இவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம்

0 minutes, 2 seconds Read
This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

வே.சபாநாயகம்.


கேள்வி; எழுதுவதற்கு எவ்விதச் சூழ்நிலையை நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுக்குப் புத்துணர்வு தரும்
தூண்டுதலாக ஏதேனும் பழக்கம் உண்டா?

எனக்கு லேசாக ரத்தக்கொதிப்பு இருப்பதால் இரைச்சல் ஆவதில்லை. எனக்கு அமைதி வேண்டும்.
தூய வெண்மையான தாளையும், பட்டையடிக்காமல், சன்னமாய் எழுதும் பவுண்டன் பேனாவையும் நான் பெரிதும்
விரும்புவேன். கதை எழுதுவதற்கென்று தனியாக எனக்கு எந்தப் பழக்கமும் கிடையாது. காலை ஏழு மணியிலி
ருந்து ஒன்பது மணி வரையிலும், மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிவரையிலும் எனக்கு எழுத உகந்த நேரம்.

என் எழுத்தைப் பொறுத்தவரை நான் அயராத உழைப்பாளி! நான் தேடும் அந்த லயம் எனக்குக்
கிட்டும் வரை மீண்டும் மீண்டும் எழுதியதையே திருப்பித் திருப்பி பலமுறை எழுத நான் அலுப்பதில்லை. ஒரு
கதையை எழுத எனக்குக் குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும். அவை நினைவின் அடிவரத்தில் வருடக்
கணக்கில் ஊறிக்கிடந்தவை. அம்மாதிரி இன்னும் கிடப்பவை. அவை தாம் உருப்பெறக் காத்திருக்கும்
வேளையை நான் தடியால் அடித்துக் கனிய வைப்பதில்லை. அம்மாதிரி அவசரமாய் எழுதவே எனக்குத் தெரியாது.
எந்தச் சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த ஸ்ருதி கலையாமல் மீண்டும் தொட்டுக் கொள்ள என் நினைவை
நான் பழக்கிக் கொண்டிருக்கிறேன். நான் சொல்வதெல்லாம் ஒன்றும் சித்து வித்தையல்ல. தளராத சாதனை
காரணமான விளைவுதான். படிப்பதே தவமானால், எழுதுவது அதைவிடக் கடினமான, கடுமையான தவம்.
இல்லையா? ஆனால் தவமும் ஒரு பழக்கம் என்பதைத்தான் இங்கு உறுதி கூற விரும்புகிறேன்.

கேள்வி : உங்கள் படைப்பையும் வார்த்தைகளையும் பற்றி?

என் கதைக்கான வார்த்தைகள் எல்லாமே என்னோடதுன்னு சொந்தம் கொண்டாடறதில்லை. சிலநேரம்
சுவரின் கிறுக்கல், தெருவில் அகஸ்மாத்தாய் காதுலே விழும் சம்பாஷணை இவையெல்லாம் கூட கதையில்
வார்த்தைகளாய் அமைஞ்சிருக்கு.

கேள்வி : நீங்கள் எழுதும் முறை பற்றி?

அதை மண்உணிப் பாம்புடன் ஒப்பிடலாம். அது ஊரும் விதம், வாயால் பூமியைக் கவ்விக் கொண்டபின்
உடலின் பின் பாகத்தை இழுத்துக் கொள்ளும். அது நகரும் வழியும், விதியும் இப்படித்தான். அதுபோல, கதையை
ஆரம்பித்து முதல் ஒன்று, அல்லது இரண்டு பக்கங்கள் முன்னேறிய பின்னர், அதை அடித்துத் திருத்தி திரும்ப
எழுதி, அன்றைய பொழுதுக்குப் படுத்த பின், மறுநாள் காலை திரும்பவும் திருத்தி, பூராத் திரும்பவும் அந்த
இரண்டு பக்கங்களையும் எழுதி – அந்த இரண்டு பக்கங்கள் இந்த சிகிச்சையில் ஒரு பக்கமாய்ச் சுண்டி விடும் –
கதையின் அடுத்த இரண்டு பக்கங்கள் எழுதியாகும். உடனே கதையை ஆரம்பித்திலிருந்து, அதாவது இந்த மூன்று
பக்கங்களைத் திருத்தித் திரும்ப எழுதுவேன். மறுநாள் காலை இதே processing. இப்படியே எழுதி எழுதி, ஏதோ
ஒரு கட்டத்தில் நடை தன் ச்ருதியில் விழுந்து விடும். அது எனக்கே அடையாளம் தெரியும். பிறகு இந்த
மண்உணிப் புழுவின் பிரயாசை அவ்வளவாகத் தேவையிருக்காது. இப்படி முதல் draft முடிந்தபின் Revision,
re-writting முதலிலிருந்து. இதற்குமேல் மெருகு சாத்யமில்லை என்று கண்டபின் – அப்பாடா! கரடி ஆலிங்கனத்தி
லிருந்து விடுபடுவேன்.

கதைக்கரு ஊன்றி, சிந்தனையில் ஊறி வேளிப்படத் தயாரான பின்னர் மேற் சொன்ன விதத்தில்
எழுத்தில் வடித்து முடிக்க, சிறுகதைகளுக்கு எனக்கு மூன்று மாதங்களேனும் ஆகும்.

நான் வேகமாக எழுதவல்லேன். ஆனால் ஓயாமல் எழுதிக் கொண்டிருப்பவன். ஆமை நடை. எறும்பு
ஊரக் கல் குழியும். தவிர, எழுதுவதையே திரும்பத் திரும்ப எழுதுவதில் மெருகு எழுவது மட்டுன்று. எழுத்துக்கே
சக்தி கூடுகிற ஜபமாலை உருட்டுவது போல், உருவேற்றுவது போல, உருவேறத் ‘திரு’வேறும். திரு இந்த
சந்தர்ப்பத்தில் உருவேற்றலின் சக்தி.

திரும்பத் திரும்ப எழுதுகிறேன். சொல்லுக்குக் காத்திருக்கிறேன். வார்த்தைகளளை உட்செவியில் ஒட்டுக்
கேட்டு, ஓசை நயம் தட்டிப் பார்ப்பேன். வார்த்தைகளைக் கோர்ப்பது, வாக்கியங்களை ஒன்றுக்கொன்று
அடுத்தடுத்து, பொருள் நயம் ஓசை நயம் குன்றாமல் அமைப்பது, பூஜைக்கு மலர் தொடுப்பற்குச் சமானம். 0

( அடுத்து புதுமைப்பித்தன் )

Series Navigation

author

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

Similar Posts