப்போது கணவனுக்கு பக்க வாதம்!
கணவன் இருக்கும் வைத்திய சாலையில் மனதுக்கு பிடித்த ஒருவன். அவன் பழகும் விதத்தில் மெல்லிய நாதமாய் தன்னை மீட்டக் கூடியவன் என்ற எண்ணம் இருக்கிறது அவளுக்கு மனதில். ஒரு நாள் போனில் ஜானகி ராமனின் அம்மா வந்தாள் என்ற நாவல் படித்தாயா என்று கேட்கின்றான் மனைவியை இழந்த அவன். இயலாத கணவன் அறியக் கூடியதாக இன்னொரு ஆணுடன் தொடர்பு கொண்ட அம்மா வந்தாள் பாத்திரம் அவளுக்கும் தெரியும்.
ஆனால் அவள் அதை விரும்பவில்லை. சுகமும் தேவை தான். ஆனால் கலாச்சாரத்தை விட கட்டிய கணவன் மீது கொண்ட ஏதோ உறுத்துதல் அவளை அதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் கண்டு பழகியவன்; ஆத்மாத்த நண்பனாக இருக்க வேண்டும் பேச்சுத் துணைக்காக என்று அவள் மனம் நினைக்கிறது.
கணவனுக்கு எதுபிடிக்கும் எது பிடிக்காது என்று தெரியும் முன்பே தாயாகிய பெண் காட்டப்படுகிறாள். பின்பு அதே பாத்திரம் நெஞ்சு வெடித்து விடுவது போல இதயம் வலிக்கும் போதெல்லாம் யாராவது என்னைக் கட்டியணைக்க மாட்டார்களா என்று தவிக்கிறது. எதையும் ஒளித்து வைத்திராமல் வெளியே சொல்லும் அற்புதமான பாத்திரப் படைப்பு. கண்ணகியையும் சீதையையும் காட்டி வளர்த்த ஈழத்துப் பெண்ணுலகைச் செப்பனிட இந்த ரஞ்சனிகளே தேவை! அவர்களால் தான் யாருக்கும் அஞ்சாமல் முற்போக்கு விழுமியங்களை விதைக்க முடியும்.
எவ்வளவோ அழகான கருத்துக்களைக் கொண்டிருக்கும் நூலில் முத்தம் முதுகு தடவுதல் வெந்து போன்ற பதங்கள் திரும்பத் திரும்ப வருவது தவிர்க்கப்பட்டிருக்கலாம். அது போல கொங்கை என்ற தற்காலத் தமிழில் வழக்கொழிந்த சொல்லைத் தவிர்த்து மார்பகம் என்று இக்கால மாந்தருக்குப் புரியும்படி எழுதியிருக்கலாம். ஒரு வேளை பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி இதழ் என்ற காரணத்தால் ஆசிரியர் அந்தச் சொற்பிரயோகத்தை மேற்கொண்டிருக்கலாம். சிறு கதைகள் படைப்பாளியின் மன ஊற்று. அது இயல்பான எண்ண ஓட்டம். அதை இன்னொருவர் செப்பனிட ரஞ்சனி எதிர்காலத்தில் அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் இவை செப்பனிடப்பட வேண்டிய எழுத்துக்கள் அல்ல.
– சாலினி

நன்றி : ஈழநாடு கனடா

Series Navigation

author

சாலினி

சாலினி

Similar Posts