சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -10

This entry is part [part not set] of 28 in the series 20100418_Issue

சீதாலட்சுமி


“ லிவ்விங் டுகெதெர்” பற்றி என்ன நினைக்கிறீங்க?

இந்தக் கேள்விக்கு நான் சரியான பதில் கொடுக்க வேண்டும்.

மேல் நாடுகளில் இது வேகமாப் பரவி வரும் கலாச்சாரம். அங்கே கல்யாணம் செய்துக்காம செக்ஸ் வச்சுக்கறது, பிள்ளை பெறுவது சகஜமா போச்சு. அப்படி பிறக்கிற குழந்தைங்கள ஓர் அவமானச் சின்னமா பாக்குறதில்லே. அவளை யாரோ ஒருவன் கல்யாணம் செய்துக்கற போதும் அந்தப் பிள்ளையையும் ஏத்துக்கறான். இங்கே என்ன நடக்கும்? அப்படி சேர்ந்து வாழ்ந்தா எப்படி சொல்லுவாங்க.. “ஒரு பெண்ணை வச்சுக்கிட்டிருக்கான்” அடுத்து அவளை “வப்பாட்டி”ன்னும் சொல்லுவாங்க. கவுரவமா சொல்ல மாட்டங்க. குழந்தை பிறந்துச்சோ அவ்வளவுதான், கேலி பேசியே சாக அடிப்பாங்க. ஆரம்பத்திலே தைரியமா இருக்கறவனும் மானம் போச்சுன்னு அவளையும் குழந்தையையும் வெறுக்க ஆரம்பிச்சுடுவான். முதல்லே தெரியாது. வீராப்பு பேசும் வாய் அப்போ அடைச்சுடும். நம்ம நாட்டுக்கு இது அவ்வளவு சரியில்லே. ஏதோ அங்கும் இங்கும் நடக்கறதை வச்சு முடிவுக்கு வரக்கூடாது.

தொலைபேசி சிறிது நேரம் மவுனமாக இருந்தது

அம்மா, உங்களைப் பார்க்க எப்போ வரலாம்?

அவன் என்னைப் பார்க்க வந்தான். கால்களில் விழுந்து நமஸ்காரமும் செய்தான். அவன் முகத்தில் வெட்கம் கலந்த ஓர் சிரிப்பு.

அம்மா, வேறு யாராவது இருந்தா திட்டி இருப்பாங்க. நானும் கிழவின்னு
பதிலுக்குச் சொல்லி இருப்பேன். பொறுமையாக நீங்க சொன்னது எனக்குப்
பிடிச்சது. அது உண்மைதான்மா.

நான் திட்டியிருந்தால் அவன் அது போன்ற வாழ்க்கையைத் தேடியிருப்பான். தயங்கும் இளம் உள்ளங்களுக்கு சொல்லும் விதத்தில் உணமைகளைக் கூறினால் அவர்கள் சிந்திக்க முயல்வார்கள்.

எப்படி எனக்கு இந்தப் பக்குவம் வந்தது?

படித்ததாலோ, பயிற்சிகள் பெற்றதாலோ வந்துவிடவில்லை. அனுபவங்களால் மெருகேற்றப்பட்ட மனம். சில சமயம் சிலரின் சந்திப்புகளும் நம்மிடையே மாற்றத்தை வரவழைத்துவிடும். திட்டம் ஏதுமின்றி நடக்கும் நிகழ்வுகளில் மனித மனம் புதைந்து உருமாறி விடுவதுமுண்டு.

மனத்தில் புகைச்சல் ஏற்பட்டுவிட்டால் நான் ஓடி ஒதுங்கும் இடம் ஆழ்வார்ப்பேட்டை குடில். அங்கே நான் செலவழிக்கும் நிமிடங்கள் பதினைந்து முதல் முப்பது நிமிடங்களாகத்தான் இருக்கும். எனக்கு நேரம் கிடைப்பதுவும் அரிது. அதே நேரத்தில் மனத்தைச் சீர் செய்து கொள்ள
நான் சந்திப்பவர் ஜெயகாந்தன். எதற்காக வருகின்றேன் என்று சொல்லுவதும் கிடையாது. அவரும் காரணம் கேட்கமாட்டர். எங்களிடையே ஓர் புரிதல் உண்டு அவ்வளவுதான். பேசி முடியவிட்டு அவர் உதிர்க்கும் சில சொற்களில் ஏதோ உண்மை கண்டு விட்டதைப் போல் திரும்பிவிடுவேன். இது எப்படி?

ஜெயகாந்தனின் குருபீடம் அருமையான அர்த்தமுள்ள சிறு கதை. ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே நம்மை ஆட்டிப் படைக்கின்றது.

ஓர் பிச்சைக்காரன். சோம்பேறி. சுயமரியாதை இல்லாதவன். நாற்றமடித்து வீதிகளில் அலைபவன். ஒரு குழந்தை சாப்பிடுவதைக் கூட நாயைப் போன்று பார்ப்பவன். குடித்து முடித்து வீசி எறியும் பீடிகளைப் பொறுக்கி புகைப்பவன். சந்தைக்கு வரும் தாய், தன் குழந்தைக்குப் பால் கொடுக்கும் பொழுது வெறித்தனமாகப் பார்த்து ரசிப்பவன். ஆடையை விலக்கி அலங்கோலமாகப் படுத்துக் கொண்டு பார்ப்பவரைப் பயமுறுத்துபவன். சத்திரத்தில் ஒதுங்கிய ஒருத்தியிடம் சுகம் கண்ட பின் அவள் குஷ்டரோகி என்று தெரிந்தும் அலட்சியமாக நினைத்து அவளை மீண்டும் தேடிப் போய் அவளைப் பயமுறுத்தி ஓடச் செய்பவன்.

இவன் தான் கதையின் நாயகன். இப்படிப்பட்ட ஒருவனை முன்னிறுத்தி படிப்பவரையும் மிரள வைக்கின்றார் ஜெயகாந்தன்.

இங்கே அழகை வருணிக்கவில்லை. அருவருப்பைக் கொடுக்கும் ஓர்
மனிதனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகின்றார். படிப்பவர் மனத்திலும் ஓர் வெறுப்பை ஊட்டிய பின்னர் கதையின் கருவுக்கு வருகின்றார்.
பிச்சைக்காரன் எதிரில் யாரோ ஒருவன் வந்து “சுவாமி “ என்று அழைக்கின்றான்.

இந்தக் காட்சியை ஜெயகாந்தன் மூலமாகப் பார்ப்பதே சிறந்தது.

புகையை விலக்கிக் கண்களைத் திறந்து பார்க்கின்றான்.எதிரே ஒருவன் கைகளைக் கூப்பி உடல் முழுவதும் குறுகி,இவனை வணங்கி வழிபடுகிற மாதிரி நின்றிருந்தான். இவனுக்குச் சந்தேகமாகித் தனக்குப் பின்னால் ஏதேனும் சாமி சிலையோ, சித்திரமோ இந்தச் சுவரில் இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்து நகர்ந்து உட்கார்ந்தான். இவனது இந்தச் செய்கையில் ஏதோ ஒரு அரிய பொருளைச் சங்கேதமாகப் புரிந்து கொண்டு வந்தவன் மெய்சிலிர்த்து நெக்குருகி நின்றான். இவன் எதற்குத் தன்னை வந்து கும்பிட்டுக் கொண்டு நிற்கிறான். பைத்தியமோ? என்று நினைத்து உள்சிரிப்புடன் “என்னாய்யா இங்கே வந்து கும்பிடறே? இது கோயிலு இல்லே – சத்திரம். என்னைச் சாமியார் கீமியார்னு நெனச்சுக்கிட்டியா ? நான் பிச்சைக்ககாரன்” என்றான் திண்ணையில் இருந்தவன்.

“ஓ! கோயிலென்று எதுவும் இல்லை. எல்லாம் சத்திரங்களே! சாமியார்கள் என்று யாருமில்லை, எல்லாரும் பிச்சைக்காரர்களே!” என்று அவன் சொன்னதை உபதேச மொழிகள் மாதிரி இலக்கண அலங்காரத்தோடு திரும்பத் திரும்பச் சொல்லிப் புதிய புதிய அர்த்தங்கள் கண்டான் தெருவில் நின்றவன்.

தெருவில் நின்றவனை திண்ணையில் இருந்தவன் பைத்தியக்காரன் என்று நினைத்தான். வந்தவனோ மேலும் இவனை, “சுவாமி, என்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று வேறு கேட்டுக் கொண்டான்

இவனுக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. இருப்பினும் அடக்கிக் கொண்டு வந்தவனை டீ வாங்கி வரச் சொல்லுகின்றான். அவனிடம் காசு இருப்பதைப் பார்க்கவும் பீடியும் வாங்கி வரச் சொல்லுகின்றான்.

வந்தவன் முருகன் கோயிலில் மடப்பள்ளிக்குத் தண்ணிர் எறைச்சுக் கொண்டு வருபவன். அவனுக்கு மூணு வேளைச் சாப்பாடும் நாலணவும் கிடைத்து வந்தது. அவன் சொல்வதைக் கேட்போம்.

“எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போச்சு. இந்த வாழ்க்கைக்கு அர்த்த மில்லேன்னு தெரிஞ்சும் உடம்பைச் சுமந்துகிட்டுத் திரியற சுமையைத் தாங்க முடியல்லே. துன்பத்துக்கெல்லாம் பற்றுதான் காரணம்னு எல்லாரும் சொல்றாங்க. எனக்கு ஒருவிதப்பற்றும் இல்லே. ஆனாலும் நான் துன்பப்படறேன். என்ன வழியிலே மீட்சின்னு எனக்குத் தெரியலே. நேத்து என் கனவிலே நீங்க பிரசன்னமாகி” இந்த சத்திரந்தான் குருபீடம். அங்கே வா”ன்னு எனக்கு கட்டளை இட்டீங்க குருவே! நீங்க இதெல்லாம் கேட்கறதணாலே சொல்றேன். தாங்கள் அறியாததா ? விடியற்காலை யிலேருந்து சந்நிதானத்திலே காத்துக்கிட்டிருந்தேன். என் பாக்கியம் தங்கள் கடாட்சம் கிட்டியது.

அப்போது குரு சொன்னான் “பேரு என்னான்னு ஒரு கேள்வி கேட்டா – ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பதில் சொல்றான். ஒரு கேள்விக்கு எம்மாம் பதில்” என்று ஏதோ தத்துவ விசாரம் செய்கிற மாதிரி பிதற்றினான். சீடன் அதைக் கேட்டு மகா ஞானவாசகம் மாதிரி வியந்தான்.

அன்று முதல் தினமும் நின்றவன் வர ஆரம்பித்தான். இருந்தவனுக்கு சேவை செய்தான். இப்பொழுதெல்லாம் அவன் வீதியில் திரியவில்லை..
வந்தவன் குளிப்பாட்டி, உணவு படைத்து தனிமையில் விடாமல் உடன் இருந்தான். சூழ்நிலை மாறத் தொடங்கிவிட்டது.

அவன் பேசுகிற எல்லா வார்த்தைகளிலும் அவனே புதிதாகப் புரிந்து கொள்ளுகிற மாதிரி பலவிதமான அர்த்தங்கள் கண்டு இந்தச் சீடன் புளகாங்கிதம் அடைவதைச் சந்தைக்கு வருகிற சிலர் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். சிலர் குருவை அடையாளம் கண்டு, இவன் யாரோ ஒரு சித்தன் என்று அப்பொழுதே நினைத்ததாகவும் அப்படிப்பட்டவர்கள் இப்படியெல்லாம் கந்தலுடுத்தி, அழுக்கு சுமந்து எச்சில் பொறுக்கித் திரிவார்கள் என்றும் தன்னைப் பற்றி இவனுக்குத் தெரியாத ஒன்றைத் தெரிவித்தார்கள். அதைத் தெரிந்து கொள்வதற்கே ஒருவருக்குப் பக்குவம் வேண்டுமென்றும் அந்தப் பக்குவம் இந்தச் சீடனுக்கு இருப்பதாகவும் கூறிச் சீடனைப் புகழ்ந்தார்கள். அதில் சிலர் இப்படியெல்லாம் தெரியாமல் இந்த சித்த புருஷனைப் பேசியதற்காக இப்போது பயமடைந்து இவனிடம் மானசீகமாகவும், கீழே விழுந்து பணிந்தும் மன்னிப்பு வேண்டினார்கள். இவனுக்குப் டீயும், பீடியும், பழங்களும் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தனர். பக்தர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்தனர். இவனுடைய ஒவ்வொரு அசைவையும் ரசித்துப் பேசினர். இதுவரைப் பாராமலிருந்ததைப் பாவமாகக் கருத ஆரம்பித்தனர்.

என்னடா உலகம்!
இதுதான் உலகம்!
யாருக்காவது காரணம் தெரியுமா?
இருந்தவனோ நின்றவனோ காரணங்களா?
யாரை யார் குறைக் கூறுவது?
அருள்வாக்கு நாயகர்கள் பெருக்கத்திற்கு யார் காரணம்?!
அவர்களைப் பேராசைக் குழிகளில் தள்ளுவதும் யார்?
யாரையும் மோசம் செய்ய இந்த நாடகம் நிகழவில்லை. இயல்பாக நடந்த
ஒரு நிகழ்வு. அப்பொழுதும் இப்பொழுதும் வர்ணம் தீட்டுவது மனிதனே!

காட்சியிலிருந்து கதைக்குப் போவோம். கதாசிரியன் அல்லவா? கதை முடிக்க வேண்டுமே. தொடங்கியவன் முடிக்கட்டும்

இவன் கனவிலே ஒரு குரல்.

உனக்கு சிஷ்யனாக வந்திருக்கின்றானே அவன்தான் உண்மையில் குரு. சிஷ்யனாக வந்து உனக்குக் கற்றுத் தந்திருக்கின்றான். அப்போதுதான் நீ வசப்படுவாய் என்று தெரிந்து சிஷ்யனாய் வந்திருக்கின்றான். எந்த பீடத்தில் இருந்தால் என்ன? எவன் கற்றுத் தருகின்றானோ அவன் குரு. கற்றுக் கொள்கின்றவன் சீடன். பரமசிவனின் மடிமீது உட்கார்ந்து கொண்டு, முருகன் அவனுக்குக் கற்றுத் தரவில்லையா? அங்கே சீடனின் மடியே குருபீடம். அவனை வணங்கு.

சிஷ்யன் போய் விட்டான். தேடியும் காணவில்லை.

இவன் சுற்றித் திரிகின்றான். இப்பொழுது எல்லோரும் இவனை வணங்குகின்றனர். மரியாதை செலுத்துகின்றனர்

பித்தன் இங்கே சித்தனாகிவிட்டான்!

எப்பேர்ப்பட்ட தத்துவத்தை கதையில் காட்டிவிட்டார். எத்தனைபேர்கள் புரிந்து கொள்வார்கள்?

ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்கள் வாழ்வில் இத்தகைய உபதேசங்கள் கிடைக்கின்றன. ஆனால் மனிதன் அசட்டை செய்து விலகிச் சென்று கொண்டிருக்கின்றான். கடவுளே நேரில் வந்தாலும் அவரைப் பகல் வேஷக்ககரன் என்று உள்ளே தள்ளிவிடுவோம். அல்லது எள்ளி நகையாடுவோம். நமது பாட்டுக்கு எவன் இசைந்து தாளம் போடு கின்றானோ அவனைத்தான் நாம் ஏற்றுக் கொள்வோம். நம்மை ஏமாற்றுபவரைக் கூடப் புரிந்து கொள்ள அக்கறையில்லை. ஏமாளியாய், பைத்தியக்காரனாய் நடமாடிக் கொண்டிருக்கின்றோம்.

குருபீடம் மதிப்பு வாய்ந்தது. அது உண்மைக்கும் சக்திக்கும் உரிய இடம். இப்பொழுது போலித்தனத்திற்குரிய இடமாக ஆன்மீகத்திலிருந்து அரசியல் வரை பல தோற்றங்களில் எங்கும் வியாபித்திருக்கின்றன. மனிதனின் முக்கிய வியாபார கேந்திரமாகி விட்டது. காலம்தான் மனிதனுக்குப் புத்தி புகட்ட வேண்டும். உணர்ந்து திருந்தினால் வாழ்வான். அல்லது வீழ்வான்.

என்னுடைய தேடல் என் பிள்ளைப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. ஒன்றா இரண்டா, மனத்தில் தோன்றும் கேள்விகளுக்கெல்லாம் விடை தேடித் திரிந்தேன். பலரைச் சந்தித்தேன். சிலரிடம் விடை கண்டேன்.
என் வாழ்க்கையில் புற்றீசல் போல் கேள்விகள் பிறந்து கொண்டே இருந்தன. எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் வியப்பைத் தரும் அளவில் அமைந்தன. தேடிப் போனதும் உண்டு. தானாக வந்ததும் உண்டு.

ஜெயகாந்தனுடன் முதல் சந்திப்பிலேயே ஓர் சிந்தனைச் செல்வரைச் சந்தித்த மன நிறைவு ஏற்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை, ஆமாம், அமெரிக்கா வந்த பிறகும் உள்ளம் குமுற ஆரம்பித்தால் அவருடன் பேசுவேன். சில நாட்களுக்கு முன் நடந்த உரையாடல்.

முதுமையும் நோயும் என்னை வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. இத்தனை அனுபவங்கள் இருந்தும் மனக் குரங்கு அப்படி ஓர் ஆட்டம் போடுகின்றது. யாருக்கும் என் மீது பிரியம் இல்லை, அக்கறையில்லை என்ற நினைப்பு. எல்லோரும் என்னை ஒதுக்கி வைத்துவிட்டார்கள் என்ற குறை. என்னை என்னால் அடக்க முடியவில்லை. உடனே ஜெயகாந்தனுடன் தொடர்பு கொண்டு வழக்கம் போல் புலம்பினேன்.

சீதாலட்சுமி, ஏன் மற்றவர் ஒதுக்கிவிட்டார்கள் என்று நினைக்கின்றீர்கள்? நாம்தான் ஒதுங்கி இருக்கின்றோம். இப்படி நினையுங்கள். விருப்பம் நம் கையில் என்று நினைத்தால் இழப்பு என்று தோன்றாது

எப்பேர்ப்பட்ட உண்மை

அடுத்த கேள்வி.

யாரையும் பார்க்க முடியவில்லை.

குரலையாவது கேட்க முடிகின்றதல்லவா?

பொங்கி எழுந்த மனம் அடங்கியது. புன்னகையும் வந்தது.

ஜெயகாந்தன் இப்பொழுது எழுதுவதில்லை. முன்பு போல் கலந்துரை யாடல்கள் அதிகம் இல்லை. அவர் ஒதுங்கி வாழ்கின்றார். ஆனால் அவர் எழுத்து மற்றவர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இன்னும் அவரிடம் சொல்வளம் இருக்கின்றது. கூரான சிந்தனை இருக்கின்றது. ஒற்றைச் சொல், மந்திரச் சொல் இன்னும் இருக்கின்றது. தோற்றத்தில் முதுமை இருக்கின்றதே யொழிய சிந்தனையில் இன்னும் இளமையின் துள்ளல் இருக்கின்றது.

எனக்கு இத்தகைய நட்பு கிடைத்தது என் அதிருஷ்டம்.

சிறுகதை மன்னன் என்றால் அது ஜெயகாந்தனே.

அவரைபற்றி பேச இன்னும் நிறைய இருக்கின்றது.

தொடரும்

+++++++++++++++++
seethaalakshmi subramanian

Series Navigation

author

சீதாலட்சுமி

சீதாலட்சுமி

Similar Posts