சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -22

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

சீதாலட்சுமி


ரிஷி மூலம்

தினமணிக் கதிரில் வெளிவந்த நேரத்தில் பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் சந்தித்த குறுநாவல் ரிஷிமூலம். கடுமையான விமர்சனங்கள் இருந்த போதிலும் வாசகர்களிடையே இன்றளவும் மதிப்புள்ளதாக இருக்கின்றது.

ஆசாரமான ஒரு வசதியான குடும்பத்தில் வளர்ந்த ஒரு பையன் மனநிலை மாறுதல்களால் பிறரிடம் சொல்ல முடியாத தன்னையே குறுகுறுக்கின்ற உணர்வலைகளில் சிக்கித் திண்டாடி தான் யார் என்பதைத் தான்மட்டும் உணர அதனை மற்றவரெல்லாம் கேலியாகப் பார்ப்பதை லட்சியம் செய்யாமல் எங்கெங்கோ திரிந்து அலைந்து தாடி மீசை வளர்த்துக் கொண்டு கஞ்சா திணித்த பீடியை மட்டுமே புகைத்துக் கொண்டு இக்கரையில் அமர்ந்துகொண்டு அக்கரையில் எரிகின்ற பிணங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒவ்வொரு பிரேதமுமே தானாக உணர்ந்து தன்னைத்தானே எரித்துக் கொள்வதாக உருவகப்படுத்திக் கொண்டு பீடியால் தன்னையே புகையாக்கி மகிழ்கின்ற ஒரு மனோதத்துவக் கதை பலராலும் விமர்சிக்கப்பட்டதன் காரணம் அதில் அவன் கண்ட,செய்த இரு காட்சிகளும் நிகழ்வுகளுமே.

குளித்துக் கொண்டிருந்த தாயை ஒளிந்திருந்து பார்த்துவிட்டு தாயால் கண்டு பிடிக்கப்பட்ட பின் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான். தினமும் அவனுக்கு தன் தாய் தன்னைக் கட்டி அணைத்துக் கொள்வதாக கனவுகள்! படிப்பதற்காகத் தன் அப்பாவின் நண்பர் வீட்டிற்குச் சென்றவன் அந்த வீட்டு மாமியே இப்போது அம்மாவின் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறாள். நடக்கக் கூடாததும் நடந்துவிடுகிறது.

அன்று மாலை அந்த வீட்டைவிட்டு ஓடிப்போனவன் தான் இப்பொழுது ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டிருக்கின்றான்.

ஜெயகாந்தனின் எழுதுகோல் அழுத்தமாக எழுத்துக்களைப் பதிக்க
ஆரம்பிக்கின்றது. சில வரிகளையாவது அங்கும் இங்கும் கூர்ந்து பார்க்கலாம்.

“எல்லாருமே .. நானறிஞ்ச எல்லாருமே ..ஒருமாதிரியான மிருகங்கள் தான். இந்த மிருகங்கள் ஆடை கட்டிக்கறதுனாலே இதுகளுக்கு மனுஷாள்னு பேரு ..

மனுஷனைத் தவிர மத்த மிருகங்களுக்கெல்லாம், நெறிகள், முறைகள் எல்லாம் கிடையாது அதனாலே அதுகளுக்கு ஒரு நஷ்டமும் இல்லை மனுஷ மிருகங்களுக்கு நெறிகள் உண்டு. முறைகள் உண்டாம். ..

ஆத்திரம் காட்டாறாய் ஓடுகின்றது.

மற்ற மிருகங்களைப் பாக்கறச்சே எனக்குப் பொறாமையா இருக்கு. பறவைகளைப் பாக்கறச்சே ஏக்கமா இருக்கு . அதுகளெல்லாம் இயற்கையோடு சல்லாபமா இருக்கு. மனுஷன் மட்டுந்தான் இயற்கை யோடே சண்டை போட்டுண்டே இருக்கான். இதிலே இவனுக்குப் பெருமை வேறே ! அசட்டுப் பெருமை, வக்கிரப் பெருமை, இதை யெல்லாம் நினைச்சுப் பாக்கறச்சே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.”

“நான்” பற்றிப் பேச ஆரம்பித்துவிடுகின்றார் ஆசிரியர்.

“நான் விலகி நின்னு ராஜாராமனைத் தனியா பார்க்கிற போதெல்லாம்
எனக்கு சிரிப்புதான் வருது. நான் இவனை இப்படிப் பார்ப்பேன். இவன் போட்ட வேஷத்தை யெல்லாம் ஒண்ணொண்ணா இவன் கலைச்சுப் போடறப்போ எல்லாம் “இது ஒரு ராஜாராமன், இது ஒரு ராஜாராமன்”னு நான் கணக்கு வச்சுண்டே வந்திருக்கேன்.என்னை மறைக்கத்தான் எத்தனை எத்தனை திரை போட்டான்! ..

என்னை மறைக்க யாரோ கொடுத்ததை இவன் வாங்கிப் போட்ட திரைகள்!
இதையெல்லாம் விலக்கி அவனுக்கே தெரியாமல் ஒளிஞ்சுண்டிருந்த என்னை “நான்” பார்த்து பார்த்துச் சிரித்திருக்கேன்.”

தொடர்கின்றது.

“நான் என்பது ஈகோ என்பாரும், மாயை என்பாரும், பொய் என்பாரும், அநித்தியம் என்பாரும் .. என்னைப் பொறுத்தவரை நான் என்பது ஈகோ
எனின், இந்த ஈகோதான் மாயை எனின், இந்த மாயைதான் பொய் எனின், இந்த பொய்தான் அநித்யம் எனின் இந்த அநித்யம் தான் -சாசுவதமான, மெய்யான, உன்னதமான வாழ்க்கையின் அர்த்தமாகும் !

அஹம் பிரம்மாஸ்மி – நான்தான் பிரம்மம்.

நான் என்று பேசும் பொழுது நான் உன்னையோ, நம்மையோ மறுக்கவில்லை. உன்னையும் நம்மையும் மறக்காமல் இருப்பதற்கே
நான் என்னை நம்புகின்றேன். உன்னையும் நம்மையும் மதிக்கிறவன்
என்பதனாலேயே உன்னோடு பேசுகிறேன்.”

மனிதனின் தடுமாற்றத்தையும் காட்டி, தத்துவ மழை பொழிகின்றார் ஜெயகாந்தன்.

ஆடை கட்டிய மனுஷ மிருகங்கள் !
சுயப் பரிசோதனை செய்வோமா?

எங்கும் கொலைகள், வன்முறைகள் !
அப்பாவி ஜனங்கள் உயிர்ப்பலிகள் !

மிருகம் கூட பசித்தால் அல்லது தற்காப்புக்காகக் கொல்லும். ஆனால் கொலை செய்யப்படும் மனிதர்கள் என்ன தவறு செய்தார்கள்? யாருக்காக, எதற்காக இக்கொலைகள் செய்யப்படுகின்றன?

மிருகங்களை விடக் கொடியவர்களாக ஏன் இருக்கின்றோம்?

கலாச்சாரம், பண்பாடு என்று வாய் கிழியப் பேசுகின்றோம்! ஒரு ஆண் முகச்சவரம் செய்ய உதவும் பொருளின் விளம்பரத்திற்கு ஏன் பெண் உருவம்? சட்டம் மட்டும் இல்லையென்றால் இப்பொழுது இருக்கும் ஒட்டுத் துணியையையும் உருவி நிர்வாணக் காட்சிகளைக் காட்டத் தயங்குவோமா? பிஞ்சு உள்ளத்தில் நச்சுத் தன்மை வெறிக்கு வித்திடு பவர்களை மிருகங்களைவிட மோசமாகக் கூறுவது தவறா? இதற்குப் பெயர் ரசனையா? அப்படியென்றால் நம் அகராதியில் கலாச்சாரம், பண்பாடு என்று சொல்லுகின்றோமே அதற்குப் பொருள் என்ன? வரலாற்று உண்மைகளைப் புதைத்து, பல புனைந்துரைகள் புத்திசாலித் தனமாகாச் சேர்க்கத் தெரிந்த மனுஷ ஜன்மங்கள் இனிமேல் புதிதாக இவைகளுக்கும் பொருள் எழுதலாமே!

‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சின்னஞ் சிறு சிட்டுக்களாய்த் திரிந்து வரும் பெண் குழந்தைகளை பருந்துகளாய்க் கொத்திச் சிதைத்து தூர எறிகின்றார்களே அந்த மனிதர்கள் மனிதனா மிருகமா? மகளையே சீரழிக்கும் தகப்பன் என்ற ஆண் மிருகம் ஏன் ஒரு நாள் தாயையும் ஒரு பெண் உடலாக நினைத்துக் கெடுக்க மாட்டான்?

விலங்கு உணர்வுகளை வளர்க்கும் காட்சிகளை, பேச்சுக்களை ஊக்குவித்து வந்தால் இக்கொடுமையும் நடக்கும்,

ஜெயகாந்தன் மீது ஆத்திரப்பட்டு என்ன பயன்? நாம் போகும் பாதை
காணும் பொழுது அறிவுள்ள எந்த மனிதனுக்கும் இந்த அச்சம் வருவதில் என்ன தவறு இருக்கின்றது?

“சிரிப்பு, சிரிப்பாய் வருகின்றது”

ஆம் வேதனைச் சிரிப்பு.

ஆம் ஆத்திரச் சிரிப்பு!

ஆம் ஆதங்கச் சிரிப்பு!

சிரிக்கத்தான் முடிகின்றது. இப்படியே காலம் சென்றால் அந்தச் சிரிப்பும் செத்துவிடும்.

கடவுள் இருக்கின்றானோ இல்லையோ அந்த நம்பிக்கையில் ஒரு பலன் உண்டு. தவறுகள் செய்வது பாவம் என்று கருதி குற்றம் புரியத் தயங்குவான். கடவுளைக் கல்லாக்கி விட்டோம். அது மூட நம்பிக்கை என்று குப்பையில் போட்டு விட்டோம்.

நம் சிறந்த அறிவில் புதுக் கண்டுபிடிப்புகள் நிறைய. மனிதர்களுக்குச் சிலைகள் வைத்து ஆலயம் அமைக்கின்றோம். நம்மை குளிரவைக்கும் பெண் உருவங்களுக்கும் கோயில் கட்டுகின்றோம். நம் ரசனைகளை மாயத் தோற்றங்களில் செலுத்தி மயங்கி இருக்கின்றோம்.

கணவன் மனைவி உறவின் போது கூட அவரவர் ரசிக்கின்ற வேற்று மனிதர்களை, பொய்த் தோற்றங்களை மனத்தில் சுமந்து வாழ்க்கை நடத்த ஆரம்பித்திருக்கின்றோம். அந்த கலாச்சாரம் வேகமாக பரவி வருகின்றது!

இது தான் இன்றைய நாகரீகப் பண்பாடு. மனிதனைப் போதையில் வைத்தால்தான் அவனைச் சுரண்ட முடியும். ஒருவருக்கொருவர் இப்படி முயன்றால் எங்கே மனிதன் வாழ முடியும் ? யாரை நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம் ?

‘நான் யார்’ என்பதை ஒவ்வொருவனும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது ஆன்மீகம். இன்றைய மக்கள் இதனைத் தவறாது கடைப் பிடிக்கின்றனர். அவன் தன்னைப் பற்றி யோசிக்கின்றான்.

“ஆஹா, நாம் இப்படி இருக்கலாமா? எப்படி கோடீஸ்வரனாவது? எப்படி வித விதமாகப் பெண்களை அனுபவிப்பது?”

சுதந்திரம் ஆணுக்கு மட்டுமா, பெண்ணுரிமை என்னாவது? பெண்களும் ஆண்களுடன் சம நிலைக்கு வர வேண்டாமா? பாலியல் சுதந்திரம் வேண்டும் என்பார் சிலர். திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறில்லை என்பாரும் உண்டு. தொலைத் தூர நோக்கில் பார்த்தால் அதனால் பாதிக்கப்படப் போகின்றவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான். என் மீதும் ஆத்திரம் வரலாம். பெண்கள் முன்னேற்றத்தை விரும்புகின்றவள் நான். இது போன்ற வாழ்க்கை வாழ்பவர்களைப் பற்றிய ஆய்வு செய்தல் வேண்டும். அவர்களின் உண்மை நிலை கண்டறிய வேண்டும். பெண்களின் நிலை பாதுக்காக்கப் படவேண்டும். முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இருப்பவைகளை, முறியடிக்க வேண்டும். முக்கியமாக பெண்கள் சுயதரிசனம் செய்து கொள்ள வேண்டும். பத்திரிகைகளில் வரும் செய்திகள் பயமுறுத்துகின்றன.

எந்த அளவு சுதந்திரம் பேசப்படுகின்றதோ, அதைவிட பிரச்சனைகளில் தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கின்றது.
அரசு, தொண்டு நிறுவனங்கள் நிரம்பி வழிகின்றன. இந்தத் தாயுள்ளத்தின் தவிப்பின் குரல் இது.

எத்தனை வகை ஏமாற்றுதல் உண்டோ அத்தனையும் கற்கத் தொடங்கி, சுயநலமும் சுரண்டலும் பெருக்கி, உச்ச நிலை அடைய போட்டிகள் வந்து விடும். சரியான போட்டி ! இதுவா முன்னேற்றம்?

‘நான் யார்’ என்ற ஆராய்ச்சியில் நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்?

யாராவது ஓரிருவர் கண்களை இக்காட்சிகள் உறுத்துகின்றன.
அவன் எழுது கோல் எடுத்தால் அவனையும் மீறி அது நெருப்பைக் கக்குகின்றது. ஒட்டு மொத்த சமுதாயமும் இன்னும் கெடவில்லை. ஆனால் மன வக்கிரம் வளர ஆரம்பித்திருப்பதை மறுக்க முடியுமா? நல்லவர்கள் நடுங்கிப் போய்ப் பதுங்குகின்றார்கள். கோபத்தை விடுத்து நம்மைச் சுற்றி நடக்கும் காட்சிகளைப் பார்த்து, ஏதாவது செய்து நம்மை இந்த மிருகக் குணத்தினின்றும் காப்பாற முடியுமா என்று சிந்திக்க வேண்டும். செயல்படவேண்டும். ஒதுங்கக் கூடாது.

மனிதனின் தோற்றம் சில லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன். ஆனால்
அவன் வகுத்துக் கொண்ட“உறவுகள்” தோன்றியது சில ஆயிர வருடங் களுக்கு முன்னர்தான். குடும்ப அமைதிக்கு அவன் போட்ட விதிகளை
அவனே உடைத்தெறிய ஆரம்பித்திருக்கின்றான்.

ஒவ்வொரு மனிதனிடமும் மிருகம் உறங்கிக் கொண்டிருக்கின்றது. சில விதிகளை, சில நியதிகளை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றான் மனிதன். அதில் அடிபடும் பொழுது வலி தாங்காமல் புலம்புகின்றான். புலம்புவதை விடுத்து சிந்திக்க வேண்டும்.

இது ஒரு குடும்பத்தில், ஒரு இனத்தில் மட்டும் நிகழும் பிரச்சனையல்ல. இது ஓர் சமுதாயத்தில் நிகழும் அசிங்கம். சம்பிரதாயங்கள் உள்ள சூழ்நிலையில் வளர்ந்த பிள்ளைகளுக்கே இந்த மனச் சலனம் ஏற்படுவ தென்றால் மற்றவர்களைப் பற்றிக் கேட்பானேண் ? இது ஏதோ கதை யென்று எழுதப் பட்டதல்ல. புனைந்துரையல்ல. ஓர் அடையாளம். சமுதாய நோயை அடையாளம் காட்டும் ஓர் அபாய விளைக்கு. ஒவ்வொரு மனிதனும் சமுதாய அக்கறை கொண்டு விழித்தெழ வேண்டும். அவன் சந்ததிக்கு மட்டுமல்ல அவனுக்கே விரைவில் வீழ்ச்சி வரும். ஆசிரியர் என்னைப் புலம்ப வைத்துவிட்டார்.

சமுதாயத்தில் எங்கெல்லாம் ஊனம் காணப்படுகின்றதோ அங்கே ஜெயகாந்தனின் பார்வை ஊடுருவ ஆரம்பிக்கும். படுக்கை யறைக்
காட்சிகளைக் கூட கொச்சையில்லாமல் காட்டும் திறன் படைத்தவர்.
அவர் காட்டும் விலை மகளிடம் கூட வெறித்தனம் காட்ட மாட்டார்.
ஒவ்வொருவரையும் தனிப் பரிவுடன் நடத்துவார். ரிஷிமூலம் எழுதிய வரேதான் “ஜெய ஜெய சங்கர “தொடரையும் படைத்தார்.

அவர் எழுதிய கதைகள் அனைத்தும் நடைமுறை வாழ்க்கையின் பிம்பம்.
ஜெய ஜெய சங்கர அவரின் கனவுலகம். அது சத்திய பூமி. அங்குள்ளவர் குணக் குன்றுகள். மனவெளி இல்லம் என்ற பெயரிலேயே அங்குள்ளவரின் வாழ்க்கையைப் புலப்படுத்துகின்றார். அங்கு வாழ்ந்திருந்த உமா ஓர் லட்சியப் பெண். ஒரு இளைஞனுடன் தனித்து வாழ்ந்தாலும் எவ்வித சலனமும் இன்றி வாழ்கின்ற மன உறுதி படைத்த ஓர் பெண்ணாகத் திகழ்கின்றாள்.

இந்த சமுதாயத்தில் ராஜாராமனும் உண்டு, உமாவைப் போன்றவர்களும்
உண்டு.. இரு எதிர்த் துருவங்களில் நிற்பவர்கள்.

சமுதாயத்தில் எங்கே நோய் என்று தெரிந்தால்தான் சிகிச்சை யளித்து மேன்மையுறச் செய்ய முடியும். வெறும் ஜன ரஞ்சகமாக எழுதி உல்லாசப் படுத்துவது மட்டும் போதாது. பயனுள்ள பாதையில் மனிதன் செல்ல வழி காட்ட வேண்டும். மகாப்பெரியவர் சொன்ன அறிவுரையும் இதுதான். எழுத்தாளருக்கும் மட்டுமல்ல, எல்லோருக்கும் கடமையுண்டு.

இந்த இடத்தில் ஒருவரைப் பற்றிக் கூற விரும்புகின்றேன். டாக்டர் சங்கர்
அமெரிக்காவில் மருத்துவத் தொழில் செய்பவர். அவர் மனைவியும் ஓர் மருத்துவர். மனிதனின் உடல் நோய்கள் தீர்க்கும் மருத்துவர் மட்டுமல்ல, சமுதாய மருத்துவரும் கூட. சமுதாய நலனுக்கு நிறைய குழுமங்களில் எழுதி வருகின்றார். என்னிடம் ரிஷிமூலம் புத்தகம் இல்லையென்றவுடன் அவரிடமிருந்த புத்தகத்தைப் படித்து, அவர் கருத்துக்களுடன் எனக்கு ஒரு நீண்ட மடலே அனுப்பி விட்டார். அதுமட்டுமல்ல. தொலை பேசியில் அழைத்து நீண்ட பிரசங்கமே செய்துவிட்டார். நானும் சமுதாயத்தில் உருண்டு புரண்டு முதுமையின் காரணமாக மகனிடம் அண்டி வாழும் ஓர்
மூதாட்டி. எங்கிருந்தாலும் மனித நலனில் எங்களுக்கு அக்கறையுண்டு. தாய்மண்ணை நினைக்காத நாளுமுண்டோ ?

அந்த மண்ணில் வாழும் மைந்தர்களுக்கு நாங்கள் செய்யும் சிறு தொண்டு. இருக்கும் சில நல்லவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சி. எங்கள் பணி பத்திரிகைகளில் எழுதுவதல்ல. ஆனாலும் பலரையும் சேர்க்கும் பாலமாகக் கணினி இருக்கின்றது. எனவே எங்கள் குரலை அங்கே ஒலிக்கச் செய்கின்றோம். கோயில்களுக்குச் சென்று செய்யும் பூஜையை விட இந்தப் பணியே நான் இறைவனுக்குச் செய்யும் ஆராதனை.

ஜெயகாந்தனை இனி பார்க்கலாம். அவர் படைக்கும் பாத்திரங்களைப் பெற்ற குழந்தையைப் போல் நேசிப்பவர் ஜெயகாந்தன்..

“எனது நாவல்களில் வருகிற பாத்திரங்களெல்லாம் என் மூலமாய்ப் பிறக்கிறார்கள் என்பதனால் அவர்களை நான் சாமான்யர்களாகக் கருதவில்லை. அவர்கள் நான் வழிபடும் தெய்வங்களாகக் கூட உயர்ந்து விடுகிறார்கள். எனக்கு முன்னாலுள்ள அனுபவங்களை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள். என்னோடு வாழ்கின்றவர்களாகவும் அவர்கள் இருக்கின்றார்கள். எனவே, அவர்கள் இறுதியில் என்ன ஆனார்கள், என்ன ஆவார்கள் என்பதை என்னுடைய இறுதியைப் பற்றித் தீர்மானிப் பதில் எனக்கு எவ்வளவு இயலாமை உண்டோ அவ்வளவு இயலாமை ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் இறுதியை மற்றவர்களைப் போல் நானும் அனுமானிக்க முடிகிறது. அதுவும் இவ்விதமாக அவர்கள் ஓய மாட்டார்கள்; பணிய மாட்டார்கள்; தோல்வி அடைய மாட்டார்கள் ! இலக்கிய வாழ்வு பெற்றுவிட்ட அவர்கள் இறப்பின்றித் துலங்குவார்கள்”

“நம்மையும் உயர்த்திக் கொண்டு நம் வாசகர்களையும் உயர்த்த வேண்டும்”

மகாப் பெரியவரின் வாக்கை ஒவ்வொரு எழுத்தாளனும் பத்திரிகை யாளரும் நினைத்துப் பார்க்க வேண்டிய பொன்னான வரிகள்.

வாழ்க்கையின் அவலங்களைக் காட்டும் பொழுது கண்களை மூடிக் கொள்வதைவிட அதற்கு காரணம் கண்டு. மேலும் அந்தத் தீமை வளராமல் இருக்க முயல வேண்டும். இந்த சமுதாயத்தின் ஒவ்வொரு செயலிலும் எல்லோருக்கும் பங்குண்டு.

ஜெயகாந்தனின் எழுத்தில் ஆபாசம் கிடையாது. மன வக்கிரங்களைக் காட்டும் பொழுது கூட வேகம் இருந்தாலும் விவேகம் காணலாம்.
கதைகளிலும் உரையாடல்களை வலுவாக அமைப்பார். அவர் எழுதும் கதைகள், கட்டுரைகளைப்போல் அவர் எழுதும் முகவுரைகளும் முடிவுரைகளும் கூட தனித்தன்மை வாய்ந்தவை. அவைகளைக் கூடத் தொகுத்து புத்தகமாக்கி வாசகர்களுக்குக் கிடைக்க வசதி செய்திருக் கின்றனர் பதிப்பகத்தார்.

நம் காலத்தில் வாழும் அறிவு ஜீவிகள் சிலரில் நம் ஜெயகாந்தனும் ஒருவர்.

மகாப் பெரியவர் என்ற பெயர் கேட்டாலே காஞ்சியை நினைக்காமல் இருக்க முடியாது. மேலும் என் பயணத்தில் காஞ்சிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. ஐந்தாண்டு காலம் வாடிப்பட்டி வாழ்க்கை என் வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்ததென்றால் காஞ்சியின் நான்கு ஆண்டு வாழ்க்கை, ஏற்றங்களையும், என்னுடைய தேடல்களில் பல கேள்விகளுக்கு விடைகளும் கொடுத்த இடம்.

அன்றும் இன்றும் என்றும் வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்கி வருகின்ற காஞ்சியைப் பற்றிச் சில செய்திகள் அடுத்துப் பார்க்கலாம்

தொடரும்.

+++++++++++++++++++++++++++++++++
“seethaalakshmi subramanian”

Series Navigation

author

சீதாலட்சுமி

சீதாலட்சுமி

Similar Posts