சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -14

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

சீதாலட்சுமி


குறிப்பேட்டைப் புரட்டிக் கொண்டிருந்தேன். எத்தனை எத்தனை சம்பவங்கள்! இத்தனையும் எழுத என் காலம் போதாது. சந்தித்த மனிதர்கள்தான் எத்தனை? அத்தனை பேர்களைப் பற்றியும் எழுத முடியுமா? இயலாத காரியம்.

ஜெயகாந்தனை முதலில் ஏன் தேர்ந்தெடுத்தேன்? என்னைப் புரிந்து கொண்ட நண்பர். சமுதாயத்தில் அல்லல்படும் மக்களிடம் பரிவு கொண்டவர். அவரைப்பற்றி எழுதும் பொழுது சமுதாயத்தின் பல கோணங்களை என்னால் உடன் காட்ட முடியும். அதனால்தான் அவர் பெயர் மட்டும் எழுதித் தொடங்காமல் என் குறிப்பேடு பெயரையும் இணைத்துக் கொண்டேன். பல செய்திகளைத் தர முடிகின்றது.

பேராசிரியர் அரசு அவர்கள் ஜெயகாந்தனின் உரையாடலைப் பற்றி எழுதச் சொன்னார். சந்திப்புகளின் போது நடந்தவைகளுடன், அவர் கதைகளில் வருபவைகளையும் எடுத்துக் காட்டினேன். மக்களிடம் அவர் அணுகுமுறையைப் பயணத்தில் பார்க்க முடிந்தது.

“அக்ரஹாரத்தில் பூனை” எழுதிய பல ஆண்டுகளூக்குப் பிறகு ஆடு வெட்டப் படும் களம் சென்றாரே, ஏன்? எண்ணியதை ஒப்பிட்டுப் பார்க்கவா? அல்லது அக்காட்சியை முழுமையாக நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பா?

அவர் ஆய்வுகள் செய்வதில்லை என்று ஒரு சிலர் கூறுவர். அவருக்கு அவைகள் தேவையில்லை. எங்கோ பார்த்து, உணர்ந்தவைகள் அவர் எழுத்தில் வந்து கலந்துவிடுகின்றன. ஏதாவது கற்பனையில் எழுதி விட்டாலும் அக்காட்சியைத் தேடிச் சென்று பார்க்கின்றாரே? இதற்கு மேல் என்ன ஆய்வுகள் செய்ய வேண்டும்?

பிராமணர்கள் எழுதும் பத்திரிகைகளில் எழுதவதால் அவர் அந்த பேச்சு வழக்கில் எழுதுகின்றார் என்று சொல்வதையும் கேட்டிருக்கின்றேன்.

ஒரு சம்பவம் கூற வேண்டும்.

ஜெயகாந்தன் நான் வேலை பார்க்கும் ஊர்களுக்கு வந்தால் என் வீட்டிற்கு வராமல் போகமாட்டார். வீட்டுக்கு வந்தால் என் அம்மாவுடன் தான் பேசிக் கொண்டிருப்பார். என்னுடன் எங்கு வேண்டுமானாலும் சந்திக்கும் பொழுது பேசலாமாம். என் அம்மாவுடன் பேசுவது அப்படி முடியுமா?
அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டால் அதுவே ஒரு கதையாகிவிடும்.

ஒரு நாள் என் அம்மா என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்.

“பாப்பா, இவர் அக்கிரஹாரத்துப் பிள்ளையா?”

“இல்லேம்மா, இவர் அக்கிரஹாரத்தில் வளர்ந்த பிள்ளை”

அப்படியென்றால் குப்பத்து பாஷை பேசுகின்றாரே? குப்பத்தில் வளர்ந்தவரா?

“புதுச்செருப்பு கடிக்கும்” கதையில் ஓர் கலப்பட பாஷை பேசுகின்றாரே, அங்கே எப்படிப் போனார்?

முஸ்லீம்களின் உரையாடல்கள் சரளமாக வருகின்றதே, அங்கும் வாழ்ந்திருப்பாரோ?

ஓர் எழுத்தாளன் ஒன்றை எழுதும் பொழுது அந்தப் பாத்திரத்துடன், அவன் வாழும் சூழலுடன் ஒன்றிப்போய் விடுவான். எழுதும் பொழுது என்றோ பதிந்தவைகள், அவன் உணர்வில் கலந்தவைகள் அவனையும் அறியாமல் குதித்தோடிவந்துவிடும். உதாரணத்திற்காகச் சிலவற்றைமட்டும் எடுத்துக் காட்டினேன். இன்னும் பல கதைகள்பற்றி எழுத முடியவில் லையே என்ற குறை எனக்குண்டு. அவரைப்பற்றி எழுதியவர்கள் அதிகம்.
அந்த விமர்சனங்களே கூட இலக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

“இந்தம்மா என்ன ஒரே அடியாகப் புகழ்ந்து கொண்டிருக்கின்றார்களே!”
என்று தோன்றினால் அது தவறில்லை. மீண்டும் சொல்லுகின்றேன். எங்களுக்குள்ளும் நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக அரசியலில் நாங்கள் ஒத்துப் போனதில்லை. ஆனாலும் சில தருணங்களில் ஒத்த உணர்வு வந்ததையும் மறுக்கவில்லை.

காங்கிரஸ் மேடைகளில் பேசிக் கொண்டிருந்தகாலம், அரசியலை வைத்து ஒருவரை விமர்சிப்பார். நானோ அந்த அரசியல் வாதியிடமும் ஏதாவது நல்லது தெரிந்தால் அதைக் குறித்துப் பேசுவேன். அரசியல் காரணமாக ஒட்டு மொத்தமாக ஒருவரைக் கண்டனம் செய்வதில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அப்படித்தான் பேச வேண்டும். நான் அரசியல்வாதியல்ல. சுதந்திரமாக எண்ணலாம், எழுதலாம்.

ஒன்றிரண்டு சம்பவங்கள் மட்டும் கூறவிரும்புகின்றேன்

எமெர்ஜென்சி காலம். மறைந்த திருமதி. இந்திராகாந்தியை அவர் போற்றிப் புகழ்ந்த காலம். அவருக்குள் பெருந்தலைவர் காமராஜர் மீதும் பாசம் உண்டு. சிறிது காலம் அவர் வெளியில் வராமல் இருந்த பொழுது இவர் தவித்த தவிப்பை நான் நேரில் கண்டிருக்கின்றேன். “வீட்டுச் சிறையாக இருக்குமோ?” என்று நான் கேட்டதற்குக்கூட அவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு பக்கம் அம்மையார். இன்னொருபக்கம் பெருந்தலைவர். என்ன சொல்ல முடியும்!?

தர்ம சங்கடம் இதுதான்.

திராவிடக் கட்சியைப் பெரிதும் விமர்சித்தவர்.

கலைஞரைப் பற்றி அப்பொழுது பேசிய பேச்சுக்கள் எல்லாம் தெரிந்த கலைஞர் எப்படித்தான் கூப்பிட்டு பணமுடிப்பு கொடுத்தாரோ!?

கலைஞர் அவர்களின் அரசியலில் எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆனாலும் அவரின் வேறு சில தன்மைகளைப் பார்த்து ரசித்தவள் நான். எனவே ஜெயகாந்தனுடன் அந்தக்காலத்திலேயே வாக்குவாதம்
செய்திருக்கின்றேன்.

ஜெயகாந்தன் பணமுடிப்பைப் பெற்றதும், அவர் மகனுக்கு வேலை பெற்றதும், அவர் கலைஞரிடம் விலை போய்விட்டார் என்ற கடுமையான விமர்சனங்களுக்காளானார். உடல் நிலை மோசமாகவும் அவருடைய மருத்துவச் செலவு முழுவதும் கலைஞர் அவர்கள் மேற் கொண்டார். அப்பொழுது நான் அமெரிக்காவில் இருந்தேன். உடனே இதுபற்றிய என் கருத்தை அன்றே பதிவு செய்தேன்

கலைஞர் செய்த உதவிகளால் ஜெயகாந்தன் திராவிடக் கழகத்திற்குப் பிரச்சார பீரங்கியாகிவிட மாட்டார். இது எனக்குத் தெரியும். ஏன் கலைஞருக்கும் தெரியும். அவர் ஏன் உதவிகள் செய்தார்? அவரும் ஜெயகாந்தனின் ரசிகன். இதை அன்றே எழுதினேன்.

சமீபத்தில் கலைஞர் ஒரு இடத்தில் சொன்னது “விரைவில் ஓய்வு பெற்று அதன் பின் ஜெயக்காந்தனுடன் பேசிப் பொழுதைக் கழிக்க விரும்பு கின்றேன்” என்று கூறியது பத்திரிகைகளில் வந்தது. அதே போன்று கவிஞர் வைரமுத்துவுடனும் பேசிக் காலம் கழிக்க விரும்புவதையும் சொல்லி இருக்கின்றார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பன் முகங்கள் உண்டு.

கலைஞர் தமிழை ரசிப்பார்

கலைகளை ரசிப்பார்

சினிமாவை ரசிப்பார்

அரட்டையை ரசிப்பார்

அவரும் ஓர் சாதாரண மனிதன்.

அதைப்புரிந்து கொண்டுதான் அன்றே அவரை ஜெயகாந்தனின் ரசிகண் என்றேன்.

இன்னொரு தகவல் கூற வேண்டும்

குமுதம் பத்திரிகையில் அரசியல் நிருபராகப் பணியாற்றியவர் பால்யூ அவர்கள். கழகத்திற்கு அந்த பத்திரிகை ஒத்துவராத ஒன்று. பால்யூ ஓய்வு பெற்றபின் நோய்வாய்ப்பட்டார். அப்பொழுது ஒரு நாள் அவரைக் காண திரு வீரமணி அவர்கள் சென்றிருந்தார். எல்லா அரசியல் தலைவர் களிடமும் நல்ல பெயர் எடுத்தவர் பால்யூ. எனவேதான் திரு வீரமணி, வீட்டிற்கு வந்து அவரைப் பார்த்துச் சென்றார். அதுமட்டுமல்ல, பால்யூவின் உடல் நிலைபற்றி கலைஞரிடம் கூறியிருக்கின்றார். உடனே கலைஞர் அவர்கள் பால்யூவுடன் தொலை பேசியில் நலம் விசாரித்திருக் கின்றார். அத்துடன் நிதி உதவியும் செய்திருக்கின்றார். இது பத்திரிகையில் வராத செய்தி. பால்யூவே என்னிடம் கூறிய செய்தி.

ஆதனால்தான் சொல்லுகின்றேன். ஒரு மனிதனை ஒட்டு மொத்தமாக என்னால் வெறுத்து ஒதுக்க முடியாது. தவறு காணும் பொழுது நிச்சயம் சொல்லத் தயங்கியதும் இல்லை.

சமீபத்தில் சங்கரநேத்திராலயா ஆய்வு நிறுவனம் நடத்திய இலக்கிய ஆன்மீகச் சொற்பொழிவில் ஜெயகாந்தன் பேசியிருக்கின்றார்.

“பெண்கள் இப்போது சுதந்திரம் பெற்றுவிட்டனர். இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையில்லை. மாறாக இப்போது பெண்கள் பொருள், போகம், புகழ் போன்ற பல விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டனர்.
அதுவும் அவர்கள் சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை.”

ஜெயகாந்தனின் மேடைப் பேச்சென்றால் திடீர் வெடி வெடிக்கும். அது
எப்பொழுதாவதுதான். இந்தப் பேச்சு காற்றோடு போயிருக்கும். ஆனால் பத்திரிகைகளுக்குச் சுடச் சுடச் செய்தி வேண்டுமே! அவ்வளவுதான். பேட்டிகள், பேட்டிகள் பேட்டிகள்.

தலைப்பு “ஜெயகாந்தனுக்கு எதிர்வெடி போடும் பெண்கள், மகளிர் அமைப்பினர்.”

ஜனநாயக மாதர் சங்கப் பொதுச் செயலாளர் திருமதி வாசுகி அம்மையார் புள்ளி விபரங்களுடன் ஜெயகாந்தனை நோக்கிக் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார். இந்த அமைப்பு எப்பொழுதும் எங்கு ஆய்வுகள் நடத்தினாலும் புள்ளி விபரங்களைச் சேகரித்து வைப்பவர்கள். பெண்கள் முன்னேற்றத்திற்காகச் செயல்படும் ஓர் அமைப்பு..

அடுத்துச் சாடியிருப்பவர் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி திருமதி
ராமாத்தாள் அவர்கள். அரசு சார்புடையது.

நான் இருப்பது அமெரிக்கா. தமிழகத்தில் வரும் செய்திகள் பல உடனே
எனக்கு அனுப்ப இப்பொழுது சில குழந்தைகள் வந்துவிட்டனர். ஜெயகாந்தன் பெயரின் வசீகரம். அவரைப்பற்றி எழுத ஆரம்பிக்கவும் சிலர் எனக்கு ரசிகர்கள் ஆகிவிட்டனர்.

பொதுப்படையாகக் குறித்துப் பேசியதுதான் குழப்பத்திற்குக் காரணம்.
நானும் பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றியவள். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறலாம். ஆனால் சமுதாயப் பணிக்கு ஓய்வில்லை. ஏதோ ஒரு வடிவில் இப்பொழுதும் என்னால் முடிந்ததைச் செய்து வருகின்றேன். அந்த அக்கறையில் அவர்கள் நிலையைக் கவனித்து வருகின்றேன்.

பணி செய்யும் காலத்திலேயே ஒரு பிரச்சனையை ஆய்வு செய்யும் முறைகளுக்குப் பயிற்சி பெற்றவள்.

பெண்கள் சுதந்திரம் பெற்றுவிட்டார்கள் என்று சொன்ன கருத்து சரியல்ல.
அது ஒரு மாயத் தோற்றம். பெற்றவர்களே தங்கள் மகளை ஊர்ப் பொதுமையாக ஆக்கும் கொடுமை மாறவில்லையே! பதின்மூன்று வயதுச் சிறுமிக்கு ஊருக்குப் பொது மகளாகக் கோயிலில் வைத்து தாலி கட்டினார்கள். சம்பவம் நடக்கும் பொழுது எங்கும் பரபரப்பு. ஏதேதோ
நடவடிக்கைகள். ஆனால் முடிவு என்ன என்று எத்தனை பேர்கள் தொடர்ந்து பார்த்தார்கள்? எங்கோ இருக்கும் எனக்குத் தெரிந்த உண்மை
அதே மண்ணில் இருப்பவர்களில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?
இப்பொழுது அந்தச் சிறுமி பொது மகளாகிவிட்டாள்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் நடத்திய போராட்டம், வாங்கிக் கொடுத்த சட்டம், அதன் பயனை இழந்து நடை முறையில் வேறு வடிவில் நடக்கின்றதே! சாதியை ஒழிக்கின்றோம் என்று கூறுபவர்கள் இந்தப் புது சாதியை ஒழிக்க என்ன செய்தார்கள்? மூடப்பழக்கத்தை ஒழிக்கின்றோம் என்று கூறி வலம் வருபவர்கள் என்ன செய்துவிட்டார்கள்? ஆரம்பத்தில் பத்திரிகை செய்திகளில் விளம்பரம் வந்தால் போதுமா? இதுதான் சமுதாயச் சீர்திருத்தமா?

எங்கள் பாதுகாப்பு இல்லங்களும் சேவை இல்லங்களும் நிறைந்து வழிகின்றதே, ஏன்? கணவன் மனைவிச் சண்டைகளைக் கவனிக்க ஒரு தனிப் பிரிவே இப்பொழுது எங்கள் துறையில் இயங்கி வருகின்றது. எத்தனை பிரச்சனைகள் எங்களைத் தேடிவருகின்றன. இன்னும் பெண்ணின் நிலைமை ஓர் சோதனைக் களமாக இருக்கின்றது. ஒரு சிலரின் முன்னேற்றத்தை வைத்து மொத்தக் கணக்காகக் காட்ட முடியாது.

தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் பெண்கள் கூட சுடிதார் போட்டுக் கொண்டு வலம் வரும் பொழுது அவர்கள் வசதியாக வாழ்வது போல் இருக்கும் தோற்றம் ஒரு மாயத் தோற்றம்.

அரசுப் பணியிலோ, தனியார் துறையிலோ பெண்களின் நிலை பல இடங்களில் ஊதிய வித்தியாசம், பதவி உயர்வு பெற பல தடுப்புச் சுவர்கள் இவைகள் இருப்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

சினிமா, தொலைக்காட்சி, மாடலிங் இவைகளில் பெண்கள் ஆடம்பரமாகத் தெரிகின்றார்கள். இவர்களில் எத்தனை பேர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இருக்கின்றது? நடிகைகளும் பெண்கள் இல்லையா? மனித உணர்வுகள் பொதுவானது.

பொருள், போகம், புகழ் இவைகளுக்கு ஆண்கள் அடிமையாக இருக்கின்றார்களே! இது மனிதனின் புத்தி. வீட்டுக்குள் இருக்கும் வரை
அவளை இது அண்டவில்லை. அவளும் மனித ஜாதி. அந்த பலஹீனம் அவளிடமும் வருவது இயல்பு. ஆனாலும் எல்லோரையும் அந்த வளையத்துக்குள் கொண்டு வந்தது சரியல்ல.

சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இது சரியான களம் அல்ல.
அதுமட்டுமல்ல. இதுபற்றிப் பேச நிறைய இருக்கின்றது. தனி மேடை அமைத்து செய்ய வேண்டிய கச்சேரி.

ஜெயகாந்தனின் முழுப்பேச்சும் தெரியாது. ஆனாலும் இந்தக் கருத்துக் களுக்கு மற்றவர்கள் கொடுத்திருக்கும் மறுப்புகளையும் படித்து
என் கருத்தைத் தெரிவித்தேன். தமிழகம் செல்லும் பொழுது அவரிடம் நிச்சயம் இதுபற்றிப் பேசுவேன்.

சமீப காலமாக அவர் வெளியில் அதிகம் செல்ல முடியவில்லை.
பார்வையாளர்களையும் தவிர்த்து வருகின்றார். முக்கியமான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதும், முக்கியமானவர்களிடம் பேசுவதும் மட்டும் தொடர்கின்றாது. அவர் உடல் நிலைக்கு ஓய்வு தேவை. இந்த இடை வெளியால் மாற்றங்களின் தோற்றத்தை அவரால் சரியாக உணர முடியவில்லையா?

இப்பொழுது எங்களுக்குள் மோதல்.

அது சரி, சுதந்திர அடிமை என்று ஏன் கூறியிருக்கின்றார்? இந்த வார்த்தையால் அவரின் முழுக் கூற்றும் மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கின்றது.

சிந்தித்தேன். அதுமட்டுமல்ல, ஒருவனிடம் இதைக் கூறி அவன் அபிப்பிராயத்தைக் கேட்டேன். ஜெயகாந்தன் கூறியதில் தவறில்லை
என்று கூறி, விளக்கமும் கொடுத்தான். அவன் வேறு யாருமல்ல.
அமெரிக்க மண்ணில், சுதந்திரக் காற்றில் வளரும் என் பேரன் தான் விளக்கம் கூறியது. அதுமட்டுமல்ல. அந்த விளக்க உரை என்னைச் சிந்திக்க வைத்தது.

அடுத்து அதன் விபரங்களைப் பார்க்கலாம்.

தொடரும்

++++++++++++++++
seethaalakshmi subramanian

Series Navigation

author

சீதாலட்சுமி

சீதாலட்சுமி

Similar Posts